“முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்

author
0 minutes, 7 seconds Read
This entry is part 7 of 29 in the series 9 அக்டோபர் 2016

பொன் குலேந்திரன் -கனடா

mulveil3

மெனிக் முகாமில் அகதிகளை அவதானித்தபடியே மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. அகதிகளின் விரக்தியான முகங்கள் அவர்ளை பரிதாபப்படவைத்தது. சிறுவர்கள் விபரம் தெரியாது அங்கும் இஙகும் ஓடி விளையாடினாரகள். எவரோடு முதலில் உரையாடுவது என்பதை அவர்கள் முடிவு எடுக்க வேண்டிய நிலை. அகதிகள் முகாமில் மூவர்களது பார்வையில் முதலில் அவர்களுக்குத் தென்பட்டது வெள்ளை நிறச் சேலைகளட அணிந்த இரு பெண்கள். அவர்கள் திறந்த வெளியில் தங்கள் கூடாரத்துக்கு முன்னால் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென தனிபட்ட சமையல் அறை கிடையாது. அவர்களுக்கு அருகே இரு சிறுவர்கள் அவர்களுக்கு உதவி செய்துகொண்டு இருந்தார்கள்.. பெணகளின் கணவன்மாரைக் காணவில்லை . இரு பெண்களும் வெள்ளை சேலை அணிந்திருந்தபடியால் அவர்கள் விதவைகளாக இருக்கலாம் என்பது மகேஷின் ஊகம். ஜோனுக்கு தான் ஊகித்ததை மகேஷ் சொன்னார்.

 

“ மகேஷ் எதற்கும் அவர்களோடுப் பேசிப்பார்ப்போம். அப்போ உண்மை தெரியும்” என்றார் ஜோன்

 

அவர்கள் இருவரையும்  பார்த்து “ எப்படி அம்மா இருக்கிறீர்கள். முகாம் வாழ்வு பிடித்துக் கொண்டதா”? மகேஷ் அவர்களிடம் கேட்டார்

 

பதில் சொல்வதற்கு முன் யாராவது இராணுவத்தினர் தாங்கள் பேசுவதை கவனிக்கிரார்களா என்று இரு பெண்களும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.

 

“ அம்மா பயப்படாதீர்கள். முகாமிற்குப் பொறுப்பான  மேஜரிடம் இருந்து உங்களோடு  பேச அனுமதி பெற்றுத்தான்  நாங்கள் வந்திருக்கிறோம். நீங்கள் பயப்படாமல் எங்களோடு பேசலாம்.

 

”அது சரி நீங்கள் மூவரும் யார்”? இரு பெண்களில் ஒருத்திகேட்டாள்.

 

“அம்மா நாங்கள் ஊடகவியலாளர்கள். முகாமில் இருபவர்களின் நிலைபற்றி அறிய வந்திருக்கிறோம். இவர் ஜோன் என்ற கனடா தேசத்துச் செய்தியாளர். மற்றவர் பெயர் லலித். என் பெயர் மகேஷ். நீங்கள் ஆங்கிலம் பேசுவீர்காளா.”?  மகேஷ் இரு பெண்களில் ஒருத்தியைக் கேட்டார்

 

“ எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது  ஐயா.  தமிழ் மட்டுமே தெரியும்”, பதில் சொன்னாள்  அந்தப் பெண்.

 

“பரவாயில்லை. தமிழில் பேசுவோம். பிறகு அதை ஜோனுக்கும், லலித்துக்கும் மொழிபெயர்த்து நான் சொல்லுகிறேன். உங்கள் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா”?

 

இருந்த பெண்களில் ஒருத்திசொன்னாள், “என்பெயர்  அன்னம்மா. இவ என் தங்கை பொன்னம்மா”.

 

“ உங்களுடைய முகங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கிறதே நீங்கள் இரட்டையர்களா?”

 

“ ஓம் சேர். பொன்னம்மா நான் பிறந்து அரை மணித்தியாலத்துக்குப் பிறகு பிறந்தவள் என்று என் அம்மா அடிக்கடி  சொல்லுவா. அம்மாவும் என் அப்பாவும் இப்போ இல்லை. குண்டு வீச்சில் சாவகச்சேரியில் பலியாகிவிட்டார்கள். நாங்கள் தப்பியது கடவுள் புண்ணியம். எங்கள் குடும்பம் நல்லாய் இருந்த குடும்பம்.”

 

“உங்கள் இருவரது கணவன்மாரோடு நாங்கள் பேச முடியமா”?, என்று மகேஷ் கேட்டார். உடனே இருவரும் ஓப்பாரி வைத்து ஓ வென்று அழத்தொடங்கினார்கள். உடனே தான் ஊகித்தமாதிரி  அவர்கள் இருவரது கணவன்மார்களும் உயிரோடு இல்லை என்பது மகேசுக்கு உர்ஜிதமாகிவிட்டது.

“ ஏன் அழுகிறீர்கள். என்ன நடந்தது அவர்கள் இருவருக்கும்.”?

 

“ என் கணவன் பெயர் முருகையா. என் தங்கை பொன்னனம்மாவின்  கணவன் பெயர் செல்லையா. அவர்கள் இருவரும் எங்களைப்போல் இரட்டையர்கள்”. அன்னம்மா சொன்னாள்.

 

“ கேட்க அச்சரியமாக இருக்கிறதே இரட்டையர்கள், இரட்டையர்களைத்   திருமணம் செயவது மிக அருமை. அது சரி மேலே என்ன நடந்தது அவர்களுக்கு”?

 

“முருகையா நல்ல மொட்டார் மெக்கானிக். அவருடைய தம்பி  செல்லையா திறமையான டிங்கர் வேலைக்காரர். அவர் எந்த பழைய காரையும் புதுக்காராக மாற்றிவிடக் கூடியவர் இருவரும் சேர்ந்து உருத்திரபுரத்தில் “செல்லமுருகன்” என்ற பெயரில் வாகனங்கள் ரிப்பெயர் செய்யும் கராஜ் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு உதவியாக இருவர் வேலை செய்தார்கள். விவசாயிகள் எல்லோரும் தங்கள் டிரக்டர், ஜீப், கார் போன்ற வாகனங்களைப் திருத்துவதற்கு காராஜுக்கு கொண்டு வருவார்கள்.  நல்ல வருமானம் வந்தது. எங்கடை பிள்ளைகள் ருத்திரபுரம் அரசினர் பாடசாலையில் படித்தார்கள். நாங்கள் ஒரு பெரிய வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தோம். அடிக்கடி விடுதலைபுலிகள் தங்கள் வாகனங்களுக்கு ஏதும் பிரச்சனை என்றால் கராஜுக்கு கொண்டு வந்து திருத்திக்கொண்டு போவார்கள். அவர்களின் வாகனங்களை, எங்கள் கணவன்மார் மறுக்காமல் திருத்திக் கொடுப்பார்கள். அவர்கள் பணம் கொடுத்தால் மடடுமே வாங்குவார்கள். அதை விட எங்கள் குடும்பத்துக்கு இயக்கத்தோடு வேறு ஈடுபாடு இல்லை”, அன்னம்மா சொன்னாள்.

“ அப்போ அவர்கள் இருவரும் மனிக் முகாமுக்கு உங்களோடு வந்தார்களா?

 

“ நாங்கள் குடும்பத்தோடு வந்து ஒரு மாதத்துக்குள் தலையாட்டிகள் தலையாட்டியதால் இருவரையும் ஆர்மி விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அதன் பிறகு அவர்கள் திரும்பவே இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது “.

 

“ நீங்கள் முறையிடவில்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது என்று விசாரிக்கவில்லையா”?

 

“ எத்தனையொ தடவை கேட்டுவிட்டோம் அவர்களுக்கு என்ன நடந்தது என்று. இன்னும் விசாரணை நடக்கிறது என்ற பதில் தான் கிடைத்தது. நான் அறிந்தமட்டில் இப்படித் தலையாட்டிகளால் அடையாளம் காட்டி கொடுத்து விசாரணக்கு என்று அழைத்து செல்பவர்கள் ஒரு போதும் திரும்பி வருவதில்லை என்று. உடலைக் கூட தர மாட்டார்கள். பொன்னம்மா சொல்லி விம்மி அழுதாள்.

 

“ உங்களுடைய குடும்பத்தை அவர்கள் விடுதலை செய்தால் திரும்பவும் ருத்திரபுரம் போவீர்களா?”.

 

“ இல்லை. பழைய வீட்டுக்குப் போய் நாங்கள் வாழ்ந்த வாழக்கையை நினைத்து கவலைபட வேண்டும். அதோடு நாங்கள் வாழந்த ருத்திரபுர வீட்டில் யார் இப்போ இருக்கிறார்களோ தெரியாது. நாங்கள் பிறந்த ஊரான சாவகச்சேரிக்குப் போவதாக தீர்மானித்துள்ளோம்”, என்றாள் அன்னம்மா.

 

“உங்களுக்கு இந்த முகாம் வாழ்க்கை பிடித்துக்கொண்டதா”?

 

“எப்படி பிடிக்கும்? நாங்கள் இலங்யில் பிறந்து வளர்ந்த பிரஜைகள். எங்களைக் கைதிகளாக நடத்துகிறார்கள். ஒரு கூடாரத்துக்குள் இரு குடும்பங்கள் வாழ வேண்டியிருக்கு. குளிக்கவும் மல சலம் கழிக்கவும், சமையல் செய்யவும் வசதிகள் இல்லை. பிள்ளைகளுக்கு படிக்க வசதிகள் இல்லை. மஞ்சுளா தான்  சில மணி நேரம் பிள்ளையளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறா. நோயென்று வந்தால; நேர்ஸ் சாந்தியும,; டாக்டர ராஜதுரையரும் எங்களைக் கவனிக்க இருக்கிறார்கள். சுதந்திரமாக திரியமுடியாது. எங்களை  எப்போதும் கண்காணித்தபடியே  இருக்கிறார்கள். இப்படியும்; ஒரு வாழக்கையா? என்ன குற்றம் நாங்கள் செய்தோம்? பொன்னம்மாவும் அன்னம்மாவும் அழுதபடி குறைப்பட்டார்கள்;.

 

“ எங்களுக்கு உங்கள் பிரச்சனைகளைப் பற்றிச் சொன்னதுக்கு நன்றி. இதைப்பற்றி நாங்கள் எங்கள் பத்திரிகையில் எழுதி உங்களுக்கு விரைவில் விடுதலை கிடைக்க முடிந்ததைச் செய்வோம்”, மகேஷ் அவர்களுக்கு வாக்குறதி அளித்துவிட்டு அவ்விடத்தை விட்டு  முகாமில் உள்ள மற்றவர்களைச் சந்திக்கப்போனார்கள். நகர முன் தான் தமிழில் பேசியதை ஜோனுக்கு மொழிபெயர்த்து மகேஷ் சொன்னார். ஜோனும் குறிப்பெடுத்துக்கொண்டார். அதன் பின் இருபெண்களையும் அவர்களின் அனுமதியோடு ஜோன் படம் எடுத்தார். ஜோன் படம் எடுப்பதைக் கண்டவுடன் இரு சிறுவர்களும் தமது தாய்மார் அருகே வந்த நின்று கொண்டனர்.

 

******

 

Series Navigationஎரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.நீள்கவிதை – பராக் பராக் பராக்..!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *