மீனாட்சி சுந்தரமூர்த்தி
1.மகப்பேறின்மை.
பொறையிலா அறிவு போகப் புணர்விலா இளமை மேவத்
துறையிலா வசன வாவி துகிலிலா கோலத் தூய்மை
நறையிலா மாலை கல்வி நலமிலாப் புலமை நன்னீர்ச்
சிறையிலா நகரம் போலும் சேயிலாச் செல்வ மன்றே.
இது தரும் பொருளாவது,
அடக்கமிலாத அறிவினாலும்,துய்க்கப் படாத இளமையாலும்,நீராடுவதற்கான படித்துறைகள் இல்லாத
தாமரைகள் மலர்ந்த குளத்தினாலும்,ஆடையிலாது புனைந்த அழகினாலும்,தேன்துளிர்க்கும் மலர்களால் தொடுக்கப்படாத மாலையினாலும் மேன்மேலும் கற்றுப் பெருகிடாத புலமையாலும்,நீரரண் எனும் அகழியால் சுற்றப் படாத நகரத்தினாலும் (ஏரி, குளம், கிணறு,ஆறு போன்ற நீர்நிலைகள்இல்லாத நகரம் எனவும் கொள்ளலாம்) பயன் ஏதும் இல்லை.இதைப் போலவே குழந்தைப் பேறு இல்லாதவன் பெற்றிருக்கும் பெருஞ்செல்வத்தாலும் ஒரு பயனும் இல்லை என்பதாம்.
இப்பாடல் ஔவையின்,
நீரிலா நெற்றிபாழ் நெய்யிலா உண்டிபாழ்
ஆறிலா ஊருக் கழகுபாழ்- மாறில்
உடன்பிறப் பிலா உடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை.
திருநீறு பூசிடாத நெற்றியும்(கடவுளை வணங்காதவன் என்பதே பொருள்)நெய் பெய்யாத உணவும்(அறுசுவையும் இலாத உணவு) தன்னோடு
பகைகொளாத உடன்பிறப்புகளைப் பெறாமையும்
நற்குணம் வாய்ந்த இல்லாள் இல்லாத மனையும் பயனடையாது. என்னும் பொருளுடைய பாடலோடு ஒப்பு நோக்கி எண்ணத் தக்கது.
இதுவலாது மகப்பேறிலாமை வாழ்வில் இன்பம் சேர்க்காது என்பது,
பாண்டியன் அறிவுடை நம்பியின்,
படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.(புறம்-188)
(,சிறப்புகள் பல பெற்று பலருக்கும் பகிர்ந்தளித்து உண்ணும் பெருஞ்செல்வம் உடையவர்
எனினும் இல்லத்தில் தளிர்நடை நடந்து சின்னஞ் சிறிய
கைகளால் நெய்பெய்த உணவை அளைந்து, துழாவி, உடலில் பூசிக்கொண்டு, உதிர்த்துக் கொண்டு மயங்க வைக்கும் குழந்தைகள் இல்லையென்றால் அவரது வாழ்க்கைப் பயனற்றதே )எனும் பாடலும்,
புகழேந்திப் புலவரின்,
பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்.(நளவெண்பா-241)
(,கிளிச்சிறை, ஆடகம் முதலான பொன்வகைகள் அத்தனையும் பெற்றுள்ள செல்வந்தர் ஆனாலும்,பலரும் போற்றும் புகழ் பெற்றவர் ஆனாலும் இன்னும் எத்துணைச் சிறப்புகள் பெற்றிருந்தாலும் பூவின்மணம் வீசும் சிவந்த வாயிலிட,இன்னமுதில் தாமரைக் கையிட்டுத் துழாவும் மக்களைப் பெறாதவர் ஏதும் இல்லாதவரே.)எனும் பாடலும் உறுதி செய்கின்றன.
2. சொல்லில் தூய்மை.
2.பொய்யன் மின்புறம் கூறன்மின் யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்உயிர் கொன்றுண்டு வாழுநாள்
செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்.(13)
இப்பாடலின் பொருள்;
பொய் சொல்வதும்,ஒருவர் இல்லாதபோது
அவரைப் பற்றி இகழ்ந்து பேசுவதும், எவரையும் கடிந்து
பேசுவதும்,தன்னுடல் வளர்க்க மற்றோர் உயிர் கொன்று
உண்பதுவும்,தீயவர்களோடு சேர்வதும் கூடாது என்பதாகும்.
இதனில் திருக்குறளின் கருத்துகள் பல பொதிந்துள்ளன.
`பொய்யன்மின்`
உண்மை பேச வேண்டும்,
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.(297)
(பொய் கூறாதிருந்தாலே போதும் மற்ற அறங்கள் செய்ய
வேண்டுவதில்லை ).
புறங்கூறன்மின்;
அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.(181)
(ஒருவன் வேறெந்த அறச்செயலும் செய்யாவிடினும்
புறம் பேசாதிருப்பதே சிறந்த அறமாகும்.)
யாரையும் வையன்மின்,
வடிவல்லன சொல்லி நீர் உய்யன்மின்;
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.(99)
(இனியசொற்கள் நன்மை தருமென அறிந்தும் கடுஞ்சொற்கள் கூறுவதால் என்ன பயன்).
3.ஊன் உண்ணாமை.
உயிர்கொன்று உண்டு வாழும்நாள் செய்யன்மின்;
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.(251)
(தன் உடலை வளர்க்க வேண்டி பிறிதொரு உயிரின்
உடலை உண்பவனிடம் இரக்கம் இருக்காது.)
4.கூடா நட்பு
சிறியாரோடு தீயன்மின்;
இதனை வள்ளுவர் கூடாவொழுக்கம், சிற்றினம் சேராமை
எனப் பலபடப் பேசுவார்.
ஒரு குறள் காண்போம்,
நல்லினத்தி னூங்குது துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூவும் இல்.(460)
நல்லவர்களைக் காட்டிலும் சிறந்த துணையும் இல்லை.
தீயவர்களைக் காட்டிலும் கொடிய துன்பமும்
இல்லை.
ஔவையாரின் பாடல் ஒன்றும் இதனை வலியுறுத்தல் காணலாம்
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவுந் தீது அவரோடு
இணங்கி இருப்பதுவுந் தீது.(மூதுரை-9)
(இதன் பொருளாவது,(குணநலமில்லாதவர்களை) தீயவர்களைச் சென்று காண்பதும்,அவர்களின் பேச்சைக் கேட்பதும்,அவர்களின் குணங்களை வியந்து போற்றுவதும்,அவர்களோடு இணங்கி வாழ முற்படுவதும்
தீமையைத் தவிர வேறெதையும் தராது என்பதாம்)
இவ்வாறே வளையாபதியின் அடுத்த பாடலும்(14) `இலர் என்றெண்ணி யாரையும் எள்ளன்மின்` என்றும்,
5.கூடாவொழுக்கம்
`பிறர் பெண்ணொடு நண்ணன்மின்`என்று குறளின் ,`பிறனில் விழையாமை` பற்றியும் பேசுகிறது
ஏழே ஏழு சீர்களில் பெரும் கருத்துகளைச் சொல்லும் குறள்.வளையாபதியோ நான்கே நான்கு வரிகளில் ஐம்பதிற்கும் அதிகமான குறள்களைப் பொதிந்து வைத்துள்ளது.
6.நற்குருவைத் தேடல்.
.அந்தகன் அந்தகற்கு ஆறுசொலல் ஒக்கும்
முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும்
நன்கறிவு இலான் அஃதறி யாதவற்கு
இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே.(49)
இப்பாடல்,வினைகளைக் களைந்து வீடுபேறு அடைய
விழைபவர்க்கு,அதனைப் பற்றிய அறிவு இல்லாதவன்
வழி காட்டுவது குருடன் குருடனுக்கு வழி காட்டுவது போன்றதாம் என்கிறது.
இஃது திருமூலரின்,
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.(திருமந்திரம்-1680)
(அறியாமையைப் போக்கவல்ல ஞானியைக் குருவாகக்
கொள்ளாமல் ,ஞானமற்றவரைக் குருவாகக் கொள்வர் ஏனெனில் அறியாமையும் அறியாமையும் சேர்ந்து அறிவற்ற செயல்கள் செய்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுப்பதற்காக. எனும் பாடலோடு ஒப்பு நோக்கத் தக்கது.
மேலும்,
யானை ஒன்றினைக் காணச் சென்ற குருடர்கள்
அவரவர் தொட்டவரை உணர்ந்து முறம் போன்றது என்றும்,உலக்கை போன்றது என்றும், தூண் போன்றது
என்றும் கூறினர் என்ற கதையையும் நினைவூட்டும்.
7.பயனற்றவை
.பொருளில் குலனும் பொறைமைஇல் நோன்பும்
அருளில் அறனும் அமைச்சுஇல் அரசும்
இருளினுள் இட்ட இருண்மையிது என்றே
மருளில் புலவர் மனம் கொண்டு உரைப்ப (67)
இப்பாடல் செல்வமில்லாதவரின் குலப்பெருமையும்,அடக்கமில்லாதவன் செய்யும் தவமும்,அன்பிலாதவன்(எதன் பொருட்டோ) செய்யும் அறமும்,அமைச்சரிலாத அரசனின் ஆட்சியும் இருட்டில் கண்ணுக்குத் தீட்டிய மை போன்றது என்பர் குற்றமற்ற சான்றோர் என்கிறது.
இதனை
பொருளில் குலன்;
(வறுமை-பசி)சீத்தலைச்சாத்தனாரின்,
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉ
நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
பசிப்பிணி என்னும் பாவி.(மணிமேகலை-19(76-80)-).,
வறுமை தரும் பசி நோயானது,குலப்பெருமை,பெற்ற மேன்மை,கற்ற கல்வி,
நாணம்,சிறந்த அழகு(உடல்,உள்ளம்) முதலிய அனைத்தும்
அழித்துவிடும்.) எனும் பாடலும்
ஔவையின்;
மானங் குலம்கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம்உயற்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.(நல்வழி-26)
(இதன் பொருளாவது மானம், குலப்பெருமை,கற்றகல்வி,
ஈகை,அறிவு,அறம்,தவம்,மேன்மை,முயற்சி,காதல் எனும்
பத்தும் பசியால் துறக்க நேரிடும்) எனும் பாடலும் உறுதி செய்யும்.
இவ்வாறு வாழ்வியல் சிந்தனைகளை அழகுற எடுத்துக் காட்டுகிறது வளையாபதி.
- ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்
- வழி
- படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ‘ மீன்களைத் தின்ற ஆறு’
- புதிய நியதி : பெரு வெடிப்பு நிகழவில்லை ! அதற்கு முன்பே, பிரபஞ்சம் உருவாக மூலத்தோற்றக் காரணிகள் இருந்துள்ளன.
- வளையாபதியில் வாழ்வியல் .
- வெள்ளாங் குருகுப் பத்து
- தொடுவானம் 201. நல்ல செய்தி
- எஸ்.எல்.இ. நோய்
- உன்னை ஊடுருவி நோக்குகிறேன்! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’