முருகபூபதி – அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா – கன்பரா தமிழ் மூத்த பிரஜைகளின் காவோலை
எனக்கு அப்பொழுது ஐந்துவயதிருக்கும். எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால் கடற்கரை தெரியும். மாலைவேளையில் தாத்தாவும் நானும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவோம். வீட்டுக்கு முன்னால் இருக்கும் மின்கம்பத்தினைத் தொட்டுவிட்டு கடலை நோக்கி ஓடுவோம்.
கடற்கரையோரத்திலும் ஒரு மின்கம்பம் இருக்கிறது. அதனைத்தொட்டுவிட்டு திரும்பி ஓடிவந்து வீட்டருகில் நிற்கும் மின்கம்பத்தை தொடவேண்டும். நான் வென்றால் தாத்தா அருகிலிருக்கும் மம்மது கடையில் சீனிபோலை ( இனிப்பு) வாங்கித்தருவார். அதன் விலை ஒரு சதம்.
தாத்தா வென்றால் நான் அவருக்கு கால் பிடித்துவிடவேண்டும்.
ஆனால், தாத்தா ஒருநாளும் வென்றதில்லை. எனக்கு தினமும் சீனிபோலை கிடைத்தது. அதற்காகவே அவரது காலைப்பிடித்துவிடுவேன். தாத்தா முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பொலிஸ் சார்ஜன்டாக இருந்தவர். அதனால் அவரை நாம் பொலிஸ் தாத்தா என்றுதான் அழைப்போம்.
இன்றும் எங்கள் ஊரில் என்னைக்காணும் – எமது குடும்பத்தைத்தெரிந்தவர்கள் – முதியவர்கள் – பொலிஸாரின் பேரன் என்றுதான் விளிப்பார்கள்.
பொலிஸில் பணியாற்றுகையில் தாத்தா நன்றாக ஓடியிருக்கவேண்டும். அவருடைய பல சாகசக்கதைகளை பாட்டி சொல்லியிருக்கிறார். அக்கதைகள் இந்தப்பதிவுக்கு முக்கியமில்லை.
தாத்தாவுக்கு வயசாகிவிட்டதால் அவரால் என்னைப்போன்று ஓட முடியவில்லை. அவர் களைத்து மெதுவாக நடந்துவருவதைப் பார்த்துவிட்டு நான் சிரிப்பேன். எமது பந்தயத்தை வேடிக்கை பார்க்கும் பாட்டி, ” காவோலையைப் பார்த்து குருத்தோலை சிரிக்கிறது” என்று சொன்னார்கள். எனக்கு உடனே அதன் அர்த்தம் புரியவில்லை. புரியும் வயதும் இல்லை.
தாத்தா மெதுவாக நடந்து வந்ததும், பாட்டி ஏதோ சொன்னார்கள் என்றேன்.
பின்னர் இருவருமே எனக்கு அர்த்தம் சொன்னார்கள். பிறிதொருநாள், பின்னால் காணியிலிருந்தவர்கள் அங்கு ஒரு தென்னை மரம் வெட்டித்தரித்தபோது தாத்தா எனக்கு அதிலிருந்து தென்னங்குருத்து எடுத்து சாப்பிடத்தந்து, குருத்தோலையும் காவோலையும் காண்பித்தார். பாட்டி காய்ந்த காவோலைகளை எடுத்துவந்து கிடுகு முடைந்து வேலிக்கு மறைப்பாகக் கட்டினார். அத்துடன் தென்னோலைகளிலிருந்து ஈர்க்குச்சி எடுத்து ஒரு விளக்குமாறும் செய்தார்.
தென்னையின் பயனும் காவோலை, குருத்தோலையின் அர்த்தமும் அந்தச் சின்னவயதில் தெரிந்துகொண்டேன்.
தாத்தாவும் பாட்டியும் மேலே போய்விட்டார்கள்.
இன்று புகலிட நாட்டில், நீந்தவும் கற்றுக்கொண்டு என்னைச்சந்திக்கும் வேளைகளில் என்னுடன் விளையாடும் பேரக்குழந்தைகளுடன் அவர்களைப்போன்று என்னால் ஓடமுடியவில்லை.
நான் பின்தங்கிவிடுவதைப்பார்த்து, ” கமோன் தாத்தா ” என்று அவர்கள் சிரிக்கிறார்கள்.
காலம் இப்படித்தான் சுழல்கிறது.
அவுஸ்திரேலியாவில் கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினரின் வெளியீடு காவோலை இம்முறை இலக்கிய சிறப்பிதழாகவும் வந்துள்ளது.
அதனைப்பார்த்துவிட்டு, எனது மனைவி மிகுந்த கவலையுடன் ” ஏன் இப்படி ஒரு பெயர்வைத்தார்கள்…? ” எனக்கேட்டாள்.
அதில் எந்தத்தவறும் இல்லை. மூத்த பிரஜைகள் காவோலைக்கும் இளம் தலைமுறை குருத்தோலைக்கும் சமம் என்று விளக்கமளிக்க எனது பால்யகாலத்து கதையைச்சொன்னேன்.
காவோலை – என்ன அழகான மூத்த பிரஜைகள் வெளியீட்டுக்கான பொருத்தமான பெயர். காவோலை முதலில் குருத்தோலையாக வாழ்ந்தபோதில் சமூகத்திற்குப்பயன்பட்டது. மீண்டும் காவோலையானதன் பின்னரும் பயன்படுகிறது.
தென்னையின் பயன்பாடு குறித்து பெரிய ஆய்வுக்கட்டுரையே எழுதலாம். அதுபோன்று மெழுகாக உருகி, வெளிச்சம் தந்து மங்கி மறைந்துபோகும் மூத்தவர்களை அவர்கள் வாழும் காலத்திலேயே கொண்டாடவேண்டும் என்ற மரபு பின்பற்றப்படும் இந்த பல்தேசிய கலாசார நாட்டின் தலைப்பட்டினம் “CANBERRA” வுக்கு தமிழில் அர்த்தம் என்ன தெரியுமா..?
அவுஸ்திரேலியா ஆதிக்குடிகளின் மொழியில் ஒன்றுகூடும் இடத்துக்குப் பெயர்தான் “CANBERRA”.
இங்கு வாழும் எம்மவர்கள், எங்கள் தாயகத்தில் இனக்கொடுமை நடக்கும்வேளைகளிலெல்லாம் இந்த ஊரில்தான் ஒன்றுகூடி எழுச்சிக்கூட்டம் நடத்துவார்கள். கவன ஈர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்குசெய்வார்கள். இங்குள்ள பாராளுமன்றத்திற்கு முன்னால் ஒன்றுகூடி குரல் எழுப்புவார்கள்.
அவ்வாறு மக்கள் ஒன்றுகூடும் கன்பராவில் கலை இலக்கியவாதிகளும் ஒன்றுகூடுகின்றோம்.
எமது தமிழ் இலக்கிய கலைச்சங்கம் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக தோற்றம்பெருமுன்னர், 2004 ஆம் ஆண்டில் – கன்பராவில் நான்காவது எழுத்தாளர் விழாவும் கவிஞர் அம்பியின் பவளவிழாவும் நடத்தியிருக்கின்றோம்.
இந்த மாநிலத்தில் பல சமூகச்செயற்பாட்டாளர்களும் சில கலை இலக்கியவாதிகளும் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கன்பரா தமிழ் மூத்த பிரஜைகள் அமைப்பினர் தமக்கென ஒரு மண்டபத்தையும், மூத்தோருக்காக அதன் அருகிலேயே சில வீடுகளையும் அமைத்துள்ளனர்.
2004 ஆம் ஆண்டு கன்பராவில் எமது நான்காவது தமிழ் எழுத்தாளர் விழா நடந்தவேளையில் பக்கபலமாக இருந்தவர் தாமோதரலிங்கம் அய்யா. மூத்த பிரஜைகளின் அமைப்பில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்டவர். இந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான மயில்வாகனம் கன்பராவில் தமிழ் மூத்த பிரஜைகளை ஒருங்கிணைத்தவர். இவர்கள் இருவரும் அமரர்களாகிவிட்டனர். அதனால் இம்மண்டபத்தில் உருவப்படமாகிவிட்டார்கள்.
இம்மண்டபத்தில் நாம் கடந்த வருடமும், இந்த வருடமும் இலக்கியச்சந்திப்புகள் நடத்தியிருக்கின்றோம். அவ்வேளைகளில் எமக்கு துணை நின்று ஒத்துழைத்த ஒரு பெரியவர்தான் பேரின்பராஜா. கடந்த ஆண்டில் நடந்த இலக்கியச்சந்திப்பில், மறைந்த எழுத்தாளர்களின் படங்களை இந்த மண்டபத்தில் காட்சிப்படுத்தியபோது, ஈழத்து மூத்த கவிஞர் நீலாவணனின் படத்தை காண்பித்து, ” இவர் எனது மைத்துனர் ” என்று சொல்லி, என்னுடன் முதல் முதலில் அறிமுகமானவர்தான் பேரின்பராஜா.
திருமதி நீலாவணன் சின்னத்துரையின் மனைவி அழகேஸ்வரியின் உடன் பிறந்த சகோதரன்தான் பேரின்பராஜா.
இந்த ஆண்டு தமிழ் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் கன்பரா தமிழ் அன்பர்களின் ஆதரவுடன் எமது சங்கம் நடத்திய கலை இலக்கியச்சந்திப்பில் ஞானம் இதழின் ஆசிரியர் படைப்பிலக்கியவாதி மருத்துவர் தி. ஞானசேகரனின் பவளவிழாவையும் நடத்தியிருந்தோம்.
இலக்கிய ஆர்வலர் நித்தி துரைராஜா, பல் மருத்துவர் ரவீந்திரராஜா, மயூரன் சின்னத்துரை (தினகரன் ஆசிரியர் அமரர் சிவகுருநாதனின் மருமகன் ) மதுபாஷினி, அவர் கணவர் ரகுபதி, திருமதி யோகேஸ்வரி கணேசலிங்கம் உட்பட பலர் எமக்குத் துணைநின்றனர்.
சிட்னி தாயகம் வானொலியில் பணியாற்றும் எழில்வேந்தன், வருகை தந்து வானொலி ஊடகம் தொடர்பாக உரையாற்றினார். இவர் நீலாவணனின் புதல்வர்.
அந்த நிகழ்வு கலை இலக்கியச் செயலூக்கத்திற்கே வித்திட்டிருக்கிறது. பொதுவாக இந்த நாட்டில் இயங்கும் மொழி, சமயம், கலாசாரம் சார்ந்த அமைப்புகள் செய்தி மடலை வெளியிடுவார்கள். அதற்கு ஆங்கிலத்தில் News Letter என்று பெயர்.
அத்தகைய ஒரு செய்தி மடலையே இலக்கியமடலாக்கியிருக்கிறார் நித்தி துரைராஜா. 50 பக்கங்களில் மலர்ந்திருக்கும் கன்பரா தமிழ் மூத்த பிரஜைகளின் காவோலையில் அமைப்பின் செய்திகள், நிகழ்ச்சிகள், சுற்றுலாக்கள் பற்றிய யேகேஸ்வரி கணேசலிங்கம் எழுதிய பதிவு, மயூரன் சின்னத்துரையின் சிறுகதை, மற்றும் ஆன்மீகம் தொடர்பாக ஶ்ரீ அரவிந்தரின் எண்ணங்கள் என்பவற்றுடன் சில ஆங்கிலக்கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
சிறப்புப்பகுதியாக ஈழத்தின் மூத்த படைப்பாளி அமரர் நீலாவணன் எழுதிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
மிகவும் குறைந்த வயதில் ( 44 வயதில்) மறைந்த நீலாவணன், ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான ஆளுமை. இவருடைய பெயரில் இலங்கையில் கிழக்கில் ஒரு வீதியும் இருக்கிறது. கவிதை, பா நாடகம், காவியம், சிறுகதை முதலான துறைகளில் எழுதியிருப்பவர்.
கல்முனையில் தமிழ் இலக்கியக்கழகத்தை உருவாக்கியவர். பாடும்மீன் என்ற சிற்றிதழையும் வெளியிட்டவர். நீலாவணன் நினைவுகள் என்ற நூலை இவருடைய நீண்ட கால நண்பர் எஸ்.பொன்னுத்துரை எழுதியிருக்கிறார்.
கன்பரா காவோலை இதழில் நீலாவணனின் படைப்புகள் சில இடம்பெற்றிருப்பதனால் என்போன்ற இலக்கிய வாசகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அத்துடன் புகலிட நாட்டில் ஈழத்தின் மூத்த படைப்பாளிக்கு தரப்பட்டுள்ள மரியாதையும் நினைவுப்பகிர்வும் முன்மாதிரியாகவும் அமைகிறது.
நீலாவணனின் முருங்கைக்காய் கவிதை சுவாரஸ்யமானது. வசனகர்த்தா, நடிகர் , இயக்குநர், தயாரிப்பாளர், இதழாசிரியர் என தனது தளத்தை விரிவுபடுத்தியிருந்த பாக்கியராஜ், எடுத்தாலும் எடுத்தார் ஒரு படம். முந்தானை முடிச்சு. இது வெளியான காலத்தில் தமிழ்நாட்டில் காய்கறிக்கடையில் பெண்கள் முருங்கைக்காய் வாங்குவதற்கு வெட்கப்பட்டார்களாம்.
இதோ நீலாவணன் எழுதியிருக்கும் முருங்கைக்காய் கவிதை:
கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது
கோப்பியொன்றடித்தேன்
கொப்பியை விரித்தேன்
கூப்பிட்டாள் இவள்.
ஏனோ ? என்றேன்
கறிக்குப் புளியம் பழம்போல் றால்
வாங்கியிருக்கின்றேன்
அதற்குள் வைத்து குழம்பு வைக்க
முருங்கைக்காய்தான் ருசியாய் இருக்கும்
ஆதலால்,
அதோ நம் வாசல் முருங்கையின்
உச்சிக்கந்தில்
ஒன்று… இரண்டு… மூன்று…
நீண்டு முற்றிய காய்கள்
ஒருக்கால் ஏறி உசுப்பிவிடுங்கள் என்றாள்
மறுக்கலாம்….
மீண்டும் இரவுகள் வராவேல் !
அதற்காய் இசைந்தேன்.
அவள் விருப்பின்படி
முருங்கையில் ஏறி முறிந்து விழுந்தேன்.
அந்தோ …! வந்த அருங்கவி
இந்த அமளிகண்டெங்கோ மறைந்ததே !?
குருத்தோலைக்காலத்திற்கும் காவோலைக்காலத்திற்கும் இடைப்பட்ட வாலிபக்காலத்துக்கவிதையை நீலாவணன் எழுதியிருக்கிறார்.
புகலிட நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகள், தமது செய்தி மடல்களில் கலை, இலக்கிய விடயதானங்களையும் இணைத்தால் வாசகர்களை முக்கியமாக, குருத்தோலைகளையும் காவோலைகளையும் பெரிதும் கவரமுடியும் என்பதற்கு கன்பரா தமிழ் மூத்த பிரஜைகளின் காவோலை முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
—0—–
- கடவுள் அறிவியல் (Science of God) – ஒரு சொல்லாடல்
- ஈர்மிப் பெருந்திணை
- சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
- அமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்
- வண்ணதாசனுக்கு வணக்கம்
- “முள்வேலிக்குப் பின்னால் “ – 4 – மஞ்சுளா
- எளிய மனிதர்களின் தன் முனைப்பு
- தொடுவானம் 140. நாடி வந்த நண்பன் .
- பசி
- பாசத்தின் விலை
- படித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
- கள்வன் பத்து
- உன் முகம்
- குட்டி (லிட்டில்) இந்தியா
- மாயாண்டியும் முனியாண்டியும்
- வதந்திகளை பரப்புபவர்கள்!!
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?
- றெக்க – விமர்சனம்
- மீண்டும் நீ பிறந்து வா…!
- கதை சொல்லி – 4 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்” – எளிய தமிழில் அரிய உரை