எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து பல்வேறு தலைப்புகளில் அடக்கப்பட்டுள்ளன. அவற்றில் மருதத்திணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு நூலின் முதலில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் ஓரம்போகியார்.
இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. இவர் கொங்கு நாட்டைச் சேர்ந்த ஆதன் அவினி என்னும் சேர மன்னனின் ஆதரவைப் பெற்றவர். வட கொங்கு நாட்டில் கானப்படும் அவினியாறு இவனால் வெட்டப்பட்டதென்பர்.
மருதத்திணையில் உள்ள மூன்றாம் பத்துதான் கள்வன் பத்து என்பதாகும். கள்வன் என்றாலே அனைவருக்கும் திருடன் என்ற பொருள்தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இச்சொல் இங்கு நண்டைக் குறிக்கிறது. இப்பத்துப் பாக்களிலும் நண்டு பயின்று வருவதால் இப்பகுதி “கள்வன் பத்து” என்று கூறப்படுகிறது. நண்டானது கள்வன், அலவன், ஞெண்டு எனப்பல பெயர்களில் இலக்கியங்களில் காணப்படுகிறது. இனி ஒவ்வொரு பாடலின் பொருளையும் பேச்சு நடையிலேயே காண்போம். அப்போதுதான் நாமும் பாடலுடன் ஒன்ற முடியும்.
கள்வன் பத்து—-1
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்ப[து] எவன்கொல் அன்னாய்
இது தலைவிகிட்டத் தோழி சொல்ற பாட்டுங்க; ”நான் இனிமே அவங்க ஊட்டுக்கு எல்லாம் போக மாட்டேன்”னுதான் அவன் தெளிவா சொல்லிட்டானே”ன்னுத் தோழி சொல்றா; ஆனா தலைவியோ, “அவன்கிட்ட அந்த எண்ணம் இருக்கும்டி”ன்னு சொல்லிட்டா; அப்ப, தோழி சொல்ற பாட்டுங்க இது;
முள்ளின்றது முள்ளிச்செடிகளைக் குறிக்குது; இது முட்களை உடைய ஒரு செடிங்க; அதோட பூவெல்லாம் நீலமா இருக்கும்; அடைகரைன்னா அந்த தண்ணி ஓடற வாய்க்காலோட கரைங்க; அகநானூறுல கூட “முண்டகங் கலித்த முதுநீர் அடைகரை”ன்னு வர்றதப் பாக்கலாங்க; சில நண்டுகள் மேலே புள்ளி இருக்கும்; அதாலதான் புள்ளிக்கள்வன்னு சொல்றாருங்க; தண்துறைன்னா குளிர்ச்சியான தண்ணீர்த்துறைங்க; பசப்பதுன்னா ஊடல்ல வேறுபடுவதுன்னு பொருள்;
தோழி சொல்றா, “ அவன் ஊர்ல தண்ணி ஓடற வாய்க்கா கரையில முள்ளுச் செடியெல்லாம் இருக்கும். அங்க இருக்கற நண்டு மேல புள்ளியெல்லாம் இருக்கும். அந்த நண்டு என்னா செய்யும் தெரியுமா? அங்க இருக்கற ஆம்பலோட தண்டை அறுக்குமாம். அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன் அவங்க ஊட்டுக்கெல்லாம் நான் இனிமே போக மாட்டேன்னு சொல்லிட்டான்; ஆனா உன் கண்ணெல்லாம் பசந்துபோயி வேறுவிதமா தெரியுதே”
தண்ணிக்கரையில வாழற நண்டானது ஆம்பலை அறுக்கும்னு சொல்லறதால அவன் இனிமே அவங்க தொடர்பை சுத்தமா அறுத்து விட்டுடுவான்றது மறைபொருளுங்க.
கள்வன் பத்து—2
“அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்
முள்ளி வேர்அளைச் செல்லும் ஊரன்
நல்ல சொல்லி மணந்[து]இனி
நீயேன் என்ற[து] எவன்கோல் அன்னாய்”
இந்தப் பாட்டுல அள்ளல்னா சேறுன்னு பொருளுங்க; அளைன்ற சொல்லுக்கு நண்டு வாழற எடம்னு பொருள்; “கவைத்தாள் அலவன் அளற்றளை சிதைய”ன்னு பெரும்பாணாற்றுப்படை [208] யில் கூட வருதுங்க;
தலைவி தோழிகிட்ட சொல்ற பாட்டுங்க இது.
“அவன் ஊர்ல சேத்துல ஆடிக்கிட்டிருந்த நண்டு முள்ளிச் செடியோட வேரில இருக்கற வளையில போயி அடைஞ்சுடும்; அப்படிப்பட்ட ஊரில இருக்கற அவன் முன்னாடி தனியா வந்தான். நல்லாவே நல்லதையே பேசினான். கல்யாணமும் செஞ்சிகிட்டான். ஆனா இப்ப ஒன்ன உட்டுட்டுப் போக மாட்டேன்னு சொல்றானே. இதுக்கு என்னா கருத்துடி சொல்லு”ன்னு தலைவி கேக்கறா.
அதாவது மொதல்ல அவன் வந்து சேர்ந்தது களவுக் காலமாம். அப்ப அவன் சொன்னது நல்லாவே இருந்துச்சு; இப்ப உட்டுட்டுப் போக மாட்டேன்னு அவன் சொல்லக் கூடாது. ஆனா அவன் சொல்றது அவங்க ஊட்டுக்கு போகப்போறான்றதை சொல்ற மாதிரி இருக்குன்னு தலைவி நெனக்கறா.
அதோட சேத்துல வெளையாடிக்கிட்டு இருந்த நண்டு வளை உள்ள போகுதில்ல; அதேபோல என்கிட்ட இருந்துட்டு எல்லாரும் என்ன சொல்லுவாங்கன்னு நெனக்காம அவங்க ஊட்டுக்குப் போகப்போறான்றது மறை பொருளுங்க.
கள்வன் பத்து—3
”முள்ளி வேர்அளைக் கள்வன் ஆட்டிப்
பூக்குற்[று] எய்திய புனல்அணி ஊரன்
தேற்றம் செய்துநப் புணர்ந்[து]இனித்
தாக்[கு]அணங்கு ஆவ [து]எவன்கொல் அன்னாய்”
“பூங்குற்று”ன்னா பூப்பறித்துன்னு பொருளுங்க;
பாட்டோட பொருள் இதாங்க : முள்ளிச்செடியோட வேருல இருக்கற நண்டை ஆட்டி அலைத்து வெளையாடறது, பூக்களை எல்லாம் பறிக்கறது, குளிக்கும்போது தண்ணியில வெளயாடறது இதெல்லாம் பெரும்பாலும் பொண்ணுங்க வெளயாடற வெளயாட்டுங்க; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன்தாங்க அவன்; முன்ன நம்மகிட்ட வந்து என்னக் கூடிட்டாண்டி; இப்ப நம்மப் புடிச்சுகிட்டு வருத்தமே தர்ற தெய்வம் போல வருத்துறாண்டி”
நண்டை ஆட்டி அலைக்கறத ஏன் பாட்டுல காட்டறாங்கன்னு தெரியுமாங்க? அதே மாதிரி அவன் கட்டியவளுக்குத் துன்பம் செய்துட்டு வேற எடத்துக்குப் போயிட்டு அங்க இன்பம் அடையறான்னு மறைவா சொல்றதுக்குத்தானுங்க; அத்தோட தண்ணியில ஆடறதால அது கலங்கிக் கெடக்கும்; அதேபோல என் வீடும் கலங்கிக் கெடக்குதுன்னு சொல்றாங்க.
கள்வன் பத்து—4
தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு
பிள்ளை தின்னு முதலைத்[து] அவனூர்
எய்தின்ன் ஆகிநின்று கொல்லோ மகிழ்நன்
பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
நலங்கொண்டு துறப்ப[து] எவன்கொல் அன்னாய்
தோழி சொல்ற பாட்டுங்க இது; அவ சொல்றா, “ ஏண்டி, ஒனக்கு சேதி தெரியுமாடி? அவன் அங்கியும் ஒருத்தியோட ஒழுங்கா இல்லியாமே? ஒருத்திய உட்டுட்டு இப்ப வேற ஒருத்தியோட இருக்கறதா வந்தவங்க சொல்றாங்க”.
அதாவது, ”அவன் ஊர்ல தாய் சாவப் பிறக்கற நண்டுகளும்,முதலைகளும் நெறைய இருக்குமாம். அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவந்தாண்டி அவன்; அவன் அப்படித் தாண்டி செய்வான்; முன்ன இங்க வந்து போட்டிருந்த நகையெல்லாம் சத்தம் போடற மாதிரி கலந்தாண்டி, அப்பறம் அவங்கள உட்டுடுப் போயிடறானே; அதான் ஏன்னு தெரியலே”ன்னு தோழி சொல்றா.
அவன் ஊர்ல நண்டையும், முதலையும் காட்டி அவைபோலவே அவனுக்கும் பாசம் இருக்காதுன்றது மறைபொருளுங்க;
ஆனா குஞ்சு ஈன ஒடனே தாய் நண்டு செத்துடாதுங்க; அது பழைய ஓட்டைப் புதுப்பிக்கணும். அதால பழைய ஓடு கரைஞ்சு போயி செத்தது போல அசையாமக் கெடக்குமாம். புது ஓடு வந்ததும் நடக்க ஆரம்பிச்சுடுமாம்.
கள்வன் பத்து—5
அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்
வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்[கு]
இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்
இதுவும் தோழி சொல்றதுதான்; “அவன் ஊர்ல இருக்கற கழனியில ஊட்டுக்கு வெளியே நட்டு வளர்த்த முத்தாத பச்சையான காய் இருக்கற செவப்பான வயலைக் கொடியை நண்டு அறுத்துப் போட்டுடும்; அவனோட மார்பு உன் ஒருத்திக்கே இல்லடி; எல்லாப் பொண்ணுங்களுக்கும் போட்டிருக்கற நகைஎல்லாம் கழண்டு போற மாதிரி துன்பம் குடுக்குண்டி”
முத்தாத பிஞ்சு இருக்கற கொடிய நண்டு அறுக்குமாம். அதேபோல நம்ம ஊட்ல இருக்கற அவன் புள்ள மனம்கூட வருந்தறமாதிரி நடக்கறானேன்னு அவ மனம் வருந்தறாங்க.
கள்வன் பத்து—6
கரந்தையஞ் செறுவில் துணைதுறந்து கள்வன்
வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவ[து] எவன்கொல்? அன்னாய்!
இது தோழி சொல்ற பாட்டுங்க; பொதுவா தோழி, பாங்கன் இவங்கள்ளாம் தலைவனைக் கொறை சொல்லவே மாட்டாங்க; ஆனா அவளுக்கு ஆறுதலும் உறுதியும் வரணும்ல; அதுக்காக அவனோட குத்தம் சொல்றதும் உண்டுங்க.
பாட்டுல வர்ற கரந்தைன்றது ஒரு கொடிங்க; ‘கரந்தையஞ் செறுவின் வெண்குருகோப்பும்’னு அகநானூறுல [226] வருதுங்க; இப்ப இதைக் கொட்டைக்கரந்தைன்னு சொல்றாங்களாம்;வள்ளைன்றதும் ஒரு கொடிங்க.
”கரந்தைக்கொடி படர்ந்து இருக்கற வயலில நண்டு தன் ம்னைவிய உடுட்டுட்டுப் போகுதுங்க; அப்படிப் போகும்போது அங்க இருக்கற வள்ளைக்கொடியோட மெல்லிசான தண்டை அறுத்துட்டுப் போகுதுங்க; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவங்க அவன். அவனுக்கு எங்களைப் பத்தியும் கவலையில்ல; அங்க போறானே, அவங்களப் பத்தியும் கவலையில்ல; இப்படி ஏந்தான் இருக்கான்னு தெரியலியே”ன்னு தோழி தலைவிகிட்ட சொல்றா.
என்னையும் உட்டுட்டு அங்க போயி அவளையும் உட்டுட்டுப் போறானேன்னு ஒரு பொருளுங்க; இன்னொரு பொருளு அங்கியே ஒருத்தியை உட்டுட்டு வேறொருத்தி கூடப் போறான்றதுதாங்க;
அத்தோட என்னா காரணம்னு தெரியலன்னு சொல்றாங்க; “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்”ற குறளும் நெனவுக்கு வருதுங்க.
கள்வன் பத்து—7
செந்நெல்அம் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்
தண்ணக மண்ணளைச் செல்லும் ஊரற்[கு]
எல்வளை நெகிழாச் சாஅய்
அல்லல் உழப்ப[து] எவன்கொல்? அன்னாய்!
செந்நெல்லுன்றது ஒருவகை நெல்லுங்க; செவப்பா இருக்கும்; செஞ்சாலின்னும் சொல்வாங்க; திருமங்கையாழ்வார் திருக்கோவலூரைப் பாடும்போது “செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்” என்று குறிப்பிடுவார். செஞ்சம்பான்னும் சொல்றதும் உண்டு. செறுன்னா வயலுன்னு பொருள்.
போனவன் இன்னும் வருந்தல; அவனை நெனச்சு தலைவி வருந்தறா! அப்பதோழி சொல்றா.
”ஏண்டி, அவன் ஊர்ல செவப்பான செஞ்சாலி நெல்லு வளருது.அங்க இருக்கற நண்டு அந்த நெல்லோட கதிர எடுத்துக்கிட்டுப்போயி தஞ் வளை உள்ள பூந்துடுமாம். அப்படிப்பட்ட ஊர்ல இருக்கறவனை நெனச்சு வளைடெல்ல்ந்ந்ம் கழண்டு போயி மெலிஞ்சு போறயே!”
அவன் வேற எங்கியும் போகலடி; நீ தப்பா நெனக்காத;பொருள் சம்பாதிக்கத்தான் போயிருக்கான்; பொருள் தேடிக்கெடச்ச ஒடனே நண்டு கதிரோட வளைக்கு வர்ற மாதிரி அவனும் வந்துடுவான்ன்றது மறைபொருளுங்க.
கள்வன் பத்து—8
உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்
தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்[கு]
ஒண்தொடி நெகிழாச் சாஅய்
மெந்தோள் பசப்ப[து] எவன்கொல்? அன்னாய்!
அந்தக் காலத்துல ரெண்டுதாய் உண்டுங்க; ஒண்ணு பெத்தெடுத்த நற்றாயிங்க; வளத்த தாயிக்கு செவிலித்தாய்னு பேருங்க; இந்தப் பாட்டு செவிலித் தாயிகிட்டத் தோழி சொல்ற பாட்டுங்க;
அவனைப் பிரிஞ்சி இருக்கறதால அவளுக்கு நோயி வந்துடுச்சு; குடிக்கத் தண்ணி எடுக்கப் போனபோது அங்க இருக்கற தெய்வம் இவளைப் புடிச்சுக்கிடுச்சு; அதான் நோயிக்குக் காரணம்னு நெனக்கறயே! ஆனா இவ போட்டிருக்கற நகை கழண்டு போற மாதிரி இவ மெலிஞ்சு போறா; இவ தோள் எல்லாம் பசலை பூத்துக் கெடக்குது; அதெல்லாம் ஏன் தெரியுமா? நண்டு குளிர்ச்சியான சேத்துல நடந்து போற போது அதோட காலால அழகான கோலம் போடற மாதிரி இருக்குமாம்; அப்படி நண்டு இருக்கற ஊரைச் சேர்ந்தவன் அவன்; அவனைப் பிரிஞ்சு இருக்கறதாலதான் இவ இப்படி இருக்கா;
நண்டு போறதால சேத்துல கூட கோலம் போட்டு அழகா இருக்குது. அதேபோல அவனும் சீக்கிரம் வந்துடுவான். இவளும் தோள் பசலை நீங்கி அழகா மாறிடுவாள்ன்றது மறைபொருளுங்க.
கள்வன் பத்து—9
மாரி கடிகொளக் காவலர் கடுக
வித்திய வெண்முளை கள்வன் அறுக்கும்
கழனி ஊரன் மார்புற மரீஇத்
திதலை அல்குல் நின்மகள்
பசலை கொள்வ[து] எவன்கொல் அன்னாய்!
அவனோட வீட்டாருங்க அவளைப் பொண்ணு கேட்டு வராங்க; வெவரம் தெரியாத செவிலித்தாய் மறுப்பு சொல்லிடறா; அப்ப தோழி சொல்றா.
” அம்மா! நல்ல அதிகமான மழை பெய்ய, காவக்காரங்க வந்து பாக்க அப்ப கூட பயப்படாம நண்டு என்னா செய்யுமாம் தெரியுமா? விதை போட்டு முளைச்சிருக்கற முளைகளை அறுத்துடுமாம்; அப்படிப்பட்ட ஊரைச் சேந்தவன் அவன்; அவன்கூட மார்போட சேந்து தழுவினவ இவ; அவனை இப்ப பிரிஞ்சிருக்கறதால பசலை வந்துட்டுது பாருங்க”
மழைக்கும், காவலருக்கும் பயப்படாம நண்டு செய்வதுபோல அவன் வந்து அவளைத் தழுவினான்றது மறைபொருளுங்க; தன் வயல் முளைகளையே நண்டு அறுக்கறது போல தன் பொண்ணைக் கேக்க வந்தவங்க கிட்டயே ஒத்துப் போகாம மறுப்பு சொல்றாளேன்ரது மறைபொருளுங்க.
கள்வன் பத்து—10
வேப்புநனை அன்ன நெடுங்கண் கள்வன்
தண்ணக மண்அளை நிறைய நெல்லின்
இரும்பூ உறைக்கும் ஊரற்[கு]இவள்
பெருங்கவின் இழப்ப[து] எபன்கொல் அன்னாய்!
வேப்புன்னா வேப்பமரமுங்க; அளைன்னா நண்டு தங்கற வளைங்க இரும்பூன்னா அதிகமான பூவுங்க; கவின்ன அழகுங்க;
இதுவும் போனபாட்டு மாதிரிதாங்க; தோழி சொல்றா : “அம்மா! அவன் ஊட்டுலேந்து பொண்ணு கேக்க வந்ததை மறுத்துட்டீங்களே? வேப்பம்பூவோட அரும்பு போல நீட்டா கண்களைக்கொண்ட நண்டு இருக்கற மண்ணாலான வளை நெறய நெல்லோட தாள் இருக்கே; அதோட பூவிருக்குமாம்; அப்படி இருக்கற ஊரைச் சேந்தவன் அவன்; அவன்கிட்டதாம்மா இவ ஆசைப்பட்டா; அழகை இழக்கறா; ஏன்னுதான் தெரியலியே”
வேம்போட அரும்பு நண்டோட கண்களுக்கு நல்ல உவமைங்க; “வேம்பு நனை அன்ன நெடுங்கண் நீர் ஞெண்டு”ன்னு அகநானூறுல[176] வருதுங்க.
இந்தப்பாட்டோட கள்வன் பத்து முடியுதுங்க.
=======================================================================
- கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
- ஈர்மிப் பெருந்திணை
- சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
- அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
- வண்ணதாசனுக்கு வணக்கம்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு
- தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
- பசி
- பாசத்தின் விலை
- படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
- கள்வன் பத்து
- உன் முகம்
- குட்டி (லிட்டில்) இந்தியா
- மாயாண்டியும் முனியாண்டியும்
- வதந்திகளை பரப்புபவர்கள்!!
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
- றெக்க – விமர்சனம்
- மீண்டும் நீ பிறந்து வா…!
- கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை