இரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும் இந்த நேரம்தான். ‘அவசரப்படாதே, யாரோ அழைக்கிறார்கள். பேசிவிட்டுப் படு’ என்றது என் தொலைபேசி. எடுத்தேன். ‘சார், நான் நீல்பேரி பேசுறேன். சான்ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இருக்கிறேன். எனக்குத் தெரியும் சார் இப்போ அங்கே இரவு 2 மணி. இங்கோ பகல் 2 மணி இங்குள்ள அதிகாரிகள் என்னையும் மகள் சாருலதாவையும் தனியாக ஒரு அறையில் இருக்கச் சொல்லிவிட்டு அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்கிறார்கள். ஒன்னும் புரியல சார். இப்பத்தான் தொலைபேசியைக் கொடுத்துப் பேச அனுமதித்தார்கள். யாரிடமாவது பேசினால் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கலாம். உறவுகளையெல்லாம் விட பெரிய உறவு நீங்கதான் சார். உங்களால் ஏதும் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் பேசுறேன். மன்னியுங்கள்’
நீல்பேரி தன் மகள் சாருவை சான்ஃபிரான்ஸிஸ்கோவிலுள்ள ஒரு அசோசியேட் கல்லூரியில் சேர்ப்பதற்காக என்னிடம் சொல்லிக்கொண்டுதான் புறப்பட்டார். ஏதோ நடக்கிறது. ‘நீல்பேரி, கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மீண்டும் அழைக்கிறேன்.’ என்று சொல்லி தொலைபேசியைத் துண்டித்துவிட்டு சான்ஃபிரான்ஸிஸ்கோவில் இருக்கும் என் மகளை அழைத்தேன். சில மாணவர்களுடன் அவர் இருப்பார். அல்லது சில ஆசிரியர்களுடன் இருக்கலாம். அதனால் என்ன? அழைத்தேன். எடுத்தார். அவருக்குத் தெரியும். சிங்கப்பூரில் நடு இரவு என்று.
‘ஹலோ. என்னத்தா. இந்த நேரத்தில். ஏதும் பிரச்சினையா? ‘
‘ஆம். எனக்கு மிகவும் வேண்டியவர். நீல்பேரி. அவரை விமான நிலையத்தில் தடுத்து வைத்திருக்கிறார்கள். நீ உடனே விமானநிலையம் செல். அவரை எப்படியாவது வெளியே கொண்டு வா.’
‘என்னத்தா? விளையாட்டா இருக்கா? எனக்கு மேல நாலு பேரு இருக்காங்க. அத்தனை பேர்க்கிட்டயும் அனுமதி வாங்கணும்.’
‘வாங்கு’
‘அப்படியெல்லாம் ஈஸியா முடியாதுத்தா’
‘நா மஹுத்தாப் போயிட்டேன்னு சொல்லு. இல்ல. கடுமையான ஹார்ட் அட்டாக்னு சொல்லு. உண்மையிலே அப்படி ஆனாலும் இப்புடித்தான் சொல்வியாம்மா’
‘அத்தா’
‘சாரிம்மா. உனக்கு நா எவ்வளவு முக்கியமோ அவ்வளவு எனக்கு அவர் முக்கியம்.
‘சரிங்கத்தா. உடனே போறேன்.’
மீண்டும் நீல்பேரியை அழைத்தேன். ‘என் மகள் வந்துகொண்டிருக்கிறார். அமைதியாய் இருங்கள் நீல்பேரி.’
என் மகள் இப்போது விமான நிலையம் சென்று கொண்டிருப்பார். தொந்தரவு செய்யக்கூடாது. ஒரு செய்தியை மட்டும் அனுப்பினேன். ‘மகளே, உன்னிடமிருந்து ஒரு நல்ல செய்தி வரும்வரை தூங்கமுடியாதம்மா.’ நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. விமான நிலையத்தில் என்ன நடந்து கொண்டிருக்கும். என் மகள் நீல்பேரியைப் பார்த்துவிட்டாரா? அவர் வெளிவே வந்து விடுவாரா? அல்லது திரும்ப சிங்கைக்கே அனுப்பிவிடுவார்களா? ‘மடையா! அமைதியாக இரு. நடக்கவேண்டியது நடக்கும்.’ என்று என்னைத் திட்டியது என் ஏழாம் அறிவு.
சரியாக 4.30மணி. மகள் அழைக்கிறார். உள்ளங்கையெல்லாம் வியர்வை. தொலைபேசி நழுவியது. இறுகப் பற்றி ‘ஹலோ’ என்றேன். மகள் சொன்னார். பிரச்சினை தீர்ந்ததத்தா. சமீபத்தில் ஒரு தீவிர வாதத் தாக்குதல் இங்க. அதுல சம்பந்தப்பட்ட ஒருத்தன் பேரு ஹாபேரி. இவர் பெயர் நீல்பேரி. பேரி என்ற சொல்லின் எழுத்துக்கள் ஒரே மாதிரி. அவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு. இருவருக்கும் தொடர்பு இருக்கலாம்னு. ஆனா, இருக்கமுடியுமா? அதையெல்லாம் சட்டத்துக்கு வெளியேருந்து அவங்களால சிந்திக்க முடியாது. நம்மல மாரி யாராச்சும் தலையிட்டாலொழிய ரொம்பக் கஷ்டம்தா. நா ஒரு ஆசிரியர் 15 வருஷமா இருக்கேன். என் கணவரக் கூப்பிடவா அவர் ஒரு பெரிய கம்பெனில ரிசர்ச் அஸிஸ்டன்ட். எங்க பள்ளிக்கூட முதல்வரக் கூப்பிடவா. யாரு சொன்னா நீங்க கேப்பீங்க. எதுல கையெழுத்துப் போடணும். சொல்லுங்க. அவர் பாஸ்போர்டப் பாத்திங்களா? ஆறு வருஷமா அவரு சிங்கப்பூர விட்டு வெளியேயே போகல. என்று கத்தினேன். நாலஞ்சு பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு விட்டுட்டாங்கத்தா. இப்ப அவங்கள அட்மிஷன் கிடைத்திருக்கும் சிட்டி காலேஜ் ஆஃப் சான்ஃபிரான்ஸிஸ்கோ கூட்டிப்போறேன். அந்த முதல்வர்ட பேசுறேன். அங்க சேத்துட்டு, அவங்கள அவங்க இருக்க வேண்டிய இடத்துல விட்டுட்டு அப்புறம் நா வீட்டுக்குப் போறேந்த்தா.’
‘நன்றி. மகளே. மன்னித்துவிடம்மா. நா அப்படி சொல்லியிருக்கக் கூடாது.’
‘பரவாயில்லத்தா.அப்படிச் சொல்லலேன்னா எனக்கு அந்தப் பிரச்சினையின் ஆழமே தெரிஞ்சிருக்காதத்தா. ‘ என்று சொல்லி தொலைபேசியை நீல்பேரியிடம் கொடுத்தார் மகள். நீல்பேரியிடம் இப்போது தொலைபேசி. ஏதோ சொல்ல நினைக்கிறார். ஓர் எழுத்தைக் கூட உச்சரிக்க முடியாமல் உடைந்து கொண்டிருக்கிறார். ‘பரவாயில்லை நீல்பேரி. பிறகு பேசுவோம் ‘ என்றேன்.
யார் இந்த நீல்பேரி.?
நாலைந்து ஆண்டுகளுக்கு முன் என்னை முதன்முறையாக அழைத்தார். ‘சார், என் மகள் சாருலதா இப்ப ராஃபிள்ஸ்ல படிக்கிறார். மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அத்தனைக்கும் உங்க உதவி தேவை’ என்றார். வேறு எதையுமே அவர் கேட்கவில்லை. என் கட்டணம் எவ்வளவு? எத்தனை மணிநேரம்? வாரத்துக்கு எத்தனை வகுப்பு? இந்த பாடத்திட்டம் உங்களுக்குத் தெரியுமா? ஒரு க்ளாஸ் எடுங்க.’ என்றெல்லாம் பேசும் சராசரி பெற்றோர்களையே பார்த்த நான் ஆச்சரியப்பட்டே.ன். ஒரு வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு அவர் வீட்டுக்குச் சென்றேன். உட்லண்ட்ஸில் ஒரு பெரிய காண்டோ ஐந்தறை வீட்டில் மூன்று பேர் மட்டும். அவரே சொன்னார். கப்பல் கம்பெனில வேலையாம். இந்த வீடு அந்த கம்பெனிக்கு சொந்தமாம். இவங்கல தங்க வச்சிருக்காங்களாம். என்னை ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். நான் எதிர்பார்த்ததுபோல் அது படிக்கும் அறையல்ல. பூஜை அறை. சில கடவுள் படங்களுக்கு நடுவே பாரதிராஜா படத்தில் வரும் ‘ஆத்தா’ போல ஒரு படம். அவருடைய தாயாராகத்தான் இருக்கவேண்டும். தாயைக் கடவுளாக மதிக்கிறார். தாயைக் கடவுளாக மதிக்கும் மனிதனும் கடவுள்தானே. நான் எனக்குள் சிந்தித்துக்கொண்டே வியக்கிறேன். என்னை இங்கு ஏன் அழைத்துவந்தார். ‘வாம்மா சாரு. சார்ட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க.’ என்றார். அவர் மகள் உடனே மண்டியிட்டு என் காலில் விழுந்தார். பின்னால் நகர முயன்றேன். முடியவில்லை. ஒரு குத்துவிளக்கு தடுத்தது. தொட்டுத் தூக்க முடியாது. கலாச்சாரம் தடுத்தது. சிங்கப்பூரில் எத்தனையோ மாணவர்கள், பெற்றோர்கள் என் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறார்கள். இப்படி ஒரு பெற்றோரா? திகைத்துக் கொண்டிருக்கும்போதே சாருலதா அப்பா வைத்திருந்த தாம்பாளத்தை என்னிடம் நீட்டினார். இரண்டு வெற்றிலையும் ஒரு வெள்ளி காசும் இருந்தது. ‘குரு தட்சனை சார். எங்க அப்பா அடிக்கடி சொல்வார். குருவா வர்றவர் குலதெய்வம் மாதிரிப்பா’ எனக்கு சிலிர்த்தது. இவர்களெல்லாம் மனிதர்களா, அல்லது இப்போதுதான் வானத்திலிருந்து இறங்கிய தேவர் தேவதைகளா? இப்படியெல்லாம் கூட ஆசிரியரை மதிக்கும் மக்கள் இருக்கிறார்களா? அதுதான் எங்களின் முதல் சந்திப்பு.
சாருலதா ஒரு தெய்வீகப் பெண். மனத்திலுள்ள தெய்வத்தன்மை முகத்தில் வெளிப்படுகிறது. கண்களில் எப்போதுமே அறிவு வெளிச்சம் காட்டும். உதட்டோரம் ஒரு புன்சிரிப்பு எப்போதும் நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கும். ஒரு நாள் நீல்பேரியிடம் கேட்டேன். ‘அது என்னங்க நீல்பேரி. கேள்விப்பட்டதே இல்லை அந்தப் பேர். நீங்கள் முதலில் உங்கள் பெயரைச் சொன்னபோது, தமிழராக இருப்பீர்கள் என்றே எனக்குத் தோன்றவில்லை’ ‘ஹ ஹா, எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி சார். நீங்க தாமதமா கேட்ருக்கீங்க. நீலகண்டன், பேரறிவாளன் என்பதன் சுருக்கம் சார் அது. என் உண்மையான பெயர் நீலகண்டன் பேரறிவாளன். நீலகண்டன், பேரறிவாளன் இரண்டு பேருமே எங்க அப்பாவின் ஆசிரியர்கள். நெல்லைக் கொட்டிவைத்து அதில் ‘அ’ ‘ஆ’ எழுதக் கற்றுக் கொடுத்தவர்கள் சார். அந்த இருவருமே எங்க அப்பாவுக்கு கடவுள் மாதிரி . எங்க தாத்தா நில அடமான வங்கில ஏதோ கடன் வாங்கிட்டாரு. எங்க வீடு ஜப்திக்கு வந்திருச்சு. எல்லா உறவுக்காரங்கள்ட்டேயும் அப்பா போனார். ‘கடன் அதிகம். வீட்டுக்கு அந்த மதிப்பு இல்ல. விட்டுரு. இருக்கிற காச வச்சி வேற வீடு கட்டிக்க இல்லாட்டி வாங்கிக்க’ என்றார்கள். யாருமே உதவ முன்வரவில்லை. உறவே இல்லாத இந்த இரண்டு ஆசிரியர்கள்தான் சார் வந்தார்கள். அவர்கள் வீட்டை அடமானம் வைத்து எங்கள் வீட்டைக் காப்பாற்றிக் கொடுத்தார்கள். பிறகு அப்பா வேறோரு நிலத்த வித்து அந்தக் கடன கொடுத்துட்டார். அந்த வீட்டக் காப்பாத்திக் கொடுத்துட்டு அந்த ஆசிரியர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா சார். ‘வாழ்ந்த வீடு. ஜப்திக்குப் போகக் கூடாது. உயிரே போனாலும் காப்பாத்தணும்.’ . இப்ப உங்களுக்குப் புரியும் சார், ஏன் எங்க அப்பா ஆசிரியர்கள குலதெய்வம்னு சொன்னார்னு. அவங்கள எங்க சந்ததியே மறக்கக்கூடாதுன்னுதான் எங்கப்பா எனக்கு நீலகண்டன் பேரறிவாளன் என்று பெயர் வைத்தார் என்று சொல்லி அவர் கண்களைத் துடைத்தபோது நானும் துடைத்துக் கொண்டேன். நான் செய்யும் வேலையின் புனிதம் எனக்குப் புதிதாகப் புரிந்தது.
ஒருநாள் நல்ல மழை. எனக்கு எப்போதுமே இருசக்கர வாகனம்தான். நீல்பேரி வீட்டுக்கு நடந்து சென்றபோது தேங்கிய நீரில் கால் வைத்துவிட்டேன். நான் நினைத்ததைவிட ஆழம். என் காலணியெல்லாம் மண். அப்படியே காலணியை வெளியே விட்டுவிட்டு நான் சாருவுக்கு வகுப்பெடுக்கத் தொடங்கிவிட்டேன். இரண்டு மணிநேரம். முடிந்தது. வெளியே என் காலணியைக் காணவில்லை. பேசாமல் நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து நீல்பேரி என் காலணிகளைக் கொண்டு வருகிறார். சுத்தமாக துடைத்து மெருகேற்றப் பட்டிருந்த்து. மிக மரியாதையாக என் காலணிகளை என் காலடியில் வைத்தார். தோள்களைப் பிடித்து ‘நீல்பேரி, என்னால தாங்கமுடியல நீல்பேரி. இதெல்லாம் யாருமே செய்யமாட்டாங்க.’ லேசாக உடைந்தேன். அவர் சிரித்தார். பேச்சை மாற்றினார். ‘எங்க அப்பா வயல்லேருந்து வருவாரு. இப்படித்தான் இருக்கும் அவர் செருப்பு. அவருக்குத் தெரியாம நான்தான் துடைத்து வைப்பேன்.’ ‘எங்க அப்பா எப்படித் தெரியுமா நீல்பேரி. சொன்னா ஆச்சரியப்படுவீங்க. எங்க அப்பா வாழ்க்கையில செருப்பே போட்டதில்ல. புல்லுக புள்ளக மாதிரி. செருப்புக் காலால மிதிக்க்க் கூடாதாம். நடந்து போகும்போது மழை வந்தா ஓட மாட்டார் ஏன் தெரியுமா? நாம மழைக்கு பயப்பர்றோம்னு தெரிஞ்சா மழை பெய்யப் பயப்படுமாம்’ எப்படியெல்லாம்
சிந்திக்கிறார்கள் பார்த்தீர்களா?’ என்றேன். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் எங்கள் அப்பாக்களைப் பற்றிச் சிந்திப்பது மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது.
இப்போது அமெரிக்காவிலிருக்கும் என் மகள் படிக்கும்போது வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்திருந்தேன். இரண்டு பிணைகள் கேட்டார்கள். என் பிணை மட்டும் போதாதாம். எனக்கு வயதாகிவிட்டதாம். தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டேன். யாருமே முடியாது என்று சொல்லவில்லை. அவர்களெல்லாம் ஏற்கனவே பிணை கொடுத்துவிட்டார்களாம் ஒருவர் இரண்டு பேருக்கு பிணை கொடுக்கக் கூடாதாம். அது உண்மையா அல்லது என்னிடமிருந்து தப்பிக்க சொல்லும் பொய்யா என்று எனக்குத் தெரியாது அப்போது இன்னொரு பிணையாக இருந்தவர் இந்த நீல்பேரிதான். என் மகள் இப்போது அமெரிக்காவில் இருப்பதற்கு நீல்பேரியும் ஒரு காரணம். இந்த நீல்பேரிக்கு நிறைய நான் கடன்பட்டுவிட்டேன். இதையெல்லாம் இந்த ஜென்மத்தில் என்னால் அடைத்துவிடமுடியுமா என்று தூங்க முடியாமல் துடித்திருக்கிறேன். அவர் சாதாரணமாக எதையாவது செய்துவிடுகிறார். எனக்கு உயிர் போவதுபோல் இருக்கிறது. இறைவன் பெரியவன். என் துடிப்பை அவன் விளங்கிக் கொண்டிருக்கிறான். அதனால்தான் என் மகள் மூலமாக என்னாலும் உதவி செய்ய முடியும் என்று காட்ட வைத்திருக்கிறான்.
சிலந்திப் பூச்சிகள் தன் வயிற்றைக் கழுவ தன்னைச் சுற்றி வலை பின்னிக் கொள்ள கடவுள் கற்றுக் கொடுத்திருக்கிறார். மனிதன் தன் உயிரைக் கழுவ தன்னைச் சுற்றி பாசவலைகளை பின்னிக் கொண்டிருக்கிறான். ஒரு நாள் நீல்பேரி கேட்டார். ‘பெரிய வீடு, பெரிய கார், உங்களுக்குக் கீழே வேலை செய்யப் பல பேர், என்று இருக்கும் பணக்காரர்களைப் பார்த்து இப்படியெல்லாம் நமக்கு இல்லையே என்று வருத்தப்பட்டதுண்டா சார்.’ நான் சொன்னேன். ‘இத்தனைக்கும் மேலாக பாசவலையில் என்னைப் பின்னி என் உயிரைக் கழுவ நாலு பிள்ளைகள் இருக்கிறார்களே. அவர்களை விடவா நீங்க சொல்ற இந்த கார் பங்களாவெல்லாம்’ என்றேன். என் கைகளைப் பிடித்துக் கொண்டு தேம்பினார் நீல்பேரி.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- தொடுவானம் 218. தங்கைக்காக
- கூறுகெட்ட நாய்கள்
- உயிரைக் கழுவ
- பாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்)
- பையன் அமெரிக்கன்
- குப்பையிலா வீழ்ச்சி
- மொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018
- திசைகாட்டி
- இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்
- வள்ளல்
- விழி
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்
- மன்னித்துக்கொள் மானுடமே..
- அப்பா அடிச்சா அது தர்ம அடி
- சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
- மருத்துவக் கட்டுரை வாய்ப் புண்கள்
- நாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்
- பியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்
- மாமனார் நட்ட மாதுளை
- உனக்குள்ளே !உனக்கு வெளியே !
- சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து
- இருபது தோளினானும் இரண்டு சிறகினானும்