சொற்கள் புகழோடு தோன்றுகின்றன

author
0 minutes, 3 seconds Read
This entry is part 1 of 13 in the series 24 செப்டம்பர் 2017

கோ. மன்றவாணன்

 

ஜெயமோகன் படைப்புகளில் அவருடைய மொழியாளுமை எவரொருவரையும் வியக்க வைக்கும்.  அவருடைய எழுத்துகளில் தமிழின் புதுமிளிர்வாகப் புதுச்சொல், புதுச்சொற்றொடர், புதுவீச்சு ஊற்றெடுத்து வெள்ளமெனப் பாய்வதைப் பார்க்கலாம்.

மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாள்தோறும்  எழுதி வருகிறார். சமற்கிருதப் பெருங்காவியமாக அது இருப்பதால் சமற்கிருத சொல்மிடுக்குகளுக்கு ஏற்ப, அதே மிடுக்கோடும் கூடுதல் அழகோடும் தூய தமிழ்ச்சொற்கள் படைத்து வருகிறார்.

படைப்பிலக்கிய எழுத்தாளர்களால்தாம் மொழி தொடர்ந்து பாதுகாக்கப்படுகிறது. மேலும் அவர்களால்தாம் மொழி அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கு இளமையோடு கொண்டு சேர்க்கப்படுகிறது. அதில் ஜெயமோகனுக்குத் தனிஇடம் உண்டு.

ஜெயமோகன் படைப்புகளில் காணப்படும் புதிய தமிழ்ச்சொற்களை- புதிய சொற்கூட்டுகளைத் தொகுத்தால் அது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் தனிஅகர முதலியாகச் சிறந்து விளங்கும்.

இதுகுறித்துக் கடந்த ஆண்டு கோவையில் நடந்த விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் ஜெயமோகன் அவர்களிடமே கோரிக்கை வைத்தேன். அப்போது அவர் சொன்னார். பரப்புரை என்ற சொல்லையும் முதன்முதலில் அவர்தான் உருவாக்கிப் பயன்படுத்தியதாகவும், அந்தச் சொல் தினத்தந்தி இதழில் தற்காலங்களில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு பேருவகை கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும் தன்படைப்புகளில் அவர் உருவாக்கும் புதுச்சொற்களை வேறுயாராவதுதான் தொகுக்க வேண்டும் என்றார்.

யுனிவர்ஸ் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு உரிய புடவி என்ற சங்கத்தமிழ்ச் சொல்லை வெண்முரசில் பார்க்கலாம். பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைப்புகளில் இந்தப் புடவி என்ற சொல்லைப் படித்திருக்கிறேன். அத்தகு பழந்தமிழ்ச் சொற்களை இன்றைய இளந்தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கிறார் ஜெயமோகன்.

வெண்முரசு படிப்பவர்களிடம் கேட்டேன். அதில் கையாளும் பல தமிழ்ச்சொற்களைத் தமிழ்அகராதியில் தேடித்தான் அறிய முடிகிறது என்கின்றனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆங்கில அகராதி இருக்கும். ஆனால் தமிழ் அகராதி இருக்காது. தமிழ் அகராதியை வாங்க வைத்துவிடுகிறார் ஜெயமோகன். சில சொற்களைத் தமிழ் அகராதியில் தேடினாலும் கிடைப்பதில்லை என்றும் சொல்லுகின்றனர்.

எனக்கு ஒரு வியப்பு. ஜெயமோகன் மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். தமிழ்ப்பெருங்கடலில் மூழ்கிச் சொல்முத்துகளை அள்ளிவந்து கொட்டுகிறாரே… அவரால் எப்படி முடிகிறது? அவருடைய தமிழ்படிப்பு வானம்போல் உயர்வானது; கடல்போல் பரந்தது என்பதால் இருக்கலாம். தூய மலையாளத்தில் நல்ல தமிழ்ச்சொற்கள் உள்ளன. அந்த மலையாளச் சொற்களும் புதுச்சொல் உருவாக்கத்தில் அவருக்குக் கைகொடுக்கலாம்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்ப் பேச்சு வழக்கில்  மலிந்திருந்த பிறசொற்கள் பலவும் தற்காலத்தில் மறைந்தே விட்டன. அதற்கு முயன்றவர்களில் மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்க முன்னோடிகள் எனப் பலருண்டு. ஆனாலும் பிரயாசித்தம் என்ற சொல் நம்மிடையே நங்கூரமிட்டு நகராமல்தான் உள்ளது. அந்தச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் என்ன என்று தனித்தமிழ் அன்பர்கள் பலரிடம் கேட்டேன். யாரும் சொல்லவில்லை. ஜெயமோகன் படைப்புகளில் அதற்கு விடை இருக்கிறது. பிரயாசித்தம் என்ற சொல்லுக்கு அவர் படைத்தளித்துப் பயன்படுத்தி வரும் சொல் பிழையீடு.

இழப்பீடு என்ற சொல் வழக்காடு மன்றத்தில் புழங்கப்பட்டு வருகிறது. ஏதாவது ஓர் இழப்புக்கு அதை ஈடுசெய்ய வேண்டிய ஒன்றுக்கு இழப்பீடு என்ற சொல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இழப்பீடு பணமாகவும் இருக்கலாம் வேறு வகையிலும் இருக்கலாம். அறமன்றங்களில் இழப்பீடு என்பது பணத்தால் ஈடுசெய்வதாக மாறிவிட்டது. அந்தச் சொல்தான், பிழையீடு என்ற சொல் உருவாக்கத்துக்குத் தூண்டுகோலாக இருந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

சிலநாள்களுக்கு முன் எழுத்தாளர் வளவ. துரையன் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருடைய துணைவியார் வழிபாட்டு அறையில் படைத்துக்கொண்டிருந்தார். தீபாராதனை என்ற சொல்லுக்குத் தமிழ்ச்சொல் என்ன என்று கேட்டார். தீபம் என்றால் விளக்கு. ஆராதனை என்றால் பூசனை, வணங்கல், வழிபடல் என்றெல்லாம் சொல்லித் தகுந்த சொல் காண முற்பட்டுத் தோற்றுத்தான் போனேன். வளவ. துரையன் பல்தெரியாமல் புன்னகைத்துச் சொன்னார். எனக்கும் தெரியாதுதான். ஆனால் தீபாராதனை என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை ஜெயமோகன் எழுதி இருக்கிறார் என்றார். என்ன சொல் என்று சொல்லுங்கள் என்று படபடத்தேன். சுடராட்டு என்றார். தற்போது தொடங்கியுள்ள வெண்முரசின் எழுதழல் புதினத்தில் அந்தச் சொல் உள்ளது. சுடரை ஆட்டுவதால் அவ்வாறு அந்தச் சொல் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீராட்டு என்பதுபோல் பாராட்டு என்பதுபோல் இந்தச் சுடராட்டு என்ற சொல்லில் தமிழ் ஒளிவீசுகிறது.

மேலும் பூஜை என்று நாம் சொல்லும் சொல்லில் ஜை இருப்பதால் அது வடசொல்தான் என்று தெளிவாகச் சொல்லிவிடுவோம். அந்தச் சொல் பூசெய் என்ற சொல்லில் இருந்து மருவியதால் அது தமிழ்ச்சொல்தான் என்கின்றனர் தமிழறிஞர்கள். ஜெயமோகனின் எழுதழல் புதினத்தில் பூசெய்கை என்ற சொல் பூசை / பூஜை என்ற சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தமிழ்ச்சொல்லின் பழங்கால வடிவைக் கூட ஜெயமோகன் மீட்டெடுக்கிறார் என்பதில் மகிழ்ச்சியுறாமல் இருக்க முடியாது.

அண்மையில் அவருடைய தளத்தில் தாள்குட்டை என்ற சொல்லைப் படித்தேன். உடுவிடுதியில் (புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக்கொண்டது போல், நட்சத்திர ஓட்டலுக்கு எனக்குத் தோன்றிய சொல். ஆனால் இயல்பாக இல்லைதான்.)  Tissu Paper வைத்திருப்பார்கள்.  தற்போது சரக்கு-சேவை வரி வாங்காத உணவகங்களிலும் வைத்திருக்கிறார்கள். அதைத்தான் தாள்குட்டை என்று சொல்கிறார். கர்ச்சீப்க்கு கைக்குட்டை என்று சொல்வதை அடிப்படையாக வைத்து அதை அவர் உருவாக்கி இருக்கலாம். முன்னொரு முறை அவர் தலைக்குட்டை என்ற சொல்லைப் பயன்படுத்தியதைப் பார்த்தேன். அது Head Scarf என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்.

Tissu Paper என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எதுவென இணையத்தில் துழாவினேன். ஜெயமோகன் சொல்லைவிட வெல்லும்சொல் அதில் இருக்கலாம் என நினைத்துத்தான் தேடினேன். அதில் உள்ள சொற்கள் திசு காகிதம், மென்தாள், புரைத்தாள், உரித்தாள் ஆகியவை ஆகும். நாமும் முயன்றுதான் பார்ப்போமே என்று துடைதாள் என்றொரு சொல்லை உருவாக்கிப் பார்த்தேன்.  தாள்குட்டை என்ற சொல்லோடு இந்தச் சொற்களை எல்லாம் ஒப்பிட்டு ஆய்ந்து பார்த்தேன். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தாள்குட்டைதான் வெல்லும் சொல் ஆனது.

கதைநிகழ்வுகளின் நுண்காட்சிகளை- கதைச்சூழல்களின் நுண்ணுணர்வுகளை விவரிக்கும்போதும் பல புதிய தமிழ்ச்சொற்களைப் படைத்தளித்துக்கொண்டே செல்கிறார். இத்தகைய சொற்களைத் தொகுக்கும்போது தமிழகராதியின் சொல்வளம் பெருகும். ஆங்கில அகராதியில் ஆண்டுதோறும் பல புதிய சொற்கள் சேர்க்கப்படுகின்றன. அந்த உயர்நிலையைத் தமிழகராதியும் அடையும்நாள் வரவேண்டும்.

ஜெயமோகனுக்கு வாசகர்கள் என்ற நிலையைத் தாண்டியும் அணுக்கமான மெய்யன்பர்கள் உள்ளனர். கடலூர் சீனு அவர்களில் ஒருவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஜெயமோகன் உருவாக்கிய புதுச்சொற்களையும்- அவர் பயன்படுத்தும் பழந்தமிழ்ச் சொற்களையும் பட்டியல் இட்டார்.

சவால் என்ற சொல்லுக்கு வல்விளி என்றும், சுவையான பானத்துக்கு இன்னீர் என்றும், படகின் முனைப்பகுதிக்கு அமரமுனை என்றும் ஜெயமோகன் சொல்லாக்கம் செய்துள்ளார்.

பாஸ்போர்ட்டைக் கடவுச்சீட்டு என்றும் பாஸ்வேர்டு என்பதைக் கடவுச்சொல் என்றும் நாம் பயன்படுத்தி வருகிறோம். பாஸ்வேர்டு என்பதற்கு ஜெயமோகன் கரவுச்சொல் என்று சொல்கிறார்.  கடவுச்சொல்லா கரவுச்சொல்லா எது மிகுபொருத்தமான சொல் என்று எண்ணிப் பார்த்தேன். கடந்து செல்வதால் கடவுச்சீட்டுப் பொருத்தமாக இருக்கிறது. கடவுச்சீட்டில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. ஆனால் பாஸ்வேர்ட் என்பதில் கடந்து உள்நுழைவதற்கான சொல் என்ற அடிப்படையில் கடவுச்சொல் என்கின்றனர். ஆனால் பாஸ்வேர்ட் என்பதில் மறைத்திருக்கும் எழுத்துகள் உள்ளன. அவற்றை யாரிடமும் சொல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அதுதான் அதில் முதன்மையானது. கடந்து நுழைவதற்கான சொல் என்பதைவிடவும் மறைவான சொல் என்னும் பொருள்தரும் கரவுச்சொல் என்பதே மிகவும் பொருந்துகிறது.

இத்தகு சொல்லாக்கத்தில் இன்னொரு புதுமையையும் ஜெயமோகனிடம் காணலாம். அவர் உருவாக்கிப் பயன்படுத்தும் இத்தகைய சொற்களுக்குரிய புழக்கத்தில் உள்ள பிறமொழிச் சொற்களை அடைப்புக்குறிக்குள் போடுவதில்லை. அப்படிச் செய்தால் இயல்பான நடையோட்டத்தைத் அது தடுக்கக் கூடும்.  அவர் விவரிக்கும் சூழலே அந்தப் புதுச்சொல்லை நமக்கு நன்றாக அறிமுகப்படுத்தி நீ்ண்டகால நட்பாக்கி விடுகிறது. சில வேளைகளில் அந்தச் சொல் நேர்த்தியில் சில நேரம் சிற்பமாகி அங்கேயே நின்று விடுவோர் உள்ளனர்.

இத்தனைக்கும் ஜெயமோகன் தனித்தமிழ் ஆர்வலர் அல்லர். அவரிடமிருந்துதான் எத்தனை எத்தனை தூயதமிழ்ச் சொற்கள் புகழோடு தோன்றுகின்றன.

Series Navigationமாய உலகம்
author

Similar Posts

Leave a Reply to Anonymous Cancel reply

Your email address will not be published. Required fields are marked *