கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 14 in the series 15 ஜனவரி 2017
 
நல்லு இரா. லிங்கம்
உயிர்த்தெழுதல் என்றால் என்ன? அது எப்போது நிகழ்கிறது?
மரணித்த பின் மீண்டும் எழுதலே உயிர்த்தெழுதல் என்று அறியப்பட்டு வந்திருக்கிறது. மரணம் என்பது உடலுக்குத்தான். உயிருக்கு மரணமில்லை என்பதையே உயிர்த்தெழுதல் எனும் சொல் நமக்கு உணர்த்துகிறது. உடலை விட்டு உயிர் நீங்கியபின் பதப்படுத்தப்படாத சூழலில் அடுத்த ஒரு நாளுக்குள்ளாக அந்த உடல் தீ அல்லது மண்ணுக்கு உண்ணக்கொடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அந்த உடலுக்கு உயிர் மீண்டும் திரும்பினால் அங்கே உயிர்த்தெழுதல் நிகழ்கிறது.
உறங்குவது போலும் சாக்காடு என்றான் வள்ளுவன். எனவே ஒவ்வொரு நாளும் உறங்கி எழுதலும் உயிர்த்தெழுதலே. மரணிக்கும் யாவருமே உயிர்த்தெழுந்துவிடுவதில்லை. உயிர்த்தெழ வேண்டுமானால் மரணிக்க வேண்டிய அவசியமில்லை. அறியாமை இருளில் மூழ்கிக் கிடத்தலும் மரணித்தலே. அத்தகைய அறியாமை இருளென்னும் மரணச்சூழலில் இருந்து உயிர்த்தெழ வேண்டுமானால் அறிவொளி என்னும் கடவுச்சொல் தேவைப்படுகிறது. நமக்குள் உறங்கிக் கிடக்கும் ஒவ்வொரு உணர்வையும் தட்டி எழுப்ப வேண்டுமானால் அதற்கென்று ஒரு கடவுச்சொல் அவசியமாகிறது. கவிதை என்பதே ஒரு கடவுச்சொல்தான். பாரதியும், பாரதிதாசனும்கூட கவிதை என்னும் கடவுச்சொல் மூலம்தான் இலட்சக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பினார்கள். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வைப் பிரதிபலிக்கும். காண்போர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவத்தைக் காட்சிப்படுத்தும் நவீன ஓவியங்களைப் போல நவீன கவிதைகள் அதனை வாசிக்கும் ரசிகனின் உளவியலுக்கேற்ப மாறுபட்ட பொருளைத் தருவனவாக அமைகின்றன.
எந்த ஒரு பூட்டையும் திறக்க ஒரு திறவுகோல் அவசியம். மீள முடியாத மரணச் சிறையிலிருந்து விடுபட்டு உயிர்த்தெழ வேண்டுமானால் அதற்கும் ஒரு திறவுகோல் வேண்டும். மரணமும் உயிர்த்தெழுதலும் கூட டிஜிட்டல் மூலங்களே. மரணம் என்பது சுழியம் (0) எனக்கொண்டால் உயிர்த்தெழுதலை ஒன்று (1) எனக் கொள்ளலாம். எனவே மரணம், ஜனனம் இரண்டும் பைனரி வடிவங்களாக இருந்து நம் வாழ்வை டிஜிட்டல் முறையில் அமைக்கிறது எனக் கருதுகிறேன்.
திண்டுக்கல் பூட்டுக்குத் திறவுகோல் உண்டு. டிஜிட்டல் பூட்டுக்கு கடவுச்சொல்தான் உண்டு. அதைப்போல உயிர்தெழுதலின் கடவுச்சொல்லை நமக்குக் கவிதைத் தொகுப்பாக வடித்துத் தந்துள்ளார் கவிஞர் தமிழ் மணவாளன் அவர்கள்.
“அளவெடுத்து தைக்கப்பட்ட சட்டை மாதிரி இல்லை நிகழும் சம்பவங்கள், மற்றும் தம்மை வெளிப்படுத்தும் மனித மொழிகள். நவீன வாழ்க்கை, மொழியை மேலும் இன்னொரு தளத்துக்குக் கொண்டு செல்லுகிற வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றன தமிழ்மணவாளன் கவிதைகள்” என்ற பிரபஞ்சன் அவர்களின் முன்னுரை ஒன்றே இந்தத் தொகுப்பிற்கான அளவுக் குறியீடு. அந்த இன்னொரு தளத்தைத் தொட முயல்வோருக்கான ஏணியே இந்தக் கவிதைத் தொகுப்பு என்பேன் நான்.
மழையின்றி முடிந்த சென்ற ஆண்டின் துயரத்தால், பெற்ற பிள்ளையாய்ப் பயிர்களைப் போற்றி வளர்த்த உழவன், அப்பிள்ளைகள் கருகி மடிவதைக் கண்டு மருகித் தானும் மடிகின்றான் என்ற செய்தி, சோற்றுத் தட்டில் கைவைக்கும்போதெல்லாம் நம்மைக் குத்திக் கிழிக்கும் இந்த கொடிய கணங்களில், மழையில் தொடங்கி மழையுடனே முடியும் இந்தக் கவிதைத் தொகுப்பு மழையெனப் பொழிந்து நம் மனதிற்கு மருந்திடுகிறது.
‘சுள்ளுனு வெயில் அடிக்கும்போதே தெரியும்
ராத்திரி நிச்சயம் மழை உண்டென’
எனும் வரிகள் கணவன் மனைவி இடையேயான ஊடலைத் தீர்த்து வைக்கின்றன. அதே வேளை,
‘எல்லாம் அழித்தது பேய்மழை
மனிதம் உயிர்த்த பெருமழை’
என்னும் வரிகள் முந்தைய ஆண்டின் பெருவெள்ளத்தில் மக்கள் பணியாற்றியவர்களுக்குப் பெருமை சேர்த்து மனதில் நிறைகின்றன.
நூல் வெளியீட்டு விழாவில் திரு.சூரியதாஸ் அவர்கள் குறிப்பிட்டதைப் போல இந்தத் தொகுப்பு முழுவதும் கடவுச்சொற்களால் நிறைந்துள்ளது. பல முக்கியக் கவிதைகள் குறித்து நூல் வெளியீட்டு விழாவில் வாழ்த்துரை வழங்கியவர்கள் குறிப்பிட்டுவிட்டதால் நான் வேறு சில கவிதைகள் குறித்துச் சொல்ல நினைக்கிறேன். ஆனாலும் அவர்கள் குறிப்பிட்ட சில கவிதைகளைத் தவிர்த்துவிட்டுச் சென்றுவிட இயலாது.
சமூகச் சிந்தனைகள், காதல், நவீன வாழ்வு என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது இந்தத் தொகுப்பு.
கொலையும் செய்வாள் பத்தினி என்ற கவிதை, பத்தினி என்ற சொல்லுக்கான வழமையான அளவுகோலை உடைத்தெறிகிறது.
‘நீங்கள் பெற்றுத்தரும் விடுதலை முக்கியம்தான்
அதனினும் முக்கியம்
நான் பெற வேண்டிய விடுதலை’
என்னும் வரிகள் ஒவ்வொரு பெண்ணுக்குமான விடுதலையை உணர்த்துகின்றன. மனைவியாயினும், உடலீந்து பொருள் ஈட்டும் மாந்தர் ஆயினும் அனுமதி இன்றித் தொடல் அறமன்று. அறம் தவறியவனைக் கொலை செய்யும் ஆயுதம் அவனது செயலே. அதற்குப் பத்தினியாக இருக்க வேண்டுமென்ற அளவீட்டைத் தகர்க்கிறது இக்கவிதை.
‘காலதாமதமாய் அறியவரும் மரணங்கள்
சட்டென உருவாக்கும் துக்கம்
அக்கணத்தில் உரியவர்களினும் சற்றதிகமாய் இருப்பது’
வரதா புயல் காரணமாக தொலைத்தொடர்பு இன்றி ஐந்து நாட்கள் இருந்துவிட்டு மீண்ட பின்னர் அறிய வந்த ஒரு தாமத மரணச் செய்தியின் வழியை அப்படியே படம்பிடித்துக் காட்டிவிட்டது இந்தக் கவிதை.
பழநியாண்டவனிடம்,
‘கேட்பதற்கு நிறைய கைவசமிருப்பினும்
கேட்பதில் கூச்சமாய்’
என்ற வரிகள் ‘ஏற்பது இகழ்ச்சி’ என்ற ஒளவையின் மொழியை வலியுறுத்துகின்றன. ‘கடவுளிடமும் கூடக் கையேந்த மாட்டேன்’ என்ற கொள்கையுடைய என் போன்றோருக்கு இத்தகைய வரிகள் இதழ்களில் புன்னகைப் பூவை மலரச்செய்யும்.
நிலம் உடைமை கவிதையின்,
‘எடத்தோட வெலையெல்லாம்
இப்படி எகுறுமுன்னு தெரிஞ்சிருந்தா
இருபது வருசத்துக்கு முன்னாடியே
செத்துருக்கலாம்’
என்ற வரிகள் பணமில்லாதவன் பிணத்திற்குச் சமம் என்பதைக்கூடப் பொய்யாக்கி பணமில்லாதவன் உடலைப் புதைக்கக்கூட இப்புவியில் இடமில்லை என்ற உலக நடப்பைப் பதிவு செய்கிறது.
பொய்யும் புரட்டும் புனைவுகளும் மட்டுமே நிரம்பிய புராதனக் கதையை வரலாறெனவும் அந்தக் கதையின் மாந்தர்களை மட்டுமல்லாது மாக்களையும் கடவுள்களெனவும் திரித்துக் கூறித் திணிக்க முயல்வோரின் முதுகில் விழுந்த சவுக்கடியாகக் காட்சி தருகிறாள் ‘அசோகவனத்து சீதை’. இராமனை விமர்சிக்கத் துவங்கினால் பல பக்கங்களில் விமர்சிப்பேன் நான். இராஜ திராவகச் சொற்களில் பஞ்சைத் தோய்த்துத் தடவியதுபோல் விமர்சித்திருக்கிறார் கவிஞர்.
‘அறிந்தே வைத்திருந்தாள்
சந்தேக சர்ப்பம் நெளியும் அவன் மனதை’
‘வாய்ப்புகள் வாய்த்தபோதும் வாளாவிருந்த
இராவணன்மீது புகாரேதுமில்லை’
‘தீயிலிரங்கித் தன் கற்பை நிரூபிக்க
ஒருபோதும் விரும்பாமல்’
ஈரோட்டுப் பெருங்கிழவன் எந்தக் காப்பியத்தைத் தீயிலிட்டுப் பொசுக்க வேண்டும் என்று முழங்கினானோ, அக்காப்பிய நாயகி அதே பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதைக்காரியாக பளிச்சிட்டு நிற்கிறாள் இக்கவிதையில்.
ஒவ்வொரு கவிதையையும் குறித்து எழுதினால் அதுவே ஒரு நூலாகும் அளவிற்கு கருப்பொருள்கள் நிறைந்துள்ளன இத்தொகுப்பில்.
‘பரமேஸ்வரியின் அடையாளம் தொலைந்த வாழ்வை’ மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். சில நாட்கள் முன்பு முகநூல் நண்பர் பாரதி சௌந்தர் அவர்கள் அதே உள்ளடக்கத்தோடு ஆண்களின் அடையாளமும் தொலைந்தே போகிறது என்பதைப் பதிவு செய்திருந்தது ஒரு இனிமையான தற்செயல் ஒற்றுமை.
இந்தத் தொகுப்பில் வந்துள்ள காதல் கவிதைகளை வாசிக்கும் எவருமே அக்கவிதைகளைத் தங்கள் வாழ்வில் பொருத்திப் பார்க்காமல் கடந்து சென்றுவிட முடியாது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். காதலும் அப்படியே.
காதலின்றி எந்த உயிரினமும் இல்லை. கவிதைகள் இன்றி மானுடக் காதல் இல்லை. தமிழ் மணவாளன் அவர்களின் கவிதைச் சூழலைக் கடக்காத காதலர்கள் இருக்க முடியாது.
‘உன்னைப் பற்றி யாரேனு
மேதேனும் கூறும் போதுடனே
யென்னுள் எழும் பதற்றத்தையும்’
‘நேரம் இல்லாத நேரத்திலும்
உன்னை மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்’
ஒருமுறையேனும் வாழ்வில் இந்த அனுபவங்களைப் பெறாதவர்கள் முழுமையுறா வாழ்வைக் கொண்டவர்களாகவே இருக்க முடியும்.
‘குறுகிய நேரத்தில் என்னைக் குடும்பமாய்
மாற்றுவதிலேயே குறியாய் இருக்கிறாள்’
முன்னாள் காதலியைக் கணவனோடு கண்டவர்களால் இந்த வரிகளின் வலிமையை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். :)
‘ஆண்டிராய்டு கவிதைகள்’ பகுதி முழுதும் சிறப்பு. மனதில் தோன்றியதைக் காகிதத்தில் கிறுக்கிவைத்துப் பின்னர் ஒழுங்குபடுத்திய காலம் மாறி, நான் தற்போது பகிரியில் பதிந்து வைத்துப் பின்னர் திருத்திக் கொள்கிறேன். ‘செல்வ வினாயகரே செல்பி எடுக்கும்போது’ நாம் இதைச் செய்தாலென்ன? கவிஞரின் ‘பகிரிப் பத்து’ மிகச் சிறப்பு.
‘ஒப்பனை கலைத்த ராஜாவின் வெறுமை’யைப் புரிந்துகொண்டால் வாழ்வில் ஏமாற்றங்கள் இருக்காது.
‘வெளிச்சத்தையும் கனவுகளையும் விற்பவர்கள்’ நம் வாழ்வின் அங்கமாகவும் சில வேளைகளில் நாமேவாகவும் இருக்கிறோம்.
எல்லாக் கவிதை குறித்தும் பக்கம் பக்கமாய் எழுத ஆசைதான். நீளமாக எழுதி நீங்கள் வாசிக்கும் ஆவலுக்குத் தடைபோடக் கூடாதல்லவா? அதனால் நீங்களே ‘கவிஞர் தமிழ்மணவாளன்’ அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்” கவிதைத் தொகுப்பை வாங்கி வாசியுங்கள்.
‘யானையாய்
குதிரையாய்
குன்றாய்’
ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொன்றாய்க் காட்சிதரும் நீலவானத்து மேகக்கூட்டம் போல, உங்கள் பார்வையிலும் அவரது கவிதை வரிகளின் பொருள் வெவ்வேறாக விளங்கக்கூடும்.
அன்பும் நன்றியும்,
Series Navigationஎச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்ஜல்லிக்கட்டும் நம் பண்பாடும்…
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *