ஜெயஸ்ரீ சாரநாதன்
தமிழை ஆண்டாள் என்னும் ‘ஆய்வுக் கட்டுரையை’ மூன்று மாத ஆராய்ச்சிக்குப் பின், ஆசைப்பட்டு எழுதினார் கவிப் பேரரசு வைரமுத்து. அவர் செய்த ‘ஆராய்ச்சியின்’ அழகை முந்தின கட்டுரையில் கண்டோம். ஆண்டாள் தமிழைப் பற்றிப் பேசும் அவரது அற்புதத் தமிழை இந்தக் கட்டுரையில் காணலாம். தமிழை ஆற்றுப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்ளும் கவிப் பேரரசுவைரமுத்து அவர்கள் தமிழை எவ்வாறு ஆண்டார்? தமிழை எந்த அளவு அறிந்திருந்தார் என்பதை அறிய விரும்புபவர்கள் இந்தக் கட்டுரையைக் கட்டாயம் படிக்க வேண்டும்..
கதையெழுத அவருக்குச் சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. பல காலம் தமிழில் தொழில் செய்து வந்தவர். அது தீட்டிய திறமையை வெளிப்படுத்தும் வண்ணம் ஒரு நல்ல பின்னணியுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.
மாதமோ மார்கழி. காலமோ அதிகாலை. இங்கு ஆண்டாள் ‘அமிலச் சோதனை’செய்கிறாள். அதாவது நெடுங்குளிரில் நீராடுவதால், உடல் வெப்பத்துக்கும், மனத் திட்பத்துக்கும் ஏற்படும் சோதனை இது என்கிறார். நீராடினவர்கள் சறுக்கினார்களோ இல்லையோ, இங்குதான் வைரமுத்துவின் முதல் சறுக்கலைப் பார்க்கிறோம்.
சறுக்கல்:1. அமிலச் சோதனை
‘அமிலச் சோதனையை’ ஆண்டாளா செய்தாள்? அல்லது அவள்தான் அதைக் கண்டு பிடித்தாளா? வைரமுத்து கூறும் அமிலச் சோதனை, பெண்பால் பிள்ளைத் தமிழில் இருக்கிறதே? அது எப்படி?
பெண்பால் பிள்ளைத் தமிழில் பாவைப் படலம் என்பது ஒரு காலக் கட்டமாகும். இது ஐந்து முதல் ஒன்பது வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்செய்வது. இதைக் கூறும் பிங்கல நிகண்டு (1369),
“பனி நீர் தோய்தலும், பாவையாடலும்‘
என்று சொல்கிறதே, இந்த அமிலச் சோதனையை ஐந்து வயது முதற்கொண்டே பழந்தமிழ்க் குழந்தைகள் செய்திருக்கிறார்களே? அதை வைரமுத்து அறியவில்லையா? அறிந்திருந்தால் அத்தனைச் சிறிய வயதுக் குழந்தைகளை சில்லிடும் பனி நீரில் குளிக்க விட்டிருக்கிறார்களே – இது என்ன அநியாயம் என்று சமூகக் கேள்வி கேட்டிருக்கலாமே?
இது போகட்டும், பாவை நோன்புக்குச் சிகரமாக ஒரு சங்கப் பாடல் இருக்கிறதே, அதையாவது வைரமுத்து அறிவாரா?
ஆசிரியர் நல்லந்துவனார் பாடிய அப்பாடலில்
‘அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர்‘
– அதாவது தம் தாயினை ஒட்டி நின்று நீராடக்கூடிய சிறு பருவத்தவரான பெண்கள்,
‘பனி புலர்பு ஆடி‘
– அதாவது பனியையுடைய வைகறைப் பொழுதிலே நீராடி – அதிலும், ஓடும் வையை ஆற்றில் நீராடி, அந்த ஆற்றிலிருந்து அடிக்கும் ஊதக் காற்றில் நின்று கொண்டிருப்பார்களாம். (பரிபாடல் 11).
அமிலச் சோதனையை அன்றே ஆரம்பித்து விட்டார்களே! என்னவோ ஆண்டாள் புதிதாகக் கண்டுபிடித்தது போல வைரமுத்து கூறுகிறாரே?
இந்தப் பாடலையும் வைரமுத்து அறிந்து கொள்ளாமல் போய் விட்டாரே என்று வருத்தமாக இருக்கிறது. இந்தப் பாடலில் எத்தனை சமூகக் கேள்விகளுக்கு வாய்ப்பிருக்கிறது தெரியுமா?
இந்தப் பாடலில், பனி பிரியாத வைகறைப் பொழுதில் ஆற்றங்கரையில் அந்தணர்கள் ஹோமம் வளர்த்த செய்தி சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமா, நடுங்கும் குளிரில் சிறுமிகள் தங்கள் தாய்மார்களுடன் ஆற்றில் குளிக்க வேண்டும். குளித்த பிறகு ஈர உடையுடன் அப்படியே இந்த ஹோமத் தீயை வலம் வர வேண்டும். அதன் வெப்பத்தில் இவர்கள் உடுத்தின துணியும் காய்ந்து விடும். எப்படிப்பட்ட அமிலச் சோதனை செய்திருக்கிறார்கள்?
இதைச் செய்யத் தூண்டியவர்கள் அந்தணர்கள் போலல்லவா இருக்கிறது?
மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட இந்தச் சோதனையைச் செய்தவர்கள் பார்ப்பனர்களா என்ற சமூகக் கேள்வியை ஆராய்ச்சியாளர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல, வைரமுத்து தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.
இனி வருகிறது அடுத்த சறுக்கல்.
சறுக்கல்:2 காத்யாயனி – பாவை நோன்பின் தொன்மை அறியாமை
வைரமுத்து சொல்கிறார், “பாவை நோன்பு என்பது சடங்கு. கண்ணன் என்பதொரு காரணம்”.
வைரமுத்துவின் இந்தக் கருத்து பிள்ளைத் தமிழ் இலக்கணத்திலோ, அல்லது நல்லந்துவனார் பாடலிலோ காணப்படவில்லையே? எந்த அடிப்படையில் இவ்வாறு எழுதி இருக்கிறார்?
இதையடுத்து இன்னொன்றும் சொல்கிறார்:
இதைப் படித்தவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன், ஸ்ரீமத் பாகவதத்தைக் கூட ஆராய்ந்திருக்கிறார் போல இருக்கிறதே. ஸ்ரீமத் பாகவதத்தில்தான் காத்யாயனி (கார்த்தியாயினி அல்ல) நோன்பு சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஆண்டாள் செய்த நோன்புடன் ஒப்பீடு செய்கிறார். அதுவும் எப்படி? கண்ணனே கணவனாக வேண்டும் என்று செய்வது காத்யாயனி நோன்பு; நல்ல கணவன் அமைய வேண்டும் என்று நோற்பது ‘மட்டுமே’ ஆண்டாள் – அதாவது திருப்பாவை நோன்பாம்.
நானும் திருப்பாவையைத் தேடித் தேடிப் பார்த்து விட்டேன், கணவனை அடைய வேண்டியே நோன்பு இருந்தார்கள் என்று திருப்பாவையில் எந்த இடத்திலேயும் சொல்லப்படவில்லையே? பறையைச் சுற்றித்தானே ஆண்டாளது திருப்பாவைப் பாடல்கள் இருக்கின்றன? பறையை எடுத்துக் கொண்டு போனார்கள். ‘நாராயணனே நமக்கே பறை தருவான்‘ என்று சொன்னார்கள். அதற்கு மாறாக ‘இறைவா நீ தாராய் பறை‘ என்றார்கள்.‘இற்றைப் பறை கொள்வான்‘ என்றார்கள். உடனேயே ‘அன்று காண்‘ என்று சொன்னார்கள். கடைசியில் ‘அங்கப் பறை கொண்டவாற்றைப்‘ பற்றி சங்கத் தமிழில் பாடினேன் என்றுதானே ஆண்டாள் சொல்லியிருக்கிறாள்?
வைரமுத்து ஆராய்ந்துதானே எழுதியிருக்கிறார்? அவர் ஆராய்ந்து கண்டுபிடித்த’கணவன்’ விஷயத்தை விளக்கினால் உபயோகமாக இருக்கும்.
இனி அவர் அறிந்த தமிழுக்கு வருவோம்.
காத்யாயனியைக் குறித்த – காத்யாயனிக்கும் கண்ணனுக்கும் உள்ள தொடர்ப்பைப் பற்றி சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் இருக்கின்றனவே, தமிழை ஆற்றுப்படுத்த விரும்பும் வைரமுத்து அவற்றை எப்படி அறியாமல் போனார் ?
அதைக் குறிப்புகளை இங்கு கொடுக்கிறேன்:
காத்யாயனிக்கும், குமரிக்கும் தொடர்பு உண்டு என்று சொல்லும் மந்திரம் இருக்கிறது. அதாவது காத்யாயனி வழிபாடு முதலில் வரும். அவள் மூலம் கன்யகுமரியை வழிபட முடியும். அந்தக் கன்யகுமாரி இருப்பது தமிழ் நாட்டில்!
அந்தக் குமரி எப்படிப்பட்டவள் என்பதை சிலப்பதிகாரத்தில் காண்கிறோம்.
வேட்டுவ வரியில் ஒரு சிறு பெண்ணை ‘குமரி’ என்னும் தெய்வமாக அலங்கரிக்கிறார்கள். அவள் நெற்றியில் சிவனது மூன்றாவது கண்ணை எழுதுகிறார்கள். அவள் கையில் கொடுக்கும் பல பொருட்களுள் பாவையும், கிளியும் உள்ளன. அவளைப் போற்றும் பெயர்கள் ஒன்பது. அவை அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மாலவற்கு இளங்கிளை, ஐயை, செய்யவள். இவற்றுள்மாலுக்கு இளங்கிளை என்றால் திருமாலுக்கு இளையவள் என்று பொருள். இவள் தாங்கிய ஆயுதங்களுள், திருமாலாது சங்கு, சக்கரமும் உண்டு என்பதை சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.
இவள் கலைமானின் மேல் இருப்பவள். மகிடன் என்னும் எருமை அசுரனது தலையைக் கொய்தவள் என்று சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. ஆகவே இவளேமகிஷாசுர மர்த்தினி என்னும் தெய்வம் என்று தெரிகிறது.
அது மட்டுமல்ல, இவள்
“அரியரன் பூ மேலோன் அகமலர் மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காக்கியே நிற்பாய்”
என்றும் சிலப்பதிகாரம் சொல்கிறது.
இதன் பொருள் ‘விஷ்ணு, சிவன், பிரம்மா’ ஆகிய மும்மூர்த்திகளது உள்ளத்தில் சோதியாக வீற்றிருக்கிறாள். இதே கருத்து சிவபெருமானால் அருளப்பட்டதாகச் சொல்லப்படும் ‘தேவ்யுவாச’ என்று தொடங்கும் லட்சுமியைக் குறித்த சமஸ்க்ருத ஸ்தோத்திரத்தில் ‘நவதுர்காம் மஹா காளீம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மிகாம்‘ என்று காணப்படுகிறது.
இப்படிப்பட்ட தொடர்புகளைக் காட்டும் சிலப்பதிகார வேட்டுவவரி,
‘மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச
உருளும் சகடம் உதைத்தருள் செய்குவாய்’
என்று குமரியைப் பற்றிச் சொல்லி முடிக்கிறது.
இதன் பொருள், ‘இரு மருத மரங்களின் இடையே நடந்து அவற்றைச் சாய்த்து, நின் மாமனாகிய கஞ்சன் செய்த வஞ்சத்தால் தோன்றிய உருண்டு வரும் சகடத்தை உதைத்தருளினாய்”
யாருடைய மாமன் கஞ்சன் (கம்சன்)?
மருத மரங்களுக்கிடையே ஊர்ந்தது யார்?
சகடத்தை உதைத்தது யார்?
இவையெல்லாம் கண்ணனைக் குறித்த செய்திகள்.
ஆனால் இவற்றைக் குமரி, அதாவது, மகிஷாசுர மர்த்தினி, அதாவது திருமாலின் தங்கை செய்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. அது எப்படி என்று வைரமுத்து ஆராய்ந்தாரா?
சிலப்பதிகாரத்தில் இவளுக்கு ஒன்பது பெயர்கள். இவளே நவதுர்கா என்னும் ஒன்பது துர்க்கைகளாக இன்றும் வழிபடப்படுகிறாள்.
நவதுர்கைகளில் ஒருத்திதான் காத்யாயனி!
காத்யாயனியை வழிபாட்டு, கண்ணனைக் கணவனாக அடைய விரும்பி யமுனைக் கரையில் மார்கழி மாதத்தில் நோன்பிருந்தனர் என்று சொல்லியிருக்கவே, காத்யாயனி என்பவள், சிலப்பதிகாரம் கூறும் மாலுக்கு இளங்கிளை எனப்பட்ட தங்கையாக இருக்க வேண்டும். தங்கையிடம் விண்ணப்பித்து, அவளது அண்ணனான திருமாலின் அவதாரமான கண்ணனை மணக்க விரும்பினர் ஆயர் குலப் பெண்கள்.
இனி என்னுடைய கேள்விகள்:
பாவை நோன்பாகட்டும், காத்யாயனி நோன்பாகட்டும், அவற்றின் மூலத்தையும், காரணத்தையும் பண்டைத் தமிழ் நூல்கள்தானே தமக்குள் பாதுகாத்து வைத்திருக்கின்றன. வைரமுத்து அவற்றை ஏன் அறிந்திருக்கவில்லை?
ஆண்டாள் ஆராய்ச்சியும், அவள் செய்த பாவை நோன்பு ஆராய்ச்சியும் செய்தேன் என்று சொல்லிக் கொள்கிறவர் குறைந்த பட்சம் இந்த செய்திகளையாவது சேகரித்திருக்க வேண்டுமே?
பாவை நோன்பு என்பது சடங்கு, அதற்குக் கண்ணன் ஓர் காரணம் என்றுசொல்கிறாரே,
அதன் ஆரம்பம், முதல் சங்கத்தைத் தொடங்கின சிவபெருமானால் ‘குமரி’ தீர்த்தத்தை ஆரம்பித்து வைத்த காலத்திலேயே உண்டானது என்று தமிழ் அறிந்த வைரமுத்துவுக்குத் தெரியவில்லையா?
அந்தச் செய்தி திருவிளையாடல் புராணத்தில் வருகிறதல்லவா?
பாவம், வைரமுத்து ஏன் புராணங்களைப் படிக்கப்போகிறார் – அவை தமிழ் மொழிக்கே உரியன என்றாலும்?
அது மட்டுமா, சிலப்பதிகார வேட்டுவவரியில் சொல்லப்படும் குமரித் தெய்வத்தைக் கூட இவர் அறிந்திருக்கவில்லையே! அவளே மகிஷாசுர மர்த்தினி என்று சிலப்பதிகாரம் சொல்லியிருக்க, அவளை வந்தேறி தெய்வமாகப் பார்த்த மக்கள்தானே இவருக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார்கள்?
ஒன்பது பெயர் கொண்ட அவளை முன்னிட்டுத் தானே இன்றும் நவராத்திரிப் பண்டிகை தமிழ் நாட்டில் கொண்டாடப்படுகிறது?
ஆனால் அது பார்ப்பனப் பண்டிகையாகப் பார்க்கப்படுகிறது. வேட்டுவவரி குமரியின் ஒன்பது உருவகங்களை பார்ப்பனர்கள்தான் இன்று வரை காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதைத் தமிழர் பண்டிகையாக ஆக்க வேண்டாமா என்று நாம் ஒரு சமூகக் கேள்வியை வைக்கிறோம்.
வேட்டுவ வரிக் குமரி மகிடனை வதம் செய்த நாளில்தான் அவள் ஆயுதத்தைக் கொண்டாடும் விதமாக ஆயுத பூஜை செய்கிறோம்? ஆனால் அது வந்தேறி பூஜை.
இவர்கள் அறிந்த தமிழால், அதாவது இவர்கள் தமிழை அறியாததால், வேட்டுவவரிக் குமரி இன்று நேபாள நாட்டுக்குப் போய் விட்டாள்.
அவளை பூஜிப்பது மேற்கு வங்கத்துக்குப் போய் விட்டது.
இங்கு என்ன இருக்கிறது?
எட்டாம் நூற்றாண்டில் கூட இங்கு இந்து மதம் இல்லை என்று சொல்லும் கூட்டம் தான் இருக்கிறது. அந்தக் கூட்டம்தான் வைரமுத்துவின் ஆண்டாள் தமிழுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சறுக்கல் 3 வைணவத்தின் வளர்ச்சி எப்பொழுது?
அடுத்து அவர் சொல்வது:
வைணவம் திருப்பாவை காலத்தில்தான் வளர்ச்சி பெற்றது என்கிறாரே? அப்படியென்றால் பரிபாடல் தொகுப்பில் உள்ள திருமால் பாடல்கள் பாடப்பட்ட காலத்தில் வைணவம் இல்லையா? அல்லது வளர்ச்சி பெறவில்லையா?வைரமுத்து அப்பாடல்களைப் படித்ததே இல்லையோ?
குறிப்பாக ஒரு பாடலைச் சுட்டிக் காட்டுகிறேன்.
பரிபாடல் திரட்டில் இருந்தையூர் என்னும் பதியில், வீற்றிருந்த கோலத்தில் திருமால் இருப்பதாகப் பாடல் ஒன்று உள்ளது. இந்தப் பாடலைக் கொண்டு இதில் சொல்லப்படும் பெருமான், இன்றைக்குக் கூடலழகர் என்று அழைக்கப்படும் திருமால் என்று தெரிகிறது. அவர் வீற்றிருந்த கோலத்தில் இருக்கவே அவர் குடி கொண்ட ஊருக்கும் ‘இருந்தையூர்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
2-ஆம் சங்கத்தில் இருந்தையூர் குருங்கோழி என்ற புலவர் இருந்திருக்கிறார் என்று இறையனார் அகப்பொருள் உரை தெரிவிக்கிறது. இதனால் இருந்தையூர் என்னும் ஊர் 2-ஆம் சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. இருந்தையூர் பாடலில், திருமாலை தரிசிக்கப் பலதரப்பட்ட மக்களும் கூட்டம் கூட்டமாக வந்தனர் என்றும் எழுதப்பட்டுள்ளது.
2-ஆம் சங்க காலத்திலேயே அங்கு வைணவம் தழைத்து இருந்திருக்கின்றது என்பதற்கு இந்தப் பாடல் சாட்சியாக இருக்கிறதே, வைரமுத்து இதை அறிந்து கொள்ளாமல் எப்படி தமிழ் – வைணவ ஆராய்ச்சி செய்தார்?
பின்னாளில் இதே பதியில்தான் பெரியாழ்வார் பாண்டியனுக்கு, பரதத்வ நிர்ணயம் செய்தார். அந்தப் பதியின் திருமால் (இருந்தையூர் பெருமான்)அவருக்குப் ப்ரத்யக்ஷமானார். 2- ஆம் சங்க காலத்திலிருந்தே வைணவம் தழைத்த இடம் அது. என்னவோ புதிதாக அவர் காலத்தில் (ஆண்டாள் காலத்தில்) வைணவம் தழைத்தது போல வைரமுத்து பேசுகிறாரே? இதுதான் அவர் சங்கப் பாடல்களை அறிந்த லட்சணமா?
சறுக்கல் 4: இறையோடு இழைந்த வாழ்வு பிற்காலத்திலாம்
இதைப் படித்தவுடன், சீரியஸாகத்தான் பேசுகிறாரா, அல்லது ஏதேனும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கட்டுரையைப் படித்து விட்டு பேசுகிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது. எதை படித்தாரோ இல்லையோ, மணிமேகலையைப் படிக்கவில்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.
மேலே எடுத்துக்காட்டிய இருந்தையூர் திருமால், இரண்டாம் சங்க காலத்திலேயே தமிழர் வாழ்க்கையில் இறை இழைந்து இருந்த தன்மையைக் காட்டுகிறது.
சங்க காலம் முடிந்த பின்னும், மணிமேகலை காலத்தில் இறை பக்தி தொடர்ந்திருக்கின்றது என்பதற்கு ‘சமயக் கணக்கர் தந்திறங் கேட்ட காதை’சான்றாக இருக்கிறது. அப்பொழுது தழைத்திருந்த வேத, ப்ரம்ம, சாங்கிய, வைசேடிக, சைவ, வைணவ மற்றும் ‘அளவை’ (ஜைமினி, வியாசர் அருளியவை) மார்க்கங்களை அறிந்து கொள்ளாமல் இப்படி ஒரு கருத்தை வைக்கிறாரே வைரமுத்து, அவர் தமிழ் அறிவு புல்லரிக்க வைக்கிறது.
சறுக்கல் 5: மனிதர்கள் இல்லாத மதமா வைதிக மதம்?
மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை என்ற ‘மெய்ஞானம்’ வைதிக மதத்துக்கு வந்தது என்கிறார் வைரமுத்து. எந்த ஆராய்ச்சியில் இதைக் கண்டுபிடித்தார்?
மனிதர்களைத் தேடித் தேடி ‘ஆன்மாவை அறுவடை’ செய்யும் மதம் இன்றும் நம் நாட்டு மக்களை வலை வீசி இழுத்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். கத்தி முனையில் நம் மக்களை மாற்றிய இன்னொரு மதம், குட்டி போட்டுப் பெருக்கிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் துப்பாக்கி முனையில் உலகையே ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பதை உலகமே ஒத்துக் கொள்ளும்.
இவைதான் இவர் சொல்லும் கடவுள் இல்லாத மதங்கள். கடவுள் யார் என்று அடையாளம் காட்டாத மதங்கள். வைரமுத்துவின் பேச்சில் உள்ள அபத்தம் என்னவென்றால், கடவுளில்லாத இந்த மதங்கள், அன்றைக்கு – அதாவது அவர் சொல்லும் காலத்தில் இந்தியாவிலேயே காலூன்றவில்லை. அப்படியென்றால் இன்றைக்கு ஏன் இப்படி எழுதுகிறார் வைரமுத்து?
அவரே பதில் சொல்லட்டும்.
உண்மை இவ்வாறிருக்க மனிதர்களை இழுக்க வைதிக மதம் முயன்றது என்று வைரமுத்து கூறுகிறாரே, எப்படி? ஏன்? ஏதாவது ஒரு சான்றை வைரமுத்து கொடுக்கட்டுமே?
மேலும் அவர், சமண -புத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பின் மக்களை இழுக்கும் பணி நடந்தது என்கிறார்.
சமண -பௌத்த மதங்கள் வருவதற்கு முன்பே எல்லா மக்களும் வைதிக மதத்தை ஒட்டி வாழ்ந்தனர் என்பதற்கு சங்கப்பாடல்கள் அனைத்துமே சாட்சியாக இருக்கின்றனவே? அவற்றை வைரமுத்து அறியவில்லையா?
அறியவில்லை போலிருக்கிறது! கொஞ்சம் எடுத்துக் கொடுக்கிறேன்.
பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப் படையையாவது படித்து விட்டு ‘மெய்ஞானம்’ பற்றி வைரமுத்து பேசட்டும்.
சறுக்கல் 6: முக்தி எனபது ‘புதிய சலுகை’யாம்
மனிதர்கள் இல்லாமல் மதமா – என்று வைதிக மதம் இறங்கி வந்தது என்று வைரமுத்து கண்டு பிடித்தாரல்லவா, மனிதர்களைப் பிடிக்க என்ன யுக்தியை வைதிக மதம் கண்டுபிடித்தது என்று இங்கே கூறுகிறார். ஒரு ‘புதிய சலுகை’யைக் கொடுத்ததாம் வைதிக மதம்.
அதென்ன புதிய சலுகை?
அது ‘முக்தி’ !!!
முக்தி என்பது புதிய சலுகையா?
திருக்குறளை மறந்து விட்டாரா வைரமுத்து?
திருக்குறள் முதல் அதிகாரம் முக்தியைப் பற்றித்தானே சொல்கின்றது?
கடவுளின் குணங்கள் ஆறு. அதனால் தான் அவன் ‘பகவன்’ என்று அழைக்கப்படுகிறான். அந்த பகவானை முன்னிட்டு இருக்கும் இந்த உலகத்தில் – என்று முதல் குறளில் ஆரம்பிக்கும் திருவள்ளுவர், 10-ஆவது குறளில் அவனது அடியை சரணடைந்தால்தான், பிறவிக் கடலைக் கடக்க முடியும் – அதாவது முக்தி பெற முடியும் என்று சொல்லி விட்டாரே. சமூகத்தில் வேரூன்றி இருந்தால்தான் இப்படிப்பட்ட கருத்தைத் திருவள்ளுவர் கூறியிருக்க முடியும். இதுகூட தெரியவில்லையா வைரமுத்துவுக்கு ?
இது புதிய சலுகை இல்லை, இதுதான் வைதிக மதத்தின் கொள்கையே.
சறுக்கல் 7: சாதிப் பேச்சு
வர்க்க பேதம்- சாதிய அடுக்குகள் என்று கூறுகிறாரே, தொல்காப்பியம், புறத்திணை இயல் 74-இல். ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்று ஆரம்பித்து ஏழு வகையான பிரிவுகளைத் தொல்காப்பியர் கொடுத்துள்ளாரே, அதற்கு வைரமுத்து என்ன சொல்கிறார்?
எந்த மதம் கெட்டிப்படுத்தியது என்று தொல்காப்பியர் அவற்றைக் கொடுத்துள்ளார்?
அவை என்றென்றும் இருந்தன, எல்லாரது அங்கீகாரத்துடனும் இருந்தன என்று பொருள் கொள்ளும் வகையில் ‘என்மனார் புலவர்’ என்கிறாரே தொல்காப்பியர், அறிவில்லாமலா அவர்கள் அவ்வாறு செய்தார்கள்?
தொல்காப்பியர் சொன்னதை ஆராய்ந்துவிட்டு வைரமுத்து பதில் சொல்லட்டும்.
அடுத்து தொண்டரடிப் பொடியாழ்வாரை மேற்கோளிடுகிறார். இறைவன் முன் அனைவரும் சமம் என்னும் ‘குறுகிய பரவசம்’ அவர்களைக் கூட்டுவித்தது என்று சொல்கிறார் வைரமுத்து.
இறைவன் முன் அனைவரும் சமம் என்று சொல்லவில்லை.
இறைவனைத் தொழுவதால் அனைவரும் சமம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இறைவனுக்கு முன் ஏன் அனைவரும் சமமில்லை? அதற்கு விடை, திருக்குறள்’ஊழ்‘ அதிகாரத்தில் உள்ளது. ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று கேட்கிறார் திருவள்ளுவர். ஒருவர் செய்த ஊழ்வினையே வலிமையானது. அதைத் தகர்க்க அந்த ஊழாலேயே முடியாது என்கிறார் . இதன் காரணாமாக அனைவரும் சமமில்லாமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது.
அதைத் தகர்க்க வழி சொல்வது வைதிக மதம், அந்த மதக் கருத்தை உள்ளுணர்ந்தவர்கள் ஆழ்வார்கள். அந்த வகையில் ஆழ்வார் சொல்கிறார்,இறைவனைத் தொழுங்கள். உங்கள் ஊழ்வினை அழியும், அதன் காரணமாக அனைவரும் சமம்.
இதே கருத்து பத்துப்பாடலின் மதுரைக் காஞ்சியில் ‘கழுநீர் கொண்ட ‘ என்று தொடங்கும் வரிகளில் இருப்பதை வைரமுத்து அறியவில்லையே?அவருடைய ‘விரிந்த பரவசத்தில்’ அவற்றைப் படிக்காமல் இருந்து விட்டாரா?
ஆழவார்ப் பாடல்களைத்தான் புரிந்து கொள்ளவில்லை, சங்கப் பாடல்களையாவது நன்கு தெரிந்து கொண்டிருக்கலாமே?
சறுக்கல் 8: கடவுளும், தெய்வமும்
கடவுள் – தெய்வம் என்பவற்றின் வேறுபாட்டினைச் சொல்கிறார் வைரமுத்து.
கடவுள் என்றால் யார்? உள்ளிலிருந்து கடவுபவன் – கடவுள். நம் மனதின் உள்ளிலிருந்து நம்மைச் செலுத்துபவன் என்று பொருள். கடவு என்றால் வழி. கடவுதல் என்றால் செலுத்துதல், வழிபடுத்துதல் என்று பொருள். அவன் உள்ளிலிருந்து கடவுவதால் அவன் கடவுள். வைதிக மதத்தில் அதற்கு ஒரு பெயர் உண்டு. அது ‘அந்தர்யாமி’! எங்கும் இருக்கும் இறைவன் ஒவ்வொருவரது உள்ளத்திலும் இருந்து கொண்டு அவரவரை இயக்குகிறான்.
தெய்வம் என்பவன் யார்?
தெய்வம் என்னும் சொல், ‘திவ்’ என்னும் வடசொல் மூலத்திலிருந்து வந்தது.’திவ்’ என்றால் ஒளி என்று அர்த்தம். திவ் என்னும் சொல்லிலிருந்து தேவ்,தேவன் என்னும் சொற்கள் வந்தன. தேவன் என்றால் ஒளியுடையவன், ஒளி வீசிக் கொண்டிருப்பவன் என்று பொருள். தேவன் என்பதே தெய்வம் என்று தமிழில் மருவி வந்திருக்கிறது.
கடவுள் என்பதற்கும் தெய்வம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளதா என்று கேட்டால் ஆம். இவை இரண்டின் அர்த்தத்திலேயே நாம் அந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளலாம்.
அதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். நம்மைச் சுற்றி வெளியே எங்கும் காற்று இருக்கிறது. காற்று இல்லாமல் உலகம் இல்லை. அதை தெய்வத்துடன் ஒப்பிடலாம். அதே காற்று நம்முள் இருந்தால்தான் நாம் உயிருடன் இருப்போம். அதைக் கடவுளுடன் ஒப்பிடலாம். ஆக இரண்டு காற்றும் ஒன்றுதான். ஆனால் அதனுடன் நமக்கிருக்கும் தொடர்ப்பைப் பொறுத்துதான் அவற்றை வேறு வேறாகப் பார்க்கிறோம். நம்முள் இருப்பவன் கடவுள். எங்கும் இருப்பவன் தெய்வம்.
எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும் முன் கடவுளைத் தியானம் செய்து, இந்த செயல் நன்கு நடைபெற உதவு, என்று கேட்டுக் கொள்கிறோம். அது நம்முள் இருக்கும் கடவுள், நம்மைச் சரியாக வழி நடத்த வேண்டிச் செய்யும் விண்ணப்பம். புலவர்கள் அதன் காரணமாகவே கடவுள் வாழ்த்தைச் சொல்லியே தங்கள் படைப்பைத் துவங்குவார்கள்.
கடவுள் வாழ்த்துச் செய்யுளில், தான் வணங்கும் கடவுளை பூட்டி வைக்கும் வழக்கம் பழந்தமிழ் மரபில் இருந்திருக்கிறது. கடவுள் வாழ்த்தின் முதல் செய்யுளின் முதல் சொல்லின் முதல் சீரில் தானப் பொருத்தம், நக்ஷத்திரப் பொருத்தம் பார்த்து, தான் வணங்கும் கடவுள் அல்லது பாட்டுடைத்தலைவனது பெயரின் முதல் எழுத்தை வைப்பர் என்று சூடாமணி நிகண்டு (12-31 & 102) கூறுகிறது. இதன் படி திருவள்ளுவர் தியானித்த கடவுளின் பெயரை அறிய முடியும். (இங்கே காண்க)
எந்த அடிப்படையும் இல்லாமல், மனம் போன போக்கில் கடவுளுக்கும், தெய்வத்துக்கும் இலக்கணம் சொல்லுகிற வைரமுத்துவைப் பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது –
இவருக்கு ஏன் இந்த விஷப் பரீட்சை?
சினிமாத் தமிழுடனேயே திருப்தி பட்டுக் கொள்ளலாமே.
சறுக்கல் 9: குதர்க்கமான ‘குல மகள்’ பேச்சு
ஆண்டாளின் பிறப்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறார் வைரமுத்து. இதற்கு நாம் முந்தைய பதிப்பில் பதில் சொல்லியிருக்கிறோம்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது, இதற்கு முன் சாதி பேதம், வர்க்க பேதம் என்று ஆவேசமாகப் பேசியவர், ஆண்டாள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவள் என்ற கேள்வியை வைக்கிறாரே, யாருடைய மனதை சாதி பிடித்து ஆட்டுகிறது? இந்தக் கேள்விக்கும் ஆண்டாள் தமிழை எப்படி ஆண்டாள் என்ற ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?
சறுக்கல் 10: வீட்டுப் பொருள், அத்து மீறினாளாம்.
பெண்ணை வீட்டுப் பொருளாகவும், பூட்டுப் பொருளாகவும் கருதப்பட்ட 8-ஆம் நூற்றாண்டு என்கிறார் வைரமுத்து. அவரது அந்தக் கருத்தையே தினமணி இதழும் முக்கியச் செய்தியாக பெரிய எழுத்தில் வெளியிட்டுள்ளது.
வைரமுத்துவின் கருத்தில் உள்ள முரண்பாட்டை, வைரமுத்துவாவது அல்லது பெரிய எழுத்தில் போடச் செய்த ஆசிரியராவது கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தார்களா?
ஆண்டாள் செய்ததோ பாவை நோன்பு. இருள் பிரியாத அதிகாலைப் பொழுதில் வீட்டை விட்டு வெளியே சென்று, தோழிகளைத் திரட்டி, ஆற்றங்கரைக்குச் சென்று நீராடுகிறாள். அன்றைய பெண்கள் வீட்டுப் பொருளாகவும், பூட்டுப் பொருளாகவும் இருந்திருந்தால், இப்படிச் செல்ல முடியுமா என்று ஏன் வைரமுத்துவும், ஆசிரியரும் நினைத்துப் பார்க்கவில்லை? வைரமுத்து எழுதி இருப்பது சினிமா வசனம் போல இருக்கிறதே தவிர எந்த ஒரு தரவு- சான்றுகளையும் வைத்துக் கொண்டு அவர் எழுதவில்லை. பாவை நோன்பே ஒரு சான்று என்பதும் அவருக்கு புலப்படவில்லை – இவை எதையுமே அவர் உணரவில்லை என்பதே உண்மை.
அடுத்த கேள்வி, ஆண்டாள் எப்படி ஆக்கமுற்றாள்?
சூழ்நிலைதான். அவரவர் வளர்கிற சூழ்நிலையில் பேசப்படும் விஷயங்கள், எண்ணங்கள் ஆகியவையே ஒருவரை உருவாக்கிக்கின்றன. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்னும்போது, பெரியாழ்வார் வீட்டுப் பெண்ணும் பெருமாள் நினைவில்லாமல் எப்படி வளர்வாள்?
அடுத்த அபத்தம், மரபுகளின் மீதான அத்துமீறல்.
அத்துமீறியிருந்தால் ஆண்டாளை ஏன் ஆழ்வாராக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்? அவள் பாடியது அத்து மீறல் என்றால், அவற்றுக்கு ‘வேதமனைத்துக்கும் வித்து’ என்னும் அங்கீகாரத்தை எப்படிக் கொடுத்திருப்பார்கள்?
அவள் மரபுக்குள் பாடவேதான், தான் பாடியதை ‘சங்கத் தமிழ் மாலை’ என்று சொல்லியிருக்கிறாள். அதில் சந்தேகமிருந்தால், அவள் பாடிய சங்கத் தமிழை, அது சங்க-மரபு சார்ந்தது அல்ல என்று பகுதி பகுதியாக வைரமுத்து சுட்டிக் காட்டட்டும். இப்படி இழி சொல்லும், பழி சொல்லும், நாலாந்தர சினிமா வசனமும் பேசி, தன் தரம் இவ்வளவுதான் என்று உலகத்துக்குப் பறை சாற்றிக் கொள்ள வேண்டுமா?
சறுக்கல் 11: எதிர் வினையாகும் ஆண்டாள் விருப்பம்
கற்பனை ஓடுகிறது வைரமுத்துவுக்கு – கல்லாக் கற்பனை! பெரியாழ்வாரைக் கற்காமல் ஆண்டாளைக் கற்க முடியாது. அதனால்தான் அவள் தெய்வத்தையே மணப்பேன் என்றதை பெரியாழ்வாருக்குக் கிடைத்த எதிர் வினை என்கிறார்.
தன் மகள் தெய்வத்தையே மணப்பேன் என்றால் ஆழ்வார்க்கு எத்துணை உவகை பெருகியிருக்கும் தெரியுமா? எப்படி அது நடக்கும் என்பது மட்டும்தான் அவருக்கு கவலை. இன்றுவரை வைணவர்கள் மற்றும், வைதீகத்தைப் பின்பற்றும் பிற பிரிவினரும் தங்கள் மருமகனாக அந்த விஷ்ணுவே வர வேண்டும் என்று விரும்புபவர்கள். வைணவர் வீட்டுத் திருமணத்தில், மருமகனை விஷ்ணுவாக உருவகப்படுத்தித்தான், மணமேடைக்கு அழைத்து பெண்ணைப் பெற்றவர் கால் அலம்பி வரவழைப்பார்.
இன்றைக்கும் அப்படிப்பட்ட பாவனையில் வைணவர்கள் இருக்க, பெரியாழ்வார் காலத்தில் ஆண்டாள் விருப்பம் எப்படி ஒரு எதிர் வினையாக இருந்திருக்க முடியும்?
மேலும் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக்கூட நம்பி, பிம்பி என்றெல்லாம் பெயர் வைக்காதீர்கள், நாரணன் நாமத்தையே வையுங்கள் என்று சொன்னவர் பெரியாழ்வார். அந்தப் பத்து பாசுரங்களில், (பெரியாழ்வார் திருமொழி-4-6-4)
” மானிட சாதியில் தோன்றிற்றோர் மானிட சாதியை,
மானிட சாதியின் பேரிட்டால் மறுமைக்கில்லை‘
என்று பெரியாழ்வார் கூறுகின்றார். மானிடர்களது பெயரைக் கூட குழந்தைகளுக்கு வைக்கக்கூடாது என்கிறார். அப்படியிருக்க ஒரு மானிடனைத் தன் பெண் மணக்க விரும்பாமல் தெய்வத்தையே மணக்க விரும்பினால், அவர் ஊட்டிய முக்திக் கருத்துக்கு ஆண்டாள் காட்டிய முதல் படி அல்லவா அது?
இதையொட்டியே மானிடனுக்கு வாழ்க்கைப் பட மாட்டேன் என்று அவள் சொன்னது அமைந்திருக்கிறது என்று வைரமுத்து சொல்லியிருந்தால் அது ஆராய்ச்சி.
விடுதலைக் குரல் என்பது, முக்திக்கான விடுதலைக் குரல் என்று வைரமுத்து சொல்லியிருந்தால் அது போற்றப்பட வேண்டிய ஆராய்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அவர் சினிமாக் கவிஞர். அவர் சொல்லாடலும் கருத்தாழமும் நிகழ் கால சினிமாவைத் தாண்டி செல்லவேயில்லை என்று தெரிகிறது. அதனை அடுத்த பத்தி அழுத்திச் சொல்கிறது.
சறுக்கல் 12: பொருந்தாச் சொல்
வைரமுத்துவின் சினிமாச் சொல்லாடலைக் கவனித்த்தீர்களா? முந்தி விரித்தாளாம். எந்தச் சொல்லையும் இடம், பொருள், ஏவல் குறித்துச் சொல்லும் பாங்கினைக் கூட அறியாமல், அல்லது அறிந்தும் விரும்பாமல் இவ்வாறு எழுதியிருக்கிறார் என்பது அவர் கையாளும் தமிழ் நயத்தின் தரத்துக்குச்சான்று இல்லாமல் வேறு என்ன?
சறுக்கல் 13: வைரமுத்துவின் இகழ்ச்சிப் பேச்சின் சிகரம்
அடாவடியான வார்த்தைகள் – சொன்னவருக்குக் கவிப்பேரரசு என்னும் பட்டமாம். இவருக்குப் பொருத்தமாக முன்றுறை அரையனார் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.
“ திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்.”
(பழமொழி 376)
கல்லாதவர் பெரியோரை இகழ்ந்து பேசுதல், எருக்கஞ் செடியில் மறைந்து கொண்டு யானை மீது அம்பு விடுவதை ஒக்கும். இதன் கருத்து’அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின்,அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.’
திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்:
“எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்”.
இவர்கள் வாக்கு பொய்யாகுமா?
சறுக்கல் 14: வைரமுத்துவின் கேவலக் கண்ணோட்டத்தின் சிகரம்
கேவலக் கண்ணோட்டத்தின் உச்சக் கட்டத்தை இந்த வரிகளில் வைரமுத்து தொடுகிறார்.
கன்னி கழியாத பெண் (ஆண்டாள்) பாலியல் உரையாடல் செய்கிறாளாம். அதற்கு அவர் சான்றாகக் காட்டுவது ‘குத்து விளக்கெரிய’ பாசுரத்தில்’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா’ என்னும் வரி. இப்படிப் பாடியதன் மூலம் கொடுங்கோடுகளைத் தாண்டினாளாம். அது மட்டுமா?
இந்த ‘சொல் விடுதலை’ ஆண்டாளுக்கு அருளப்பட்டதா அல்லது அகவெழுச்சி அத்து மீறலா என்னும் விஷக் கருத்தை விதைக்கிறார்.
இவற்றைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
ஏன்? ஆண்டாளை இப்படிச் சொல்லிவிட்டாரே என்றா?
இல்லையில்லை.
தான் சங்கத் தமிழ் அறியாத பெரும் அறிவிலி என்பதை, வைரமுத்து இந்த அளவுக்குத் தானே பறை சாற்றிக் கொள்வார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
சங்கத் தமிழில் முல்லைக் கலி பாட்டெழுதத் தெரிந்திருந்தால் தன்னுடையதமிழ் அறிவு சூனியத்தை இந்த அளவு பறை சாற்றிக் கொண்டிருக்க மாட்டார். தன் கண்ணோட்டம் காமக் கண்ணோட்டம்தான் என்பதைத்தான் கட்டுரை முழுவதும் நிரூபித்து வருகிறாரே.
விஷயத்துக்கு வருவோம்.
அந்தப் பாடலை எழுதிய ஆண்டாள் கன்னி பெண். அவள் பாடிய சங்கப் பாடல்களின் பின்னணி ஆயர்பாடி. அவளும் அவள் தோழியரும் ஆயர் குலப் பெண்கள். இதனால் அவள் பாடல்களில் முல்லை நிலக் கரு, உரிப் பொருள்களை பார்க்கிறோம்.
சோழன் நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் கன்னிப் பெண்கள் ஆடும் குரவைக் கூத்து சொல்லப்படுகிறது. அந்தக் கூத்தில் அவர்கள் பாடும் பாடல் வரிகளையும் காணலாம்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
“எளியவோ ஆய் மகள் தோள்?
விலை வேண்டார் , எம் -இனத்து ஆயர் மகளிர் –
கொலை ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்,
ஆங்கு குரவை தழீ யாம் , மரபுளி பாடி ” (கலித் தொகை 103 )
இதன் பொருள்:
‘ எம் இனத்து ஆயர் முலை விலை வேண்ட மாட்டார்கள். ஆனால், கொல்லேற்றுக் கொம்பிடையிலே, காதலிக்கும் பெண்கள் முலையிடைப் போலக் கருதி ஆர்வமுடன் வீழ்ந்து தழுவினால், அவனையே தம் மகட்கேற்றவனாகக் கருதுவார்கள்.’ (புலியூர்க் கேசிகன் உரை)
இந்தக் கருத்தைக் கொடுத்தவர்கள் ஆயர் மகளது பெற்றோர். இதைப் பாடியவர்கள் இளம் கன்னிப் பெண்கள்.
இதற்கு என்ன சொல்கிறார் வைரமுத்து?
இந்தக் கன்னி பெண்களுக்கு ‘சொல் விடுதலை’யும், ‘அகவெழுச்சி அத்து மீறலும்’ எப்படி உண்டானது என்று கேட்பாரா?
இந்தப் பாடல் சங்கப் பலகையில், தமிழ் அறிஞர் முன் பாடப்பட்டு, அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வைரமுத்துவைப் போல ‘இசை நோக்கிக்’ ‘கூலிக்குச் செய்துண்ணும்’ பாடலல்ல.
இந்தப் பாடல்முடிவில் ஒரு சொல் இருக்கிறது பாருங்கள்.
‘மரபுளி பாடி’ – அதாவது ‘மரபின்படி பாடி’ இருக்கிறார்கள்.
இதையே நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் (48) “மென் தோளி காரணமா வெங்கோட்டேறு ஏழுடனே” என்று அருளிச் செய்திருக்கிறார்?
ஏன்?
அவர் ஆயர் மரபு அறிந்தவர். ஆயர் மகள் தோள் பெறுவது எளிதல்ல. கொல்லேறு தழுவி, அதன் கொம்பினைப் பற்றினால்தான் ஆய மகளான நப்பின்னையின் தோளை ஆயர் குலத் திலகமான கண்ணன் தழுவ முடியும் என்பது மரபு. சொல்லும் பொருளின் இடம், கரு, உரி அனைத்தும் அறிந்துதான் அவர் எழுதியிருக்கிறார். ஆண்டாளும் அந்த மரபைப் பின்பற்றியே எழுதியிருக்கிறாள்.
அந்த ஆயர் மரபின் படியே – அவர்கள் சொல்லாட்சியின் படியே, திருப்பாவையிலும் ஆண்டாள் எழுதியிருக்கிறாள். அவள் எழுதியது ஆயர் மகளான நப்பின்னையைப் பற்றி.
“செப்பென்ன மென் முலை செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்!”
“கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா”
இவை ஆயர் மரபின் படி, அகப் பொருள்பாற்பட்ட, ஆய மகளிரால் சர்வ சாதாரணமாக கையாளப் பட்ட சொற்களே.
சிச்சுவேஷனுக்குப் பாட்டு எழுதுகிறேன் என்று வைரமுத்து செய்கிறாரே காமச் சொல்லாடல் – அது எந்தப் பாடல் மரபில் வருகிறது என்று அவரால் சொல்ல முடியுமா?
ஆனால் ஆண்டாள் பாடிய சங்கத் தமிழுக்கு மரபு உண்டு.
அது வைரமுத்துவுக்குத் தெரியவில்லை என்றால், குற்றம் அவருடையது.
இன்னும் ஒரு சான்று தருகிறேன், முல்லைக் கலியிலிருந்து. இதுவும் குரவைக் கூத்தில் கன்னிப் பெண்கள் பாடுவது.
“முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதி வேம், கொலையேறு சாடிய புண்ணை” (கலித் தொகை 106)
இதன் பொருள்:
‘ தோழி! எம் காதலனைக் கொலையேறு சாடிக் குத்திச் செய்த புண்களையெல்லாம், முலை வேதினால் ஒற்றி, ஒற்றித், தழுவித் தழுவிப் பொதிவோமடீ நாம்.”
ஒருத்தி, இரண்டு பேர் என்று அல்ல, ஆயர் மகள் அனைவருமே இப்படிப்பட்ட பேச்சையும், செய்கையையும் உடையவர்கள் என்று இப்பாடல் காட்டுகிறது.
அன்று ஆண்டாளும் சங்கத் தமிழ் படித்துதான் எழுதியிருக்கிறாள்,
நம்மாழ்வாரும், சங்கத் தமிழ் அறிந்துதான் எழுதியிருக்கிறார் என்பதற்கு முல்லைக் கலியே சான்று.
அவற்றை அறியாதவர் என்பதற்கு வைரமுத்து சான்று.
இதுவரை போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா வைரமுத்து அவர்களே?
இங்கு இப்பொழுது சொல்லப்போவது ‘மரபு மீறல்களைத்’ தேடும் மரபறியா வைரமுத்துவுக்கல்ல.
ஆண்டாள் பாடலில் ஆன்மீகத்தைக் காணும் அன்பர்களுக்கு.
திருப்பாவைத் தனியன்களில் ஒன்று முலையைப் பற்றிப் பேசுகிறது. பட்டர் அருளிய வடமொழித் தனியனான இது ‘நீளா துங்க ஸ்தன கிரி..’ என்றுதான் ஆரம்பிக்கிறது. இந்தப் பாடலின் பொருள்,
“பணைத்தெழுந்த நப்பின்னை கொங்கையெனும் மலைச் சாரலில் கண் வளரும் கண்ணனைத் துயிலுணர்த்தி … ”
நப்பின்னையைப் பற்றிப் பேசும் இடங்களில் தான் முலைப் பேச்சு வரும், ஒரு காரணம் அவள் ஆய மகள். இன்னொரு காரணம் அவள் நீளா தேவியின் அவதாரம்.
யார் அந்த நீளா தேவி?
அவள் திருமாலின் மூன்று துணைவியரில் ஒருத்தி.
நிலமகள், திருமாலின் ஒரு துணைவி.
நாம் நிற்கும், இந்த நிலமே நிலமகள் என்னும் பூதேவி.
திருமகள், திருமாலின் இன்னொரு துணைவி.
நாம் வாழும் இந்த நிலத்தைச் (பூமகள்) சார்ந்து கிடைக்கும், பொன் , பொருள், வளி, நீர் போன்ற பலவற்றின் மூலமாக நமக்குக் கிடைக்கும் செல்வமே திருமகள் என்னும் லக்ஷ்மி. அவள் ஒரு துணைவி.
இந்த இருவருக்கும் வரக்கூடிய ஆபத்துகளில் இருந்து காப்பவள் நீளா தேவி,அவள் மூன்றாவது துணைவி.
இந்த பூமியைச் சுற்றி பாதுகாத்து வரும் காந்த சக்தி எனலாம். ஆய மகள் முலை போல் அவளுக்கும் இரு துருவங்களிலும் இரு முலைகள். “நீளா துங்க ஸ்தன கிரி’ என்று மலை போன்ற முலைகள் என்று பட்டர் அருளியது ஏன் என்று இப்பொழுது புரிந்திருக்கும்.
”கொலை ஏற்றுக் கோட்டிடைத்-தாம் வீழ்வார்
மார்பின் முலை இடைப் போலப் புகின்”
என்று கலித் தொகை சொல்வது போல மாயோன் என்னும் கரும் தெய்வம் முலைகள் போன்ற இவ்விரு துருவங்களுக்கு இடையேயும் உலகை அணைத்துக் கொண்டு, ‘காஸ்மிக் ரே’ எனப்படும் கதிர்களில் இருந்தும், பிற வகையான தீய கதிர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறார்.
நீளா என்னும் துருவக் காந்தம், பூமி உண்டானதற்குப் பின்னால் உண்டானது. எனவே அவள் பின்னை ஆகிறாள்.
அவள் இரவில் துருவப் பகுதியில் ஒளி வீசி வயப்படுத்திகிறாள், இரவில்நப்பின்னையுடன் கருநீலக் கண்ணன் துய்ப்பது போல.
நப்பின்னையைப் பார்த்தவர் யாரும் இல்லை. நம்மாலும், இந்த நீளா தேவியை, காந்த சக்தியாக கண்ணனையே ஈர்த்தவளைப் பார்க்க முடியாது.
ஏறு தழுவி, ஆயர் மகள் முலை போன்ற அதன் முதுகினை அணைத்தவாறே (நப்பின்னை கொங்கை கை வைத்துக் கிடந்த மலர் மார்பன் – ஆண்டாள் கூற்று), வேகமாக ஓடும் எருத்தின் போக்கிலேயே, மாயவனும் அதன் மேல் பயணிக்கிறான்.
வாரம் ஏழு நாட்களும் மாயவன் பூமியை அணைத்து, காந்தத் துருவத்தோடு பயணிக்கும் அந்த காஸ்மிக் கோலமே, அவன் ஏழு ஏறு அடக்கி, நப்பின்னையை மணந்த செயலாக அவதாரத்தில் காட்டினானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயர் சேரியில் ஆடும் குரவையையும், நப்பின்னையையும் இணைத்து ஆண்டாள் பாடியிருக்கவேதான், அதை அறிவிலும் அருளிலும் ஜொலிக்கும் ஆச்சார்யப் பெருமக்கள் நளினமாக, நாசூக்காகக் காட்டியிருக்கவே தான், இன்றைய அறிவியலின் துணை கொண்டு, பிரபஞ்சம் சார்ந்த நம் வைதிக மதத்தின் வீச்சினை அறிந்து கொள்ள முடிகிறது.
வைரமுத்து அவர்களே, இனி உங்களது அடுத்த சறுக்கல் என்ன என்று தெரிந்து கொள்ள வாருங்கள்.
சறுக்கல் 15: திமிர் காட்டும் உரைகாரர்கள்
இப்பொழுது வருகிறது அடுத்த சறுக்கல்
உரைகாரர்களை இவர்கள் என்றைக்குத்தான் மதித்திருக்கிறார்கள்? சங்க நூல்களுக்கு உரை எழுதிய உரைகார்களையே இவர்கள் மதிப்பதில்லை. வைணவ உரைகாரர்கள் சொல்வதையா எடுத்துக் கொள்வார்கள்? அதைச் சொல்வதிலும், யார் திமிர் காட்டுகிறார்கள்?
உதாரணத்துக்கு, “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்னும் தொடரை எடுத்துக் கொள்வோம். இந்த ஒரு வரியை மட்டும் மேற்கோளிட்டு, இதுவே பண்டைய தமிழனின் நாகரீகம் என்பார்கள். ஆனால் இந்த வரிகள் எழுதப் பட்ட இடம், பொருள் வேறு. இவை கர்ம வினையின் பாற்பட்டு, ஊழின் கண் அடித்துச் செல்லப்படும் வாழக்கை நிலையைப் புரிந்து கொண்டமையால் ஏற்பட்ட தெளிவின் வெளிப்பாடு.
மற்றவர் யாரும், நம்முடைய இன்ப துன்பங்களுக்குக் காரணமாகாது, நாமே நம் நிலைக்கு காரணம் ஆகையால், எல்லாரும் நமக்கு ஒன்றுதான். அதனால், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் தத்துவக் கருத்து கொண்டது இப்புறப் பாடல்.
இதில் இருப்பது முழுக்க முழுக்க வேதாந்தக் கருத்து என்பதை இருட்டடிப்பு செய்து விட்டு, தங்கள் வசதிக்கேற்றாற்போல அந்த வரியை மட்டும் உபயோகித்துக் கொள்கிறார்கள் .
இதைப் போன்ற இன்னொரு வரி திருக்குறளில் வரும் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..” என்பதாகும்.
முன்வினைப்படி பிறக்கிறோம் என்பதில் மட்டும் தான் ஒற்றுமையே தவிர, வினைப்பயனால் அல்லது செய்யும் செயலால் வேற்றுமை இருக்கிறது என்னும் இன்னொரு வேதாந்தக் கருத்தைக் கூறுகிறார்கள் உரைகாரர்கள். இதை எவ்வளவு தூரம் மக்களிடையே கொண்டு சென்றிருக்கிறார்கள்? தமிழர் மதம், இந்து மதமே இல்லை என்பதுதானே இவர்கள் பரப்பும் கருத்து?
இந்த ‘பிறப்பொக்கும்’ குறளையும், யாதும் ஊரே செய்யுளையும், வைரமுத்துவுக்கு ஆசானான கருணாநிதி செம்மொழிப் பாடலில் புனைந்துள்ளார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே, யாவரும் கேளிர்”
இதைப் படிப்பவர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும், பொருளை உருமாற்றி ஜாலம் செய்வதில் எவ்வளவு தேர்ச்சி பெற்றவர்கள் என்று!
சறுக்கல் 16:வெட்கமறுத்த மொழி தமிழ் – சொல்வது வைரமுத்து
கனவுத் திறம் உரைத்தல் என்பதே இன்பத்துப் பாலின் ஒரு இலக்கணமாக திருக்குறள் சொல்கையில், வைரமுத்து பயன்படுத்தும் சொல்லாடலைப் பாருங்கள். உடனே அடுத்த வரியில், உயர்த்திச் சொல்வது போல ஒரு பாவனை.
இன்னும் சொல்கிறார், தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறதாம்.
யாரை விமரிக்கிறார்?
ஆண்டாளையா? தமிழையா?
இவருக்கு முன்னால் ஒருவர் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.
இவரோ, தமிழ் வெட்கமறுத்த மொழி என்கிறார். இதற்குக் கைதட்டி வக்காலத்து வாங்கும் கூட்டத்துக்குத் தெரியுமா இவர், தமிழையும் சேர்த்துத்தான் இழிவு படுத்துகிறார் என்று?
சறுக்கல் 17:கன்னிக் குரல் என்னும் வஞ்சகப் பேச்சு
இதற்குப் பின் வரும் அனைத்துமே சறுக்கல்தான். வெள்ளிவீதியார் பற்றியும், பெருமாள்முன் ஆண்டாள் மறைந்ததும் பற்றி முந்தின கட்டுரையில் எழுதினோம். வைரமுத்து மேற்கோள் காட்டின ஆராய்ச்சிக்கு கட்டுரைகளின் ஏற்புடைமையை உலகமே உரித்துக் கட்டி விட்டது.
இந்தப் பகுதியில் விட்டுப் போன அடாவடிப் பேச்சு ஒன்று இருக்கிறது.
ஒரு கன்னிப் பெண் இப்படியெல்லாம் பேசலாமா என்று நைச்சியமாக ஒரு வரியில் இடைச் செருகல் செய்துள்ளார். இதைப் பற்றி சறுக்கல்-14 -இல் விரிவாக அலசினோம். மேலும் கொஞ்சம் விளக்குவோம்.
சங்கத் தமிழ் அகப்பொருளின்படி, முல்லை நில ஆய்ச்சியர் பெண், அதிலும் கன்னிப் பெண் இப்படிப் பேசுவதை சங்கத் தமிழில் காண்கிறோம். அந்தக் கன்னிப் பெண் தான் யாரை மணக்க விரும்புகிறாளோ அவரைப் பற்றி இப்படி பேசுவாள். முல்லைக் கலியில், ஆற்றங்கரையிலே, சிற்றில் புனைந்து, வரப்போகும் கணவனது படிமத்தை மணலில் வடித்து, அவனையே கணவன் என்று மனதில் வரித்தவளுக்கு அதுவே ‘பெருமணம்’. அதன்றி, அந்த வீட்டார் வேறு வரன் பார்த்தால், அது இரண்டாவது மணம் போன்றது.
ஆயர் குலப் பெண் கூறுகிறாள், (கலித்தொகை-114)
” அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல்பன்றே? ”
இதைச் சொன்னவள் கன்னிப் பெண். ஆண்டாளும் ஆயர்பாடிப் பெண்ணாகத்தான், சங்க கால ஆயர் மகள் போலவே பாடியிருக்கிறாள் என்பதை அறியாதவர் வைரமுத்து என்று சுய தம்பட்டம் அடித்துள்ளார் இந்தக் கட்டுரையில்.
சறுக்கல் 18: இல்லாத ஆதாரத்தை வெளியிட்டமை
வஞ்சப் பேச்சு பேசுவதற்காகவே வைரமுத்து தேடித்திரட்டின ஆதாரங்கள். அவை பல்லை இளித்து விட்டன. அவற்றை இன்னும் பார்க்காதவர்கள் இங்கே பார்த்து, வைரமுத்துவைப் பற்றி பெருமை கொள்ளலாம்.
வெளியிடாத பல்கலைக்கழகம்
ஆதாரம் காட்டாத கட்டுரை
முடிவாக …..
மரபு மீறலைச் செய்தவர் வைரமுத்து.
என்ன மரபு மீறல் என்கிறீர்களா?
ஒரு கவிஞனோ, அல்லது ஒரு கட்டுரை ஆசிரியரோ, தான் எழுதப் புகும் பாட்டுடைத் தலைவன், அல்லது கட்டுரை நாயகனை, தன் கவிதை அல்லது கட்டுரையில் உயர்த்திச் சொல்லுவான். இல்லாத நல்ல விஷயங்களையும் இருப்பதாகக் கூட்டிச் சொல்லுவான். அதுதான் எழுதும் மரபு.
ஆனால் தமிழை ஆண்ட ஆண்டாள் என்று அவளை உயர்த்திச் சொன்னேன் என்று கூறிக் கொள்ளும் வைரமுத்து என்ன செய்துள்ளார்?
முழுக்க முழுக்க ஆண்டாளை, அவள் பாடிய தமிழைக் கேவலப்படுத்தி எழுதியுள்ளார்.
அவர் சொல்லிக் கொள்ளலாம், தான் உயர்த்திச் சொன்னதாக.
அப்படியே ஆகட்டும்.
ஆனால் அது வஞ்சப் புகழ்ச்சி. உயர்த்தி சொல்வது போலச் சொல்லி இறக்கிப் பேசுவது.
மொத்த கட்டுரையிலும் ஏதேனும் ஒரு வரியை அவர் காட்டட்டும் – இது ஆண்டாளை உயர்த்திச் சொன்னது என்று. அப்படி ஒரு வரி கூட காணக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
அந்த உண்மை ஒரு கேள்வியை எழுப்புகிறது – எதற்காக இப்படி ஒரு கட்டுரையை ஆண்டாளின் மீது அவர் எழுதியுள்ளார்?
இரண்டே காரணங்கள்தான் தெரிகின்றன.
ஒன்று, நாம் இதுவரை விளக்கினாற்போல, அவருக்குப் பழந்தமிழும், சங்கத் தமிழும் தெரிந்திருக்கவில்லை. நிகழ்கால சினிமாத தமிழைத் தாண்டி அது காட்டும் கண்ணோட்டத்தைத் தாண்டி அவரால் பழந்தமிழ்நாட்டுப் பண்பாட்டுக்குச் செல்ல இயலவில்லை.
இரண்டு, இவர் அறம், பொருள், இன்பம் என்று வைதிக மதத்தின் முப்பொருளைப் பற்றிப் பேசும் திருவள்ளுவர் வழி நடப்பவரல்ல.
திருவள்ளுவர் தன் முதல் குறளில் கடவுளை வணங்கி விட்டு இரண்டாவது குறளில் சொல்கிறார்,
‘கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.’
கல்வி கற்பதன் பயன் என்னவென்றால், அந்தக் கடவுளின் திருவடிகளைத் தொழுவதே ஆகும்.
தான் கற்ற கல்வியைக் கொண்டு பரமன் திருவடியில் பாசுரங்ககளைக் கொட்டி, அந்தப் பரந்தாமனது திருவடிகளிலேயே ஐக்கியமானாள் ஆண்டாள்.
ஆனால் அவள் பாடலில், அவள் பிறப்பில், அவள் வாழ்ந்த விதத்தில், அவள் மறைவில் என்று எல்லா விதத்திலும் அவளைக் காமக் கண்ணோட்டத்துடன் பார்த்து, பத்திக்குப் பத்தி, இடைச்செருகலாக, அவளையும், அவள் பக்தியையும், அவள் பின்பற்றிய வைதிக மதத்தையும், அந்த மதத்தைச் சார்ந்த ஆச்சார்யர்களையும் மட்டம் தட்டி, விஷ வித்துக்களைப் படிப்பவர் மனத்தில் விதைத்திருக்கிறாரே – அது
இவருக்கு வைதிக மதத்தின் மீது – அது காட்டும் தெய்வத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்பதையே காட்டுகிறது.
அதாவது வள்ளுவன் வாக்கின்படி நற்றாள் தொழாதவர் என்பதைக் காட்டுகிறது. அந்த வைதிக மதத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட கட்டுரைக்கு நாம் சொல்லும் முடிவுரைதான் என்ன?
இந்தத் தருணத்தில் எனக்கு ‘சோ’ அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். வெகு நாட்களுக்கு முன் வைரமுத்துவின் கட்டுரையைப் போலவே, கவிதை வில்லங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. கவிஞர் சுரதா அவர்கள் ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்ந்து கவிதை எழுதி வந்தார். சகிக்க முடியாத அந்தக் கவிதைகளை சோ அவர்கள் விமரிசனம் செய்தார். உடனே நான்கு பேர் சுரதாவுக்காக வரிந்து கட்டிக்க கொண்டு, சோவை எதிர்த்துப் பேசினர்.
சோ அவர்களுக்குப் பதில் அளித்தார் –
‘நாலு பேருக்கு நன்றி’. நாலு பேர் எதற்கு வருவார்கள். அதற்குத் தான் வந்திருக்கிறீர்கள். அதனால் ‘நாலு பேருக்கு நன்றி’
என்று கூறினார்.
வைரமுத்துவின் வைரம் (பகை, வெறுப்பு) முற்றின கட்டுரைக்கும் நாலு பேர் வந்தார்கள்.
மீதி சில பேர் மேளம் இசைத்தார்கள்.
சோ சொன்னது சரிதான்.
நாலு பேர் வந்து மேளமும் கொட்டியாச்சு.
இனி என்ன ?
பட்டங்களுக்கும், கொட்டங்களுக்கும் என்ன மரியாதையோ அதை அவர்களே கொடுத்துவிட்டார்கள்.
- காதற்காலம்- (பிரணயகாலம்)
- நாடோடிகளின் கவிதைகள்
- ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
- நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
- மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்
- வெளிநாட்டு ஊழியர்கள்
- வாழ்க நீ
- வெங்காயம் — தக்காளி !
- பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி
- பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்
- தொடுவானம் 207. போதை
- இன்று ஒரு முகம் கண்டேன் !
- பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன