தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 பெப்ருவரி 2019

நண்பன்

 

நான்

உரிக்கப் படுகிறேன்

அவன் அழுகிறான்

 

எனக்குள்

ஒரு பூ சிரிப்பதும்

ஒரு புதைகுழி

அழைப்பதும்

அவனுக்குத் தெரிகிறது

 

ஒரு பெண்

எனக்குச் சொல்வதும்

அவனுக்குச் சொல்வதும்

ஒன்றே

 

எனக்கு

ஒன்று ரூசி என்றால்

அவனுக்கும்

அது ருசியே

 

இப்படித்தான்

நானென்று

நான் சொல்வதும்

என் நண்பன்

சொல்வதும் ஒன்றே

 

புறத்தை

மட்டும் சொல்பவன்

நண்பனல்ல

அவன்

அகத்தையும்

சொல்வான்

 

தப்பான பாதையில்

அவன் முள்

நல்ல பாதையில்

அவன் பஞ்சு

 

இன்று

நல்ல பழம்

நாளை அழுகல்

நல்ல நண்பன்

எப்போதுமே

நல்லவன்

 

நல்ல நூலாய்

என் நண்பன்

என்னை அவன்

இன்னொரு

நூலாக்குகிறான்

 

காரி உமிழ்ந்தாலும்

எனக்கு ஆறுதல் சொல்வான்

‘என்னால் மண்ணுக்கு

உரம் சேர்ந்திருக்கிறதாம்’

 

நான் எடுக்கிறேன்

அவன் கொடுக்கிறான்

அவன்  எடுக்கிறான்

நான் கொடுக்கிறேன்.

இருவரும் எப்போதும்

நிறைவாக

 

நல்ல நண்பர்கள்

பொட்டும் நெற்றியும்

நாசியும் சுவாசமும்

பசியும் உணவும்

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationதிண்ணைவீடுநூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “

Leave a Comment

Archives