தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 ஜனவரி 2020

குறிப்புகள் அற்ற குறியீடுகள்!

Spread the love

இல.பிரகாசம்

இவைகளை இப்படியெல்லாம் குறிப்பெழுதலாம்
ஒரு தூண்டில் என்றும்
ஒரு கெண்டை என்றும்
ஒரு மறைந்து போன குளத்திற்கு
வருணனையாக இப்படியெல்லாம் குறியீடுகளைக் குறிக்கலாம்

ஒவ்வொரு தெருவிற்கும்
ஒவ்வொரு தொழிலோடு தொடர்புடைய குறியீடுகளை
‘அது அவர்கள் வசிக்கும் தெரு” வென்று
பலவித சைகை மொழிகளோடு குறிப்புகளை வரையலாம்

அவர்களைப் பற்றிய(பெண்களாக இருக்கக் கூடும்) குறிப்புகளை
உடற்குறிகளிட்டு
அதிக சிவந்தெழத்தக்க கோபங்களின் போது
மற்றவர்களை முன்னொட்டு அல்லது பின்னொட்டுகளாக
அழைக்கிறபோது
அவர்களது சுயமொன்று தோன்றலாம்

அவள்
நேற்று மாலைக்குப் பின்
என்னவானாள் என்ற பேச்சுகளுக்குப்பின்
ஏற்பட்ட சந்தேகக் குறியீடுகள்
யானையைப் போல
பெரும்பெரும் பூதங்கள் கிளர்ந்தெழுவதும்
பெருங் கதையொன்றுக்கு களமாகின்றன.

குறியீடுகள்
பார்வையின் குரூர மொழியின்
இயல்புகளை பிரதிபலிக்கத் தவறவிடுவதில்லை.

மீண்டும்
ஒரு தூண்டில்
ஒரு கெண்டை
இப்போது
மறைந்து போன ஒரு குளத்தின் கரையோரத்தில்
இலைகளை உதிர்க்கக் காத்திருக்கும் அசோக மரநிழலில்
அமைதி காத்து நிற்கும்
ஏதோவொரு சிறு பறவையின் இறகு
ஏதோவொரு சிறு நிகழ்விற்கு குறியீடாகலாம்.

-இல.பிரகாசம்

Series Navigationஓடிப் போய்விடு உயிருடன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்சிறுவெண் காக்கைப் பத்து

Leave a Comment

Archives