தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

9 ஆகஸ்ட் 2020

சிருஷ்டி

ரிஷி

Spread the love

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

”கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்’ என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது.
எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான்
-தன் வாரிசு என்று.
“உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது?
நீ தானே விலைக்கு விற்றாய்?’
என்று ஊரின் நடுவில் நின்று பொய்யை உரக்கக் கூவி
அன்பில்லாத அரக்கனாய் அடையாளங்காட்ட முனைகிறான்
அந்த அன்புத் தந்தையை.
ஆறுகோடிகளை நேரில் கண்டபோதுகூட விரிந்ததில்லை
அந்தத் தகப்பனின் விழிகள்.
சுற்றிலுமுள்ள கண்டங்களிலெல்லாம் குத்துமதிப்பாக தலா
இரண்டு அல்லது இரண்டைந்து கூட கோபுரங்கள்
கட்டியெழுப்பியிருப்போரும்
ஒரே சமயத்தில் இருவேறு இடங்களில் பொழுதைக் கழிப்பது
ஏலாதுதானே!’ என்பான்.’
‘கற்றவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பல்லோ…..!
பெற்றெடுத்த பிள்ளைமேல் அவனுக்குக் கொள்ளைப்பிரியம்.
குழந்தை, வெள்ளைத்தாளில் விரிந்ததோர் புது உலகம்;
எழுதித்தீராப் பேரிலக்கியம்!
புத்திரசோகத்தில் அநாதரவாயுணர்ந்தாலும்
அந்தத் தகப்பன் கத்தியழவில்லை; கையேந்தித் தொழவில்லை.
ஆங்காங்கேயுள்ள ஆராய்ச்சிமணியை ஒலிக்கச்செய்தபடியே
தன் பிள்ளை திரும்பக் கிடைக்கவேண்டி
தக்கபல தர்க்கங்களும் ஆவணங்களோடும்
நடமாடும் நீதிமன்றங்களிலெல்லாம் வழக்காடியபடியே
சென்றுகொண்டிருக்கும் அந்த மனிதனைப் பார்த்து
பிள்ளை கடத்திய நபரும் அவரைப் போற்றிப்பாடும் சிலரும்
எள்ளிநகையாடிக்கொண்டிருக்கிறார்கள்
புலர்ந்தும் புலராததுமாயுள்ள நியாயத்தீர்ப்பு நாளை
வரவேற்பதாய்
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு’ என்று
குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது
தெருவோரப் பெட்டிக்கடை.

Series Navigationதைராய்டு ஹார்மோன் குறைபாடுநெஞ்சுக்குள் உன்னை அடைப்பேன் மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

Leave a Comment

Archives