பாசத்தின் விலை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 10 of 21 in the series 16 அக்டோபர் 2016

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

அந்த அறையில் குடும்பத்தினர் எல்லோரும் கூடியிருந்தார்கள். வாசலுக்கு நேராக இருந்த மேற்குச் சுவரின் அருகே ஒரு சேரில் செல்வக்குமார் அமர்ந்திருந்தார். அவருக்கு இடப்புறம் ரகுவும் அவன் மனைவி கமலாவும் இருந்தனர். வலப்புறம் ராஜேஷ் அவன் மனைவியுடன் உட்கார்ந்திருந்தான். இடதுபுறம் கொஞ்சம் முன்னால் ரமேஷ் தன் மனைவி கலா மற்றும் மாமியாருடன் அமர்ந்திருந்தான். தெற்குச் சுவரில் சாய்ந்தபடி ராஜம்மாள் அமர்ந்திருந்தார். கிழக்கே வாசலுக்கு அருகில் செல்வக்குமாரின் மனைவி ரமணி தன் அம்மாவின் அருகே அமர்ந்து இருந்தாள்.

செல்வக்குமார் தொண்டையை லேசாக கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

“இதோ பாருங்கப்பா, உங்கப்பா இறந்து இரண்டு மாசம் ஆச்சு. அவர் இருந்த வரைக்கும் யாருக்கும் தொந்திரவு கொடுக்காம தான் உண்டு தன் கடை உண்டுன்னு வாழ்ந்திட்டு போயிட்டார். இந்த கோயமபுத்தூர்ல் இத்தனை வருஷமா கடை வைத்து வியாபாரம் செய்திருந்தாலும் சொத்துன்னு எதுவும் சேர்த்து வைக்கலே. ஆனாலும் தனக்கும் தன் மனைவிக்கும் தேவையானதை அவரே சம்பாதித்தார். வீட்டு வாடகை, கடை வாடகை எல்லாத்துக்கும் அவருடைய வருமானமே போதுமானதாக இருந்தது. ஆனா இப்போ நிலமை வேறு. உங்கம்மாவால் கடையை நடத்த முடியாது. அதனால அவங்க யார் தயவிலாவதுதான் காலம் தள்ளணும்” என்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டார்.

பிறகு தொடர்ந்து, “ஒரு மாசத்துக்கு முன்னால் முப்பதாவது நாள் காரியத்துக்கு எல்லோரும் வந்திருந்தப்ப பேசின விஷயத்தை மறுபடியும் ஞாபகப் படுத்தறேன். நீங்க மூன்று பேரும் நாலு மாசத்துக்கு ஒருத்தர் வீதம் உங்கம்மாவைக் கூட வைச்சுப் பார்த்துக்கணும்னு அப்ப பேசினோம். சொல்லுங்க, இப்போ யார் வீட்டுக்கு முதலில் அனுப்பறதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்க” என்று சொல்லி விட்டு மூன்று பேரையும் பார்த்தார்.

ரகு உடனே பதில் சொன்னான், “நான் அப்பவே சொன்னேனே மாமா, எனக்கு இரண்டு பெரிய பொண்ணுங்களை படிக்க வைக்கறதுக்கும், குடும்பச் செலவுக்குமே வருமானம் பத்த மாட்டேங்குது. அம்மா தனியா இருந்தாலும் சரி, இல்லே யார் வீட்டில இருந்தாலும் சரி, என் பங்குக்கு மாதம் எழுநூத்து ஐம்பது ரூபாய் கொடுத்துடறேன். அவ்வளவுதான் என்னால முடியும்”.

“ஏய், இருப்பா, நீ இரண்டாவது மகன். இந்தக் குடும்பத்தை காப்பாத்தற பொறுப்பு உனக்கும் இருக்கு. ஆனா பொண்ணுங்களை வளர்க்க சிரமப் படுறேன்னு, உங்கப்பா இருந்த வரைக்கும் உனக்காக நிறைய உதவி செஞ்சிருக்கார். இப்ப என்னடான்னா ஒரேயடியா ஒதுங்கறியே” என்று அதட்டினார் செல்வகுமார்.

“எங்க நிலமை என்னன்னு அவர் சொல்றார்ண்ணே” என்றாள் ரகுவின் மனைவி கமலா.

செல்வக்குமார் ரமேஷைப் பார்த்தார். “நீ என்ன சொல்றே. முதல் நாலு மாசத்துக்கு உங்கம்மாவை நீ பார்த்துக்கறியா” என்றார்/ அவன் பேச வாயெடுக்குமுன் அவன் மாமியார் இடையில் புகுந்தாள். அவள் கொஞ்சம் அடாவடி பேர்வழி.

“தம்பி, என் மருமகன் எல்லாத்துக்கும் இளையவர். அவர் தலையில் போய் பாரத்தைச் சுமத்துறது நல்லாயிருக்கா. இரண்டு சின்னப் பிள்ளைங்க இருக்காங்க. அவங்களைச் சமாளிக்கறதே பெரிய வேலையா இருக்கு. ஏதோ கூடவே நான் இருக்கறதால சமாளிக்க முடியுது”.

“இப்படி ஆளாளுக்கு ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிச்சீங்கன்னா, என்ன செய்றது. நீங்கல்லாம் முடிவெடுக்க டைம் வேணும்னு கேட்டதால இந்த ஒரு மாசமா அத்தையை நாங்க கவனிச்சிக்கிட்டோம். ஆனா இப்போ இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்” என்ற செல்வகுமார், வலதுபுறம் திரும்பி, ராஜேஷைப் பார்த்தார். ராஜேஷ்தான் மூத்தவன்.

“நீ என்ன சொல்ற ராஜேஷ்”

“மாமா, நான் போன மாசம் சொன்னதுதான். என் பசங்க ரெண்டு பேருக்கும் இது முக்கியமான பரீட்சை. அதனால் ஒரு ஆறு மாதம் கழித்து நான் பார்த்துக்கறேன். அது வரைக்கும் அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் பார்த்துக்கட்டும்”

செல்வக்குமார் எல்லோரையும் ஒரு முறை பார்த்தார்.

“ஆக யாருமே உங்க அம்மாவை பார்த்துக்க இப்ப தயாராயில்லை. அப்படித்தானே. சரி, இப்ப ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட சொல்லப் போறேன். இதைக் கேட்ட பிறகு நீங்க எல்லோரும் உங்க முடிவைச் சொல்லுங்க” என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். எல்லோரும் உன்னிப்பாக அவரையே கவனித்தார்கள்.

“இந்த ஒரு மாசமா நாங்க உங்க அம்மாவைப் பார்த்துக்கிட்டோம். அது உங்களுக்குத் தெரியும். அப்ப ஒரு தடவை இந்த வீட்டைச் சுத்தம் பண்ணும்போது மாமாவின் பழைய பெட்டியை எடுத்துக் கொடுத்தாள் என் மகள் செல்வி. அதில் ஒரு பழைய பத்திரம் இருந்தது. அதனுடன் ஒரு லெட்டரும் இருந்தது” என்று சொல்லி விட்டு கொஞ்சம் நிறுத்தினார். எல்லோரும் பேச மறந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“அந்த லெட்டரில் இருந்த விஷயம் என்னன்னா, பல வருடங்களுக்கு முன்னால் உங்க அப்பா, அவருடைய நண்பர் ஒருத்தருக்கு ஒரு அவசரத் தேவைக்கு ஆயிரம் ரூபாய் கடனாகக் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்தப் பணத்தை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அதற்குப் பதிலாக அவருக்குச் சொந்தமான ஆறு சென்ட் இடத்தை உங்க அப்பா பேருக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார்” செல்வக்குமார் கொஞ்சம் நிறுத்தினார்.

அவரே தொடர்ந்து, “ஆனால் உங்க அப்பா அதை பெரிசா எடுத்துக்கலே. தன் நண்பன் என்னிக்காவது வந்தால் திருப்பிக் கொடுத்துடலாம்னு அப்படியே பெட்டியிலே வெச்சிருந்திருக்கிறார். கடைசி வரை அவர் வராததால் இப்போது புதையல் போல ஒரு சொத்து கிடைத்திருக்கிறது” என்றார்.

“ஆறு சென்ட் இடமா? எந்த இடத்தில் இருக்கு” ரமேஷின் மாமியார் ஆர்வத்துடன் கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்த செல்வக்குமார், “நவாவூர் விலக்கிலிருந்து துடியலூர் போற வழியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இப்போ நிலத்தின் விலை எல்லாம் ரொம்ப எகிறி இருக்கிறது. அந்த இடத்தின் இன்றைய மதிப்பு இருபது லட்சம் ரூபாய். இந்தப் பகுதியில் அண்ணா யுனிவர்சிட்டி வேறு வரப்போகிறது. அதனால் இன்னும் பத்து வருடத்தில் அதன் மதிப்பு ஐம்பது அல்லது அறுபது லட்சம் ஆகக்கூட வாய்ப்பிருக்கிறது.”

“அப்புறம் என்ன மாமா, அந்த இடத்தை எங்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுங்கள்” என்றான் ரகு.

“ஆமாம், மூன்று பங்காகப் பிரித்து இவங்க பேருக்கு மாற்றிக் கொடுத்துடுங்க. ஆளுக்கு இரண்டு சென்ட்” என்றாள் ரமேஷின் மாமியார்.

“அக்காவுக்கும் ஒரு பங்கு இருக்கு. அதனால நாலு பங்கா போடணும். ஆளுக்கு ஒன்றரை சென்ட்” என்றான் அது வரை பேசாமல் இருந்த ரமேஷ்.

“நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இப்போ பண்ண முடியாது” என்றார் செல்வக்குமார்.

“ஏன் முடியாது. எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட சொன்னோம்னா பிரச்சினையில்லாம சுமுகமா முடிச்சிரலாம்” என்றாள் ரமேஷின் மாமியார்.

“ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சுக்கணும். இது பரம்பரைச் சொத்து இல்லை. அதனால தாத்தா சொத்து பேரனுக்கு என்ற சட்டம் இங்கே செல்லுபடியாகாது. மாமா சம்பாதிச்ச இந்த சொத்துக்கு இப்போதைய உரிமையாளர் உங்க அம்மாதான். அவங்கதான் முடிவு பண்ணனும்” என்று சொல்லிவிட்டு, “அதனால நீங்க உங்க முடிவை சொல்லுங்க” என்று தன் மாமியாரைப் பார்த்துக் கேட்டார் செல்வக்குமார்.

ராஜம்மாள் எல்லோரையும் ஒருமுறை பார்த்தார். பிறகு செல்வக்குமாரைப் பார்த்து, “நீங்க எங்களுக்கு மருமகன் இல்லே. நீங்கதான் மூத்த மகன். இவனுங்க யாருக்கும் என் மேல பாசம் கிடையாது. அதனால நான் என் மகள் வீட்டிலேயே கடைசி காலத்தைக் கழிச்சிடறேன். அந்த சொத்தையும் உங்க பேருக்கு மாத்தி எழுதி வச்சிடுறேன்” என்றார்.

“அம்மா.. என்ன சொல்றே… எங்களுக்கு உன் மேல பாசம் இல்லயா. நாங்கல்லாம் உனக்கு மகனுங்க இல்லையா” என்று மூன்று பேரும் ராஜம்மாள் மீது பாய்ந்தார்கள்.

“இருங்க…இருங்க…” என்று எல்லோரையும் கட்டுப்படுத்தினார் செல்வக்குமார்.

“அவங்க தன்னோட கருத்தைச் சொல்றாங்க. ஆனா மகன்கள் மூன்று பேர் இருக்கும்போது, மகள் வீட்டில் அவர்கள் இருப்பது முறையல்ல. அதனால் அந்த சொத்தை நான்காகப் பிரிக்கலாம்”

“ஆமாம், அதுதான் சரி” என்றாள் ரமேஷின் மாமியார் உடனடியாக.

“அதாவது உங்க மூன்று பேருக்கும் ஆளுக்கு ஒரு பங்கு. உங்க அம்மாவுக்கும் ஒரு பங்கு” என்று அவர்களைப் பார்த்தார் செல்வக்குமார்.

“கரெக்ட், அவங்க பங்கு சொத்தை வைத்து அவங்க செலவைப் பார்த்துக்கலாம்” என்றாள் ரமேஷின் மாமியார்.

“இருங்க, நான் இன்னும் பேசி முடிக்கல.” என்று இடைமறித்த செல்வக்குமார், “ஆளுக்கு ஒரு பங்குன்னு பிரிச்சுட்டாலும் அது இப்போதைக்கு உங்க கைக்கு வராது. உங்கம்மா காலத்துக்குப் பிறகுதான் அதை நீங்க சொந்தம் கொண்டாட முடியும். அதுவும் நீங்க அவங்கள எப்படிப் பார்த்துக்கறீங்க அப்படீங்கறதைப் பொறுத்து அவர் முடிவு செய்வார்” என்றார்.

“அதெல்லாம் நாங்க நல்லபடியா பார்த்துக்குவோம் அண்ணா” என்றாள் ரகுவின் மனைவி.

“அம்மாவுக்குப் பிறகு அவங்க பங்கு யாருக்குப் போகும்? அக்காவுக்கா” என்றான் ரமேஷ்.

அவனைப் பார்த்த செல்வக்குமார், “எங்களுக்கு அந்த சொத்துல பங்கு எதுவும் வேண்டாம்ப்பா. உங்க மூணு பேருல யாரு உங்கம்மாவை நல்லா கவனிச்சுக்கறீங்களோ, அதைப் பொறுத்து தன் இஷ்டப்படி அவங்க யாருக்கு வேணும்னாலும் தன் பங்கைக் கொடுக்கலாம்” என்றார்.

அவரே தொடர்ந்து, “இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது எப்போது விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் எங்க வீட்டுக்கும் வந்து சில நாட்கள் தங்கலாம்” என்றார்.

அங்கே கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அதை செல்வக்குமாரின் மனைவி ரமணி கலைத்தாள்,

“இப்போ சொல்லுங்கடா, யார் அம்மாவை முதல்ல பார்த்துக்கறீங்க”

`நான் பார்த்துக்கறேன்’ என்று மூன்று பேரும் கோரஸாகச் சொன்னார்கள்.

—————————————————————————————————————————————-

Series Navigationபசிபடித்தோம் சொல்கின்றோம் செய்தி மடலுக்குள் நீலாவணனின் இலக்கியவாசம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *