சனிக்கிழமைக் காலை. மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் கிளம்பினோம். டாக்சி மூலம் விஜயா வாஹினி ஸ்டூடியோவுக்குச் சென்றோம். நுழைவாயில் காவலர் எங்களை விசாரித்தார். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து இரவிச்சந்திரனைப் பார்க்க வந்துள்ளோம் என்று நாதன் அவரிடம் கூறினார். அவர் சலாம் அடித்து எங்களை உள்ளே விட்டார்.
விஜயா வாகினி ஸ்டூடியோ உள்ளே நுழைந்ததும் அது ஒரு மாய உலகம் போன்று தோற்றம் தந்தது! வீதிகளும் கட்டிடங்களும் கூடாரங்களும் மரம் செடி கொடிகள் கொண்ட பூங்காவனங்களும் என்னை அப்படிதான் திகைக்கவைத்தது. ஆள் நடமாட்டம் குறைவுதான். வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
எதிரே வந்த ஒருவரிடம் நாங்கள் வினவியபோது அவர் தொலைவில் தெரிந்த ஒரு கூடாரத்தைக் காட்டினார். அங்கு சென்றோம். கூடாரக் கதவு சாத்தியிருந்தது. காவலர் விவரம் கேட்டார். நாதன் இரவிச்சந்திரன் பெயரைச் சொன்னதும் அவர் எங்களை வணங்கி உள்ளே விட்டார்.
ஒரு பெரிய கிடங்கியினுள் நுழைந்தோம். பகலிலும் அங்கு இருட்டாக இருந்தது. சற்று தொலைவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கு பிரகாசமான விளக்குகள் எரிந்தன. ஒரு பேருந்தின் ஒரு பகுதி மட்டும் நின்றது. அதனுள் நடிகர் நாகேஷ் நடித்துக்கொண்டிருந்தார். இரவிச்சந்திரன் ஒரு ஓரமாக அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தார். நாங்கள் அவரிடம் சென்றோம். நாதன் தன்னை அறிமுகம் செய்துகொண்டு என்னையும் அறிமுகம் செய்து வைத்தார். அவர் சிரித்த முகத்துடன் கைகுலுக்கி எங்களை வரவேற்றார்.
நான் அவரைப் பார்த்தேன். முழு மேக்கப்புடன் இருந்தார். காதலிக்க நேரமில்லை படத்தில் பார்த்த அதே ” ஸ்டைல் “.. அதே மிடுக்கு. இளமைத் துடிப்பு. மிகவும் நேர்த்தியாக உடுத்தியிருந்தார். நாதன் அவருக்குக் கொண்டுவந்திருந்த ” டன்ஹில் ” சிகரெட் பாக்கட் தந்தார். அதைப் பெற்றுக்கொண்டவர் உடன் பிரித்து ஒரு சிகரெட் எடுத்து புகைக்கத் தொடங்கினார். இருவரும் சினிமா உலகம் பற்றி பேசினர். இடையிடையே என்னிடமும் மருத்துவக் கல்லூரி பற்றி கேட்டுக்கொண்டார். பின்பு அன்றைய படப்பிடிப்பு பற்றியும் கூறினார்.
அது ” மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி ” படப்பிடிப்பு. அது முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம் என்றார். அதில் நாகேஷ் பேருந்து கண்டக்டராக நடித்துக்கொண்டிருந்தார் . எங்களை அழைத்துக்கொண்டு சற்று அருகில் சென்று காட்டினார். நாகேஷ் அந்த பாதி பேருந்தில் நடந்தவண்ணம் நடித்தார். பேருந்தில் சிலர் பிரயாணிகளாக அமர்ந்திருந்தனர். வெளியிலிருந்து அதை கேமராவில் பதிவு செய்துகொண்டிருந்தனர். சுற்றிலும் சுமார் இருபது பேர்கள் உதவி செய்தனர்.
படப்பிடிப்பு பார்ப்பது எனக்கு அன்று முதல் அனுபவம். ஆவலுடன் அங்கு நடப்பதை கவனித்தேன். அது பாதி பேருந்துதான். அதன் அடுத்த பக்கத்தில் ஒரு பெரிய வெள்ளைத் திரையில் வீதி நகர்வது போன்று படம் ஓடியது. அவர்களுடைய கலை நுணுக்கம் கண்டு நான் வியந்துபோனேன். அந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான காட்சிகள் அவ்வாறு ஸ்டூடியோக்களில்தான் படமாக்கப்பட்டன. வெளிப்புற படப்பிடிப்புகள் குறைவுதான். அவ்வாறு ஒவ்வொரு காட்சியாக பதிவு செய்து ஒரு முழு படத்தைத் தொகுத்து வெளிக்கொண்டுவருவது எவ்வளவு சிரமமிக்கது என்பதை உணர்ந்துகொன்டேன்.
படப்பிடிப்பின் இடைவேளையில் நாகேஷ் எங்களிடம் வந்தார், ரவிச்சந்திரன் எங்கள் இருவரையும் சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளதாக அறிமுகம் செய்துவைத்தார். அவர் எங்களிடம் கை குலுக்கினார். கொஞ்ச நேரம் பேசிவிட்டு விடைபெற்றார். அவரும் முழு மேக்கப்பில்தான் இருந்தார். பேருந்து நடத்துனரின் காக்கி நிற சீருடையில் இருந்தார். மிகவும் ஒல்லியாகாக் காணப்பட்டார்.
நாகேஷ் மீண்டும் அந்த பாதி பேருந்தில் ஏறிக்கொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்தது.
இரவிச்சந்திரனும் படப்பிடிப்புக்கு தயாரானார். நாங்கள் கை குலுக்கி விடை பெற்றோம்.
ஒரு படப்பிடிப்பை நேரில் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் அங்கிருந்து டாக்சி மூலம் மவுண்ட் ரோடு சீன உணவகம் சென்றோம். அது தேவி பேரடைஸ் திரையரங்கின் அருகில் இருந்தது. உணவகத்தினுள் நுழைந்ததுமே அங்கு சீன உணவகத்தின் மணம் கமகமத்தது. அது அங்கு பரிமாறப்படும் கிச்சாப் வாசம்.
மதிய சென்னை வெயிலில் அங்கு குளுகுளு ஏர் கண்டிஷனில் அமர்ந்து சுவையான சீன நூடல்ஸ் உண்பது சுவையாக இருந்தது.
நாதன் தங்கியிருந்த விடுதி அறைக்குத் திரும்பினோம்.
சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இந்தியன் மூவி நியூஸ் மாத இதழ் மிகவும் பிரசித்திபெற்றது. பல இல்லங்களின் குடும்ப இதழ் அது. அது ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவரும். ஆங்கிலப் பகுதியில் இந்தி சினிமா செய்திகளும் தமிழ்ப் பிரிவில் தமிழ்ச் சினிமா செய்திகளும் வெளிவரும். அதோடு சிறுகதைகளும் கவிதைகளும் வெளிவரும். ஷா பிரதர்ஸ் வெளியீடான அதன் ஆசிரியர் எஸ்.எஸ். சர்மா. அந்த இதழின் வாசகர் சங்கத்தின் தலைவர்தான் எஸ்.ஏ.நாதன். தமிழகத்தின் திரைப்பட நடிகர் நடிகர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி புகழ் பெற்றுவருபவர். ஆதலால் தமிழ்த் திரைப்பட நடிகர் நடிகைகளின் பழக்கம் நாதனுக்கு நிறைய இருந்தது. ஒரு கலை நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பாகத்தான் மெட்ராஸ் வந்துள்ளார். அன்று இரவுகூட சில நடிகைகளைக் காணப்போவதாக தெரிவித்தார். என்னையும் அழைத்தார், எனக்கு ஆசைதான். ஆனால் நான் அன்றிரவே வேலூர் செல்லவேண்டியதால் மாலையில் அவரிடம் விடை பெற்று மெட்ராஸ் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் சென்று காட்பாடிக்கு புறப்பட்டேன்.
( எஸ். ஏ. நாதன் பின்னாட்களில் இந்தியன் மூவி நியூஸ் மாத இதழின் உரிமையாளராகி அதன் ஆசிரியராகி பிரபலம் அடைந்தார். அநேகமாக அனைத்து தமிழக திரைப்பட நடிகர் நடிகைகள் அவருக்கு நெருக்கமானார்கள். அவர்களை சிங்கப்பூருக்கு வரவழைத்து ஏராளமான கலை நிகழ்ச்சிகள் .நடத்தினார். சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இந்தியன் மூவி நியூஸ் சினிமா மாத இதழ் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் இல்லங்களில் பிரபலமானதுபோல் எஸ்.எ .நாதனும் புகழ் பெற்று விளங்குகிறார். 1952 லிருந்து வெளிவரும் இந்த மாத இதழ் உலகின் மிகப் பழமையான சினிமா இதழாகக் கருதப்படுகிறது. இனிய குணமும் பண்பும் கொண்டுள்ள நாதன் சினிமா பத்திரிகை உலகில் 25 வருடங்கள் நெருங்கிய தொடர்புடையவர். அவருடைய அனுபவங்களைத் தொகுத்து ஆங்கிலத்தில், ” My Unbelievable Journey With Indian Cinema ” என்னும் அழகிய நூலை எழுதி சிங்கப்பூரின் ஜனாதிபதி மாண்புமிகு எஸ்.ஆர்.நாதன் அவர்களால் வெளியிட்டுள்ளார்.என் இளமைப் பருவத்தில் சிங்கப்பூரில் ஹெண்டர்சன் மலையில் என்னுடன் வளர்ந்த நாதன் இவ்வாறு சினிமா இலக்கியத்துறையில் சிறந்து விளங்குவது எனக்கு பெருமையானது! )