தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 பெப்ருவரி 2017

நெகிழன் கவிதைகள்

நெகிழன்

1)
கர்த்தாவே நீர்
இடது பக்க வானத்தில்
சிறகசைக்கும் வெண்புறாவை
அண்ணாந்து ரசித்தீர்.

நானோ
உங்களுக்கு பின் திசையில்
ஒரு மரக்கிளையில்
வில்லேந்தி நின்றபடி
அம்பெய்து
அப் புறாவை வீழ்த்தினேன்.

மரணத்தின் விளிம்பில் நின்று
குருதியில் மூழ்கித் துடித்த
அச் செம் புறாவின்
இறக்கையை ஒடித்து
ஒவ்வொரு இறகாய்
வெடுக் வெடுக்கென பிடுங்கி
தீயில் பொசுக்கித் தின்று பசியாறினேன்.

ஒட்டிய இவ் வயிற்றை
சற்றே உப்பச் செய்யும்
இம் முயற்சியில்
என் பாவக் கணக்கை
மேலும் அதிகரிக்கச் செய்துவிட்டேன்.
தயை கூர்ந்து இப் பாவியை மன்னியும்
என் பரம பிதாவே மன்னியும்.

*
2)
கோப்பையில்
மாய்ந்து கிடந்த ஈயை
அப்புறப்படுத்திவிட்டு பருகினேன்
மரணச் சுவை மிகுந்த தேநீரை

*
3)
நேற்றைய வானம் முழுக்க
விரவியிருந்தது வெற்றிடம்.

மாற்றம் யாசித்து
கடலில் குதித்து ஆழ் பரப்பில்
நீந்திக்கொண்டிருந்தன விண்மீன்கள்.

ஏதோ நாற்றம் வீச
ஓடோடிப்பார்த்தேன்
தெருமுனை வீட்டின் அடுக்களையில்
எரிதழலில் அமர்த்தப்பட்டிருந்த
தோசைச் சட்டியில்
கருகிய நிலையில் கிடந்தது நிலா.

Series Navigationஏ.ஆர்.ரஹ்மானின் கலைக்கூட விளக்குகள்இதுவரைக் காணாத புதுவித இரட்டை வளையம் பூண்ட அபூர்வ வட்ட ஒளிமந்தை

One Comment for “நெகிழன் கவிதைகள்”


Leave a Comment

Insider

Archives