சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
+++++++++++++++++++++++++++++
ஈர்த்துக் கொள் என்னை உன்னிதயத் துக்கு.
பூர்வப் புதிர்களை வெளிப்படுத் தெனக்கு
விடை தேடுகிறேன் நானொரு வினாவுக்கு
எங்கோ உள்ளது என்னுள்ளே ஆழத்தில்
எனக்குத் தெரியும் இங்கு காணேன் என்று
ஏற்கனவே இருக்கிற தெந்தன் மனதில்
என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
எங்கெலாம் எனை யிழுத்துச் சென்றாலும்
என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
எப்போது நான் அழைக்கப் பட்டாலும்
என்னிதயப் போக்கில் போக வேண்டும் நான்,
ஈதோ என்னிதயம் இல்லம் நோக்கி ஏகுது
ஓம், ஓம், ஒம்.
ஜான் லெனன், பீட்டில்ஸ் பாடகர்.
[இந்திய கீதம்] [John Lennon, Song India (1940-1980)]
பிரமாஸ் தாக்குகணை -1
BrahMos Missile -1
“பிரமாஸ் ராணுவ ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் திட்டமிட்டபடித் தாக்கியது. மேலும் ஒலிமிஞ்சிய வேகத்தில் ஏவுகணையை முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது.”
சிவதாணு பிள்ளை தலைவர், பிரமாஸ் வான்வெளி லிமிடெட்.
“விண்ணை நோக்கு! நாம் மட்டும் ஏகாந்தமாக இல்லை. மாபெருமிந்த பிரபஞ்சம் நம்முடன் நட்புடன் உள்ளது. கனவு கண்டு உழைப்போருக்கு மட்டும் உன்னத வெகுமதி அளிக்கிறது.”
டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி
“என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கும் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக்திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.”
டாக்டர் அப்துல் கலாம்.
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”
டாக்டர் அப்துல் கலாம் (இளைஞருக்குக் கூறியது )
பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]
“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகில் அச்சத்துக்கு இடமில்லை! வல்லமையே வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.”
டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி
இந்தியாவுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்.
இந்தியா மேம்படுத்த வேண்டியவற்றைச் சிந்திப்பீர்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள
மேம்பாடு களை நாமும் பெற வேண்டுமானால்!
டாக்டர் அப்துல் கலாம்.
இந்தியக் கட்டளை எறிகணைகள்
“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா? அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார். நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை. எந்த நாட்டையும் கைபற்ற வில்லை. யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”
டாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி
ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!
மகாகவி பாரதியார் (பாரத தேசம்)
“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”
டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).
பிரமாஸ் தாக்குகணைத் திட்டம், டாக்டர் அப்துல் கலாம் பார்வை
பிரமாஸ் தொலைநீட்சி எறிகணைச் சோதிப்பில் நாங்கள் வெற்றி பெற்றது, 248 மைலுக்கு அப்பால் உள்ள எதிர்ப்புப் பகைவரைத் தாக்கி வீழ்த்தும், அரிய படைப்பலத்தை இந்திய இராணுவ வீரருக்கு அளித்துள்ளது. பிரமாஸ் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சி எறிகணை உலகிலே சிறந்த ஓர் தயாரிப்பு என்று நிரூபித்திருக்கிறது.
டாக்டர் சுதீர் மிஸ்ரா [CEO, BrahMos Aerospace]
இந்தியா சோதித்த ஒலிவேகம் மிஞ்சிய பிரமாஸ் தாக்குகணை
இந்தியா இதுவரைச் சோதித்த பிரிதிவி, அக்கினி, சூரியா போன்ற கட்டளை எறிகணைகளில், ரஷ்யக் கூட்டுறவில் ஆக்கிய பிரமாஸ் தாக்கு கணையே [BrahMos Supersonic Cruise Missile] ஒலிவேகம் மிஞ்சிய [மாக் -2.8 (Mach -2.8)] அதிவேகத்தில் தற்போதைய நீட்சி 180 மைலுக்கு மிஞ்சி, முதன்முதல் 248 மைல் தூரத்தைத் தாண்டிச் சென்றுள்ளது. இதில் ஈடுபட்டுப் பங்கு பெற்றவர் இரு குழுவினர் : இந்தியாவின் படைத்துறை ஆய்வு & விருத்தி ஆணையகம் [Defense Research & Development Organization (DRDO) & Russia – Owned NPO] ரஷ்யாவைச் சேர்ந்த பொறிநுணுக்கரோடு இணைந்து செய்தது. இந்திய படைத்துறை ஆய்வாளர் பிரமாஸ் ஒலிமிஞ்சிய எறிகணையைச் சோதித்து வெற்றி பெற்றது மாபெரும் வரலாற்றுச் சாதனையாய், வாஷிங்டனைச் சேர்ந்த ரயான் மாஸ் 2017 மார்ச் 14 இல் அறிவித்துள்ளார். இது ஏவப்பட்ட ஏவுதளம் : பலேஷ்வர், ஒரிசா [Balasore, Odisha]
பாரதத்தில் எழுந்த விண்வெளி ஏவுகணைப் புரட்சி
2007 ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று, அக்கினி-III ஏவுகணையின் முதல் தோல்விப் போக்கிற்குப் பிறகு 9 மாதங்கள் கழித்து, ராணுவ ஆராய்ச்சி விருத்தி துறையகத்தின் [The Defence Research & Development Organization (DRDO)] வெற்றிகரமாக ஏவுகணைப் பயிற்சி நிகழ்ந்தேறியது. அதுவே பாரதத்தின் நீள் பயண ராணுவ ஏவுகணைப் படைப்பலப் படைப்புக்கு [Long Range Missile Capability] அடித்தள மிட்டது. அக்கினி-III இரண்டாம் ஏவுகணை முயற்சி எவ்விதப் பழுதின்றி எளிதாக நிறைவேறிற்று. முதல் முயற்சி தோல்வி அடைந்ததற்கு மிகச் சிறிய பழுதே காரணம் என்று அறியப் படுகிறது. அக்கினி-III ஏவுகணையின் பயண நீள்போக்கு 3500 கி.மீடர் [2100 மைல்] தூரம். ஒருகட்ட அக்கினி-I ஏவுகணை [Single Stage Missile] செல்லக் கூடிய பயணத் தொலைவு: 700 கி.மீடர் [420 மைல்], இருகட்ட அக்கினி-II ஏவுகணையின் [Two Stage Missile] தூரம்: 2500 கி.மீடர் [1500 மைல்].
BrahMos Weapon Missiles
மூர்க்க ஆற்றல் படைத்த இருகட்ட ஏவுகணை அக்கினி-III முதல் கட்டத்தின் விட்டம் இரட்டையான SLV-3 ராக்கெட்டைக் கொண்டு புதுவித திடச்சக்தி உந்து நுணுக்கத்தில் DRDO துறைக்குழுவினரால் படைக்கப் பட்டது. திடச்சக்தி உந்து ராக்கெட்டுகள், திரவச்சக்தி உந்து ராக்கெட்டுகளை விட எளிதாகவும், விரைவாகவும், யந்திரக் கருவி உதவி குறைவான சாதனங்களால் ஏவிட வசதியாக உள்ளன. 1980 ஆம் ஆண்டில் திட எரிசக்தியில் இயங்கும் நான்கு கட்ட SLV-3 ராக்கெட் [Solid Propellant Four Stage Rocket] முதன்முதலாக வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு, அதற்கும் மிஞ்சிய உந்தாற்றல் கொண்ட ராக்கெட்டுகளும், கட்டளை ராணுவ ஏவுகணைகளும் [Ballistic Military Missiles] பாரதத்தில் படைக்கப்பட்டன. 1994 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறையகம் [Indian Space Research Organization (ISRO)], திட எரிசக்தியில் ஏவப்படும் மாபெரும் துருவத் துணைக்கோள் ஏவு ராக்கெட்டை [Polar Satellite Lauch Vehicle (PSLV)] வெற்றிகரமாக ஏவியது. பாரதத்தின் SLV-3 ஏவுகணையின் முதற் கட்ட ராக்கெட்டே பிறகு அக்கினி ராணுவக் கணைகளின் அடிப்படை ஆனது.
BrahMos Truck Missiles
சைனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்தித் திடச்சக்தியால் உந்தும் ராக்கெட்டுகளைக் கொண்டுள்ளன. சைனா 13000 கி.மீடர் [7800 மைல்] தூரம் ஏகும் பேராற்றல் வாய்ந்த திரவச்சக்தி உந்தும் DF-5 ராக்கெட்டை விருத்தி செய்துள்ளது. மேலும் பல்வேறு அணு ஆயுதக் குண்டுகளைத் தூக்கிச் செல்லும் உன்னத வலுவுடைய திடச்சக்தி உந்தும் ஒற்றை ராக்கெட்டைச் சைனா விருத்தி செய்து வருவதாக அறியப்படுகிறது. ஆழ்கடல் கப்பல் மூலமாக [Submarine-borne Missile] ஏவப்படும் JL-2 ராக்கெட் சைனாவிடம் உள்ளது. பாகிஸ்தானும் அதுபோல் திடச்சக்தி உந்து ராக்கெட் துறையில் முன்னேறி யுள்ளது. சைனாவின் M-11 ராக்கெட்டை ஒத்த நுணுக்கத்தில் பாகிஸ்தானின் கஸ்னாவி [Ghaznavi] ஏவுகணை தயாரிக்கப் பட்டுள்ளது. ஒற்றைக் கட்ட ஷாஹீன்-I, [Shaheen-I] இருகட்ட ஷாஹீன்-II [Shaheen-II] ராக்கெட்டுகளைப் பாகிஸ்தானே உள்நாட்டில் தயாரிக்க முடியும். 2004 ஆம் ஆண்டில் பயிற்சிப் பயணம் செய்த ஷாஹீன்-II 1100 கி.மீடர் [660 மைல்] தூரம் செல்லக் கூடியது.
ரஷ்யாவும், பாரதமும் சேர்ந்து படைத்த பிரம்மாஸ்திரம்
2007 பிப்ரவரி 4 ஆம் தேதி தரைப் படைக்கு உதவும் “ஒலி மிஞ்சிய வேகத்தில் செல்லும் ரஷ்ய-இந்திய பிரமாஸ்” ஏவுகணை [A Supersonic Russian-Indian Built BrahMos Missile] ஒரிஸா ஏவு தளத்தில் தூண்டப்பட்டு வெற்றிகரமாகத் தன் முதல் பயிற்சிப் பயணத்தைச் செய்தது. எட்டு மீடர் நீளமுள்ள [27 அடி] இரு கட்ட ஏவுகணை மூன்று டன் எடைக்கு மேற்பட்ட பளுவைச் சுமந்து 290 கி.மீடர் [180 மைல்] தூரம் செல்லக்கூடியது! தளத்திலிருந்து தளத்தைத் தாக்கும் [Ground-to-ground Missile] அந்த அசுர பிரம்மாஸ்திரம் 2.8 மடங்கு ஒலி வேகத்தில் [2.8 Mac Speed] << S >> வளைவில் வங்காள விரிகுடா மீது பாய்ந்து சென்றது! பிரமாஸ் ராணுவக் கணைத் திட்டத்தின் தலைவர் [Head, BrahMos Air Space Ltd.] சிவதாணு பிள்ளை, ஏவுகணை குறிப்பிட்ட தளப்பகுதியைத் துல்லியமாக அடித்த திறமையைப் பெருமையாக வெளியிட்டார். “மேலும் ஏவுகணை ஒலிமிஞ்சிய வேகத்தில் முடுக்கு வளைவுகளில் [Sharp Manoeuvers] செலுத்த முடியுமா வென்னும் சோதனையும் நடத்தப் பட்டது. ஏவுகணை அப்பணிகளைச் செய்ய முடியும் என்பது நிரூபிக்கப் பட்டு அதன் அசாத்திய போர்த்திறன் உறுதியானது,” என்றும் கூறினார்.
ரஷ்ய-இந்திய பிரமாஸ் கணை கூட்டுத் திட்டம், ராணுவப் பயனுக்காக 1998 பிப்ரவரி மாதம் இரண்டு அரசாங்களிடையே ஒப்பந்தமானது. முதலில் முடிவான பிரமாஸ் திட்டம் கப்பலைத் தாக்கும் கடற்-பீடத்து ஏவுகணையாக [Sea-Based Anti-Ship Missile] ஆக்கத் திட்டமிடப் பட்டது. தற்போது மூழ்கப்பல், ஆகாயக் கப்பல் மூலமாக [Submarine, Air Launch Versions] ஏவப்படும் ஏவுகணைகளாகப் படைக்கப் படுகின்றன. பிரமாஸ் தளப்-பீடத்து ஏவுகணை, வான்-பீடத்து ஏவுகணைகள் [Surface-Based & Air-Based] 10 மீடர் [30 அடி] உயரத்திலிருந்து 2.8 மடங்கு ஒலி வேகத்தில் பாய்ந்து தாக்குபவை. வான் பீடத்துக் கணை 300 கி. கிராம் பளுவைத் தூக்கும் வலுவுடையது. தளப் பீடத்துக் கணை 200 கி.கிராம் பளுவைத் தூக்கும் தகுதி உடையது. பிரமாஸ் ஏவுகணைகளைச் செங்குத்தாகவோ, சாய்வாகவோ, 360 டிகிரி வட்டத் திருப்பத்தில் நகர்த்தி ஏவிட முடியும்.
பிரமாஸ் அசுரத் தாக்குகணைகள்
BrahMos Large Missiles
பிரமாஸ் ஏவுகணை பல்வேறு திசைமாற்றுப் போக்குகளில் மேலும், கீழும் ஏறி யிறங்கித் தாக்கும் பொருளின் தூரத்துக்குத் தகுந்து செம்மைப் படுத்திச் செல்லக் கூடியது! ரேடாரின் கழுகுக் கண்களின் பிடிக்குத் தப்பி விடுபவை! தாக்கப்படும் பகைக் குறிச் சாதனங்களுக்கு ஒரு பெரும் சவாலாய்ப் பாய்கிறது, விரைவாகப் போகும் பிரமாஸ் கணை! தற்போது பிரமாஸை எதிர்த்தடிக்கும் ரஷ்யாவின் மாஸ்கிட் [Russia’s Moskit] போன்ற தடுப்புக் கணைகளும் [Counter Missiles] தயாராகி வருகின்றன. ஆயினும் வேகத் தாக்குக் கணைகள் ஒலி மிஞ்சிய விரைவில் பாய்ந்து செல்வதால், குறியிடத்தின் இருப்பை அறிந்து கொள்வதற்குக் போதிய காலம் கிடைப்பதில்லை! மேலும் அத்தகைய அசுர வேகத்தில் செல்லும் ஏவுகணையின் திசை மாற்றலோ, மேல் கீழிறக்குதலோ, வேகக் குறைப்போ புரிவது அத்தனை எளிய கட்டுப்பாடல்ல!
2001 முதல் 2003 வரை கப்பல் மீதும், வாகனம் மீதும், கரை மீதும் சாய்வாகவும், செங்குத்தாகவும் அமைக்கப்பட்டு ஆறு பிரமாஸ் ஏவுகணைகள் பயிற்சி செய்யப் பட்டன. 2004 ஆண்டு டிசம்பரில் இரு பிரமாஸ் கப்பல்-தாக்கு ஏவுகணையும், தளப்-பீடத்து ஏவுகணையும், கடல்-பீடத்து [Sea-to-Sea] ஏவுகணையும் பயிற்சி செய்யப்பட்டு, கடற்படைக் கப்பல்களில் அமைக்கப் பட்டன. விமானப்படை ஊர்தியில் [Su-30] அமைக்க வேண்டிய வானப்-பீடத்து பிரமாஸ் ஏவுகணைகளின் பயிற்சிகள் 2007 ஆண்டில் முடிவு பெறும்.
இந்தியாவின் போர்க்களத் தாக்குகணைத் திட்டங்கள்
1974 மே மாதம் இந்தியா முதன்முதல் அடித்தள அணு ஆயுத வெடிப்பைச் சோதித்த பிறகு அந்த ஆயுதத்தைத் தாங்கிக் கொண்டு தாக்கச் செல்லும் ஏவுகணைகளை ஆக்கும் இராணுவ முற்பாடுகளில் முனைந்தது. கடந்த மத்திய ஆசிய கல்ஃப் நாட்டுப் போர்களில் தாக்குகணைகள்தான் பெருமளவில் பங்கேற்றன. எதிர்காலத்தில் எழும் போர்களும் இனிமேல் கட்டளைத் தாக்குகணைகளைத்தான் பேரளவில் பயன்படுத்தப் போகின்றன. சென்ற சில ஆண்டுகளாய் இந்தியா தனது இராணுவத் தேவைகளுக்கு உள் நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நம்பத் தகுந்த கட்டளைத் தாக்குகணைத் தயாரிப்பில் ழ்ந்து முற்பட்டு வருகிறது. 1994 இல் இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகள் 1500 கி.மீ. [900 மைல்] நீட்சித் தூரம் செல்லும் அக்கினித் தாக்குகணைகளை மூன்று முறை ஏவிச் சோதனைகளை வெற்றிகரமாகச் செய்து முடித்தனர். சமீபத்தில் 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அபார ஆற்றல் கொண்ட அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்தது.
டாக்டர் அப்துல் கலாம் மேற்கொண்ட ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்
1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்தித் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது. அத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின. அவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
1. நாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)] அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). எதிரி டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலே முற்போக்கானத் தாக்குகணை அது.
2. பிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM), விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம். வேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் : 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்). சோவியத் யூனியன் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது.
பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ரம்பமாயின. பிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். அதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.
3. ஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது. அதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது. ஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.
4. திரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)
5. அக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest), அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்]. உலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்து நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல் கல்லை நட்டது..
பாரதத்தின் அண்டை நாடேகும் கட்டளைத் தாக்குகணை சூரியா
இந்தியாவின் முதல் “அகிலக் கண்டம் தாக்கும் கட்டளைக் கணை” சூரியா [Intercontinental Ballistic Missile, (ICBM) Surya] தயாரிக்கும் பொறியியல் இராணுவப் பணிகள் ரம்பமாகி சூரியா-1 சோதனைப் பயிற்சி 2005 இல் திட்டமிடப்பட்டது. தனிப் பயிற்சி இயக்கப்பாடுகள் முடிந்து முதல் சோதனை 2008 இல் திட்டமிடப் பட்டுள்ளது. 2015 ஆண்டில்தான் கட்டளைக் கணைப் படைப்பு முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சூரியா-1 நீட்சித் தூர எதிர்பார்ப்பு : 10,000 கி.மீ. (சுமார் 6000 மைல்), சூரியா-2 இன் நீட்சித் தூர எதிர்பார்ப்பு 20,000 கி.மீ. (சுமார் 12000 மைல்). சூரியா-1 கட்டளைக் கணை 40 மீடர் நீளம் [130 அடி நீளம்], 80 டன் எடை, திட-திரவ உந்துசக்தி எரிப்பொருள் பயன்படும் மூவடுக்கு ராக்கெட்டுகளைக் கொண்டது. முதல் அடுக்கு ராக்கெட் திரவ எரிசக்தியும், மற்ற ஈரடுக்கு ராக்கெட்டுகள் திடப் பொருள் எரிசக்தியும் பயன்படுத்தும். ஐசிபியெம் ராக்கெட்டுகளின் பொறிநுணுக்கம் அக்கினி-2, துருவத் துணைக்கோள் ஏவு வாகனத்தின் [Polar Satellite Launch Vehicle (PSLV)] கூட்டு யந்திர அமைப்புகளே.
(தொடரும்)
+++++++++++++++++++
தகவல்:
1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4 Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostat
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?mod
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_spac
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kala
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.i
13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.c
14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums
15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
16 Missile Test By India [February 5, 2007]
17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]
21 A Perennial Dream By: Dr. Abdul Kalam [http://sindhu.nomadlikfe.org/
22 AllIndidianSite.com – Dr. Abdul Kalam-It’s All About People.
23 History of Indian Space Program -1 [www.bharat-rakshak.com/SPACE/
24 History The Tiger of Mysore & His Rocket Barrages By: Rajivlochan, Dept of History, Punjab University.
25 India Successfully Tests Trisul Missile [www.spacewar.com/reports/Indi
26 India’s Missile Program By: John Cherian [www.hinduonnet.com/fline/]
27 Indian ICBM Surya Missiles – India Defence Weapon Systems.
28. Missiles in Indian History. (Agni, Prithvi, Akash, Trishul, Nag, Astra, Surya,
29. https://indiandefencerevie
31. https://en.wikipedia.org/w
32.http://www.spacedaily.com/r
33. https://en.wikipedia.org/w
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] (March 17, 2017)
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 4
- வெள்ளி விழா கண்ட தமிழ் திரைப்படங்கள்
- பிரியும் penனே
- ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்
- கவிதைகள்
- ஐஸ் குச்சி அடுப்பு
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- மொழிவது சுகம் மார்ச் 18 2017 அ. இலக்கிய சொல்லாடல்கள் ஆ. சத்தியானந்தன் சிறுகதை இ. கமலஹாசன் குரல்
- பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கில்
- பாரத-ரஷ்யக் கூட்டுறவில் ஒலிவேகம் மிஞ்சிய தொலைநீட்சிப் பிரம்மாசுரத் தாக்குகணைச் சோதிப்பு
- ஏக்கங்கள்
- பகைவரை நடுங்க வைக்கும் பாரதத்தின் பத்து வகைப் படைத்திற ஆயுதங்கள்
- மறையும் மரபுத் தொழில்
- கடற்கரய் கவிதைகள் — ஒரு பார்வை ‘ கண்ணாடிக் கிணறு ‘ தொகுப்பை முன் வைத்து…
- வெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘எரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா
- சர்க்கஸ்
- THE QUIET LIFE அமைதியான வாழ்க்கை (அ .போப் )