கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’

This entry is part 4 of 14 in the series 18 ஜூன் 2017

kadangu

(கவிஞர் கடங்கநேரியானின்,’யாவும் சமீபித்திருக்கிறது’, கவிதைத் தொகுப்பை முன்வைத்து)

ஒரு கவிதையை வாசிக்கிற போது எழும் உணர்வும் அனுபவமும் அக்கவிதை நம்மிடத்தில் கடத்தும் விஷயம், கடத்தும் விதம், அதற்கு முன்னரோ அப்பொழுதோ அக்கவிதையின் பொருளோடு நமக்கிருக்கும் தனித்த தொடர்பு ஆகியவையின் பாற்பட்டது. இதில் எழுதியவர் குறித்த எவ்வித அறிதலும் அவசியமில்லை தான்.பிரதி மட்டுமே போதுமானது. பொட்டலம் மடித்து வந்த தாளின் மூளையில் எழுதியவரின் பெயரில்லாத இரண்டு வரிகள் தூங்கவிடாமல் செய்து விடுவதுண்டு. நம் காலத்திற்கு முந்தைய படைப்பாளிகளின் படைப்புகளை வாசிக்கிற போது அவர்கள் குறித்த செய்திகளும் உடன் வருமாறு இலக்கிய வரலாறு நம்முள் பதிந்திருக்கிறது. ஆனால் எல்லாப் புலவர்களின் குறிப்புகளும் கிட்டியதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெயரே அறிந்திராமல் பாடல் மட்டுமே கிடைக்கப் பெற்று அப்பாடலின் ஈர்க்கும் சொல்லொன்றின் பெயராய் மாறியவர்களையும் நாமறிவோம்.

சமகாலக் கவிதைகளை வாசிக்கிற போதும் குறிப்பாக வாசிப்புக்குப் பின் அக்கவிதை குறித்து பதிவு செய்கிற போதும் அம்மாதிரியே தனித்த படைப்பினூடாக மட்டும் இயங்குவது தான் சரியாகும். எனினும் சக படைப்பாளியாக உடன் இயங்குபவரின் படைப்பு பற்றி அவ்வாறு கருத்து முன்வைப்பது முற்றிலும் சாத்தியமா எனும் கேள்வியும் இயல்பாகவே இருக்கிறது.

wrapper

 

சமூகத்தின் கரடு முரடான வெளியில் எவ்வித சுய சாதுர்யங்களையும் திட்டமிடாமல் யாவர்க்கும் புலப்படும் இடமொன்றில் நின்றபடி கண்ணில் படுமெதனையும் கேள்விக்குள்ளாகும் மனநிலையும் மனத்திற்கு தவறெனெப்பட்டால், எவ்வித இலாப நஷ்டக் கணக்குகளுக்கும் இடமின்றி எதன் பொருட்டேனும் எளிய சமரசங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ளாமல் இலக்கியத்திற்கிணையாக அரசியல், சமூகக் கருத்துகளை தொடர் செயல் பாடாக கொண்டிருக்கும் கடங்கநேரியான் போன்றோரின் கவிதையைப் படிக்கிற போதுஇவ்வுணர்வைத் தவிர்ப்பதென்பது அத்தனை இலகுவானதில்லை.

கடங்கநேரியானின் ,’யாவும் சமீபித்திருக்கிறது’, தொகுப்பைப் பல மாதங்களுக்கு முன்பே வாசித்து விட்டேன். எழுதுவதற்கான அவகாசம் இப்போது தான் வாய்த்திருக்கிறது.

கவிதைகளை வாசிக்கத்தொடங்கும் போது முதற்கவிதையிலேயே

இவர்கள் அனைவரும்

புருவம் உயர்த்தும் படியான

புன்னகை ஒன்று கைவசமிருக்கிறது

என்னும் வரிகள் கண்ணில் படுகின்றன.

இந்த வரிகள் மேலே தொடர்வதற்கு இலகு மனத்தினையும் இணக்க மனோ நிலையையும் வழங்குகின்றன.அதனாலே, அவர் கைக்கொண்டிருக்கும் புன்னகை அனைவரும் புருவம் உயர்த்தும் படியானது எனச் சொல்லத் தோன்றுகிறது.

’மனப் பிறழ்வின் நிழலில்’, என்ற கவிதையிலிருந்து தொடங்கலாம்.

மனப் பிறழ்வின் நிழலில்

கண்ணயர்ந்து கிடக்கிறது

மரணம்.

தயை கூர்ந்து

கல்லெறியாமல்

செல்லுங்கள்.

ஒற்றை இலை

உதிர்ந்ததைத் தாங்க வியலாமல்

தான்

இப்படி கிளை பரப்பி

வளர்ந்து நிற்கிறது.

முதல் கவிதையாக இதனைப் பேசத் தொடங்கியதற்குக் காரணம், சில சொற்களைக் கொண்டு கட்டமைக்கப் பட்டிருக்கிற இக்கவிதை வாசிப்பில் ஆகப் பெரும் சாத்தியங்களை மனத்தில் உருவாக்குகிறது என்பதால் தான்.இடையில் வரும் வரியை முதலில் கவனித்து விட்டால் மூலத்தின் ஆழம் செல்வது எளிதாகும்.

தயை கூர்ந்து

கல்லெறியாமல்

செல்லுங்கள்.

கல்லெறியாமல் செல்லச்சொல்வதன் காரணம் கல்லெறிந்து விடுவதற்கான எல்லாவித முனைப்போடும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தானே?.சரி. எப்படி அந்த ஆட்களைக் கண்டுபிடித்தது கவி மனம். ஏற்கனவே எறிந்தவர்களா? ஆம்.

இப்படிக் கிளை பரப்பி வளர்ந்து நிற்கிற மனப்பிறழ்வின் நிழலில் தான் மரணம் கண்ணயர்ந்து கிடக்கிறது. மனம் என்பது மரமானால் பிறழ்வு என்பது நிழலா? அல்லது மனப்பிறழ்வு என்பது மரமானால் மரணம் என்பது நிழலா?மரணம் கண்ணயர்ந்து கிடக்கிறதென்றால் விழிக்காத மரணம் எப்போது வேண்டுமானாலும் விழிக்கும் சாத்தியம் கொண்டதா? அதனால் தான், யாரோ முன்னர் எறிந்த கல்லால் ஒற்றை இலை உதிர்ந்ததைத் தாங்கவியலாமல் கிளை பரப்பி நிற்கிறதா மரம்?. மரம் என்னும் சொல்லோ விருட்சம் என்னும் சொல்லோ

கவிதையில் இல்லை. ஆனால், வாசக மனத்தில் அரூப மரமொன்றை கிளைபரப்பிட முடியும் ஒரு நல்ல கவிதையால்.

 

இறுதித்துளி மதுவுக்கும்

முதற் துளி நஞ்சுக்கும்

இடையே சிக்கித்தவிக்கும்

வாழ்வு

என்றொரு கவிதை.பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே சிக்கித்தவிக்கும் வாழ்க்கை என்பது இயல்பானது. அதற்கு மாறாக வாழ்க்கை குறித்து வரையறை செய்ய வாழ்வின் தருணங்களில் இருந்து பலவும் கூறவியலும். இவர்,மதுவுக்கும் நஞ்சுக்கும் இடையே என்கிறார். மது என்பதும் நஞ்சு தானே. எப்போது? நஞ்சு முதற் துளியிலேயே நஞ்சு. மது குடித்துக் குடித்துத் தீரும் பொழுதின் கடைசித் துளியில் நஞ்சு. இப்போது மதுவுக்கும் நஞ்சுக்கும் இடையில்சிக்கி மட்டையாகும் வாழ்க்கை விரிகிறதா?

அதனாலே தான்,

மீனும் உண்ணும்

கரையில் துள்ளும் சமுத்திரத்தை எனும்

சூட்சுமம் அறியாமலே

விளையாடிக் கொண்டிருக்கிறோம்

இவ்வாழ்வென்னும் விளையாட்டை

என்று பிறிதொரு கவிதையில் கேள்வி எழுகிறது.

 

இன்றைக்கு விவசாயிகள் படும் துயரம் சொல்லி மாளாதது. விதைத்து விளைவித்து அறுத்து பத்தாயத்தில் குவித்து ஆண்டு முழுதும் உண்ணவும் ஊருக்கெல்லாம் வழங்கவும் வேண்டிய விவசாயியின் துயரம் சொல்லி மாளாது.

விதை நெல்லையே விற்று விட்டால் விளைவு?

விற்ற விதை நெல்

திரும்பக் கிடைத்தது

வாய்க்கரிசியாக

வேறெப்படி அவன் துயர் பேசிவிட முடியும்.

 

பிரணவ் குட்டிக்கு எல்லாம் தெரிகிறது. குழந்தை. தாய் கிளம்பும் போது துப்பட்டா எடுத்துக் கொடுக்கவும் தந்தை கிளம்பும் போது காலைக் கட்டிகொண்டு பைக்கில் சுற்றிவரச் சொல்லவும் தெரிகிறது. ஒன்றரை வயதே ஆகும் பிரணவ்குட்டிக்கு டாட்டா காட்டவும் ஏன் சாமி கும்பிடக்கூடத் தெரிகிறது.

ஆனால்,

அப்பா அம்மா சண்டையின் போது மட்டும்

என்ன செய்ய வேண்டுமெனத் தெரியாமல்

சுவரை உற்றுப் பார்த்து அழத் தொடங்குகிறது

குழந்தை. அதற்குப் பிடிக்காது. தாய் தந்தையின் சண்டை பிரணவ் குட்டிகளுக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை. எனவே தான் அழத்தொடங்கும் போது கூட சுவரைப் பார்த்து அழத் தொங்குகிறது, பார்க்கப் பிடிக்காமல்.

 

‘நதியின் மரணம்’, கவிதை ஒரு முழுமை பெற்ற கவிதை. நதி வறண்டு போய்க்கிடக்கும் காட்சியை சொற்களில் கட்டமைத்திருக்கிற விதம் கவனிக்கத்தக்கது.

பச்சையம் தீர்ந்த கோரைகளையும்

பாசிகளையும் கொண்டு

நெருப்பை உருவாக்குகின்றன

கூழாங்கற்கள்

உயிரற்ற மீன்களிலிருந்தெழும்

துர்வாடையை சகிக்காமல்

நாசியை மூடிக் கொண்டது காற்று.

உடைந்து கிடக்கும் மதகுகள்

நதிக்கு சிதை விறகுகளாகின்றன.

மரணமடைந்த நதியின் உடலத்தினை தீ வைத்தெரிக்கும் சிதைக்கு, பயனற்ற மதகுகள் விறகாகின்றன. உச்சமான சோகச் சித்திரம். அதையும் விஞ்சும் அடுத்தவரி,

மீன்முள் நெஞ்சுகீற

ரத்தம் கசியக் கிடக்கிறதென் நதி.

வான் பறக்கும் கொக்கு

மேகத்தைக் கொத்திப் போடுமென்று

சிறிதளவு நம்பிக்கையும் லாரியோடு போயிற்று

மண்ணோடு மண்ணாக

என் நதி என்று இயல்பாய் இழையோடும் உரிமைக்குரல் தான் முழுக்கவிதைக்கான சாட்சியம். நதியின் மரணத்தை அதிகபட்சமான படிம உத்திகளோடு கூடிய துயர் வெளியாய் வறண்டு விரிகிறது.

 

மனம் சமநிலை குலைகிற தருணம் மனப்பிறழ்வு உருவாகிறது. எவ்விதமான அதீத உணர்வு நிலையுமே மனப்பிறழ்வின் ஒரு வடிவம் தான். தான் என்கிற சுயத்துக்கும் புற உலகுக்குமான தொடர்பு, உறவு புரிதலற்றுப் போகும் சமயம் அது.மனச்சமன் பிறழ்வுறுவதற்கான கால இடைவெளி அநேகாய் மிகக்குறைவானதே.மனப்பிறழ்வு கொண்டவர்களின் நடவடிக்கைகள் அவர்களின் தோற்றங்கள்ஆகியன அவர்களின் பிறழ்வு மனத்துக்கு மிக நெருக்கமானவை.

சிகையலங்காரத்தில் சிலுவையில் அறையப்பட்ட

தேவகுமாரனைப் போலிருக்கிறான்

ஒருசாயலில் கங்கையைத் தன் சிகையில் முடிந்திருக்கும்

சிவனைப் போலிருக்கிறான்

உடையலங்காரத்தில் சமணத்துறவிகளை

நினைவு படுத்துகிறான்

என்னும் மனப்பிறழ்வாளனின் தோற்றம்

ப்ளாஸ்டிக் குவளையில் தேநீர் அருந்தியபடி

எதிர்புற கழிவு நீர் ஓடையில்

தேங்காய் சிரட்டையில் நீரள்ளிப் பருகுகிறவனைக்

கவனிக்கிறேன்

தோற்றம் செயல் இரண்டும் மனப் பிறழ்வாளனுக்குரிய எல்லா அம்சங்களும் அல்லது அம்சமின்மைகளும் பொருந்தியுள்ளதை உணர்ந்து

மனப் பிறழ்வு

மிகச் சமீபித்திருக்கிறது…

 

என்று முடியும் கவிதை.இது ஏதோ மனப்பிறழ்வுக்கு உள்ளாகப் போகிற ஒருவனின் முன்பொழுதுச் சித்திரமல்ல. கவிதை காட்டுவது அது போலத்தான் எனினும் தோற்றங்கள் கவிதையில் சொல்வது தானா? மாறாக, ’டிப்டாப் ’ உடையணிந்த மனங்களில் பிறழ்வு நெருக்கமாக இல்லையா.அவன் என்பதற்குள் அவள் இல்லையா? எல்லாம் தான். எல்லோரும் தான்.சமீபத்திருக்கிற மனப்பிறழ்வின் தூரத்தை மேலும் குறைந்து, அண்ட விடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது எத்தனை முக்கியமானது.

’ப்ளாஸ்டிக் குவளை’, என்ற சொல் அதன் பயன்பாட்டைப் பொருத்தமட்டில் அங்கீகரிக்கப்பட்ட மனப்பிறழ்வின் சாட்சி தானே?

 

சாட்சிக் கூண்டின்

பிடிகம்பிகளுக்கிடையில்

மாட்டி இறந்து போன எலியொன்றின்

துர்வாடையால்

நீதி வெளியேறி வெகு காலமாயிற்று

என்று நீதியற்ற, நீதி மறுக்கப் படுகிற, நீதி மறைக்கப் படுகிற, நீதி காலதாமதப் படுத்தப் படுகிற, நாற்றமெடுத்த மன்றங்களின் துர்வாசனையை கடங்குவால் இத்தனை அறுதியாய்ச் சொல்லமுடிகிறது.

 

கடங்கநேரியான் காதல் கவிதை எழுதியிருக்கிறார்.

சமீபமாக

யாதொரு இதழிலும்

என் கவிதை பிரசுரமாகவில்லை

கொஞ்சம்

உன் இதழ்களைக் கொடேன்

கேட்பதற்கான காரணம் இதழ்கிடைக்கும் சாத்தியத்தையே குலைத்து விடுமோவெனும் அச்சம் இருக்கிறது.

 

மதுக் குவளைக்குள் மிதக்கும்

பனிக்கட்டிகள்

பனிப்பிரதேசங்களிலிருந்து

தருவிக்கப்பட்டவையல்ல.

ஐஸ்ஹவுஸ் போராட்டம்

வெள்ளையானை

என நீட்டி முழக்கி வியர்வை குடிக்கும்

கானல் சொற்கள்

என்னிடமில்லை

இது போதாதா? மிச்சம் வெளியே தொடராதா?

கன்னக் கதுப்புகளில் வழிந்தோடும்

அவள் நினைவுகள்  தான்

அத்துண்டங்கள்

அழகான இப்படிமத்தை வெள்ளையானையும் கானல் சொற்களும் தொல்லை செய்கின்றன.அவற்றை வேறு வீட்டில் வைத்து வாழ்ந்திருக்கலாமோ வெனத்தோன்றுகிறது.

கன்னக் கதுப்புகளில் வழிந்தோடும்

அவள் நினைவுகள்  தான்

பனிக்கட்டிகள்

எனக்கு மிக மகிழ்வாய் முடித்துக்கொள்கிறேன் அரசியல் உரசல் ஏதுமின்றி.

 

நீந்தத் தெரியாமல்

மதுக்குடுவைக்குள் தத்தளிக்கிறான்

கடவுள்

ரொம்பச்சரி.

சூரியப்பறவை

கடலுக்கடியில் கூடுகட்டும்.

 

****************

நினைவுத் தாழ்வாரத்தில்

பற்றிப்படர்ந்தோடுகிறது

பதின் பருவத்து மலரொன்று

என்கிறார்.

 

மிக முக்கியமான கவிதை ஒன்று இத்தொகுப்பில் உண்டு.

சாவுக் கொட்டுச்

சத்தமில்லை

சாராயமருந்தி யாரும்

சலம்பவுமில்லை

முன்னும்

பின்னும்

யாரும் வரவும் இல்லை

அழவுமில்லை.

தனியே

தூக்கிச் செல்கிறது நதி

மயானம் வரை

பிணம் சுமந்து வந்த மாலையை

மரணத்திற்குப் பின் நாம் என்னவாக மதிக்கப் படப்போகிறோம். நம்மைச் சுமக்க எத்தனை பேர் இருப்பார்கள். நாம் சம்பாதிப்பது என்பது மனிதர்களை இல்லையா?நம் வாழ்க்கை மரணத்திற்குப் பின்னும் அனாதையென்பது எவ்வளவு வக்கிரமான மனக் கேடு. அழுகிக் கெட்டுவிடும் என்பதற்கான அப்புறப்படுத்தலுக்குரிய பொருளாய் உடலம் மாறிப் போவது எத்தனை துயரம்.பிணம் சுமந்த மாலையைப் பிணமாய்ச் சுமந்து செல்கிறது நதி.அனேகமாய் கவிதை தோன்றிய கதையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் இக்கவிதைக்கு நேர்ந்ததை நானறிவேன்.யாரையும் ஒரு கணம் நிறுத்தி பின் கடக்கச் செய்யும் கவிதை இது. உள்ளுணர்வில் உரசக் கூடியது.பலராலும் பரவலாய்க் கொண்டு சேர்க்கப்பட்ட கவிதையென்னும் சிறப்பும் இதற்கு உண்டு.

 

கடங்கநேரியான் கவிதைகளை வாழ்க்கைக்குள்ளிருந்து கண்டுபிடிக்கிறார். ஆனால் வாசகனைக் கவிதைக்கு வெளியே நிரம்பப் பயணப்பட வைக்கிறார். உண்மை நிறைந்த, பாசங்குகளற்ற  வாழ்வின் தரிசனங்களை அழகிய படிமங்களோடும் சொற்சிக்கனத்தோடும் கவிதையாக்கியிருக்கிறார்.

 

கடங்கநேரியான் எனக்குப் பிடித்த கவிஞர் என்று சொல்வதற்கு அவர் மட்டுமல்ல அவரின் கவிதைகளும் பெருமளவில் காரணமாக இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தானே.

 

கடங்கநேரியானுக்கு எப்போதும் என் அன் வாழ்த்துகளும்.

 

 

என்னிடமில்லை

இது போதாதா? மிச்சம் வெளியே தொடராதா?

கன்னக் கதுப்புகளில் வழிந்தோடும்

 

கடங்கநேரியான் கவிதைகளை வாழ்க்கைக்குள்ளிருந்து கண்டுபிடிக்கிறார். ஆனால் வாசகனைக் கவிதைக்கு வெளியே நிரம்பப் பயணப்பட வைக்கிறார். உண்மை நிறைந்த, பாசங்குகளற்ற  வாழ்வின் தரிசனங்களை அழகிய படிமங்களோடும் சொற்சிக்கனத்தோடும் கவிதையாக்கியிருக்கிறார்.

 

கடங்கநேரியான் எனக்குப் பிடித்த கவிஞர் என்று சொல்வதற்கு அவர் மட்டுமல்ல அவரின் கவிதைகளும் பெருமளவில் காரணமாக இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தானே.

 

கடங்கநேரியானுக்கு எப்போதும் என் அன்பும் வாழ்த்துகளும்.

Series Navigationஎதிர்பார்ப்புவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 17
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *