முருகபூபதி – அவுஸ்திரேலியா
கடந்த பதினொரு ஆண்டுகளுக்குள் (2005 -2016) நான் மூன்று தடவைகள் சந்தித்த தமிழச்சியின் ஆற்றலும் ஆளுமையும் தோழமையும் அவரின் வளர்ச்சியினூடே எனக்குத் தென்பட்ட வியத்தகு அம்சங்கள்.
கட்டிடக்காட்டினுள் வாழத்தலைப்பட்டபோதிலும் உள்ளார்ந்தமாக நேசித்த கரிசல்காட்டின் நினைவுகளுடன் அந்த மண்ணின் மக்களை தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் அவர் தற்கால தமிழக இலக்கிய சூழலில் நிரம்பவும் பேசப்படுபவர்.
2005 இல் சென்னை ராணிமேரி கல்லூரியின் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக அவுஸ்திரேலியாவுக்கு தனது முனைவர் பட்ட ஆய்விற்காக வந்தபோது முதல் முதலில் சந்தித்தேன்.
2009 இல் தி.மு.க.வின் இளைஞர் அணி மாநாட்டை திருநெல்வேலியில் கொடியேற்றி தொடக்கிவைத்த அவரது அரசியல் பிரவேசத்தைக்கண்டேன்
2013 இல் கரிசல்காட்டின் வாசம் நிரம்பிய சில நூல்களின் படைப்பாளியாக பார்த்தேன்.
குறிப்பிட்ட இந்த எட்டு ஆண்டுகளுக்குள் ஒரு சந்தர்ப்பத்தில் லோகசபைத்தேர்தலில் ஒரு எம்.பி.யாக நிற்பதற்கு வேட்புமனு தாக்கல்செய்யவேண்டிய தருணத்தில் எதிர்பாராதவிதமாக வேலூரில் கார்விபத்தில் சிக்கியதனால் அந்த வாய்ப்பையும் இழந்து, அதனால் சில மாதங்கள் படுக்கையிலிருந்தபோதிலும் மீண்டு எழுந்துவந்து கவிதைகள், கட்டுரைகள் படைத்தார். பாதியில் நின்ற ஆய்வேட்டை பூர்த்திசெய்து முனைவர் பட்டமும் பெற்றுக்கொண்டார்.
சென்னை திருவான்மியூர் அருகே நீலாங்கரையில் தமிழச்சி சுமதி தங்கபாண்டியனை அவரது அழகான இல்லத்தில் சந்தித்தபோது அவருடனான உரையாடலில் நானும் என்னைப்போன்று பலரும் தொலைத்துவிட்ட கிராமங்கள் படிமங்களாக வந்து நெஞ்சை உரசிக்கொண்டிருந்தன.
தமிழச்சி தான் பிறந்து தவழ்ந்த கரிசல் காட்டை தனது கவிதைகளில் கட்டுரைகளில் பதிவுசெய்வது ஜனநெரிசல் நிரம்பிய கட்டிடக்காட்டிலிருந்துகொண்டுதான். அவரது எஞ்சோட்டுப்பெண்ணும், வனப்பேச்சியும் அருகனும் மஞ்சனத்தியும் பாம்படமும் அவர் உளமாற நேசிக்கும் மல்லாங்கிணறு கிராமத்தையே உயிர்ப்புடன் சித்திரிக்கின்றன.
90 களில் இலக்கியப்பிரவேசம் செய்தவர். சென்னை ராணிமேரிகல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராக பணியிலிருந்தபோது தமிழ்நாட்டில் மித்ர பதிப்பகம் ஊடாக எஸ்.பொ.வின் அறிமுகம் கிடைத்து, கனடாவில் வதியும் அளவெட்டி சிறிசுகந்தராஜாவின் அனுசரணையுடன் தனது எஞ்சோட்டுப்பெண் கவிதை நூலை வெளியிட்டார். கணையாழி அவுஸ்திரேலியா சிறப்பிதழ் வெளியானபோது அதில் பிரசுரமான அருண். விஜயராணியின் தொத்துவியாதிகள் என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் அவுஸ்திரேலியன் ஸ்டடீஸ் சென்டரில் நடந்த கருத்தரங்கில் ஆய்வு செய்தார்.
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆங்கில இலக்கிய படைப்புகளை ஆய்வுசெய்வதற்காக 2005 இல் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்த வேளையில் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நேசம் பாராட்டினார். அவர் இங்கு சிட்னியிலும் மெல்பனிலும் நடந்த இலக்கிய சந்திப்புகளில் கலந்துகொண்டார். நண்பர் நடேசன், மற்றும் எஸ்.பொ. குடும்பத்தினர் மத்தியிலும் அவரது இலக்கிய உறவுக்கு அப்பாற்பட்ட குடும்ப நேசம் சகோதரவாஞ்சையின்பாற்பட்டது.
2005 ஆம் ஆண்டில் எங்கள் இல்லத்தில் அவர் தங்கியிருந்த சில நாட்கள் பசுமையானவை.
அண்மையில் அவரின் மூத்த புதல்வியின் திருமண அழைப்பிதழ் அனுப்பி அழைத்திருந்தார்.
என்னால் செல்லமுடியவில்லை. கரூரில் வசிக்கும் எனது பெறாமகன் பொற்செல்வனுக்கு தகவல் அனுப்பி, அவரை திருமண நிகழ்வில் கலந்துகொள்ளச்செய்தேன்.
அவரும் மல்லாங்கிணறில் வருடாந்தம் நடக்கும் அமரர் தங்கபாண்டியனின் நினைவு விழாவில் கலந்துகொள்பவர்.
மெல்பனுக்கு தமிழச்சி வருகைதந்திருந்தவேளையில் அவருடனான சந்திப்பு உரையாடலை விரிவாகப்பதிவுசெய்தேன்.
‘மனக்குகையில் கவிதை ஓவியம் படைக்கும் தமிழச்சி சுமதி’ என்ற தலைப்பிலும் ‘மல்லாங்கிணறு மல்லாந்து விழித்திருக்கும் எஞ்சோட்டுப்பெண்’ என்ற உபதலைப்பிலும் இச் சந்திப்பை விரிவாகப்பதிவுசெய்தேன். 26-06-2005 ஆம் திகதி இலங்கையில் தினக்குரல் வாரப்பதிப்பில் முழுப்பக்கத்தில் அந்த நேர்காணல் பதிவாகியது.
தமிழச்சியின் இலக்கியப்பிரவேசத்தின் பின்னர் வெளியான முதலாவது நேர்காணல் அதுவாகத்தானிருக்கும் என்பதை பேச்சரவம் கேட்டிலையோ என்ற அவரது நேர்காணல் தொகுப்பினைப்பற்றி இமையம், அம்ருதா இதழில் பதிவுசெய்த திறனாய்வு புலப்படுத்துகிறது.
2005 இல் அவர் எனக்கு இலங்கை தினக்குரலுக்காகத்தந்த விரிவான நேர்காணலுக்குப்பின்னர் தமிழகத்தில் 2007 இல் ஒரு நேர்காணலும் 2008 இல் மாத்திரம் பத்தொன்பது நேர்காணல்களும் வழங்கியிருக்கிறார்.
அதனால் இன்று தமிழகத்தில் பெரிதும் பேசப்படும் தமிழச்சியின் முதலாவது நேர்காணல் இலங்கையில்தான் வந்துள்ளது என்ற தகவலுடன் அதனை எழுதிய சிறிய மகிழ்ச்சியுடன் இங்கு ஒரு முக்கியமான குறிப்பையும் சொல்லவிரும்புகின்றேன். தமிழக படைப்பாளிகளுக்கு இலங்கை தினசரிகள், இலக்கிய இதழ்கள் வழங்கும் களமும் முக்கியத்துவமும் தமிழகத்திற்கு முன்மாதிரியானது.
தமிழச்சியின் தந்தையார் தங்கபாண்டியன் அண்ணாவின் தி.முக. அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர். அருப்புக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். அண்ணாவின் மறைவைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். அனைத்திந்திய அண்ணா திமுக. தொடங்கிய பின்னர் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்கனவே பறங்கிமலையிலும் ஆண்டிப்பட்டியிலும் தேர்தலில் நின்று வென்ற எம்.ஜிஆர். அருப்புக்கோட்டையில் களத்தில் இறங்கி தங்கபாண்டியனை தோற்கடிக்கிறார். தொடர்ந்தும் தி.மு.க.விலிருந்த தங்கபாண்டியன் ராஜபாளையத்தில் நடந்த ஒரு கலவரத்தை நேரில் பார்த்து அங்கு அமைதியை ஏற்படுத்த சென்ற வேளையில் மாரடைப்பு வந்து காலமானார்.
தந்தையின் திடீர் மறைவு மகள் தமிழச்சியை மிகவும் பாதித்திருக்கிறது. மல்லாங்கிணறில் வருடந்தோறும் தந்தையின் நினைவாக அவரது நினைவு மண்டபத்தில் பல தானதருமங்களையும் பொது நிகழ்ச்சிகளையும் தமிழச்சி நடத்திவருகிறார். தொழில் நிமித்தம் சென்னை மாநகரவாசியானபோதிலும் அடிக்கடி கிராமத்துக்குச்சென்று மக்களை சந்தித்து திரும்புகிறார். திரும்பும்போது அவருக்கு பல கவிதைகளும் கட்டுரைகளும் வரவாகின்றன. அவற்றில் கிராமத்தின் ஆத்மாவும் மலர்களின் வாசனையும் கனிகளின் சுவையும் மரங்களின் கிளைகளில் பிறக்கும் காற்றும் படர்ந்திருக்கின்றன.
தமிழச்சியின் தம்பி தங்கம் தென்னரசு முன்னைய கலைஞர் ஆட்சியில் கல்வி அமைச்சர். தற்பொழுது சட்டமன்ற உறுப்பினர். தமிழச்சியின் கணவர் சந்திரசேகரன் பொலிஸ் இலாகாவில் ஒரு உயர் அதிகாரியாக இருந்தவர். இரண்டு அழகான பெண்குழந்தைகளின் தாய். வீட்டில் குடும்பத்தலைவி. பொதுவெளியில் கவிஞர், அரசியல் பேச்சாளர். இயங்குநிலை சமூகச் செயற்பாட்டாளர்.
அவருடனான மூன்றாவது சந்திப்பிலும் (2013 இல்) பேசுபொருளாக இருந்தது இலங்கைப்பிரச்சினைகள்தான். வன்னிப்பிரதேசத்தில் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்ற போரின் சுவடுகளையும் அங்கு உருவாகியுள்ள திறந்தவெளி காட்சியகம் பற்றியும் விரிவாகச் சொன்னேன். நான் நேரில் பார்த்த முல்லைத்தீவு பெருங்கடல் முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம் புதுக்குடியிருப்பு நந்திக்கடல் புதுமாத்தளன் கிளிநொச்சி இரணைமடுக்குளம் முதலான பிரதேசங்களையும் அங்கிருக்கும் தேவைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டேன்.
எமது இலங்கை மாணவர் கல்வி நிதியம் தனது சக்திக்குட்டபட்டவாறு போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ்மாணவர்களுக்கு உதவுகிறது. தமிழகம் உட்பட உலகடங்கிலும் வாழும் தமிழர்கள் அன்றாட அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாலும் அர்த்தமுடன் ஆக்கபூர்வமாக அங்கு வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் வழியில் உதவிக்கொண்டிருக்கவேண்டும். எனச்சொன்னபோது தமிழச்சி அதனை ஆமோதித்தார். அதற்கு மேல் எனக்கு அவருடன் அரசியல் புனர்வாழ்வு பற்றி பேசுவதற்கு எதுவும் இருக்கவில்லை.
ஈழத்தமிழர்களின் பேரில் தமிழகத்தில் தினம் தினம் அரங்கேறும் நாடகங்கள் குறித்த தெளிவு அவருக்கும் இருக்கும் என நான் நம்பியதும் அதற்கு ஒரு காரணம்.
இங்கு தமிழச்சிபற்றி எழுதும்பொழுது அவரது ஈழத்தமிழர்களின் பால் இருக்கும் நேசத்தில் அவர் படைக்கும் படைப்புகளில் எவ்வித வணிகநோக்கமும் இல்லை என்பதை சுட்டுவதற்காகவே மேற்படி தகவல்களை இங்கு பகிர்ந்தேன்.
அவருடைய பாம்படம் என்ற கட்டுரைத்தொகுப்பில் சிலோன் காலனி என்ற படைப்புள்ளது. அதனை 2010 ஜூலையில் எழுதியிருக்கிறார். அதனை கட்டுரையாக அல்லாமல் ஒரு நல்ல சிறுகதையாகவே பார்க்கமுடிகிறது.
தமிழச்சியின் கிராமத்துக்கு அருகேயுள்ள ஒரு ஈழ அகதிகளின் முகாமில் அவர் சந்தித்த ஒரு சிறுமி பற்றிய கதை.
வட-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் (1956-2008) அறிக்கையின் ஒரு சிறுகுறிப்புடன் அந்தக்கதையை சொல்கிறார் தமிழச்சி.
விடுமுறை காலத்தில் கிராமத்துக்குச்செல்லும்போது அந்த அகதிமுகாம் பிரதேசத்தில் நடமாடிய தமிழச்சியை அந்த ஈழத்து அகதிச்சிறுமி யுகாமினி கவர்ந்துவிடுகிறாள். தனது வீட்டுக்கு அவளை அழைப்பதற்கு தமிழச்சி பலதடவை முயன்றும் அவள் வரவில்லை. காரணமும் தெரியவில்லை.
ஒருநாள் யுகாமினியின் குடும்ப சூழ்நிலை பற்றி நன்கு தெரிந்துவைத்துள்ள தமிழச்சியின் ஊர்ச்சிநேகிதியான பெருமாளக்காவே அந்தப்புதிரை இப்படி அவிழ்க்கிறாள்.
“ யுகாமினியோட குடும்பம் மொத்தமும் ஷெல் ஆமே, அதுல அடிபட்டுச்செத்துப்போச்சுது. அவளோட பாட்டிதான் சின்னவளா இருந்தவள இங்க கூட்டிவந்து வளர்த்துச்சுது. அதுவும் இரண்டு வருஷத்துக்கு முன்னால செத்துப்போச்சு. காலனி ஆளுகதான் அதுக்கப்புறம் அவள பார்த்துக்கறாங்க. கவர்மென்ட் கொடுத்த வீட்டுல தானே சமைச்சு இருந்துக்கிறா. ராத்திரிக்கு மட்டும் துணைக்கு அந்தக்கிருபாணியும் காலனி பெரிசுகளும் மாறி. மாறி துணைக்குப்படுத்துக்குவாங்க. இப்ப தானே மீன் குழம்பு வைக்கிற அளவுக்கு தேறிட்டா. சாமி கைவிட்டப்புறம், சக மனுஷங்கதான துணை. ஆனா, ரொம்பச்சூட்டிகை. படிப்பு படம் வரையறுதுன்னு ஸ்கூலுக்கே செல்லப்பொண்ணு அவதான். போனவருசம் அவ பெரியவளானப்ப, டீச்சர்மாருக கூடப்படிக்கிற புள்ளகன்னு காலனியே விழாக்கோலம்தான். ஆகாசமும் கரிசல் மண்ணும்தான் அவளுக்கு இப்ப அப்பன் ஆத்தா.”
இந்த ஆக்கத்தை தமிழச்சி இப்படி முடிக்கிறார்.
யுகாமினி அந்தப்புதைகுழியில் அமிழாமல் இந்தக் கரிசலின் பருத்திப்பூவாய் மலரவேண்டுமென நினைத்துக்கொண்டேன். அவளிடமிருக்கின்ற ஞாபகத்தின் எச்சம் கிளராமல் நாளை என் சந்திப்பில் கவனமாக இருக்கவேண்டுமெனவும் தீர்மானித்துக்கொண்டேன். அதில் என் சுயநலமும் இருக்கிறது – என் குற்றவுணர்வை எதிரே இருக்கின்ற அந்தச்சுமைதாங்கிக்கல் மேல் முழுவதுமாக இறக்கிவைக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அனாரின் கீழ்க்கண்ட கவிதை நினைவுக்குவர வீடு திரும்புகிறேன்.
இருள் என்னைக்கவ்வியபடி தூக்கிச்செல்கிறது ஒரு வேட்டை நாயென.
(அனார் ஈழத்துக் கவி)
தமிழச்சியின் கவிதை நூல்களுக்கு அவர் இட்டுள்ள பெயர்களிலும் கரிசல் மண்ணின் வாசனைதான்.
எஞ்சோட்டுப்பெண் – வனப்பேச்சி – பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சனத்தி . – அருகன் – சொல்தொடும் தூரம் என்பன அவரது நூல்கள்: தமது ஆக்கங்களில் நாவல், கவிதை நாடகம் காப்பியம் ஒப்பீடு தொடர்பாக எவ்விதமான பாரபட்சமுமின்றி, உள்நோக்கமுமின்றி எழுதியிருக்கிறேன் என்று சொல்கிறார்.
தமிழச்சியின் படைப்புலகம் பற்றி பலரும் விரிவாகத்திறனய்வு செய்துள்ள காலமும் கவிதையும் என்ற நூலும் வெளியாகியுள்ளது. ஒரு படைப்பை உருவாக்க மட்டுமல்ல, ஒரு படைப்பை அணுகவும் பயிற்சி வேண்டும் என்கிறார் தமிழச்சி. உண்மையான சரியான கூற்றுத்தானே.
தமிழச்சியின் ” குரல் ” என்ற கவிதை எனக்குப் பிடித்தமானது. வாசகர்களுக்காக இங்கு பதிவுசெய்கின்றேன்.
குரல்
அறையற்றவர்களின் குரல் பற்றி
அறிவீர்களா என்று
வீடற்றவர்களிடம் விசாரியுங்களேன்,
ஒரு வேளை நாடற்றவர்கள்
உங்களுக்கு உதவலாம் என்றார்கள்
குரலற்றவனின் குரல்
அவர்களுடையது என்பதால்
அறையற்று, வீடற்று, ஊரறற்று
ஊர்ந்து திரிவதாய் நாடற்றவன் சொன்னான்
பேச்சுவார்த்தையில்,
பேசுவது குறித்து
அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
—-0—-
- இடிபாடுகளிடையில்…..
- ஸ்ரீராம் கவிதைகள்
- மலையின் உயரம்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விரைவாகச் சுற்றிய பூர்வப் பூமியின் வேகம் எப்படிக் குறைந்தது ?
- சிறந்த பழைய திரைப் பாடல்கள்
- சொர்க்கம்
- பார்வதி தேவி வாங்கிக் கொடுத்த நஷ்ட ஈடு
- இது பறவைகளின் காலம்
- தொடுவானம் 143. முறுக்கு மீசை
- சிதைவுற்ற தங்கவயலும் ஜொஸ் இல்லமும்
- கிளியாகிப் பறக்கும் கனி
- பிஞ்சு.
- தெலுங்கு மரபிலக்கணங்களில் வாய்பாடுகள்
- திரும்பிப்பார்க்கின்றேன் கரிசல் காட்டிலிருந்து கட்டிடக்காட்டுக்குள் பிரவேசித்த தமிழச்சி சுமதி தங்கபாண்டியன்