சட்டமா? நியாயமா?

This entry is part 9 of 14 in the series 26 பெப்ருவரி 2017

 

கோ. மன்றவாணன்

 

சட்டம் மேலானதா? நியாயம் மேலானதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழுப்பி விடைகாணப் பாருங்கள். கிட்டத்தட்ட எல்லாருடைய பதிலும் நியாயம்தான் மேலானது என்பதாக இருக்கும்.

கொலை செய்வோர் கூட, அவர்கள் தரப்பிலிருந்து சில நியாயங்களை அடுக்கக் கூடும். கொலைசெய்யப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் நியாயங்கள் அணிவகுக்கும்.

திருடர்கள் கூட, வறுமையின் காரணமாகத் திருடினேன் என்று சொல்லக்கூடும். திருடு கொடுத்தவனின் வேதனையைப் பொருப்படுத்த வேண்டியதில்லை என்றும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்றும் புத்திமதி புகலக்கூடும். யாரிடம் திருடினான்? பணக்காரன்கிட்டேதானே திருடினான் என்று இரக்க நியாயம் பேசுவார்கள்.

ஏதாவது யாராவது குற்றம் செய்தால், அதைச் சமூகத்தின் மீது சார்த்தவிட்டுத் தாங்கள் நியாயவாதிகள் என்று மார்தட்டுகின்ற புதிய தர்மர்கள் உண்டு.

இளம்பெண்ணை ஒருவன் களங்கப்படுத்திவிட்டான் என்றால்…. கற்பழித்துவிட்டான் என்றால்… அவனுக்காகச் சிலர் வாதாடத் தயாராக உள்ளார்கள். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மீதே பழிசுமத்திப் பாதகனைப் பாதுகாக்கப் புறப்பட்டுவிடுவார்கள். அந்தப் பெண் அந்த நேரத்தில் ஏன் அங்கு வரவேண்டும்? அவள் ஏன் ஆளைக் கவரும் ஆடை அணிய வேண்டும்? அவள் ஏன் துணைக்கு ஒருவரை அழைத்து வரவில்லை. அவளே உடன்பட்டு இருப்பாள். வெளிச்சத்துக்கு வந்ததும் பத்தினி வேடம் தரிக்கிறாள் என்றெல்லாம் ரப்பர் நாக்கை நாலாப்புறமும் சுழற்றுவார்கள்.

பள்ளிக்கூடத்தில் காலை 9 மணிக்கு மாணவர்கள் வருகை தர வேண்டும் என்பது பொதுஒழுங்கு. காலம் கடந்துவரும் மாணவர்கள் எப்படி எல்லாம் நியாயப் போர்வை போர்த்திப் பொய்க்காரணங்களைச் சொல்வார்கள் என்பது, மாணவர்களாக இருந்த நமக்கெல்லாம் தெரியும். பேருந்து தாமதம்; ஆட்டோ வரவில்லை; போக்குவரத்து முடக்கம்; வழியில் விபத்து; மருத்துவ மனைக்குப் போய்விட்டு வந்தேன் என்றெல்லாம் காரணங்கள் சொல்லக் கூடும். இவை சில நேரங்களில் உண்மையாக இருக்கக் கூடும். அந்த உண்மையான காரணங்கள் நியாயமானவைதாம். அதற்காக அவற்றை ஏற்கத் துணிந்தால் அதையே காரணம் காட்டி, அதையே சாதகமாக்கி, அவரவர் தாமதமாக வருவார்கள். இது தொடரும் போது பள்ளியில் பொதுஒழுங்கு கெட்டுப்போகும்.

வீட்டிலேயே காலம் தாழ்த்திவிட்டு, தூங்கிவிட்டு, தேநீர்க் கடையில் வம்பளந்துவிட்டு, தொலைக்காட்சியில் மூழ்கிவிட்டு,  அதுபற்றிக் கவலைப்படாமல் சமாளித்துக்கொள்ளலாம் என்றிருந்துவிட்டு; யார் என்ன செய்துவிடுவார்கள் என்று வீரம் பேசிவிட்டு அலட்சியமாகப் புறப்பட்டு வருபவர்கள் அந்தக் காரணங்களை வெளிப்படையாகச் சொல்வார்களா?

நியாயவிலைக் கடையில் பொருட்களை எடைக்குறைவாகக் கொடுப்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம் நியாயமானதாகத்தான் இருக்கிறது. சாக்குப் பைகளில் கொக்கி போட்டுத் தூக்குவதால் வரும் மூட்டைகளிலேயே எடை குறைவாக இருக்கிறது என்கிறார்கள். என்ன பிரச்சனையோ எங்கே பிரச்சனையோ அதற்குத் தீர்வு காண்பதைவிட்டு, இழப்பை எல்லாருடைய தலையிலும் ஏற்றி வைப்பது சரியா? சரியென்றால் சரக்கு ஏற்றி இறக்கும் தருணங்களில்  இடையில் திருடுவார்கள்; கடைசியில் கடையில் எடையில் திருடுவார்கள். வாதத்துக்கு ஒவ்வொரு மூட்டையிலும் ஒரு கிலோ குறைவதாக வைத்துக்கொள்வோம். அதற்காக ஒவ்வொரு கிலோவிலும் 100 கிராம் எடைகுறைத்து விநியோகம் செய்யும்போது பல கிலோ கொள்ளை போகவில்லையா?

இப்போது இருக்கும் நிலை என்ன என்றால், சணல்சாக்குப் பைகளில் பொருட்கள் வருவதில்லை. அடர்த்தியான கெட்டியான ஞெகிழிப் பைகளில்தாம் பொருட்கள் வருகின்றன. கொக்கிப் போடும் நிலையும் இப்போது இல்லை. அப்போதும் எடை குறைகிறதே!

தங்கள் பிழைக்குத் தனக்கு மேலிருப்போரைக் காரணம் காட்டித் தப்பித்துக்கொள்ளவே தனிப்பட்ட நியாயங்கள் பயன்படும்.

உரிய படிவங்கள் கொடுத்தும்- சட்டப்படியான அனைத்தும் செய்தும்- அந்தப் பணியை நிறைவேற்றாமல் ஓர் அதிகாரி தாமதம் செய்து வந்தார். பலமுறை நடந்தும் பல காரணங்கள் சொன்னார். பிறகு அவர் நாசூக்காக லஞ்சமும் கேட்டார். கொடுக்கப்பட்டது. லஞ்சம் வாங்கிய அந்த அதிகாரி, “இது எனக்கில்லை. மேலதிகாரிகளுக்கு” என்று நேர்மை பேசினார்.

அலுவலக எழுத்தர் தான் செய்யும் தவறுக்கு, அவருடைய மேலதிகாரியைக் காட்டுவார். அந்த மேலதிகாரியைக் கேட்டால் அவரைவிட மேலதிகாரியைக் கைகாட்டுவார். அந்த உயரதிகாரியைக் கேட்டால் அமைச்சருக்காக என்பார். அமைச்சரைக் கேட்டால் மேலிடத்துக்கு என்பார். ஆக ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு நியாயம் சிலுக்குச் சட்டை போட்டுக் கொண்டு சிரிக்கிறது. சில அலுவலகங்களில் லஞ்சப் பணத்துக்குக் கூட்டணி உண்டு.

இது குறித்துப் பொதுமக்களைக் கேட்டால், இதெல்லாம் சாதாரணமப்பா. அப்படி வாங்கினால்தான் இந்தக் காலத்தில் அவர்களுடைய குழந்தைகளை நல்ல பள்ளியில் நல்ல கல்லூரியில் படிக்க வைக்க முடியும்.  பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் செலவு பண்ண முடியும் என்று நியாயம் பேசி சமாதானம் ஆகிவிடுகிறார்கள்.

எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் தவறு செய்யாமல் உரிய நேரத்தில் பணிகளைச் செய்யும் நேர்மையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது? என்று சமூக அக்கறை நண்பர்கள் சிலரிடம் பேசி உள்ளேன். . நேர்மையாக இருந்த சிலருக்கு அரிதாக ஏற்பட்ட துயர நிகழ்வுகளைச் சொல்லி, நேர்மைக்கு எதிராகக் கொடிபிடிக்கும் நியாயவாதிகளாக அவர்கள் இருக்கிறார்கள்.

பரப்பான சாலையின் நாற்சந்தியில் சமிஞ்ஞை தூண் இருக்கிறது. சிவப்பு விளக்கு ஒளிரும் போது நின்றும்- மஞ்சள் விளக்கு எரியும் போது தயாராகியும்- பச்சை விளக்கு சுடரும் போது பயணித்தால் ஒரு நிமிடக் காத்திருப்பில் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்றுவிடலாம்.

“எனக்கு அவசர வேலை இருக்கிறது” “பள்ளிக்கு நேரமாகிவிட்டது” என்று ஒவ்வொருவரும் அவர்களின் அவசர நியாயங்களுக்கு உட்பட்டு போக்குவரத்து விதிகளை மதிக்காமல் போனால் என்னாகும்? விபத்து நடக்கும்; போக்குவரத்து முடங்கும். வாய்த்தகராறும் கைகலப்பும் கைகோர்த்துக்கொள்ளும். போக்கு வரத்தைச் சரிசெய்ய அரை மணி நேரத்துக்கும் மேலாகும். அதுவரை யாரும் அவரவர் போக வேண்டிய இடங்களுக்குப் போக முடியாது. இந்த எளிய எடுத்துக்காட்டு உணர்த்துவது என்னவென்றால், அவரவர் நியாயத்தைவிடச் சட்டமே சமூக அறனுக்கு வழிவகுக்கும் என்பதுதான்.

தப்புச் செய்பவர்கள் இங்கே புத்திசாலிகளாகவும் பிழைக்கத் தெரிந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். சட்டப்படி நடப்பவர்களைப் பைத்தியக்காரர்களாகப் பார்த்து நகையாடுகிறார்கள்.

இவ்வாறு பேசுவோரைத்தான் கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் இப்படிச் சொல்லியுள்ளார்.

கதைகட்ட சிலபேர் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு

காப்பாற்ற சிலபேர் இருந்துவிட்டால்

கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு

 

சட்டம் என்பது ஒரே பார்வை கொண்டது. நியாயம் என்பது 360 பாகையிலும் பயணித்து ஒவ்வொரு கோணத்தில் இருந்தும் ஒவ்வொரு நியாயம் பேசும். அத்தனைக்கும் செவிசாய்த்தால் ஒரு தீர்வும் கிடைக்காது. அவரவர்க்கு அவரவர் தரப்பே நியாயமானதாகத் தெரியும். நியாயம் என்பது ஆளாளுக்கு மாறுபடும். சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றே!

அப்படியானால் சட்டம் என்பது நியாயம் அற்றதா? சட்டத்தில் நியாயம் உள்ளடங்கி இருக்காதா? என்றெல்லாம் யாரேனும் வினா அம்புகள் தொடுக்கலாம்.

சட்டம் என்பதே பொதுவான நியாயங்களின் அடிப்படையில் உருவாவது. அந்தப் பொதுநியாயத்துக்கு உட்படும் போது தனிப்பட்ட நியாயங்கள் ஏற்கத் தக்கதல்ல. பொதுஒழுங்கை நிலைநாட்டுவதே சட்டம். அந்தப் பொதுஒழுங்கை நோக்கியே உங்கள் நியாயங்கள் இருக்க வேண்டுமே தவிர, சுய நியாயங்களைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது.

நிறைவேற்றப்பட்ட ஒருசட்டம் நியாயமற்றதாக உள்ளது எனக் கருதினால், அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முயலாம். அதுவரை அந்தச் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும்.

சட்டத்துக்கு மதிப்பளித்துத் தனிப்பட்ட நியாயங்களை விட்டுத் தருவதுதான் சமூக அறனுக்கு உகந்த வாழ்க்கை.

சட்டமா? நியாயமா? என்றால் சட்டமே மேலோங்கும்..

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் ​ வையவன்.

1 Comment

  1. Avatar valava.duraiyan

    கோ. மனறவாணனின் கட்டுரை சட்டத்தின் பக்கமே நிற்கிறது. காரணம் அவர் ஒரு நல்ல வழக்கறிஞர்; பராசக்தி வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வறுமையின் காரணமாக தன் குழந்தையயும் கொன்று தானும் தற்கொலை செய்யத் துணிகிறாள் அவள். ஆக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் அரசாங்கத்தின் உடைமை; அதை அழிக்க உனக்கு உரிமையில்லை. என அவள் கைது செய்யப்படும்போது அவல் செய்தது சட்டப்படி குற்றம்தான் ஆனால் தானே போய்விட்ட பிறகு அக்குழந்தை என்ன பாடுபடும் என்று அவள் செய்த முடிவு நியாயமாகத்தானே படுகிறது. Merci Killing என்பது சட்டத்திற்கு உட்பட்ட நியாயமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *