யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் – 3

author
3
0 minutes, 32 seconds Read
This entry is part 4 of 21 in the series 27 ஜூன் 2016

 பி.ஆர்.ஹரன்

 

சிறைப்படுத்தப்பட்ட (Captive) யானைகள் இறந்துபோகும் கொடுமை ஒரு பக்கம் நடந்தேறுகிறது என்றால், அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு அவை அனுபவிக்கும் சித்திரவதைகள் எண்ணிலடங்கா. தனிமையும் வேதனையும் துன்பமும் மட்டுமே வாழ்க்கையாகக் கொண்ட அந்த யானைகள் சிலவற்றின் சித்திரவதைகள் மிகுந்த வாழ்க்கையைப் பார்ப்போம்.

 

சமயபுரம் கோவில் யானை மாரியப்பன் அனுபவித்த வேதனை

 

2002-ஆம் ஆண்டிலிருந்து மாரியப்பனை எப்போதும் மூன்று கால்களிலும் இரும்புச் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். அந்த இரும்புச்சங்கிலியானது ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டதாகும் (Oxidised Chain). அதாவது அந்த மாதிரியான ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட சங்கிலிகளில் விஷத்தன்மை கூடியிருக்கும். அது யானைகளின் கால்களைப் பாதிக்கும். 2011-ஆம் ஆண்டுவரை மாரியப்பனை அப்படியே வைத்திருந்தனர். பிராணிகள் நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததனால், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டான் மாரியப்பன்.

 

மாரியப்பன் அனுபவித்த சித்திரவதையே, தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் 2011 (Tamil Nadu Captive Elephants (Management and Maintenance) Rules2011) உருவாகக் காரணம்.

 

ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் அனுபவித்த கொடுமை

 

ஸ்ரீரங்கம் கோவிலில் யானை தங்குவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள இடம் மிகவும் கொடுமையானது. சரியாகப் பராமரிக்கப்படாததும், அசுத்தமானதுமான தரைத்தளம் கொண்ட இடம். குப்பைக் கூளங்களும் பயன்படுத்தாத பாத்திரங்களும் இறைந்து கிடக்கும் இடம். தன்னுடைய கழிவுகளின் (சிறுநீர் / சாணம்) மீதே நின்றுகொண்டிருக்க வேண்டிய நிலையில் துன்பம் அனுபவித்தாள் ஆண்டாள். அதே இடத்தில் அவளுக்கு உணவும் வழங்கப்பட்டது. ஆண்டாளும் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாள்.

 

ஆண்டாளுக்கென்று கொடுக்கப்பட்ட இடத்தைப் பாதியாகக் குறைத்து, மீதி உள்ள இடம் பாகன் தங்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஆண்டாளின் இடம் குறுகிப்போனது. குறுகிய இடத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதால் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறாள் ஆண்டாள்.

 

கூடலழகர் கோவில் யானை மதுரவல்லி அனுபவித்த சித்திரவதை

 

சமீபத்தில் இறந்துபோன மதுரை கூடலழகர் கோவில் மதுரவல்லி, இறப்பதற்கு முன்னால் கடுமையான துன்பத்தை அனுபவித்தாள் என்று பார்த்தோம். மதுரவல்லிக்கு கொடுக்கப்பட்டிருந்த தங்கும் இடமும் மிகவும் அசுத்தமாகவும் குறைபாடுகளுடனும் இருந்துள்ளது. ஏற்கனவே கால்களும் பாதங்களும் புண்ணாகியிருந்த நிலையில் தன்னுடைய சிறுநீர் மற்றும் சாணத்தின் மீதே நின்றுகொண்டிருக்கவேண்டிய சூழ்நிலையில், அவளுக்கு மேலும் நோய் தொற்றிப்பரவியுள்ளது. அவளுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் எப்படி அந்த இடத்தின் நிலையைக் கவனிக்காமல் இருந்தார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.

 

மதுரவல்லியின் கொட்டகையைச் சுற்றிலும் கோவில் பணியாளர்களின் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அவளுடைய இடத்தைச் சுற்றிலும் வீடுகளும் மனித நடமாட்டங்களும் தொடர்ந்து இருப்பது அவளுக்கு மிகவும் தொந்தரவு தரக்கூடியதாக இருந்துள்ளது.

 

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் யானை பார்வதியின் வேதனை

 

மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் இறைப்பணி செய்துவரும் பார்வதியும் மூன்று கால்களிலும் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட சங்கிலியால் தான் பிணைக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய சிறிய கொட்டகையில் காற்று வசதி குறைவு. மிகவும் புழுக்கமாக இருக்கிறது. மின்விசிறி வசதி கிடையாது. கட்டிடச் சாமான்களைக் கொட்டிவைக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 

இங்கே ஒரு ஒட்டகமும் இருக்கிறது. மிகவும் அசுத்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. சரியான உணவு இல்லாமல் எடைகுறைந்து மிகவும் பலவீனமாகக் காணப்படுகிறது. அதன் உடல் முழுவதும் காயங்களும், திறந்த புண்களும் உள்ளன.

 

திருவானைக்காவல் கோவில் யானை அகிலாவின் நிலை

 

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் இறைப்பணி செய்து வருகிறாள் 13 வயது அகிலா. இங்கே யானையின் பராமரிப்பைப் பொருத்தவரை பிரச்சனை இல்லை. பாகன் மிகவும் நல்லபடியாக யானையைக் கவனித்துக்கொள்கிறார். சிவனடியார்கள் குழுவினர் வந்து கோசாலையையும், யானையையும் அவ்வப்போது கவனித்து வருகின்றனர். கோவிலுக்கும் பாகனுக்கும் உதவி வருகின்றனர். ஆனால், யானையின் இடம் சரியில்லை. அதன் இடத்தில் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. தென்னங்கீற்றுகளால் கூரை வேய்ந்துள்ளனர். இந்து அறநிலையத்துறை விதிகள் பல மீறப்பட்டுள்ளன.

 

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையின் நிலை

 

திருச்செந்தூர் கோவிலில் இறைப்பணி செய்துவரும் தெய்வானை என்கிற பெண்யானையும் மூன்று கால்களிலும் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறது. அதன் இடத்தில் கான்கிரீட் தளம் தான். மிகவும் சொறசொறப்பாகவும் இருக்கிறது. அவளைக் குளிப்பாட்டும்போது கருங்கல்லால் அவள் உடலைத் தேய்க்கின்றனர். சங்கிலியால் தொடர்ந்து பிணைக்கப்படுவதால் அதன் கால்களில் பலவிடங்களில் நிறமாற்றம் ஏற்பட்டுள்ளது. காயங்களும் தெரிகின்றன.

 

திருவையாறு கோவில் யானை தர்மாம்பாளின் வேதனை

 

திருவையாறு ஐயாரப்பன் கோவிலில் 43 வயது தர்மாம்பாள் இறைப்பணி செய்து வருகிறாள். அவளையும் சங்கிலியால் தான் பிணைத்துள்ளனர். அவளுக்குச் சரியான சத்தான உணவுகள் கொடுப்பதில்லை. எனவே எடை குறைந்து, மிகவும் பலவீனமாகக் காணப்படுகிறாள். முகத்திலும் உடலிலும் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதுக்கு மீறிய முதுமையுடன் காட்சி தருகிறாள். அவளுக்கென்று கொடுக்கப்பட்டுள்ள இடமும் எந்தவிதமான வசதிகளும் இல்லாமல் இருக்கிறது.

 

பட்டீஸ்வரம் கோவில் யானை கல்யாணியின் நிலை

 

கும்பகோணத்தை அடுத்துள்ள பட்டீஸ்வரம் கோவிலில் கல்யாணி இறைப்பணி செய்து வருகிறாள். அவளுக்காக ஒதுக்கப்பட்ட இடமும் கன்கிரீட் தளம் கொண்டது. அவளும் கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறாள். கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் புத்துணர்வு முகாமுக்குச் சென்றுவந்த பிறகு உடலில் பல இடங்களில், கண்ணாடியால் ஏற்பட்ட சிராய்ப்புகள் காணப்பட்டுள்ளன.

 

பட்டீஸ்வரம் ஊரில் பிரதான சாலையை ஒட்டியே கல்யாணியின் கொட்டகைக் கட்டப்பட்டுள்ளது. அதனால் எப்போதும் ஜனசந்தடிக்கு இடையே தான் கல்யாணி இருக்கவேண்டியுள்ளது. கல்யாணியின் பாகன் தின்னப்படிக் கூலிக்குத்தான் பணிபுரிகிறார். இருப்பினும் கல்யாணியை ஒழுங்காகப் பராமரிக்கிறார். ஆனால் கல்யாணியின் இடம் இந்து அறநிலையத்துறையின் விதிகள் மீறப்பட்ட வகையில் பராமரிக்கப்படுகிறது.

 

திருவிடைமருதூர் கோவில் யானை கோமதிக்கு நடக்கும் கொடுமை

 

மிகவும் பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி கோவிலில் கோமதி இறைப்பணி செய்துவந்தாள். அவளுக்கு வாய்த்த பாகன் கொடுங்கோலன். அவளைக் கொடுமையாகச் சித்திரவதை செய்து பராமரித்து வந்துள்ளான். தனிமையிலும் கொடுமையிலும் சித்திரவதைகளை அனுபவித்து வந்த கோமதி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டாள். அதன் விளைவாக கோவில் பக்தர் ஒருவரை கோமதி அடித்து மிதிக்க அவர் உயிர் இழந்தார். அதனைத் தொடர்ந்து அவளை ஒரு சிறிய கூடு போன்ற இடத்தில் சிறைவைத்துள்ளது நிர்வாகம். 2009-ஆம் ஆண்டிலிருந்து இங்கே சிறைவைக்கப்பட்டுள்ளாள். சிறையின் தரை கான்கிரீட் தளம் ஆகும். இருபக்கமும் சுவற்றிலிருந்து சரிந்துவருமாறு கட்டப்பட்டுள்ள தரைத்தளம். நடுவில் இரண்டு அடிகள் மட்டுமே சமதளம்.

 

இவ்விடத்தில் ஒரு அடிக்கும் குறைவான நீள சங்கிலியால் இரண்டு கால்களிலும் பிணைக்கப்பட்டுள்ளாள் கோமதி. அவளால் முன்னாலோ பின்னாலோ ஒரு அடி கூட நகர முடியாது. இருபக்கமும் சுவற்றிலிருந்து சரிந்து வருகின்ற தளமாக இருப்பதால் அவளால் பக்கவாட்டிலும் நகர முடியாது. தன்னை மீறி அவள் சரிவில் காலை வைத்தால் கீழே விழும் வாய்ப்பும் உண்டு. பின்பக்கச் சுவரில் இரண்டு சிறிய ஜன்னல்கள் மட்டுமே உள்ளன. பெரும்பாலும் இருட்டிலேயே தன் வாழ்வைக் கழிக்கிறாள் கோமதி.

 

அவள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதும் கோவில் நிர்வாகம் அவளுடைய சிகிச்சைக்கும் புனர்வாழ்வுக்கும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகனின் சித்திரவதையும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அதையும் கோவில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கோமதியை அந்தக் கொடுஞ்சிறையிலிருந்து மீட்டு வனத்துறைக்குக் கொண்டுசெல்வதற்கு 3 லக்ஷ ரூபாய் நிதி கேட்கிறது இந்து அறநிலையத்துறை. அவ்வளவு பணம் தங்களிடம் இல்லையென்று கூறியுள்ளது கோவிலை நிர்வகித்துவரும் திருவாவடுதுறை ஆதீன மடம்.

 

திருவாவடுதுறை ஆதீனத்திடம் பணம் இல்லை; இந்து அறநிலையத்துறை தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து விட்டது; வனத்துறை கண்டுகொள்ளவேயில்லை; பாகனின் சித்திரவதைத் தொடர்கிறது; கோமதியின் துன்பமும் தொடர்கிறது.

 

கோவில்களின் கோசாலைகளையும் யானைகளின் பராமரிப்பையும் பரிசோதனை செய்து வரும் விலங்குகள் நல ஆர்வலர் திருமதி ராதாராஜன் திருவிடைமருதூர் சென்றபோது யானை சிறைப்பட்டிருக்கும் இடத்தையும் அதன் நிலையையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வாசலை அடைத்திருக்கும் இரும்புக் கதவின் வழியாக “கோமதி… கோமதி!” என்று தான் அழைத்தபோது, சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருட்டில் வேதனையுடன் இருந்த கோமதி, தன் தலையால் “மடேர் மடேர்” என்று சுவற்றில் மோதிக்கொண்டதாகத் திருமதி ராதாராஜன் கூறினார். எவ்வளவு துன்பமும் வேதனையும் அனுபவித்திருந்தால், எந்த அளவுக்கு அன்புக்காக ஏங்கியிருந்தால், கோமதி இப்படி சுவற்றில் தன் தலையை மோதிக்கொண்டிருப்பாள்!!! கோமதியின் இந்தக் கொடிய துன்பம் மிகுந்த நிலைக்கு யார் பொறுப்பு?

 

தனியார்வசம் சிறைப்பட்டிருக்கும் யானைகள்.

 

சர்க்கஸ், கோவில்கள் மட்டுமல்லாமல் சில தனியார்களிடமும் யானைகள் இருக்கின்றன. சில தனியார்களின் அந்தஸ்தைப் பார்க்கும்போது நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. இவர்கள் எப்படி யானையை வளர்க்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏக்கர் கணக்கில் சோளக்காடுகளும் கரும்புக்காடுகளும் வைத்திருப்பார்களா அல்லது வெறும் சோளப்பொறியைப் போட்டு யானைகளை வளர்க்கிறார்களா என்று நாம் மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டியதுதான். இவர்களுக்கு யானைகள் எப்படிக் கிடைக்கின்றன என்பதும் ஒரு புதிர்!

 

தனியரிடம் சிறைப்பட்டிருக்கும் சில யானைகளைப் பற்றிப் பார்ப்போம்.

 

சமயபுரம் தனியார் யானை

 

சமயபுரம் கோவில் வாசலில் ஓர் யானை நின்று கொண்டிருந்தது. கடுமையான வெயில்; சொறசொறப்பான தரை. வெய்யிலில் தவித்தபடி அந்தப் பெரிய விலங்கு நின்றுகொண்டிருக்க, அதன் நிழலில் ஒரு நாற்காலி போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார் பாகன். அந்த யானை மெல்வதற்குப் பெயருக்கு இரண்டு தென்னை மட்டைகளைப் போட்டுவிட்டுப், போவோர் வருவோரிடம் தன் சார்பாக அந்த யானையைப் பிச்சை எடுக்க வைத்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பாதகப் பாகன். அக்கம்பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடம் விசாரித்தால், ஒரு நாளைக்குக் குறைந்தபக்ஷம் 8 மணிநேரம் அந்த யானையைப் பிச்சையெடுக்க வைக்கிறார் என்கிறார்கள்.

 

தொடர்ந்து சங்கிலியால் பிணைக்கப்பட்டு நாள் முழுவதும் நிற்க வைத்திருப்பதால், அதன் நான்கு கால்களும் புண்ணாகிப் போயிருக்கின்றன. கால்கள் மட்டுமல்லாமல் உடல் முழுவதும் கூடப் புண்கள் தெரிகின்றன. தமிழ்நாடு சிறைப்படுத்தப்பட்ட யானைகள் பராமரிப்பு விதிகள் 2011 (Tamil Nadu Captive Elephants (Management and Maintenance) Rules2011) படி, தனியார் வசம் உள்ள யானைகளின் நலனுக்கும் இந்து அறநிலையத்துறை தான் பொறுப்பு. ஆனால் தங்களின் கோவில் வாசலிலேயே நடக்கும் இந்தக் கொடுமையைக் கண்டுகொள்ளாமல் பொறுப்பற்று இருக்கிறது அறநிலையத்துறை.

 

ஸ்ரீரங்கம் தனியார் யானை ஃபஸீலா

 

பாகன் முதுகில் வீற்றிருக்க ஓர் யானை திருச்சி-திண்டிவனம் சாலையில் அனல்பறக்கும் வெய்யிலில் நடந்து போய்க்கொண்டிருந்தது. ஸ்ரீரங்கத்திலிருந்து மயிலம் முருகன் கோவிலுக்கு, சுமார் 180 கிலோமீட்டர் தூரத்துக்கு அதை நடத்திச் சென்று கொண்டிருந்தார் பாகன். வழியில் தன்னால் முடிந்ததை யானைக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார். கொளுத்தும் வெய்யிலில் தார் சாலையில் 180 கிலோமீட்டர் நடந்தால் அந்த யானையின் பாதங்கள் என்னவாகும் என்று யோசித்துப் பார்த்தால் அது அனுபவித்திருக்கும் துன்பம் புரியும்.

 

பழனியில் தனியார் யானை அம்மு

 

அம்மு என்கிற ஒரு யானையைப் பழனியில் சிவகுமார் என்பவர் வைத்திருந்தார் அவர் ஓர் ஆட்டோ ஓட்டுனர். அவர் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி மண்டல வனப் பாதுகாவலருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், “நான் அம்மு என்கிற யானயை 27 வருடங்களாகப் பராமரித்து வருகிறேன். அதனுடைய வயது 46. எனது யானை கடந்த சில மாதங்களாக வயிறு உப்பல் மற்றும் வயிறு வலியினால் துன்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அதற்குப் பல சீழ்கட்டிகளும் காயங்களும் உள்ளன. துரதிர்ஷ்டவசமாக அதனால் எழுந்து நிற்க முடியவில்லை. என்னால் அதற்கு சிகிச்சை அளிக்க இயலாத காரணத்தால் தாங்கள் உயர்தர மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார். மேலும், “சிகிச்சைக் காலத்தில் அம்மு கொடைக்கானல் விலங்குகள் பாதுகாப்பு மைய்யத்தின் (KSPCA – Kodaikanal Society for Prevention of Cruelty to Animals) பராமரிப்பிலேயே இருக்கட்டும். சிகிச்சை காலத்தில் யானைக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டாலோ அல்லது சிகிச்சை பலனின்றி இறந்துபோனாலோ நான் அவ்வமைப்பைப் பொறுப்பாக்க மாட்டேன்” என்றும் எழுதிக்கொடுத்தார்.

 

சிவக்குமார் அம்முவைப் பிச்சை எடுப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அம்முவைச் சரியாகக் கவனித்துப் பராமரிக்கவில்லை. அவளுக்குத் தேவையான உணவையும் கொடுக்கவில்லை. மிகவும் குறுகிய குடியிருப்புகளுக்கு இடையே, இருட்டான, போதிய சூரிய வெளிச்சம் இல்லாத, 20க்கு 20 அளவு கொண்ட ஒரு சிறிய அறையில் அவளை அடைத்து வைத்திருந்திருந்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவளை வெளியே அழைத்துச் செல்லும்போதும், அம்மு அந்தக் குறுகிய சந்துகளில் உடல் உராய்ந்துதான் நடக்கவேண்டும். மாதாந்திர மருத்துவப் பரிசோதனைகளும் சரியாகச் செய்யவில்லை. இவற்றின் விளைவாக அம்முவின் உடல்நலன் குன்றத்தொடங்கியுள்ளது. வயிறு உப்பி, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடலெங்கும் புண்கள், காயங்கள், சீழ்கட்டிகள்.

 

ஆனால் ஜனவரி 10, ஃபிப்ரவரி 5, மார்ச்சு 1 ஆகிய மூன்று நாட்களும் தமிழக அரசு கால்நடை வளர்ப்புத்துறையச் சேர்ந்த உதவி இயக்குனர் (Assistant Director, Animal Husbandry, Government of Tamil Nadu) டாக்டர் சே.சக்திவேல் பாண்டி அம்முவைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, அம்மு ஆரோக்கியமாகவும் எந்தவிதமான நோயும் இன்றியும் இருப்பதாகக் கையொப்பமிட்டுச் சான்றளித்துள்ளார்.

 

ஆனால் அம்மு மார்ச்சு மாதம் 20-ம் தேதி கீழே விழுந்துள்ளாள். சிவகுமார் உடனடியாக மருத்துவரை அழைக்கவில்லை. டாக்டர் சக்திவேல் பாண்டி 22-ம் தேதி தான் வந்து அம்முவைப் பார்த்திருக்கிறார். அன்று மட்டும், “அம்முவின் மார்புப் பகுதியிலும் பால்மடியிலும் வீக்கம் காணப்படுகிறது; கடந்த மூன்று நாட்களாக அம்முவால் படுக்க முடியவில்லை” என்று குறிப்பெழுதிவிட்டு, சில மருந்துகளையும் எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்.

 

டாக்டர் சக்திவேல் பாண்டி சான்றளித்தபடி ஆரோக்கியமாக எந்தவிதமான நோயும் இல்லாமல் இருந்த ஒரு யானை எப்படி திடீரென்று நிற்க முடியாமல் கீழே விழும்? மூன்று மாதங்களில் மூன்று முறை பரிசோதனை செய்த சக்திவேல் பாண்டி உண்மையிலேயே பரிசோதனை செய்தாரா? அல்லது, பணம் வாங்கிக்கொண்டு பரிசோதனை செய்தது போல சான்றளித்துள்ளாரா? இதுதான் தமிழக அரசின் கால்நடை வளர்ப்புத்துறை உதவி இயக்குனர் பணி புரியும் லட்சணமா? அவர் விசாரிக்கப்பட வேண்டும்.

 

அதன் பிறகு கொடைக்கானல் விலங்குகள் பாதுகாப்பு மையத்தினர் மேற்பார்வையில் மதுரையைச் சேர்ந்த விலங்குகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ராமசந்திரன் தலைமையில் ஒரு மருத்துவர் குழு வந்து பார்த்து முடிந்த அளவு சிகிச்சை கொடுத்து சில நாட்களில் அவளை எழுந்து நிற்கும் அளவுக்குக் கொண்டுவந்தார்கள். பின்னர் தொடர்ந்து அவர்கள் பரிந்துரைத்தபடி மருந்துகளும், உணவுகளும் கொடுக்காமல் இருந்துள்ளார் சிவகுமார். அம்மு மீண்டும் நிற்கமுடியாமல் விழுந்தபிறகு, வேறு வழியில்லாமல், ஏப்ரல் 14-ம் தேதி மேற்கண்டவாறு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார் சிவகுமார். ஆனால் அடுத்த நாளே (15-ம் தேதி) அம்மு இறந்துவிட்டாள்.

 

ஒரு ஆட்டோ ஓட்டுனரால் ஓரு யானையை எப்படி வளர்க்க முடியும்? அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு யானை எப்படிக் கிடைத்தது? இதற்குப் பொறுப்பான தலைமை வனவிலங்குப் பாதுகாவலர் (Chief Wildlife Warden) எடுத்த நடவடிக்கை என்ன? அம்முவின் நலனுக்குப் பொறுப்பாக இருக்கவேண்டிய அறநிலையத்துறை தன் கடமையிலிருந்து ஏன் தவறியது? இவையெல்லாம் விடையில்லாக் கேள்விகள்!

 

பழனியில் தனியார் யானை லக்ஷ்மி

 

அம்மு இறந்துபோனாள்; லக்ஷ்மி இறந்துகொண்டிருக்கிறாள். பழனியில் எம்.சௌந்தரராஜன் என்பவர் லக்ஷ்மி என்கிற 58 வயது யானையை வைத்திருக்கிறார். அதைத் தினமும் பிச்சை எடுக்க வைப்பதுதான் அவருடைய தொழில். தேவையான உணவில்லை; சரியான பராமரிப்பு இல்லை; முறையான மருத்துவ சிகிச்சை இல்லை; நாளடைவில் கடுமையாக உடல்நலன் குன்றிவிட்டது லக்ஷ்மிக்கு. எடை குறைந்து, மெலிந்து, தோல்களில் சுருக்கம் விழுந்து, உடலெங்கும் புண்கள் வந்து, கால்கள் கோணலாகி, வீங்கி, நகங்கள் உடைந்து, பாதங்களில் பெரும்புண்கள் ஏற்பட்டு, சீழ் வடிந்து, துர்நாற்றம் வீசி, நெற்றி எலும்பு புடைத்துக்கொண்டு, மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறாள் லக்ஷ்மி. அந்நிலையிலும் அவளைப் பிச்சையெடுக்கப் பயன்படுத்திக்கொண்டிருந்தார் சௌந்தரராஜன்.

 

இந்திய விலங்குகள் நலவாரியம் எடுத்த நடவடிக்கையினால், லக்ஷ்மியை கர்நாடகத்தில் மலூர் என்னுமிடத்தில் உள்ள Wildlife Rescue and Rehabilitation Centre என்னும் அமைப்பிற்குச் சொந்தமான புனர்வாழ்வு மையத்திற்குக் கொண்டுசெல்ல உத்தரவு வாங்கப்பட்டுள்ளது. ஆனால், லக்ஷ்மியால் அவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய இயலாது என்பதால், அருகே ராஜபாளையத்தில் இருக்கும் Animal Care Trust என்கிற அமைப்புக்குச் சொந்தமான மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சில நாட்கள் சிகிச்சை அளித்து, பின்னர் ஓரளவிற்கு, அதாவது பிரயாணம் செய்யக்கூடிய அளவுக்கு உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன், மலூருக்குக் கூட்டிச் செல்லலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது லக்ஷ்மி ராஜபாளையம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாள்.

 

தனியார் யானைகளும் அரசின் பொறுப்பும்

 

யானை போன்ற வன உயிரினங்களைச் சொந்தமாக ஒரு தனியார் வாங்குவதற்கும், வைத்திருப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஊர் விட்டு ஊர் அல்லது மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வதற்கும் கடுமையான விதிகளைக் குறிப்பிட்டுள்ளது இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம் (1972). இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து விதமான வன உயிரினங்களும் அரசின் சொத்தாகத்தான் கருதப்படுகின்றன. அவற்றைத் தனியார் வைத்திருந்து பராமரிக்க வேண்டுமென்றால் தலைமை வன உயிரினப் பாதுகாவலரின் சான்றும் அவர் அளித்த உரிமமும் பெற்றிருக்க வேண்டும். அந்த உரிமத்தைக் குறிப்பிட்ட காலத்தில் முறையாகப் புதுப்பித்துக்கொள்ளவும் வேண்டும். வன உயிரினங்கள் மட்டுமல்ல; அந்த உயிரினம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களும் (மாமிசம் உட்பட தோல், தந்தம், முடி, நகங்கள், போன்றவை) மேற்குறிப்பிடப்பட்டுள்ள வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் எல்லைக்குள் வருகின்றன.

 

கடுமையான சட்ட விதிகள் இருக்கும்போது, உரிமம் அளிக்கும் அதிகாரம் கொண்ட தலைமை வன உயிரினப் பாதுகாவலர் போன்ற அதிகாரிகள், முறையான விசாரணைகளும் பரிசோதனைகளும் நடத்திய பிறகே ஒரு தனியாருக்கு உரிமம் வழங்க வேண்டும். அவ்வாறு உரிமம் வழங்கும்போது, உரிமம் கோரியுள்ள மனுதாரர் அந்தக் குறிப்பிட்ட விலங்கைவைத்துப் பராமரிக்கக்கூடிய தகுதியும், திறமையும், நிதி வசதியும் கொண்டவரா என்பதையும் ஆராய்ந்து உரிமம் அளிக்க வேண்டும். மனுதாரர் எதற்காக அந்தக் குறிப்பிட்ட விலங்கை வைத்துப் பராமரிக்க விரும்புகிறார் என்கிற உண்மையான காரணத்தையும் நோக்கத்தையும் அறிய வேண்டும். அத்தகைய தார்மீகப் பொறுப்புகளும் வனத்துறை தலைமை அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால் மேலே நாம் பார்த்த அம்மு, லக்ஷ்மி, ஃபஸீலா ஆகிய யானைகளுக்கு உரிமம் பெற்றுள்ளவர்களின் யோக்கியதையைப் பார்க்கும்போது, தலைமை வன உயிரினப் பாதுகாவலர் தன் கடமையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் தவறியவராக இருக்கிறார். ஏதோ நாய், பூனை வளர்ப்புக்கும், ஆடு, மாடு பராமரிப்புக்கும் உரிமம் வழங்குவதைப் போல யானை பராமரிப்புக்கும் உரிமம் வழங்கப்படுகின்றது.

 

கோடிக்கணக்கில் வருமானம் உடைய பெரிய பெரிய கோவில்களே யானைகளைப் பராமரிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றபோது, சாதாரண ஆட்டோ ஓட்டுனர் போன்றவர்களுக்கெல்லாம் உரிமம் வழங்கப்படுகிறதென்றால் அரசமைப்பு சரியல்ல என்று தான் அர்த்தமாகிறது. இந்து அறநிலையத்துறையைவிட வனத்துறையில் ஊழல் புறையோடிக்கிடக்கிறது என்கிற அபிப்பிராயம் பொதுமக்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வருகின்றது. அதே போலத்தான் கால்நடை வளர்ப்புத்துறையும். இந்த மூன்று துறைகளும் ஊழலும் பொறுப்பின்மையும் மிகுந்து கிடக்கும் துறைகள் என்பதைத் தெளிவாக எடுத்துகாட்டி நிரூபணம் செய்கின்றது அம்முவின் துன்பம் மிகுந்த வாழ்வும் மரணமும்.

Thiruvidai Marudhur Gomathi-3

Thiruvidai Marudhur Gomathi-2

Thiruvidai Marudhur Gomathi-1

Pazhani Private Elephant Lakshmi-1

 

Pazhani Private Elephant Lakshmi-2

Pazhani Private Elephant Lakshmi-3

Ammu - KSPCA staff, police and the Mahout

Ammu - Unable to stand

Ammu - Huge wound at the buttock

Ammu - Administering saline

Ammu - At various stages and finally dead.

Ammu - Dr.Sakthivel's Certificate-1

Ammu - Dr.Sakthivel's Certificate-2

Ammu - Housed in a cramped room

 

Ammu - Owner's Request Letter for treatment

Ammu - Dr.Sakthivel's Certificate-4

Ammu - Dr.Sakthivel's Certificate-3

Ammu - KSPCA's letter to Conservator of Forests

Ammu - Sick with wounds

Ammu - Narrow path to her room

 

 

(தொடரும்)

Series Navigationசேதுபதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ வனந்தேடி அலையும் சிறுமி ‘ தொகுப்பை முன் வைத்து …சொல்லவேண்டிய சில
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //சிறைப்படுத்தப்பட்ட (Captive) யானைகள் இறந்துபோகும் கொடுமை ஒரு பக்கம் நடந்தேறுகிறது என்றால், அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு அவை அனுபவிக்கும் சித்திரவதைகள் எண்ணிலடங்கா.//

    “விநாயகனே வினை தீர்ப்பவனே
    வேழ முகத்தோனே ஞால முதல்வனே!”

    என்னும் பாடல் திரு.சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் ஒரு காலம்.
    வேழ முகத்தொனுக்கு இப்ப போதாத காலம்..யானை சிறைப்படுவது சித்திரவதைப்படுவது இன்று அல்ல அன்றே ஆரம்பித்து விட்டது.புராணங்கள் அதைத்தான் சொல்கிறது.

    பார்வதி தேவியார் குளிக்கச் செல்ல பாதுகாப்புக்கு ஒரு மகனை காவலுக்கு வைக்கிறார்.சிவன் பார்வதியை பார்க்க வருகிறார்.உள்ளே அனுமதிக்க மறுத்ததால் மகன் தலை சீவப்படுகிறது.இதைக்கண்டு பதைபதைத்த தேவி தன் மகனுக்கு உயிர் கொடுக்க வேண்டுகிறார்.பார்த்தார் சிவனார்,

    காட்டில் தன் போக்கில் மேய்ந்து திரிந்த யானையின் தலையை வெட்டி ஒட்டிவிடுகிறார். அன்று சிவனார் தலையை மட்டும் வெட்டினார்.இன்று சிவனடியார்கள்.ஒட்டுமொத்த யானையையும் உருக்குலைகிறார்கள்.

    குணாநிதியே குருவே சரணம்
    குணாநிதியே குருவே சரணம்
    குறைகள் களைய இதுவே தருணம்

    கட்டுரையாளர் திரு.பி.ஆர்.ஹரன் அவர்கள் மிகுந்த ஆய்வு செய்து வாய் இல்லா ஜீவனின் வதை படும் படலத்தை எழுதி உள்ளார்கள்.இனிமேலாவது கோயில் யானைகளை கும்பிட்டு மரியாதை செய்வதை விட அவைகளின் அடிப்படை உணவு,உறைவிட,மருத்துவ வசதிகளை சம்பத்தப்பட்ட நிவாகங்கள் கவனிக்க வேண்டும்.

    உமாபதியே உலகம் என்றாய்
    ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
    கணநாதனே மாங்கனியை உண்டாய்
    கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

    ஒரு சுற்றில் உலகத்தை வலம் வந்த வினை தீர்ப்பவன் இன்று அவன் வயிற்றுப்பாட்டு வினை தீர்ப்பதற்கு தெருத்தெருவாக பிச்சை எடுக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டான் மனிதன்.

    ஆன்மீகப் பாரம்பரியம் என்ற பெயரில் வன விலங்குகளை கொடுமை செய்வதை சட்ட பூர்வமாக அரசு தடை செய்ய வேண்டும்.யானைகளும் சுதந்திரமாக வனத்தில் வாழும்,அதன் அடிப்படை வாழ்வாதார உரிமையை பறிக்கக் கூடாது.

    விநாயகனே வினை தீர்ப்பவனே
    வேழ முகத்தோனே ஞால முதல்வனே!

    உன் வினை தீர்க்க யாரைத் தேடுவது?

  2. Avatar
    Jayashree K V says:

    It really pains me to see the kind of torture these gentle creatures are subjected to. What right do we have to keep them in captivity. If these animals are domesticated, then they should be looked after as pets- with love and care. These are wild animals and they should be left that way.

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    மிகச்சிறப்பான கட்டுரை. முதலில் யானைகளை கோயில்களோ தனியாரோ உடமையென வைத்துக்கொள்வதை தடை செய்யவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *