28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா

This entry is part 6 of 20 in the series 25 பெப்ருவரி 2018

“கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்[து] உன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோ[டு
உறவேல் நமக்கிங்[கு] ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்”

இது ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்தெட்டாம் பாசுரம் ஆகும். கடந்த இரு பாசுரங்களில் ஆயர்குலப் பெண்கள் தாங்கள் நோன்பு நோற்பதற்கான உபகரணங்களையும் சில சன்மானங்களையும் பெற்றார்கள். “இவர்கள் ஊராருக்காக நோன்பு நோற்று பறை பெற்றார்கள். இப்போது தங்களுக்கான பறையை நம்மிடம் கேட்கப் போகிறார்கள்.” என்பதை அறிந்த பெருமான், “நீங்கள் விரும்பும் பறையைப் பெற உங்கள் தகுதி என்ன? ஏதேனும் கர்மாஷ்டானுங்கள் செய்ததுண்டா? என்று கேட்கிறான்.
”நாங்கள் முன்பே “21-இல் “அறிவுறாய்’ என்றோம். 22-இல் செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ” என்றும், 23-இல் “யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள் செய்” என்றோம். 24-இல் ”இரங்குவாய்” என்றும், 25-இல் “உன்னை அருத்தித்து வந்தோம்” என்றும் 26-இல் “அருளோலோ” என்றும் சொன்னோமே. நாங்கள் உன்மேல் ‘ப்ரேம வியாதி’ கொண்டுள்ளோம்; உன்னை அடைய வேண்டிய காதல் நோய் அது; அந்நோய்க்கு மருந்து நீதான்.” என்கிறார்கள்.
“வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள்ளுளர்த்த
ஓவாதிராப் பகல் உன்பாலே வீழ்ந்தொழிந்தாய்” என்றும், ”எங்கள் நோய்க்கு நீதான் மருந்து” என்றும் கூறுகிறார்கள்.
“வைப்பாம் மருந்தாம் அடியரை வல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடானவன்
எப்பால் எவர்க்கும் நலந்தரல் உயர்ந்துயர்ந்து
அப்பாலவன் எங்கள் ஆயர்க்கொழுந்தே” என்ற அருளிச் செயல் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர்கள் உபாயங்களைக் கைவிட்டு அவனையே பற்றுகிறார்கள். இவ்வாறு உபாயங்களைக் கைவிட்டு அவனையே பற்ற மூன்று காரணங்களும் அவற்றைக் கொள்ளும் அதிகாரிகளும் மூன்று வகைப்பட்டவர். ஆழ்வார்கள் எனப்படுபவர் மேலான பக்தியுடன் பரவசம் அடைந்து இருப்பவர்கள். எனவே எந்த உபாயமும் கைக்கொள்ளாமல் பகவானையே பற்றுவார்கள். இரண்டாவதாக ஆச்சாரியர் போன்றவர்கள் ஸர்வஜ்ஞர்கள் ஆவார்கள். அவர்கள் உபாயம் மேற்கொள்வது நம் சுபாவத்துக்குத் தகாது எனக் கருதி அவனையே பற்றுவார்கள். மூன்றாவது நம்மைப் போன்ற அஜ்ஞர்கள். இவர்கள் உபாயம் கைக்கொள்ள ஞானசக்திகள் இல்லாதவர்கள். எனவே உபாயம் அனுஷ்டிக்க மாட்டார்கள் அவனையே பற்றுவார்கள். இது பட்டர் அருளிச் செய்தது ஆகும். ஆயர்குலப் பெண்கள் தாங்கள் அஜ்ஞர் என்பதற்காக “அறிவொன்றில்லாத ஆய்குலம்” என்று இப்பாசுரத்தில் கூறிக்கொள்கிறார்கள்.
இவ்விடத்தில் மற்றொன்றும் கருதத்தக்கதாகும். அதாவது அவனையே உபாயமாகப் பற்றியவர்கள் மற்ற உபாயங்களைப் பின்பற்றாமல் கைவிட வேண்டும். இராமாயணம், மகாபாரதம், வராக புராணம் போன்றவற்றில் உள்ள சரமஸ்லோகங்கள் போலே திருப்பாவையின் இப்பாசுரம் விளங்குகிறது. இப்பாசுரத்துக்குத் தகுந்த ஒரு கருத்தையும் பார்க்கலாம்.
அதாவது மேன்மையான ஓர் உபாயத்தைப் பற்றியவர்கள் வேறொரு உபாயம் பற்றுவது எப்படியென்றால் சரணாகதியானது சணற்கயிறு கண்ட பிரம்மாஸ்திரம் போலே ஆவதற்கு ஒப்பானதாகுமாம்.
”சரணாகதி மற்றோர் சாதனத்தைப் பற்றில்
அரணாகா[து] அஞ்சனைதன் சேயை—முரணைழியக்
கட்டியது வேறோர் கயிறுகொண் டார்ப்பதன்மு
விட்டபடை போல விடும்”
என்று அருளாளப் பெருமாள் ஞான சாஸ்திரத்தில் அருளியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.
”குளித்து மூன்றனலை ஓம்பும் குறிகொள் அந்தணமைதன்னை
ஒளித்திட்டேன் என்கணிலை நின்கணும் பத்தனல்லேன்”
என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
”நோற்ற நோன்பிலேன் நுன்ணறிவிலேன்” என்று நம்மாழ்வாரும்,
“குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்
நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்
புலன்களைந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனிதநின்
இலங்கு பாதமின்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே’
என்று திருமழிசையாழ்வாரும்,
”நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோரறம் செதுமிலேன்”
என்று திருமங்கையாழ்வாரும் அருளிச் செய்ததுபோல் இவர்கள் “எங்களுக்கு ஒன்றும் தெரியாது; எந்த அனுஷ்டானங்களும் நாங்கள் அறியவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
”நீங்கள் என்னையே கேட்கிறீர்கள். என்விஷயமாகப் பக்தி செய்து அருளை வேண்டி வந்துள்ளீர்கள். அதற்கு பலவித ஜன்மங்களிலே கர்ம ஞான பக்தி யோகங்களைக் கடைப்பிடித்திருக்கவேண்டுமே? அப்படி ஏதாவது உங்களிடத்தில் உண்டா” என்று கண்ணன் கேட்கிறான்.அதற்குப் பதிலாகத்தான் இவர்கள் “கறவைகள் பின் சென்று” என்கிறார்கள். அதாவது ”கண்ணா! நாங்கள் எந்தத் தகுதியும் இல்லாதவர்கள்; கறவைப் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்ப்பவர்கள்; வேறொன்றும் அறியாதவர்கள்; உன்னிடத்தில் அன்புடையவர்கள் உன்னைப் பிந்தொடர்ந்து வருவதைப் போலே நாங்கள் கறவைப் பசுக்கள் பின்னால் சென்று காலத்தை வீணாக்கினோம்” என்று சொன்னார்கள்.
‘காலிகள் பின்னே’ என்று சொல்லாமல் ‘கறவைகள் பின் சென்று‘ ஏன் சொன்னார்கள்? கறவைப் பசுக்கள், கறவாத பசுக்கள், எருமைகள் என எல்லாவற்றையும் மேய்த்தார்கள் என்றால் அது எப்பலனும் எதிர்பாராத கர்மயோகத்தைச் சேர்ந்துவிடும். ஆனால் இவர்கள் பாலுண்ணுவதற்காகவே பசுக்களை மேய்க்கிறார்கள். பசுவின் பிருஷ்ட பாகத்தில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறார். எனவேதான் கறவைகளின் பின்னால் செல்ல வேண்டும்.
உடனே கண்ணன் “பசுக்களை மேய்ப்பதும் ஓர் அறச்செயலே, பசுபராமரிப்பைக் கோ.சம்ப்ரட்சணம் என்பார்கள்; அதுவும் புண்ணியமே” என்றான். :இல்லை கண்ணா! நாங்கள் அவற்றைக் காப்பாற்றி மேய்ப்பது எங்கள் சுயநலத்துக்கே; பால் கறப்பதற்கே” என்றனர். “சரி, அப்படிப்பசுக்களை மேய்க்கச் செல்லும்போது, வடமதுரை, கோவலூர், அயோத்தி, போன்ற புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள் இல்லையா? அது ஒரு தகுதிதானே அதைக் கொண்டு நான் உங்களுக்குக் காரியம் செய்யலாம் அன்றோ?” என்றான் கண்ணன். “கண்ணா! நாங்கள் செல்வதெல்லாம் மாடுகள் மேயக்கூடிய புல்தரை உள்ள வெறும் காடுகளே ஆகும். புண்ணியத் தலங்களல்ல; நாட்டில் இருந்தாலாவது கர்ம யோகம் போன்றவற்றை அனுசரிக்கலாம். அவை காடுகள்.” என்றார்கள்.
மேலும் ஆயர்குலப்பெண்கள், “நாங்கள் பசுக்களோடேயே இருப்போம்; அவை குளிக்கும்போது நாங்கள் குளிப்போம்; அவை புல் தின்று அசைபோடும்போது நாங்கள் உண்போம்; அவை உறங்க நாங்களும் உறங்குவோம்; காலை முதல் மாலைவரை நாங்கள் அங்கேயே இருப்போம்; காட்டில் வசிப்பதே எங்கள் புண்ணியத்தல வாசம்” என்கின்றனர். அதற்குக் ”காடுகளும் புண்ணியத்தலமே; தண்டகாரணியம், நைமிசாரண்யம், பிருந்தாவனம் போன்றவை புண்ணியத் தலங்கள்தாமே; நீங்கள்தாம் அங்கு வசித்துள்ள தகுதி உள்ளதே?” என்றான் கண்ணன். “இல்லை கண்ணா; நாங்கள் செல்வது அப்படிப்பட்ட திவ்ய தேசங்கள் அல்ல; இவை வெறும் கானம்” என்று இவர்கள் பதில் சொன்னார்கள்.
அதற்குக் கண்ணன் “காட்டில் வாசம் செய்வது என்பது வானப்ரஸ்த தர்மத்தை அனுசரிப்பதற்கு ஒப்பாகும்; அது ஆசிரம தர்மமாகும்; நீங்கள் ஆரண்ய வாசம் செய்யும் ரிஷிகள் போன்றவர்கள்தாமே? அது கர்ம யோகத்தை ஒத்திருக்கிறதே” என்றான். உடனே ஆயர் சிறுமிகள், ”கண்ணா! நாங்கள் தர்மம் அனுஷ்டிக்கவோ, தவம் செய்யவோ, காடு செல்லவில்லை; நாங்கள் செல்வது எங்கள் பிழைப்பிற்காகவே; அங்கே அகதிகளை உபசரியோம்; பசுக்களுடனேயே வாழ்வோம். எங்களை அலங்காரம் செய்துகொள்வோம்; எனவே எந்தவிதமான ஆஸ்ரம தர்ம்மும் நாங்கள் செய்தறியோம்; என்றுசொன்னார்கள்.
அதற்குக் கண்ணன், “நீங்கள் போன ஜென்மங்களில் தர்மம் அனுஷ்டித்திருப்பீர்கள்; நகரத்திலேயே இருந்த விதுரன் ஞானவானாகத் திகழ்ந்த்திருக்கையில் கானகத்திலேயே இருக்கும் உங்களுக்குத் தடையேது? தன்னிஷ்டப்படியிருந்த பரதன் ஞானவான் இல்லையா? உங்களைப் போன்ற பெண்பிள்ளைகளான மைத்ரேயி, ஸ்ரமணி போன்றவர்கள் ஞானிகளாயிற்றே? நீங்களும் அவர்கள் போல்தானே? அதனால்தான் உங்கள் பலனைப் பெற விரும்புகிறீர்களா?” எனக்கேட்டான்.
உடனே இவர்கள் தங்கள் அறியாமையை விளக்க “அறிவொன்றுமில்லாத ஆயர்குலம்” என்கிறார்கள். ”கண்ணா! எம் குலமே அறிவில்லாதது; அதனால்தான் சாம்பனுக்குப் பெண்வேடமிட்டுத் துர்வாசரிடம் அழைத்துச் சென்று “இவளுக்கு என்ன குழந்தை பிறக்கும்” என்று கேட்டு எம்குல அழிவிற்கே காரணமாக இருந்தோம். எங்கள் குலத்தைப் பார்த்தால் அறிவு எப்போதாவது உண்டாகுமென உனக்குத் தோன்றுகிறதா? அறிவில்லாததால் பக்தி ஞானமில்லை; கர்ம ஞான யோகங்களின் அறிவுமில்லை” என்கிறார்கள். “அறிவொன்றுமில்லாத” என்பதன் மறைபொருள் “பகவானைத் தவிர வேறொன்றிலும் அறிவில்லாத” என்பதாகும்.
”பக்தியில்லை, கர்ம ஞான யோகங்களை அனுஷ்டிக்கவில்லை செய் புண்ணியங்கள் ஒன்றுமில்லை” எனவே உங்களைக் கைவிட வேண்டியதுதானா” என்று பகவான் கேட்டான். அதற்கு இவர்கள், “உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்” என்கிறார்கள். “கண்ணா! என்ன சொன்னாய்? எங்களுக்கா புண்ணியமில்லை; நாங்கள்தாம் உன்னைப் பெற்றிருக்கிறோமே? எம்குலம்தான் புண்ணியனான உனக்கே பாலூட்டிச் சோறூட்டி வளர்க்கிறதே. எம்கையில் புண்ணியம் இல்லைதான். ஆனால் புண்ணியமான நீ இருக்கிறாய்; கிருஷ்ணன் தர்மம் ஸநாதனம் என்கிறது பகவத் கீதை; பாரதமோ கிருஷ்ணன் சித்தமான தர்மம் என்கிறது. எல்லாரும் தெய்வத்தைத் தேடிச் செல்கையில் தெய்வம் எங்கள் ஆயர்குலத்தைத் தேடி வந்ததே! நீ எதற்காக இங்கு வந்தாய்? “உய்ய இவ்வாயர்குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே” என்றபடி இந்த ஆயர்குலத்தின் சட்டி பானைகளும் உய்வதற்காகவன்றோ நீ இங்கு வந்து அருளினாய்? உன்னைப் பெற்றிருப்பதே பிறவி பெறும் புண்ணியமாகும். போற்றப் பறைதரும் புண்னியமான உன்னையே நாங்கள் பெற்றிருக்கிறோமே” என்று விடை கூறினார்கள்.
அதற்குக் கண்ணபிரான், “பார்த்தீர்களா? முதலில் அறிவில்லாத குலம் என்றீர்கள்; இப்போது புண்ணியம் யாமுடையோம் என்று சொல்கிறீர்கள். இது ஒன்றுக்கொன்று முரணாக மாறுபாடாக உள்ளதே” என்று கேட்டான். இவர்கள், “கண்ணா! இதுவன்றோ அறிவில்லாத பேச்சாகும்” என்றர்கள். “அப்படியானால் உங்களைக் கைவிட்டுவிடவேண்டியதுதானா?” என்றான். உடனே இவர்கள் “குறைவொன்றில்லாத கோவிந்தா” என்றார்கள். அதாவது, ”கண்ணா! நீ குறைவொன்றில்லாதவன்; நாங்கள் குறையுள்ளவர்கள்; எம்குறை உன்னிடம் சொல்ல வந்தோம்; உம் நிறைகுணம் போதும் எம் குறை தீர்த்திட; நாங்கள் பள்ளம்; நீயோ இப்பள்ளத்தை நிரப்பவல்ல மேடு; உன்னுடைய குறைவொன்றில்லாத தன்மை எங்கள் அறிவின்மையால்தான் சிறப்படைகிறது. எம்மைப் போன்ற குறைவுடையவர்களைப் பெற்றால்தான் உன் பெருமை பூர்த்தியாகிறது. உண்மையில் கண்ணா! நாங்கள் கர்ம, ஞான, பக்தி யோகங்களைப் பெற்றிருந்தால் அவை உன்னைவிட்டு விலகத்தானே வழிகாட்டியிருக்கும். அதனால்தான் நாங்கள் அவற்றை விட்டு புண்ணியனான உன்னையே பற்றினோம். உன்னை அடையத் தடையாயிருக்கும் அவை எம்மிடம் இல்லாமையால் நீ எமக்கு அருள் செய்வாயாக!” என்று வேண்டினார்கள்.
”அப்படியானால் உம்மைப்போன்று குறைவுள்ளவர்களுக்கு நான் உதவுவதை எங்காவது கண்டதுண்டோ?” என்று கண்ணன் கேட்க, இவர்கள், ‘கோவிந்தா’ என்ற திருநாமத்தைச் சொல்கிறார்கள். “கண்ணா! நீ எந்த ஆதரவும் இல்லாத, தம்மைக் காத்துக்கொள்ளத் தெரியாத குறையுள்ள பசுக்களை ஆதரிக்கிறவனவாயிற்றே! பரமபத இருப்பையே குறையாக எண்ணி அக்குறையைப் போக்கிக்கொள்ளத்தானே இங்கு ஆயர்பாடி வந்து பசுக்களை நோக்கினாய்; அதேபோல குறையுள்ள எம்மையும் நோக்கினாலன்றோ நீ குறைவொன்றுமில்லாதவனாக ஆவது” என்று இவர்கள் சொல்கிறார்கள்.
கண்ணன் உடனே கேட்கிறான். “சரி, என்னைக் குறையில்லாதவன் என்றீர்கள்; உங்களை அறிவில்லாதவர் என்றீர்கள்; அப்படியிருக்க நான் காரியம் செய்வது என்னிஷ்டம்தானே? நீங்கள் ஏன் என்னை நிர்ப்பந்திக்கிறீர்கள்”
அதற்கு இவர்கள் “உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது” என்று சொல்கிறார்கள். உந்தன்னோடு உறவு என்பது நமக்கும் பகவானுக்கும் உள்ள நவவித சம்பந்தத்தைக் குறிக்கிறது. அவையாவன:
1. தந்தை-தனயன் உறவு
2. இரட்சிப்பவன்—இரட்சிக்கப்படுபவன்
3. சேஷி-சேஷன்
4. நாயகன்-நாயகி
5. அறிபவன்-அறியப்படும்பொருள்
6. சொத்துக்குரியவன்-சொத்து
7. சரிரீ-சரீரம்
8. தங்குகின்றவன்-தாங்கப்படும் பொருள்
9. போகத்தை அனுபவிப்பவன்-போகபபொருள்
இப்படி ”பெருமானே! உனக்கும் எங்களுக்கும் உள்ள சம்பந்தத்தைப் பார்த்தால் நீதானே எங்களுக்கு அருள்செய்ய வேண்டும்; நாங்கள் எல்லாரும் உன் உடைமை அல்லவா? உடைமைகள் எங்காவது தங்கள் காரியத்தைத் தாமே செய்து கொள்ளுமா? உடையவன்தானே செய்ய வேண்டும்; நீ எங்கள் உறவினன் அல்லவா? செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் அன்றோ?” என்று அவ்னுக்கும் தங்களுக்கும் உள்ள உறவைப் பற்றி ஆயர் குலப்பெண்கள் பேசுகிறார்கள்.
அதற்குக் கண்ணன்,”ஓகோ! நீங்கள் அந்த உறவால்தான் வழக்கு பேசுகிறீர்களா? ஒருகுட நீரோடே போகக்கூடிய அந்த உறவைக் கொண்டுதான் காரியம் கைக்கொள்ள எண்னியிருக்கிறீர்களா? அந்த உறவையே ஒழித்து விட்டால் போகிறது” என்கிறான். ஒருகுட நீரோடு போவது என்பதற்குப் பொருள் என்னவென்றால் சந்நியாச ஆஸ்ரமத்தை அடையும்போது செய்வது போலவும், தந்தை இறந்தால் ‘கடசிரார்த்தம்’ [குடநீர் வழியாய்க் குடமுடைத்தல்] செய்வது போலவும் உறவை ஒழித்துக்கொள்வதைக் காட்டுகிறான்.
உடனே இவர்கள், ”கண்ணா! அப்படியெல்லாம் உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவை யாராலும் ஒழிக்க முடியாது; அது உன்னாலும் முடியாது; எம்மாலும் முடியாது; இது என்ன சாதாரண உறவா? காரணம் பற்றாமல் வந்த உறவு; உன்னை விட்டுப் பிரியாமல் இருப்பதை நீ எப்படி ஒழிப்பாய்?” என்று கேட்க, அவன், நீங்கள் எப்படி இவ்வாறு கூறுகிறீர்கள்” எனக்கேட்டான். இவர்கள், “முன்பே திருமழிசை ஆழ்வார் சொல்லவில்லையா? ’நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே! நீ என்னயன்றியிலை’ என்பது அவர் அருளிச்செயலன்றோ?” என்று விடை சொல்கிறார்கள். மேலும் ”நீ பரமபத்தில் இருக்கும் இருப்பிலே இவ்வுறவை ஒழித்தாலும் ஒழிக்கலாம்’ ஆனால் இங்கு ஆயர்பாடிக்கு வந்து எங்கள் காலைப் பிடித்துக் கையைப் பிடித்து ஏற்படுத்திக்கொண்ட உறவை ஒழிக்க இயலாது. நீ இங்கு எம்மிடம் உறவை ஏற்படுத்திக் கொண்டதால்தானே உமக்கு ‘கோவிந்தா” எனும் திருநாமம் கிடைத்தது. எமக்காக கோவர்த்தன கிரியை எடுத்து எம்மைக் காத்து கோவிந்த பட்டாபிஷேகம் பெற்றாய்; அத்திருநாமத்தை மிகவும் விரும்பி நின்றாய்; அப்படி எம்மைக் காத்த நீயே இப்போது வேறுவிதமாக என்ணலாமா?”” என்றார்கள்.
அதற்குக் கண்ணன், “இப்போது கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்றும், குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்றும், அழைத்து என்னைப் பெருமைப் படுத்தினீர்கள். ஆனால் முதலில் என்னை நாராயணன் என்னும் சிறு பேரிட்டு தகாத முறையில் அழைத்ததேன்?” என்று பொய்க் கோபத்துடன் கேட்டான். இதைக் கேட்ட பெண்கள் இப்போது அச்சப்படுகிறார்கள். ”அவனுக்குச் சிறு பேரிட்டு அழைத்ததால் சினம் வந்து விட்டதோ? உறவை ஒழித்துக் கொண்டு விடுவானோ? நம் கதி என்னாவது?” என்றெண்ணிப் பேசுகிறார்கள்.
“கண்ணா! நாங்கள் அறியாப் பிள்ளைகள்; அறிவொன்றும் இல்லாதவர்கள். நாங்கள் அறியாமல் செய்த பிழைப் பொறுப்பது உன் கடனன்றோ? ’’பிழைப்பராகிலும் தம்மடியார் சொல் பொறுப்பது கடனன்றோ?’ என்பது ஆழ்வார் வாக்கன்றோ? உடைமை தவறு செய்தால் உடையவன் கோபம் கொள்ளலாமா? நீ பெரியவன் அன்றோ? எம் சிறுமை பொறுக்க வேண்டும் அல்லவா? மேலும் நாங்கள் அன்பின் மிகுதியால் அல்லவா அப்படி உன்னை அழைத்து விட்டோம்; “காதல் கடலின் மிகப்பெரிதால்” “என்றன் அளவன்றால் யானுடைய அன்பு” என்றும் நாங்கள் கொண்டுள்ள அன்பினாலன்றோ உன்னை அப்படி அழைத்து விட்டோம்; நீ கோவிந்தாபிஷேகத்தில் மனம் திளைத்திருப்பதை நாங்கள் அறியவில்லை. எம் அறியாமையாலே உன்னுடைய சிறுபேரான ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்பதைத் தொடக்கத்தில் கூறியது எம் பிழைதான்; அதை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று வேண்டுகிறார்கள்.
நாராயணன் என்ற திருநாமம் பெரிய பேராக இருக்கலாம்; ஆனால் அது பரமபத்துக்குப் பொருந்தலாம். அவன் அங்கிருந்த தன் மேன்மையை ஒளித்துக் கொண்டு எளிமையாக ஆயர்பாடி வந்து சேர்ந்தான். இங்கு வந்து கொஞ்சம் சிரமப்பட்டு ‘கோவிந்தா’ என்ற திருநாமத்தைச் சம்பாதித்தான். அப்போது பழம்பெயரான நாராயணன் என்னும் பெயர் அவனுக்குச் சிரு பெயராயிற்று. அதைச் சொன்னால் அவனுக்குச் சினம் வருகிறது; எனவேதான் அதைச் சொன்னதற்கு இவர்கள் மன்னிப்பு கேட்கிறார்கள். ”கிருஷ்ணா! உன் மேன்மையை அறியாமல் அன்பினாலும், நண்பன் எனும் எண்ணத்தினாலும், மறதியினாலும் ‘ஏ கிருஷ்ணா!, ஏ யாதவா! ஏ நண்பா! என்று வாய்தவறிச் சொன்னதற்கு என்னை மன்னித்தருளவேணும்” என்று அருச்சுனன் வேண்டியது போல் இவர்களும் கேட்கிறார்கள். என்ன ஒரு வேறுபாடு என்றால் அருச்சுனன் கண்ணனின் எளிமையைப் பெரிதாக எண்ணாததால் மேன்மையான பரத்துவத்தைப் பெரிதாக நினைத்தான். இவர்கள் எளிமையின் பெருமையை அறிந்தவர்கள்; அதனால் நாராயணன் எனும் திருநாமத்தைச் சிறுபேர் எனக் கூறுகிறார்கள். இங்கே மாடு மேய்த்துக் கொண்டு இருப்பவனைப் போய் அப்படி அழைக்கலாமா? “அந்தப்புர வாசலிலே படுகிடப்பாரை ‘நாட்டுக்குக் கடவன்’ என்கிறது ப்ர்ணயியல்லேன் என்கையிறெ என்கிறது ஆறாயிரப்படி.
“நாராயணனே நமக்கே பறை தருவான்” என்றும், “நாற்றத்துழாய் முடி நாராயணன்” என்றும், “நாராயணன் மூர்த்தி” என்றும் பலமுறை அழைத்ததை இந்த இட்த்தில் அவர்கள் எண்ணிப் பார்க்கிறார்கள். அத்துடன் நில்லாமல் “பாற்கடலில் பையத்துயின்ற பரமன்” என்றும், ஊழிமுதல்வன்” என்றும், பாழியந்தோளுடைப் பற்பநாபன்” என்றும், தேவாதி தேவன்” என்றும் பரத்துவத்தின் மேன்மையைக் குறிக்கும் பல பெயர்களைச் சொல்லி அழைத்ததை நினைத்துப் பார்க்கிறாகள்.
“சிறு பேர் அழைத்தனவும்” என்பதில் ‘உம்’ என்று சொல்வதால் இவர்கள் தங்களுக்குள், ஒருவரையொருவரைப் பார்த்து, ‘பேய்ப்பெண்ணே’ ‘ஊமையோ’ செவொடோ’ என்ரு சொன்னதற்கெல்லாம் இப்போது மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறார்கள். “உங்களுக்கும் எனக்கும் உறவு மற்றும் எல்லாவிதமான சம்பந்தமும் இருந்தாலும், என் அருளைப் பெற்றுப் பலன் பெற நீங்கள் சிறிதேனும் முயற்சி செய்ய வேண்டாமா? என்று கண்ணன் இவர்களைப் பார்த்துக் கேட்கிறான். “இறைவா! உடையவன்தானே உடைமையைப் பெற முடியும். உடைமை என்ன செய்யும்? நீ தர மனம் இசையாவிடில் எங்கள் முயற்சிதான் என்ன செய்யும்? எனவே எம்மேல் சீறி அருளாதே பலன்தாராய்” என்று கேட்கிறார்கள்
கண்ணனெம்பிரான் பக்கத்திலிருக்கும் நப்பின்னையைப் பார்த்து, “இவர்கள் கேட்பதை நீ ஆராய்ந்து தருக” என்றான். அதற்கு இவர்கள், “அவள் செய்யும் புருஷகாரத்தை அவள் செய்து விட்டாள். உன் காரியம்தான் நடக்க வேண்டும். எனவே நீ பறை தாராய்; நீ தந்தால் ஒழிய எமக்கு வேறு கதியில்லை” என்று கேட்கும் இச்சிறுமிகள் பறை என்றால் என்ன என்பதை அடுத்த பாசுரத்தில் சொல்கிறார்கள்.
==================================================================

Series Navigationஒழிதல்!சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *