சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 11 of 12 in the series 3 மார்ச் 2018

சுயாந்தன்

“சாய்வு: அத்துமீறலின் புலப்பதிவு, செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்” என்று கதை மீதான ஒட்டுமொத்தமான பார்வைத் தலைப்பை இட்டிருக்கிறேன். இதில் முதலாவது, கதை மீதான சாதகத் தன்மைகளையும், இரண்டாவது கதையின் பலகீனங்களையும் ஆராய்கிறது.

1. அத்துமீறலின் புலப்பதிவு.

அத்துமீறலுக்கான வியாக்கியானங்கள் எல்லா மட்டத்திலும் இருந்தெழுபவை. அதற்கு விஞ்ஞானம், பண்பாடு, இனம், சமூகம், மொழி, சமாதானம் என்று எந்தப் பிரிவினையும் கிடையாது. அந்த அத்துமீறல்கள் ஆரம்பத்தில் ஒரு வியப்பையும் போகப்போகப் பழக்கப்பட்ட ஆழ்மன பிம்பத்தையும் நம்மிடையே அளிக்கின்றது. இதன் புரிதல்களுக்கான பக்குவம் உருவாக நம் சமூகத்தின் கடப்பாடுகள் வழிசெய்யாது. அந்தப் புரிதலை அடைய இரண்டு வழிகள் உண்டு.
1. அனுபவம். 2. இலக்கியம்.
அனுபவத்தை நம் சமூகத்தின் அடைவுகளைத் தாண்டி புதிதான சூழலில் சேரும்போது அதன் உத்வேகமான “மன நிகேதனம்” நமது சுய சிந்தனைகள் மீது கேள்விகளைத் தொடுக்கக் கூடியது. அதற்கான புரிதல்களை ஆரம்பத்தில் இலக்கியம் மூலம் அடைந்து வைத்திருப்போம் என்றால், விடைகளை எழுத்தின் மூலம் நம்மால் வெளிப்படுத்த முடியும். இந்த வெளிப்பாட்டைக் “Culture Shock” என்ற கோட்டின் மூலம் பிரிப்பவர்கள் கல்வியியலாளர்கள். வெளியில் இருப்பவர்களால் அதனை வெறுமனே கலாச்சார அதிர்ச்சி என்று வகுக்க முடியாது. அப்படி வகுப்போம் என்றால் அந்த இலக்கிய வெளிப்படுத்துகை ஒரு வெளிறிப்போன தட்டையான ஆக்கமாகவும், வன்மம் கொண்ட புறக்கணிப்பை மட்டுமே வேண்டுகின்ற மரபுப் பார்வையாகவுமே இருக்கும். அதன் மீதான பார்வைகளை “அத்துமீறலின் புலப்பதிவு” என்ற கட்டுக்குள் வைத்துப் பார்க்கவேண்டும். இந்தக் கட்டு நம் சமூகத்தின் அத்தனை கட்டுக்களையும், பிரம்மைகளையும், பேசாப்பொருட்களையும் பேசி நகர்வது.

“சாய்வு” என்ற அனோஜனின் கதையை நாம் இவ்வாறுதான் அணுகவேண்டும். பலர் என்ன காரணத்துக்காகத் திருமணம் செய்கிறோம் என்று தெரியாமலே திருமணம் செய்கின்றனர். அந்தக்காரணத்தைத் துல்லியமாக அறிந்துகொள்ளும் வயது இருபது தொடக்கம் முப்பது. எவனொருவன் அதற்கான காரணம் இதுதான். இதன் உள் விடயங்கள் பண்பாடு-கலாசாரம் தாண்டிய கருவானவை என்ற புரிதலை அடைகின்றானோ அவனால் காதல்-காமம்-உடல் பற்றிய அக-புற வெளிப்பாடுகளைக் காட்சிப்படுத்தமுடியும். சாய்வு கதையின் கருவாக அதனைக் கருதுகிறேன். தமிழ் இளைஞன் இங்கிலாந்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறான். அருகிலுள்ள அறைக்குக் குடியிருக்க சீன யுவதி வருகிறாள். இருவரும் பேசிக்கொள்கின்றனர். உரையாடுகின்றனர். தொடுகை மோதலாக மாறுகிறது. பின்னர் உடலியல் உறவுகளையும் வைக்கின்றனர். அந்த உறவு வைத்தலுக்கான காரணத்தை அத்துமீறிய சில விடயங்களைக் கொண்டு கதை நியாயப்படுத்துகிறது. சகோதர-சகோதரிகளின் புனிதம் தகர்க்கப்படுகிறது. அல்லது அந்த உறவின் இதுவரையான பாரம்பரியப் பார்வை மாற்றுநிலைப்படுத்தப்படுகிறது. இதனை கலாசாரப் பார்வையில் ஏற்றுக்கொள்ள முடியாது. என்றாலும் அங்குள்ள கலாச்சார வேர்களில் இதன் தாக்கம் சாதாரணமானது. இங்கு இந்த விடயத்தைப் பதிந்தபோது கதாசிரியரின் பலம் என்னவென்றால், அத்துமீறலுக்காக எடுத்துக்கொண்ட பெண்ணின் வளர்ப்பிடமும் பூர்வீகமும் சீனா-ஹொங்கொங் என்று வருகிறது. இங்கு இவ்வகையான Incest உறவுகளைச் செய்திகளில் சாதாரணமாக வாசிக்கலாம். அதனை நமது அனுபவத்துடன் கதைப்படுத்துவதில் கண்ணியம் என்று கலாசார காவலர்கள் கருதுபவற்றை கதையாசிரியர் நிராகரித்து எழுதியுள்ளார்.
அத்துமீறலின் புலப்பதிவு என்பதை இக்கதையின் மிகமுக்கியமான பலமாகக் கருதலாம். அனோஜனின் இதம் கதையில் வரும் சிங்களப் பெண்ணுக்கும் சாய்வு கதையின் சீனப் பெண்ணுக்கும் இடையில் பெரியதொரு பண்பாட்டு நகர்வையும் கலாசார தகர்ப்பையும் அவதானிக்கலாம்.

2. செயற்கையாக்கத்தின் குழந்தைத்தனம்.

பாலுறவுக் கற்பனையில் மீந்துகொண்டிருக்கும் மனம் எதிரிலுள்ள மாற்றுப் பாலினத்தவர்களைக் கண்டதும், ஸ்தூல சரீரமும் சூட்சும சரீரமும் என்ற இருவேறு நிலைகளும் இணைந்து நிலையற்றுத் தவிக்கத் தொடங்குகிறது. அதனை விட்டு விலக சொப்பன மைதுனமோ, நனவு மைதுனமோ தேவைப்படுகிறது. இங்கு மைதுனம் என்று நான் குறிப்பிட்டது “Sexual Union”. இந்த பாலியல் ஐக்கியத்தின் நிலைபேறற்ற எழுத்துக்கள்தான் அனோஜனின் சாய்வு என்ற கதை. இதில் இருக்கும் செயற்கைத் தன்மைகளை அழுத்தமாகக் கூற அல்லது செயற்கைத் தன்மைகளை நியாயப்படுத்த தன்னிலை அனுபவம் போல கதையை நகர்த்தியுள்ளார். அது வாசிப்பவனிடத்தில் ஒரு உண்மையான, செயற்கைப்படுத்தாத முன்வைப்பு என்று எண்ணவைக்கும். இதற்கான பிரயத்தனம்தான் சீனப்பெண்ணுடனான உரையாடல்களும் உடலுறவுகளும்.

சாய்வு கதையை நான் விரும்பக் காரணம் அதன் மொழிநடையும், அசாதாரணமான மரபுமீறலும்தான். ஆனால் அதனுள் இருக்கும் குழந்தைத் தனங்களைச் சொல்லாமல் விடமுடியாதல்லவா?.
A. எவ்வளவுதான் ஐரோப்பியக் கலாச்சாரம் வெளிப்படையான மனதுடன் செயற்பட்டு வந்தாலும் அதற்கென்று இறுகிய பல தனிநபர் சார்ந்த சிந்தனைகள் இருக்கவே செய்கிறது. ஆசியாவிலிருந்து செல்லும் இருவர் அந்தப் பண்பாட்டைப் புரிந்து கொள்ள நீண்டகாலம் எடுக்கலாம். அவ்வாறு புரிந்து கொண்டாலும் பரஸ்பரம் பாலுறவு பற்றிய பிரக்ஞை ஒற்றைப் புன்னகையுடன் இருவருக்கும் வந்துவிடுவதில்லை.
இந்த வழக்கமான போக்கைக் கதையின் முற்பாதியில் அவதானிக்கலாம். கதையின் ஆசிரியரே கதை சொல்லியாகவும், கதையின் பாத்திரமாகவும் அமைவதனால் இதன் குழந்தைத் தனங்கள் மீந்திருக்கின்றன. சுய அனுபவக் குறிப்புகளுடன் கற்பனைகளை ஏற்றும்போது அவற்றின் குழந்தைத் தனங்களைக் கண்டறிவதில் வாசகனுக்கு அவ்வளவு இடர்பாடுகள் ஏற்படப்போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
B. எவ்வளவுதான் அப்பாவியான ஆணைக் கண்டாலும் அவன் ஒரு பெண்ணின் கையால் அடியுதை வாங்குபவனாக இருந்தாலும் ஒரு பெண் தான் தனது சோதரனுடன் உறவுகொண்டதை அவ்வளவு சாதாரணமாகக் கூறிவிடமாட்டாள். அவ்வாறு கதைக்குக் கூறுகிறாள் என்றால் அப்பெண்ணைப் பற்றிய பட்டவர்த்தனமான முன்முடிபுகளை வாசகருக்கு அளிக்கவேண்டிய கடமையிலிருந்து கதையாசிரியர் தவறிவிட்டார் என்றே நினைக்கிறேன். சோதரனுடைய தொடுகையும் கதைசொல்பவனின் தொடுகையும் ஒரே இடம் என்பதனால் அது சாதகம்தானே என்ற தர்க்கம் கதையின் செயற்கையாக்கமன்றி வேறில்லை.

3. மொழிநடையும் அழகியலும்.

ஒரு பெண்ணுடனான சந்திப்பு நிகழ்ந்த சம்பவங்களைக் கூறிக்கொண்டு வரும்போது அவளது உருவமைப்புப் பற்றிய வருணனைகளும் உவமைகளும் வரிசையாக வருகின்றது. தோல், கண், முகம், தேகம் என்று ஒவ்வொரு சம்பவங்களை அடுத்தடுத்து பிரயோகிக்கப்படுகிறது. இதனை

கதையின் மொழிப் பிரயோகத்தில் முக்கியமான அம்சம் ஒரு சீனப் பெண்ணை ஒப்பிடுகையில் இலங்கையின் முக்கியமான நமது வாழ்வின் அன்றாடக் குறியீடுகளான விடயங்கள் குறிப்பிடப்படுகின்றது. பனங்கிழங்கு, நித்திய கல்யாணி என்று பல. சீனப் பெண்ணின் புன்னகையை நம் நாட்டின் நித்தியகல்யாணியுடன் ஒப்பிடுவது தேர்ந்த அழகியல் என்றும் கருதலாம்.
“தலைகீழாகத் தெரிந்த உன் முகத்தில் புன்னகை வளர நித்திய கல்யாணிப் பூக்கள் கிளையில் ஆடியசைந்தது போல் இருந்தது.”

இதனை விட அனோஜனின் அநேக கதைகளின் மனம் பொருளாதாரத்தின் மேல்தட்டுச் சார்ந்தது. எங்கும் ஜாதீய, இனத்துவ அடையாளங்களின் ஆழ்மன வெளிப்பாடுகள் தீவிரமாக எதிரொலிக்காத தன்மையை அவதானிக்கலாம். உதாரணமாகச் சில கதையாசிரியர்களை எடுத்தால் அவர்களது கதையின் மனவெளிப்பாடுகளைக் கொண்டு அவ்வாறான போக்கைக் காணலாம். புதுமைப் பித்தனின் கதைகளின் கதாபாத்திரங்கள், களங்கள் சைவ வேளாள ஜாதிய மரபையும் மௌனியின் கதைகளில் பிராமண மரபையும் தெளிவாக அடையாளம் காணலாம். இதனை ஆழ்மன வெளிப்பாடு என்றும் இதுவே ஒரு யதார்த்தக் கதையாசிரியரின் வெளிப்பாடு என்றும் கூறலாம். இதனை அவன் வெளிப்படுத்தா விட்டால் அவனின் கதை தட்டையான ரூபத்தை அடையும் என்பது தெளிவு. இங்கு அனோஜனின் கதையின் பலமாகவும் பலவீனமாகவும் நான் கருதும் ஒரு புள்ளி இதுதான். இதனை இவர் தன் பொருளாதார மேல்தட்டின் தளத்தில் நின்று பாலுறவுகளாகவும், உல்லாச வாழ்வாகவும் கூறுகிறார். இதனைத் தன் இனத்துவ ஜாதீய ஆழ்மனப் போக்குகளின் சமகால மாறுகை என்று பலமாகக் கருத வாய்ப்புண்டு. அதே நேரம் இந்த பொருளாதார மேல்த்தட்டு மனோநிலை என்பது ஒரு உயர் வர்க்க எண்ணப்பாடு என்ற பலவீனமான கூறுமுறை ஒன்றும் அதற்குள் எதிரொலிக்கிறது என்பதையும் நாம் அடையாளம் காணவேண்டும்.

Series Navigationஇங்கும், அங்கும், எங்கும் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்தொடுவானம் 211. புதுக்கோட்டை பயணம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *