வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்

This entry is part 2 of 11 in the series 25 டிசம்பர் 2016

 vannadasan

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய பன்னிரண்டாவது சிறுகதைத்தொகுதி. இதையடுத்து நாபிக்கமலம் என்னும் தலைப்பில் ஒரு தொகுதியும் வந்துள்ளது. கலைக்கமுடியாத ஒப்பனைகள் தொடங்கி நாபிக்கமலம் வரைக்கும் அனைத்துத் தொகுதிகளுமே தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை.

சங்க காலத்தில் குறிஞ்சித்திணையைப் பாடிய கபிலரைப்போல, பாலைத்திணையைப் பாடிய பெருங்கடுங்கோவைப்போல, இன்றைய வாழ்வியல் திணையை எழுதிக் காட்டும் மாபெரும் படைப்பாளி வண்ணதாசன். அன்றாடச் சம்பவங்களை உடலாகக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தந்தாலும் அவருடைய படைப்பின் ஆன்மா அச்சம்பவங்களை உருவாக்கியும் கலைத்தும் விளையாடும் ஆழ்மனச்சிக்கல் மட்டுமே. தீர்வற்ற மாபெரும் கடலாக மனம் பொங்கியபடியே இருக்கிறது. ஒருகணம் துக்கத்தில் பொங்குகிற மனம் மறுகணமே மகிழ்ச்சியில் பொங்குகிறது. பொங்கிப்பொங்கி தன் வழியில் இறுதியாக ஒரு சமநிலைப்புள்ளியில் அது அடங்கி நிற்கிறது. வாழ்வென்னும் தளம் அனைத்துக்குமான இடமென்னும் உண்மையை வண்ணதாசன் தன் பெரும்பாலான கதைகளில் ஒரு கண்டடைதலாக முன்வைத்தபடி இருக்கிறார். அவர் பூக்களைப்பற்றி எழுதிய வரிகளுக்கு இணையாக சருகுகளைப்பற்றியும் சுள்ளிகள் பற்றியும் பறந்து செல்லும் தூசுதும்புகளைப்பற்றியும் எழுதியிருக்கிறார். ஒருவகையில் இந்த மண்மீதுள்ள அனைத்தையும் ஒரு புதுவிதக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான விழிகளை வழங்கியவர் என்றும் சொல்லலாம்.

அரசமரம் என்றொரு சிறுகதை. மகன் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்த அப்பா, அடுத்து வரும் சில மாதங்களைக் கழிப்பதற்காக மகள் வீட்டுக்குச் செல்லத் தயாராகிறார். காடாறு மாதம், நாடாறு மாதம் என்னும் வகையிலான வாழ்க்கை அவருக்கு சற்றே சலிப்பையும் கசப்பையும் தருகிறது என்றாலும் எதார்த்தம் புரிந்தவராக இருப்பதால் அந்த ஏற்பாட்டை மெளனத்தோடு ஏற்றுக்கொள்பவராகவே இருக்கிறார். மாடியில் நின்று கொண்டு கையசைத்து விடைகொடுக்கும் மருமகளுக்கு திரும்பிப் பார்த்து கையசைத்து விடைகொடுத்தபடி நடக்கத் தொடங்கும்போது திடீரென வீசிய காற்றில் எங்கிருந்தோ அரசமர இலைச்சருகுகள் சுருண்டுசுருண்டு பறந்துவந்து கண்களில் மோதுகின்றன. இந்தப் பக்கத்தில் எங்கே இருக்கிறது என்று அரசமரம் என்று பார்வையால் தேடியபடி அவர் நடக்கத் தொடங்குகிறார். அப்படித்தான் அந்தக் கதை தொடங்குகிறது.

ஒரு திருப்பத்தில் பேச்சுப்பழக்கமுள்ள டைலர் நின்றிருப்பதைப் பார்த்து, அவரும் நின்றுவிடுகிறார். உரையாடல் தொடர்கிறது. பெரியவரின் கைகளில் பையைப் பார்த்ததும் பயணம் எங்கே என்று கேட்கிறார் டைலர். நேருக்குநேராகப் பார்ப்பதில் கூச்சம் கொண்டவராக எங்கோ பார்வையில் பதித்தபடி உரையாடலைத் தொடங்கி, ஒரு பேச்சு வேகத்தில் உண்மையைச் சொல்லிவிடுகிறார் பெரியவர். அச்சொல்லைச் சொல்லும்போது, அவர் விழிகள் அதுவரைக்கும் தேடிய அரசமரத்தைப் பார்த்துவிடுகிறது. காற்றில் சருகுகளைப் பறக்கவிட்ட அரசமரம். அதே கணத்தில் “அதுக்கென்ன, எங்க வீட்டுலயும் ஒரு மூணு மாசம் இருந்துட்டு போங்க” என்று கையைப் பிடித்துக்கொள்கிறார் டைலர்.

அது ஒரு முக்கியமான கணம். அரசமரம் படிமமாக மாறும் ரசவாதத்தை இக்கணத்தில் நாம் காணமுடியும். அரசமரம் நிழல் தரும் ஒரு மடி. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளுக்கும் அது ஒரு மடி. இன்னும் ஒரு படி மேலே சென்று, தெய்வத்துக்கும் நிழலீந்து காக்கும் மடி என்றும் சொல்லலாம். ஆனால் அரசமரம் எப்போதும் பச்சைப்பசேலென இருப்பதில்லை. பச்சைத்தளிர்களுடன் காட்சியளிப்பது ஒரு கட்டத்தில் என்றால், இன்னொரு கட்டத்தில் சருகுகளை உதிர்க்கவும் செய்கிறது. தந்தையை ஆதரித்து அரவணைத்திருக்கும் ஒரு குடும்பம் ஏதோ ஒரு கணத்தில் வெளியே உதிர்க்கவும் செய்கிறது. இன்று உதிர்க்கும் குடும்பம் நாளை மீண்டும் தன்னுடன் இணைத்துக்கொள்ளவும் கூடும். உதிர்ப்பது என்பதே மீண்டும் தழைத்துக்கொள்ளத்தானே. பெண்டுலம் இருபக்கங்களிலும் அசைந்து அசைந்து, இறுதிக்கணத்தில் சமநிலை பெற்று நின்றுவிடுகிறது. பொங்கிப்பொங்கி மனம் அடையும் சமநிலை ஒரு பேறு.

டைலரின் சொற்கள் உதிரும் கணம் மிகமுக்கியமான ஒரு கட்டம். மகன் மட்டும் மகனல்ல, மகனாகக் கருதத்தக்க அனைவருமே மகன்களே என்றும் தந்தை மட்டும் தந்தையல்ல, தந்தையாகக் கருதத்தக்க அனைவருமே தந்தைகளே என்றும் ஒரு புரிதலை நோக்கி நகர்த்திச் செல்லும் கட்டம் அது. ரத்த உறவு சார்ந்த நிலை என்பது ஒரு தற்காலிக நிலை மட்டுமே. அன்பு என்பது அனைத்தையும் கடந்து பரந்து விரிந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளது. அந்த அன்புநிலையே அரசமரம். கண்ணால் பார்க்கமுடிந்த அரசமரத்தைக் கடந்து, பார்க்கமுடியாத அரசரமரத்தின் காட்சியைப் பார்ப்பது என்பது மாபெரும் தரிசனம்.

அழைக்கிறவர்கள் என்பது இன்னொரு சிறுகதை. நிகழவிருக்கும் தன் மகனுடைய திருமணத்துக்கான அழைப்பிதழைக் கொடுப்பதற்காக பழைய தோழியின் வீட்டுக்குச் செல்கிறார் ஒருவர். அழைப்புமணியை அழுத்தியதுமே அவரே வந்து கதவுகளைத் திறக்கப் போகிறார் என்னும் எதிர்பார்ப்போடு இருக்கும்போது, தோழியின் அம்மா வந்து கதவைத் திறக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்க வந்திருக்கும் அவரை அன்புடன் வரவேற்று உட்காரவைத்து உபசரித்துப் பேசுகிறார் அந்தப் பெரியம்மா. முதல் உரையாடலே அவருடைய பேத்திக்கு நடைபெற்ற திருமணத்துக்கு அவர் வரக்கூடும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த சம்பவத்தைப்பற்றியதாக இருக்கிறது. தோழிக்கு கடுமையான தலைவலி. குரல் கேட்டு எழுந்து வந்து அவரும் உரையாடலில் கலந்துகொள்கிறார். இரவுடையில் இருப்பதை கூச்சமாக நினைத்து ஒரே கணத்தில் அறைக்குள் சென்று உடைமாற்றிக் கொண்டுவந்து நிற்கிறார். அவர் ஆசைப்பட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக அவருக்குப் பிடித்த ஒரு பாட்டை அவர் மட்டும் கேட்கிற அளவுக்குப் பாடவும் செய்கிறார். முடிவில் பையிலிருந்து அழைப்பிதழை புன்னகையோடு எடுத்துக் கொடுக்கிறார் நண்பர். அவசியம் வரவேண்டும் என்றும் வேண்டிக்கொள்கிறார். அழைப்பிதழை வாங்கிய கையோடு, புன்னகை மாறாத முகத்தோடு திருமணத்துக்கு வரமுடியாது என்று சொல்கிறார். அது இயலாத காரியம் என்பது உள்ளூரத் தெரிந்தும் அவர் சொல்லும் அழைப்புச்சொல் ஒரு சடங்கான சொல் மட்டுமே என்றும் ஒரு ரகசியத்தைச் சொல்வதுபோல வெளிப்படையாகச் சொல்கிறார். அவர் நிலைகுலைந்து பேச்சற்று நின்றிருக்கும் போதே தன் மகளுடைய அழைப்பிதழைக் கொடுக்கும்போது, அவர் வரமாட்டார் என்பது தனக்குத் தெரிந்தே இருந்தது என்றும் சொல்கிறார். இவ்வளவு சொற்களும் புன்னகையோடு சொல்லப்படுகின்றன. இறுதியில் வருவது, வராமல் இருப்பது என்பதையெல்லாம் கடந்து அழைப்பிதழ் என்பதே அழைப்பதற்காகத்தானே என்றும் சொல்கிறார். அன்றாடத்தின் இதழ்களுக்கடியில் இருக்கும் அந்த முள்தான் கதை. ரோஜாவோடு இணைந்த முள் அன்பு ஒருபக்கம், முள் மறுபக்கமென இருப்பதுதான் மானுடமனமோ என்று தோன்றுகிறது.

அன்றாடங்களின் சம்பவங்கள் வண்ணதாசனின் கதைகளில் இப்படித்தான் ரசவாதத்துக்கு ஆட்பட்டு முற்றிலும் புதிய ஒன்றாக மாறிவிடுகின்றன. ஐம்பத்து நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக எழுதிக்கொண்டு இருப்பவர் அவர். தன் கலையாளுமையாலும் மேதைமையாலும் ஒவ்வொரு படைப்பையும் ஒரு சிற்பமென செதுக்கிவைத்திருக்கிறார். கலைக்கமுடியாத ஒப்பனைகள், உல்லாசப்பயணம், சபலம், தனுமை, ஞாபகம், சமவெளி, கிருஷ்ணன் வைத்த வீடு, தோட்டத்துக்கு வெளியேயும் சில பூக்கள், இங்கே இருக்கும் புறாக்கள், அப்பாவைக்கொன்றவன், ஒரு சிறு இசை, நாபிக்கமலம், இருளும் ஒளியும் என எத்தனை எத்தனை சிறுகதைகள். அனைத்தும் தமிழுக்குக் கிடைத்த செல்வம்.

அவருக்குக் கிடைத்திருக்கும் சாகித்ய அகாதெமி விருது, அவரைக் கொண்டாடுவதற்கும் அவரைப்பற்றிய உரையாடல்களை உருவாக்குவதற்குமான தருணங்களை நமக்கு வழங்கியிருக்கிறது. அவருடைய படைப்புகளைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசுவோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

Series Navigationஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா இறுதியாக வால்மீன் மேல் விழ வைத்து புதிய தகவல் அனுப்புகிறது.ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    என் செல்வராஜ் says:

    சாகித்ய அக்காடமி விருது பெற்ற வண்ணதாசன் பற்றிய பாவண்ணன் கட்டுரை அருமை. வண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்
    கலைக்கமுடியாத ஒப்பனைகள், உல்லாசப்பயணம், சபலம், தனுமை, ஞாபகம், சமவெளி, கிருஷ்ணன் வைத்த வீடு, தோட்டத்துக்கு வெளியேயும் சில பூக்கள், இங்கே இருக்கும் புறாக்கள், அப்பாவைக்கொன்றவன், ஒரு சிறு இசை, நாபிக்கமலம், இருளும் ஒளியும் என எத்தனை எத்தனை சிறுகதைகள். அனைத்தும் தமிழுக்குக் கிடைத்த செல்வம்.அனைத்தும் நல்ல கதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *