தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

29 நவம்பர் 2020

சின்னச் சிட்டே !

Spread the love

மீனாட்சி சுந்தரமூர்த்தி

சின்னச் சிட்டே!

சிங்காரச் சிட்டே!

உனக்கும் எனக்கும்

வழக்கேதும்

உண்டோ?

கடிகாரம் கூடத்

தவறும்,

சேவலும் விடியல்

சொல்ல மறக்கும்.

நிதம் நீ வந்து

என்னறை

சன்னல் தட்டுவது

தவறாது.

ஏதோ சொல்லுகிறாய்

பசித்து வந்தாயென

பாரதியாய்

எனை நினைந்து

இறைத்தேன் அரிசியை

நீ எடுக்கவில்லை.

உன்னழகை ஊரார்

மெச்சுவது

உண்மை என்பதைக்

கண்ணாடி சன்னலில்

கண்டு நீ

உவந்தாயோ!

காலை மாலை

கண்ணாளன்

காண, ஒப்பனை

செய்கிறாயோ!

கன்னங்கரிய

பட்டு உடல்,

கூரிய வெள்ளை

அலகு,

மின்னும் மணிகள்

கண்கள்,

நீண்ட வாலின்

வெண்மைக்கு

நிலவும் தோற்கும்.

கீச்சு கீச்சென்று

நீ பேசும் மொழி

மெத்தப் படித்தும்

எனக்கு

விளங்கவில்லை.

மொழிகள் பல

கற்க நிலையங்கள்

பலவுண்டு,

தேடித்தேடி

நானும் சலித்தேன்,

உன்மொழி

சொல்லித் தர

எவருமே இல்லை.

கண்ணாமூச்சி

ஆடுகிறாய்,

உன்னைப் படம்

பிடிக்க

நான் படும்பாடு

யாரறிவார்.

உன்னைக் கண்டு

துள்ளும்

நெஞ்சம்,

காண மறந்தால்

தேங்கும்

விழிகளில் ஈரம்.

Series Navigationசொந்த ஊர்தொடுவானம் 208. நான் செயலர்.

Leave a Comment

Archives