தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 நவம்பர் 2017

புரியாத கவிதை

நிலாரவி.

யாருக்கும் புரியாத
கவிதையை எழுதுவதே
கவிதை என்றானபின்
எனது கவிதையை
எழுதத்துவங்கினேன்

இது புரியும் பட்சத்தில்
நான் தோற்றவனாகிறேன்
நீங்கள் ஜெயித்துவிடுகிறீர்கள்
புரியாமல் போவதில்
வெற்றி எனக்குத்தான்

எப்பொழுதும்
வாசகனை ஜெயிப்பது தானே
எழுதுபவனின் வெற்றி
எனினும்
எழுதியவனின் பொருளும்
வாசகனின் புரிதலும்
எதிர்கொள்ளும் திசையொன்றில்
ஜெயிப்பவர் யாரோ?

ranusri70@yahoo.in

Series Navigation”இயற்கையில் தோயும் வானம் பாடி” [கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தியின் “வனம் உலாவும் வானம்பாடி தொகுப்பை முன்வைத்து]சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “.மலேசியப்பின்னணி நாவல் மலேசியாவில் வெளியீடு

4 Comments for “புரியாத கவிதை”

 • ஆ. சரவணபெருமாள் says:

  கவிஞர் நிலா ரவி- வெற்றி பெற்றது உங்கள் கவிதையோ!

 • நிலாரவி says:

  மிக்க நன்றி.
  சிறந்த வாசகனின் ரசனையில்
  கவிதைக்கும் வெற்றி கிடைத்துவிடுகிறது.

 • latha ramakrishnan says:

  வணக்கம்.
  மக்களாட்சியிலும் அரசியல்தலைவர்கள் மேடைகளில் வீரவாள் ஏந்தி மன்னர்களாகக் காட்சியளித்து மகிழ்வதைப் போல் கவிதை என்பதையும் தோற்பது-ஜெயிப்பது என்று பேசுவதும் வழக்கமாக இருக்கிறது.

  உண்மையில் கவிதை வலிநிவாரணம்; வாழ்க்கை என்னும் மிகப்பெரிய மர்மத்தைக் கட்டவிழ்க்கப் பார்க்கும் இடையறாப் பிரயத்தனம்.

  புரியாக் கவிதை என்பதற்கு என்ன அளவுகோல்? தமிழ்நாடே அழுகிறது, தமிழ்நாடே கொந்தளிக்கிறது என்று சகட்டுமேனிக்குச் சொல்வதுபோல் எல்லா வாசகர்களுக்கும் தம்மைப் பிரதிநிதியாக்கிக்கொண்டு சொல்வது எந்தவிதத்தில் சரி?

  ஒரு திறந்தமுனைக் கவிதையைப் பத்துபேரிடம் காட்டி அர்த்தம் கேட்டால் ஒரு பார்வையில் புரியவில்லை என்று சொல்பவர்கள் பின் அந்தக் கவிதை தங்களுக்கு அர்த்தமாகும் விதத்தைச் சொல்வதை பலமுறை கேட்டதுண்டு. தன்னுடைய கவிதையின் உட்பொருள், மறைபொருளை நெருங்கும் வாசகர்கள் கவிஞர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையுமே தருவார்கள். இதில் வெற்றி – தோல்வி எங்கே வருகிறது?

  ஒருவர் கவிதையெழுதும்போது இலக்கு வாசகர்கள் அல்லது பயனாளிகளைக் கருத்தில் கொண்டு எழுதுவது ஒரு வகை. அது மட்டுமே கவிதைக்கு இலக்கணமாகாது. அப்படியில் லாமல் தனக்கும் தனக்குமான உரையாடலை, தனக்குள் அழுத்திக்கொண்டிருக்கும் பாரத்தை ஒரு வலிநிவாரணமாய் சொல்லில் வடிக்க ஆரம்பிக்கிறார். அதேவிதமான மனநிலையில் இருக்கும் வாசகர் அதில் தன்னை இனங்காண்கிறார்.

  ஒரு கவிதை புரியவில்லை என்று கவிஞரைக் குறைகூறுபவர்கள், கவிஞர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர் எழுதியுள்ள கவிதையை அவரைக் கொண்டே கட்டவிழ்த்துக்காட்டக் கேட்டுக்கொள்ளவோ, அல்லது அந்தக் கவிதையில் தாம் பெறும் அர்த்தத்தைக் கூற முன்வருபவர்களுக்கு மேடை அமைத்துத் தருவதோ இங்கே அரிதாகவே நடப்பது.

  திரைப்படப்பாடல் எழுதுபவர்களே கவிஞர்களாகக் கொண்டாடப்படும் சூழல். இதில் புரியாக் கவிதை எழுதுவதாக நவீன தமிழ்க்கவிதைகளின் சாரம், நுட்பம், எடுத்தாளப்படும் அக, புற வாழ்வளாவிய கருப்பொருள்கள் எதையுமே கணக்கில் கொள்ள மனமின்றி, அதற்காக நேரம் ஒதுக்க மனமின்றி இருக்கும் அப்பட்ட புறக்கணிப்பு மனோபாவத்தோடு இந்த மாதிரி எள்ளல் வேறு வெவ்வேறு வடிவங்களில் வந்துகொண்டேயிருப்பது வருத்தத்தைத் தருகிறது.

  தோழமையுடன்
  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 • நிலாரவி says:

  முதலில் உங்கள் விமர்சனத்துக்கு நன்றி. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
  கவிதைகள் எழுதுவதில் ஆரம்ப நிலையில் உள்ளவன் நான்.
  சிறந்த எழுத்தாளரான உங்கள் கருத்தை மதிக்கிறேன்.
  உங்கள் கவிதைகளின் வாசகர்களில் நானும் ஒருவன்.

  தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல்
  தன்னுடைய கவிதையின் உட்பொருள், மறைபொருளை நெருங்கும் வாசகர்கள் கவிஞர்களுக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையுமே தருவார்கள். 
  இந்த அடிப்படையில் எழுதப்பட்டதே இந்தகவிதை.  வெற்றி தோல்வி
  என்பது புரிதல் மற்றும் சென்றடைதல் குறித்து குறியீடாக எழுதப்பட்டதேயன்றி எழுதுபவனுக்கும் வாசகனுக்கும் இடையில் யுத்தம் என எழுதவில்லை. எழுத்தையும் எழுதுபவர்களை மதிப்பவன் நான்.
  நானும் சில நவீன கவிதைகள்
  முயன்றிருக்கிறேன்.
  நவீன கவிதையை விமர்சனம்
  செய்யும் எண்ணத்தில் எழுதவில்லை. ஒரு மாறுபட்ட பார்வையாக எழுதமுயன்றது மட்டுமே. அப்படி எதுவும் தவறாக
  எழுதியிருந்தால் வருந்துகிறேன்.
  தோழமையும் நன்றியும்.
  நிலாரவி.


Leave a Comment

Insider

Archives