சோம.அழகு
எரிச்சலின் உச்சத்துக்கு என்னை இட்டுச் செல்லும் விஷயங்களில் முதலிடம் இவ்வாக்கியத்திற்குத்தான். முற்றும் உணர்ந்த ஞானி போல் எதிர்காலத்தைக் கணித்துக் கூறிவிட்டு ‘பாக்கத்தான போறேன்…..’ என சில ஜந்துக்கள் எக்காளமிடும்போது , எனது அட்ரினல் சுரப்பி பன்மடங்கு வேகமாகச் செயல்படுவதைத் தடுக்க இயலவில்லை. அவ்வகை எக்காளங்களில் சில :
எனது பத்தாம் வயதில் உதட்டுச்சாயம் பூசிக்கொள்ள மறுத்தபோது, அத்தை ஒருத்தி, “அதெல்லாம் அந்தந்த வயசு வரும்போது தானா போட்டுக்குவா….கை தன்னைப்போல லிப்ஸ்டிக்கையும் க்ரீமையும் தேடும்” என்றாள். பின் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள், “இன்னும் அப்படியேதான் இருக்கியா? இப்ப powder கூட போடாத நீ நாளைக்கு கல்யாணம்னு வரும்போது Facial, Makeupனு அப்படியே மாறிடுவே. பாக்கத்தான போறேன்……” எனக் கடுப்பேற்றினாள்.
பதிமூன்றாம் வயதில் அப்பாவிடம் மிகுந்த குழப்பத்துடன், “கடவுள்னு ஒண்ணு உண்டாப்பா ?” எனக் கேட்டதற்கு, “சரி எது தப்பு எதுனு பகுத்தறியத் தெரிஞ்ச இந்த வயசுல நீயே அதற்கான பதில தேடி தெளிஞ்சுக்கிட்டா சந்தோஷப்படுவேன். பதில் எதுவா இருந்தாலும்….” எனப் பக்குவமாய்க் கூறியதோடு அவ்வப்போது மூட நம்பிக்கைகள் பற்றிய புத்தகங்களை வாசிக்கத் தரும் அப்பாவின் மீது இவ்விஷயத்தில் எனக்கு சற்றே பொறாமைதான். உலகத்தையும் அதில் வசிக்கும் ஜீவராசிகளின் இயக்கத்தையும் இயன்ற வரை கவனித்து உண்டாகிய புரிதலில் சில மாதங்களுக்குப் பிறகு, (வறட்டுத்தனமாக மண் வாசனை முதற்கொண்டு எல்லாவற்றையும் புறக்கணிக்கும் ‘பகுத்தறிவாதி’களைப் போல் அல்லாமல்) “மண்ணின் மரபுகள் வேரறுக்கப்படாத பகுத்தறிவாதம்தான் எனக்கான மார்க்கம்” என்ற உணர்வுடன் நான் நின்ற போது பெருமிதத்துடன் குறுநகையணிந்தார்கள் அப்பா. அதில் அப்பாவின் மறைமுக வெற்றி தென்பட்டது.
அப்பா தமது கொள்கைகளுக்காய் என்றுமே விமர்சிக்கப்பட்டதில்லை. அதே கொள்கைகளுக்காய் எனக்கு மட்டும் வண்டிவண்டியாக அறிவுரை அருவியாகக் கொட்டுகிறது. இச்சமூகத்தில் பெண்களுக்கு அதுவும் அரிவை தெரிவைகளுக்கு நாத்திகம் மறுக்கப்பட்ட கொள்கையாகிவிட்டதோ? “பொம்பள புள்ள…..வெளக்க ஏத்தி சாமிய கும்பிடு”, “உன்ன மாதிரி சின்ன வயசுல நாத்திகம் பேசுன என் தங்கச்சிதான் இப்ப குடும்பத்துலயே பெரிய சாமியாடி. இப்படி எத்தனயோ பேர தெரியும் எனக்கு”, “இந்த வயசுல இப்படித்தான் பேசுவ…. நாளைக்கு எங்கள மாதிரி கல்யாணம்லாம் ஆகி, புள்ள பெத்து, அது வளரும் போதுதான் ஒணருவே. பாக்கத்தான போறேன்….” என முத்துப்பரல்களும் மாணிக்கப்பரல்களும் என் முன் சிதறும். முத்தய்ப்பாக, “வயசாகும்போதுதான் நம்மளையும் மீறுன ஒரு சக்தி இருக்குறது புரியும். பெரியார்கூட கடைசிகாலத்துல மாறிட்டாரே…” என உளறும் சிலரிடம், “நம்மள மீறுன சக்திக்கு நான் இயற்கைன்னு பேர் வச்சிருக்கேன்” என்றோ ரஸலின் கோட்பாடுகளை வைத்து விளக்க முயன்றாலோ “மறுபடியும் மொதல்ல இருந்தா…… cheers” கதையாகிவிடும் என்பதால் ஒருமுறைகூட எதிர்வினையாற்றியதில்லை. யார் பெற்ற பிள்ளையோ போல் அவர்களைப் புலம்ப விட்டு மனதினுள் விட்டோரியோ டி சிகாவையோ ஜாஃபர் பனாகியையோ ஓட விட்டு ரசித்தவாறே மண்டையை மட்டும் ஆமோதிப்பது போல் ஆட்டிக்கொண்டிருப்பேன். “நீங்க சாமி கும்பிடக்கூடாதுன்னு நான் வற்புறுத்தாதபோது ஏன் என்னை மட்டும் சாமி கும்பிடுன்னு வற்புறுத்துறீங்க?” எனக் கேட்பதற்கு பதில் “எனக்கும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்கிறது” என்று நடித்து பல நாட்கள் தப்பித்திருக்கிறேன்.
இன்னும் சிலர் கடைந்தெடுத்த சுயநலத்தில் பிறந்த கடவுள் பக்தியைப் பரப்புரை செய்யும் பொருட்டு ஆத்மார்த்தமாகக் கடவுளின் இருப்பை உணர்ந்த அந்தத் தருணத்தை, ஆன்மீக அனுபவத்தை விளக்கியே சாகடிப்பார்கள். “குடும்பத்தோட டூர் போயிருந்தோம். அப்போ வந்த சுனாமியில எங்க குடும்பம் தப்பிச்சது தெய்வச்செயல். அந்த கன்னியம்மாதான் எங்கள காப்பாத்தியிருக்கா…”. “தம்பிட்ட நேரம் போறது தெரியாம பேசிட்டு இருந்ததால ட்ரெயின விட்டுட்டேன். சாட்சாத் அந்த பகவான்தான் அவன எனக்கு போன் பண்ண வச்சிருக்கார். இல்லேனா ட்ரெயின் ஆக்சிடென்ட்ல நான் செத்துல்ல போயிருப்பேன்”. “உங்கள் தெய்வங்கள் ஏன் மற்றவர்களைக் காப்பாற்றவில்லை?” எனக் கேட்டு என்னை முட்டாளாக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் கர்மா, கொண்டக்கடலை குருமா என ஏதாவது பதிலைச் சொல்லி என்னைக் கொலையாளியாக்க முனைவார்கள். ‘விவரம் அறியாச் சிறு பிள்ளைகளுக்கெல்லாம் என்ன கர்மா?’ என்றெல்லாம் கேட்டால் மண்டக்கஜாயம் போல் விளக்கங்கள் வரும் என்பதால் இதை இத்தோடு முடித்துக்கொள்வோம்.
“நல்லவேளை…நான் தப்பிச்சேன். கடவுள் என்னைக் காப்பாத்திட்டார்” என்பதை விட, “என்னைச் சார்ந்தோர்க்கு ஏதேனும் நேர்ந்தால் மட்டும்தான் எனக்கு வலிக்க வேண்டுமா? கடவுள் என்று ஒன்று இருக்குமாயின் பாரபட்சம் பார்க்கும் உங்கள் கடவுள்கள் எனக்கு வேண்டாம்” என எண்ணுவதில் என்ன தவறு?
திருமண வயதில் உள்ள ஓர் ஆணோ பெண்ணோ திருமணம் வேண்டாம் எனக் கூறுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் சென்று நித்தமும் புதிய மனிதர்கள், புதிய கதைகள், புதிய பண்பாடு, புதிய கலாச்சாரம் என கிடைக்கப் பெறும் எண்ணிலங்கா அற்புத அனுபவங்களைக் கொண்டு வாழ்க்கையின் பக்கங்களை நிரப்பத் துடிக்கும் துடிப்பானவர்களாயிருக்கலாம். இறுதிக்காலங்களில் கஷ்டப்பட்டு இழுத்து மூச்சு விட்டுக்கொண்டிருக்கையில், சுவாசப்பையில் இன்னமும் உயிர்ப்போடு மணத்துக் கிடக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகந்தமும் மூச்சுக்காற்றில் கலந்தவாறே அசைபோடுவதற்கு ஏதுவாய் பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழச் செய்ய, அப்பசுமையான நினைவுகளுடன் அப்படியே உயிர் பிரிய வேண்டுபவர்களாயிருக்கலாம். தன் பெண்டு தன் பிள்ளை எனத் தேடிச் சோறு நிதந்தின்று…….. பிறர் வாடப் பல செயல்கள் செய்து……… பல வேடிக்கை மனிதரைப் போலே வீட்டுக்கானவர்களாகத் தன்னைச் சுருக்க விரும்பாமல் முற்றிலும் சமூகத்துக்கானவர்களாக மாறிப் போக விரும்புவார்களாயிருக்கலாம். அப்பாதையில் ஏற்படப் போகும் அபாயங்களை எதிர்கொள்ளும் தைரியமும் முதுமையின் தனிமையைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் மன வலிமையும் அவர்களுக்கு இருக்கலாம். அந்த உன்னத மனிதர்களிடம் சென்று, “ இப்போ தெரியாது. நாளைக்கு வயசானதுக்கப்புறம் தனியா மொட்டுமொட்டுனு உக்காந்து இருக்கும்போது தெரியும். ஒன்னய மாதிரி பேசுன நிறைய பேர பாத்தவள்/ன் நான். வீராப்பா பொறப்புட்ட எல்லாம் இப்ப கல்யாணம் ஆகி பொட்டிப் பாம்பா அடங்கிக் கெடக்கு. என் வயசுக்கு என் அனுபவத்துல (ம்க்கும்…பொல்லாத அனுபவம்….ஹூம்) சொல்றேன்….கேட்டுக்கோ…. அதது அந்தந்த வயசுல நடக்கணும். அப்பத்தான் மரியாதை. எல்லாம் சுத்தி முடிச்சு கடைசியில இங்கதான வருவ? எத்தன நாளுதான் இப்படியே பேசிட்டு இருப்ப? பாக்கத்தான போறேன்….” என்று கொக்கரிப்பது அவசியந்தானா?
முகப்பூச்சை விரும்பாததற்கும், நாத்திகக் கொள்கைப்பிடிப்பிற்கும் இன்னும் பலவற்றுக்கும் பெரும்பான்மைச் சமூகத்தின் நிலைப்பாட்டிலிருந்து விலகி நின்றால் “பாக்கத்தான போறேன்….”தான். வழக்கத்திலிருந்து மாறுபட்டு இருப்பவர்களைக் காணும்போது “நம்மால் இப்படி இருக்க முடியவில்லை. ஆனால் இவர்களுக்கு இந்த மாறுபட்ட வழியின் மூலம் நமக்குக் கிட்டாத மேன்மை ஏதேனும் கிட்டிவிடுமோ?” என்று ஆழ்மனதில் உறைந்துகிடக்கும் கொஞ்சூண்டு பயம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடாக இருக்குமோ? அதற்கு ‘அக்கறை’ எனப் பெயர் வைத்து அவர்கள் பூசி மெழுகுவதுதான் வேடிக்கை. உண்மையான அக்கறை உள்ளவர்களிடம் “பாக்கத்தான போறேன்….” என்ற சவால் வெளிப்படுவதில்லை.
திரும்பத் திரும்ப ஆரூடம் சொல்லிக் கடுப்பேற்றாமல், அவர்கள் எதிர்ப்பார்க்கும் மாற்றம் வந்து அந்த மனிதர் செம்மறி ஆட்டுச் சமூகத்தில் ஜோதியோடு ஜோதியாய்க் கலந்து ஒன்றான பின் “நான்தான் அன்னைக்கே சொன்னேன்ல….என்னமோ பெரிசா பேசுன…” என தாராளமாகப் பிளிறட்டும். அதுவரைக்கும் ஷ்ஷ்ஷ்…மூச்!!!
- பெங்களூரில் ஏப்ரல்-2, 2017 அன்று நடைபெற்ற அசோகமித்திரன் நினைவுக் கூட்டத்தில் டாக்டர் ப.கிருஷ்ணசாமி ,ரமேஷ் கல்யாண் உரை
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 6
- இயற்கையின் பிழை
- தொடுவானம் 163. மறக்க முடியாத மருத்துவப் பயிற்சி
- ஏகாதசி கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஹைக்கூ தோப்பு ‘ தொகுப்பை முன் வைத்து …
- இரண்டு பூதக்கருந்துளைகள் மோதும் போது எழுந்திடும் ஈர்ப்பலை கள் காலக்ஸி மையக் கருந்துளையை வெளியேற்று கின்றன.
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
- புனலாட்டுப் பத்து
- பாக்கத்தான போறேன்…….
- அசோகமித்திரனைக் கொண்டாடிய பொன்மாலைப்பொழுது
- அம்பலம் – 2
- பூமராங் இணைய இதழ்
- மொழிவது சுகம் – ஏப்ரல்1, 2017