தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

author
0 minutes, 0 seconds Read
This entry is part 7 of 11 in the series 25 டிசம்பர் 2016
anna1
மீண்டும் விடுதி வாழ்க்கை. தேர்வு முடிவுகள் வந்திருந்தன. எதிர்பார்த்தபடியே சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியியலும்  பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எழுதி தேர்ச்சி பெறலாம். நஞ்சியியலில் அதிகம் கவனம் செலுத்தினால் போதும்.

ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும், நான் ஐந்தாம் வருடம் வகுப்பில் சேரலாம். இது எங்களுக்கு இறுதி ஆண்டு! இந்த ஆண்டு இறுதியில் மருத்துவம், அறுவை மருத்துவம், பிரசவமும் பெண்கள் நோயியலும் ஆகிய மூன்று முக்கிய பாடங்களில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். அதோடு மருத்துவப் படிப்பு முடிந்துவிடும். நான்  மருத்துவன் ஆகிவிடுவேன். என்னுடைய இலட்சியமும் நிறைவேறிவிடும். அப்பாவும் மகிழ்வார். அவர் சிங்கப்பூரிலிருந்து தாயகம் திரும்பிவிடலாம்.

இந்த இறுதி ஆண்டில் நான் மனதை வேறு எதிலும் செலுத்தாமல் இந்த மூன்று பாடங்களில்தான் செலுத்தவேண்டும். அப்போதுதான் காலம் கடத்தாமல் படிப்பை முடிக்கலாம். இந்த மன உறுதியுடன் முதல் நாளிலிருந்தே செயல்படலானேன்.

இந்த மூன்று   பாடங்களும் கடினமானவை. ஒரே முயற்சியில் தேர்ச்சி பெறுவது சிரமம். பலர் பல வருடங்கள் தேர்ச்சி பெறாமல் திரும்பத்திரும்ப முயற்சி செய்வார்கள். இம் மூன்று பாடங்களையும் மூன்று விதத்தில் தேற வேண்டும். எழுத்துத் தேர்வு, நோயாளி பரிசோதனை, நேர்முகத் தேர்வு என்பவயே அம் மூன்றும். இவற்றில் ஒவ்வொன்றிலும் தேர்ச்சிபெற்றாக வேண்டும். ஒன்றில் தவறினாலும் அந்தப் பாடத்தை மீண்டும் ஆறு மாதங்கள் கழித்தே எழுதலாம். இதனால் இறுதி ஆண்டுத் தேர்வுகளை மிகுந்த பயத்துடன்தான் சந்திக்கவேண்டியுள்ளது!

இந்த மூன்று பாடங்களையும் வகுப்பிலும், வார்டிலும் பயின்றும் பயிற்சியும் பெற்றாகவேண்டும். வகுப்பில் பயிலும் நோயை வார்டில் சென்று அந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் சென்று பரிசோதனை செய்து அந்த நோயின் அறிகுறிகள், தன்மைகள், தேவையான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள், பின் விளைவுகள் போன்றவற்றை அறிந்துகொள்ளவேண்டும். இரவில்  விடுதியில் பாட நூலில் அந்த நோய் உண்டாவதின் தொற்று அல்லது குறைபாடு போன்றவற்றையும் படித்து உணரவேண்டும். அதோடு அது தொடர்புடைய நோய்க்கிருமிகளைப் பற்றியும் நுண்ணியிரியியல் நூலில் படித்தாக வேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு நோய் பற்றியும் முழுதாக தெரிந்துகொள்ள முடியும். தேர்வின்பொது செயல்முறைத் தேர்விலும் , நேர்முகத் தேர்வில் ஒரு நோய் பற்றி எது வேண்டுமானாலும் கேட்பார்கள். நன்கு தயார் செய்யாமல் போனால் தடுமாறவேண்டிவரும்.தேர்ச்சி பெற முடியாது.

ஆங்கில மருத்துவத்தில் நோய்கள் பற்றி எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகக் கூறியுள்ளனர் என்பதை எண்ணி வியந்தேன். எதையும் அறிவியல் பூர்வமாக ஆராய்வதில் அவர்கள் வல்லவர்களாகவே இருக்கின்றனர். நாமோ எதை எடுத்தாலும் அதில் மூடத்தனத்தை மூலதனமாக வைத்துப்   பார்த்துப்  பழகிவிட்டோம்!  நாட்டு மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் இதுபோன்ற முறையான ஆராய்ச்சிகள் இல்லாமல் போனது நமக்கு பெருங்குறையே! அதற்கு காரணம் உடற்கூறும், உடலியலும் தெரியாமல் வெறும் மருந்துகளையும் மூலிகைகளையும் தந்து நோயின் தன்மையை உணராமலேயே குணப்படுத்த முயல்வதாகும் என்று நானே எண்ணிக்கொள்வதுண்டு. பாரம்பரிய மருத்துவ முறைகள்  கொண்ட இந்தியாவில் அவற்றை முறையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பதிவு செய்திருந்தால் எவ்வளவோ மேலானதாக இருந்திருக்கும். ஆங்கில மருத்துவத்தின் வரலாறு படிக்க பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும். ஒவ்வொன்றையும் அவர்கள் எவ்வளவு பாடுபட்டு கண்டுபிடித்துள்ளனர் என்பது வியக்கத்தக்கதாகும். அதையெல்லாம் அறியாமல் இன்று நாம் சுலபமாக அவர்களின் மருத்துவ முறையையும், மருந்துகளையும் சுலபமாக பயன்படுத்தி வருகிறோம்!

நாங்கள் இறுதி ஆண்டுக்குள்  1969 ஆம் வருடத்தின் துவக்கத்தில் புகுந்தோம்.

தமிழக அரசு அறிஞர் அண்ணாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது. பகுத்தறிவு பாதையில் படிப்படியாக பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டது. மெட்ராஸ் ஸ்டேட் என்பது தமிழ் நாடு ஆனது. இருமொழிக் கல்வி வழக்கில் வந்தது. கட்டாய இந்தி விரட்டியடிக்கப்பட்டது. தமிழ் புத்துயிர் பெற்றது. மேடைப்பேச்சு செவிக்கு இன்பமானது. எழுத்துத் தமிழ் ஏற்றம் கண்டது. வடமொழி கலப்பின்றி தூய தமிழ்ச் சொற்கள் அரியணை ஏறின. அரசு அலுவகங்களில் மாட்டப்பட்டிருந்த சாமிப் படங்களும் பூசை மாடங்களும் அகற்றப்பட்டன. அரசு ஊழியர்களும் உற்சாகத்துடன் செயல்பட்டனர். போக்குவரத்து அமைச்சராக இருந்த கலைஞரின் தலைமையில் திருவள்ளுவர், சோழன், பாண்டியன், சேரன் போக்குவரத்துக் கழகங்கள் உருவாயின. திருவள்ளுவர் துரித பேருந்துகளில் திருக்குறள் அழகாக காட்சி தந்தது. சங்க கால தமிழ் இலக்கியங்கள் மீண்டும் மக்கள் மத்தியில் பேசப்பட்டன. சிலப்பதிகாரம் மீண்டும் சிறப்பு பெற்றது.

ஆனால் அந்தோ பரிதாபம்! தமிழ் அன்னைக்கே தமிழகத்தின் இந்த பொற்காலத்தின்மீது என்ன கோபமோ தெரியவில்லை. அண்ணாவுக்கு உடல் நலக் குறைவானது.அதுகூட சாதாரண நோய் அல்ல. புற்று நோய் ! அதிலும் தொண்டையில் புற்று நோய்! அது மிகவும் கொடியது!

1968 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் அண்ணா சிகிச்சை பெறுவதற்காக நியூ யார்க் சென்றார். அங்கு  புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். தமிழக மக்கள் கவலைக்குள்ளானார்கள். அறுவைச் சிகிச்சைக்குப் பின் அவர் நலமாகி நவம்பர் மாதம்  தமிழகம் திரும்பினார்.

மருத்துவர்கள் அவரை ஒய்வில் இருக்கச் சொன்னார்கள் . ஆனால் அண்ணாவால் அப்படி இருக்க முடியவில்லை. அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சொற்பொழிவுகள் ஆற்றிக்கொண்டிருந்தார். உடல் நலம் குறைந்து மீண்டும் அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அமைச்சர்களும், அரசு ,ஊழியர்களும், கழகத் தலைவர்களும் தொண்டர்களும், பொதுமக்களும் அடையாருக்குப்  படையெடுத்தனர். அண்ணாவின் உடல்நிலை கவலைக்கிடம் என்று அறிக்கை வெளிவந்தது. தமிழக மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.நான் அடைந்த சோகத்துக்கு எல்லை இல்லை  நான் அண்ணாவையே என் வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொண்டவன் – பள்ளிப் பருவமுதல்1

பெப்ருவரி 3 ஆம் நாள் அந்த சோக செய்தி  வெளியானது! ஆம். அண்ணா காலமாகிவிட்டார்! அது கேட்டு என் இருதயம் ஒரு கணம் நின்றது!

தமிழகம் சோகத்தில் ஆழ்ந்தது.

அன்னாவின் உடல் சென்னையில் இராஜாஜி மண்டபத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மாவட்டங்களிலிருந்து மக்கள் பேருந்துகளிலும் புகைவண்டிகளிலும் சென்னைக்கு வந்து குவிந்தனர். நானும் உடன் பேருந்து மூலம் சென்னை புறப்பட்டேன்.

இராஜாஜி மண்டபத்தில் நீண்ட வரிசை காலையிலிருந்தே நின்று மெல்ல .நகர்ந்து கொண்டிருந்தது. நானும் அதில் சேர்ந்துகொண்டேன். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து மண்டபப் படிகளில் ஏறினேன். மேலே அவருடைய உடலைக் கண்டு உடல் புல்லரித்தது! மேடைகளில் அடுக்கு மொழியில் பேசி ஆயிரமாயிரம் தமிழர்களின் உள்ளத்தில் இடம் பிடித்திருந்த அண்ணா அங்கு அசைவற்றுக் கிடந்தார்! இனி அவருடைய கவர்ச்சிக் குரலைக் கேட்கமுடியாது. அவருடைய கால்மாட்டைத் தொட்டு வணங்கிவிட்டு வெளியேறினேன்.

அண்ணாவின் இறுதி ஊர்வலம் சரித்திரத்தில் இடம்பெற்றது. அவ்வளவு பிரம்மாண்டமானது. எங்கும் மக்கள் வெள்ளம்!  சுமார் 15 மில்லியன் மக்கள் திரண்டிருந்தனர்! அது கின்னஸ் உலக சாதனை நூலில் பதிவானது!

தமிழகம் ஸ்தம்பித்த நிலையில் வேலூர் திரும்ப பேருந்து கிடைக்கவில்லை. அன்று மாலை சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் பெங்களூர் செல்லும் வண்டியில் ஏறினேன். நெஞ்சை அடைக்கும் துக்கத்துடன் பிரயாணம் செய்து காட்பாடியில் இறங்கி வாடகை ஊர்தி மூலம் விடுதி அடைந்தேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஒரு திரைப்படத்தின் பல உள்வாங்கல்கள்; Via கமல் ஹாஸன்உமர் கயாம் ஈரடிப் பாக்கள் – 7, 8 , 9
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *