சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்

This entry is part 2 of 20 in the series 25 பெப்ருவரி 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

கவிதை வாசகர்கள் விதவிதமான கவிதைகளைப் படித்து ரசிக்கிறார்கள். எந்த விதமான மொழி நயங்களும் இல்லாத யதார்த்தக் கவிதைகளும் பலரால் எழுதப்படுகின்றன. நகுலன் , விக்ரமாதித்யன் ,
ரவி சுப்ரமணியன் , ஜீவி , இளம்பிறை எனப் பலர் யதார்த்தக் கவிதைகள் எழுதியுள்ளனர். நகுலன்
கவிதைகளை எதிர் – கவிதைகள் [ anti – poetry ] என வகைப்பபடுத்தலாம். யதார்த்தக் கவிதை உரைநடை போலத்தான் இருக்கும். வழக்கமான உரைநடைக்கும் இதற்கும்வித்தியாசம் உண்டு. நகுலன்
கவிதைகளில் கவிதையின் முடிவில் ஒரு சிந்தனைத் தூண்டல் இருக்கும் ; தெளிவின்மை இருக்கும்.
இதற்கு எடுத்துக்காட்டாக ‘ ஸ்டேஷன் ‘ கவிதையைக் குறிப்பிடலாம்.

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்
ரயிலிலும் யாருமில்லை
என்பதை.
‘ அது ஸ்டேஷன் இல்லை ‘
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள
முடியவில்லை
ஏனென்றால்
ஸ்டேஷன் இருந்தது.

இதில் மொழி நயங்கள் ஏதுமில்லை ; உரைநடையாகத்தான் இருக்கிறது. ஆனால் முடிவு சிந்திக்கவைக்கிறது. கவிதையை மீண்டும் படிக்கவேண்டியிருகிறது இதைக் கவிதை என ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு. மறுப்பவர்களும் உண்டு. நகுலனின் ‘ ராமச்சந்திரன் ‘ பற்றிய கவிதையைப் புரிந்துகொள்ள அவர் மறதிநோய் உள்ளவர் என்ற தகவல் அறிவது அவசியம்.

விக்ரமாதித்யன் சுமார் 15 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தத்துவக் கவிதைகள் தவிர மற்ற கவிதைகள் பெரும்பாலும் யதார்த்தக் கவிதைகள்தாம். உரைநடை போலத்தான் இருக்கும் . கவிதை
இல்லை எனத் தள்ளமுடியாது.
கரடி சைக்கிள் விடும்போது
நாம்
வாழ்கையை அர்த்தப்படுத்த முடியாதா?
— என்று கேள்வி எழுப்புகிறார் விக்ரமாதித்யன். மேற்கண்ட வரிகளில் கவிமொழி என்று எதுவும் இல்லை.
கைலியல்லாது
வேட்டி கட்டுவானா
தீபாவளிக்கேனும் ?
— என்று ‘ மூணு சீட்டுக்காரன் ‘ கவிதையில் கேள்வி கேட்பார் .
ரவி சுப்ரமணியன் கவிதைகள் யதார்த்தமானவை.
நாலு வயசு
காசில்லா மனசு
பொம்மைக்கு
விளையாட்டுப் பொருளுக்கு
சூடான பஜ்ஜிக்கு ஏங்கி
அதட்டலுக்குப் பயந்து
காட்சிகள் மட்டும்
கண்டு திரும்பும்
— என ஏழைச் சிறுவனுக்காகப் பேசுகிறார் ரவி. அணியழகு , அசாதாரணச் சொல்லாட்சி இல்லை
என்பதற்காக இவ்வரிகளை நிராகரிக்க முடியுமா?
கண்ணில் தெரியும் சாமி
மனசில் இன்னும் வரவில்லை
— என்கிறார் ஓரிடத்தில். வாலிபப் பருவத்தில் பலரது மனம் இப்படித்தானே இருக்கிறது !
இளம்பிறையின் கவிதைகள் யதார்த்தமானவைதான். அவர் கவிதைகளில் ஆகச் சிறந்த கவிதை என
நான் நம்புவது ‘ அப்பாவின் கையெழுத்து ‘ ! கல்லாமையின் கொடுமையை ஒரு சிறுமி தன் தந்தையிடம்
காண்கிறாள். தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அட்டையில் அவள் அப்பாவி கையெழுத்தைப் பெற
படாதபாடு பெறுகிறாள் என்பதுதான் கவிதையின் பேசுபொருள். ‘ யாம்… யாம்… நான் என்ன / கையெழுத்துப் போடத் தெரியாதவனா? ‘ எனக் கேட்பதும் அடுத்த நொடியே ‘ அந்த சிலேட்டுப் பலகையை எடுத்து / என்பேர எழுது ‘ என்பதும் கல்லாமையின் அறியாமை . பிடிக்கவில்லை திரைப்படம்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பிடித்திருக்கிறது
உன்னுடன் உட்கார்ந்திருப்பது
— என மென்மையான காதலைச் சொல்கிறார். மேற்கண்ட வரிகளில் என்ன கவித்துவம் இருக்கிறது.
இதே கருத்தில் கவிமொழி கலந்தால் யதார்த்தம் மறைந்து கவிநயம் பிறக்கும்.
சமீபத்தில் திண்ணை . காம் இதழில் வெளியான என் ‘ வெங்காயம் – தக்காளி ‘ என்ற கவிதை பற்றிக்
கருத்து சொல்ல வந்த ஒருவர் கீழ்க்கண்டவாறு எழுதியள்ளார் :
” உரைநடைச் சொற்களை மடித்துப் போட்டெழுதி கவிதை என்ற வட்டத்திற்குள் பட்டமாகவிட
முயல்கிறார். வசனகவிதை என்று சொல்லக்கூட அதில் கவிதை நயமில்லையே ! கருத்தைச் சொல்ல
மட்டுமென்றால் அது உரைநடையில்தான் இருக்க வேண்டும். கவிதை என்ற நாடகமேன் ? ”
புதுக்கவிதையில் யதார்த்தக் கவிதைகளைப் பலர் எழுதியுள்ளனர். இந்த வடிவத்தை ஏற்றுக்கொள்வதும்
ஏற்றுக் கொள்ளாமல் விடுவதும் வாசகர் விருப்பம். ‘ வெங்காயம் – தக்காளி ‘ கவிதையை நான் எழுத
வேண்டிய அவசியம் என்ன ? வியாபாரி ராஜசேகரிடம் காய்கறி வாங்கும் வாடிக்கையாளர் ஸ்ரீராம்
வழக்கமான நபர்களிடமிருந்து வேறுபடுகிறார். எந்த வாடிக்கையாளராவது காய்கறி வியாபாரிக்குத்
தீபாவளி – பொங்கலுக்கு அன்பளிப்பு தருவாரா ? காய்கறி நிறுக்கும்போது யாரும் பக்கத்தில் இருப்பதில்லை என்பதில் எத்தகைய நம்பிக்கை ! இச்சிறப்பியல்புகளைப் பதிவு செய்யவேண்டியே நான்
அக்கவிதையை எழுதினேன். கவிமொழியைக் கையாண்டால் யதார்த்தம் அல்லது வித்தியாசமான
சிறப்பியல்புகள் சிதைவுபடும். இதில் நாடகத்தன்மை எப்படித்தோன்றும் ?
‘ வாழ்க்கை செய்தியாக … ‘ என்ற என் கவிதையில் 103 வயது மூதாட்டியைப் பற்றி நான் பேசியிருக்கிறேன். ஸ்ரீரங்கத்தில் வசித்தவர் அவர்; தற்போது இல்லை. சாலையோரத்தில் நடைபாதையில்
ஒரு சிறு சாக்கை விரித்து மாங்காய் , எலந்தப்பழம் , கொடுக்காய்ப்புளி நிலக்கடலை போன்றவற்றை
விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தார். அந்த யதார்த்தக் கவிதை இப்படித் தொடங்குகிறது.
வற்றிய
கரிய மெலிந்த விரல்களால்
அந்த மூதாட்டி
மாங்காய்களுக்கு வலிக்குமோவென
அவற்றைக் கூறு கட்டுகிறாள்

நடைபாதையின் சிறு குழியில்
கரித்துண்டுகள் உமிழும் தீயில்
சோளக்கதிர்கள்
இதமாய்த் தீய்ந்து
உண்ணத் தயாராக இருக்கின்றன
— இவ்வரிகளில் இலக்கிய மொழிநடை என்ன இருக்கிறது ? காட்சிப்படுத்துதல் காணப்படுகிறது.
இது உரைநடைக்கும் பொருந்தும். கவிதை என்பது பொதுவாக ஆங்காங்கே அழகூட்டப்படுவது.
‘ பூவெல்லாம் உன் வாசம் ‘ என்ற திரைப்படத்தின் பெயரிலேயே கவித்துவம் இருக்கிறது; யதார்த்தம்
இல்லை.
உன் நெஞ்சத் தட்டில்
என்னைக் கொட்டினேன்
— என ஒரு திரைப்படப் பாடலில் கண்ணதாசன் எழுதியுள்ளார்.அழகான படிமம் அமைந்துள்ளது.
பளிச்செனக் கவித்துவக் குறிப்பு நம்மை ஈர்க்கிறது. இதில் யதார்த்தம் இல்லை.
நிலாவிலிருந்து நிலத்தைப் பார்த்தேன்
நீதான் தெரிந்தாய்
என்ற திரைப்படப் பாடலில் கவித்துவம் இருக்கிறது. கவித்துவம் இருந்தால் யதார்த்தம் ஓடிவிடுகிறது.
யதார்த்தம் அமைந்துவிட்டால் கவித்துவம் தலைகாட்டுவதில்லை. எனவே கவிதை வரலாற்றில் எதிர்
காலத்திலும் யார்த்தக் கவிதைகள் எழுதப்படும் என்பது என் துணிபு !

Series Navigationஅழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழாசெழியனின் நாட்குறிப்பு-
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *