தொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 14 in the series 29 ஏப்ரல் 2018
          இந்த முறை திருப்பத்தூருக்கு திரும்ப வருவேனா என்ற சந்தேகத்துடன் பிரயாண ஏற்பாடுகளில் இறங்கினேன். சில சாமான்களை மாத்திரம் வீட்டில் வைத்துவிட்டு மற்றவற்றை தெம்மூர் கொண்டுசெல்ல முடிவு செய்தென். கலைமகளின் துணிமணிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டோம். இனி நிச்சயமாக அவள் இங்கு வரப்போவதில்லை.
          மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே எனக்கு நன்கு பழக்கமாகிவிட்ட்னர். பலர் என்னிடம் நிறைவான அன்பு பாராட்டினார்கள் . குறிப்பாக கடைநிலை ஊழியர்களின் தலைவனாகவே நான் மாறியிருந்தேன். அவர்கள் எல்லாரிடமும் நான் வருத்தத்துடன் விடை பெற்றேன். அவர்கள் அனைவருமே என்னை திரும்பி வந்துவிடுமாறுதான் வேண்டிக்கொண்டனர்.
          தாதியர் பயிற்சிப் பள்ளியின் மாணவிகளிடம் நான் விடைபெற்றபோ து அவர்கள் கண்கலங்கினர். என்னுடைய மருத்துவ வகுப்புகளை மிகவும் விரும்பி ரசித்ததாவும் கூறினர். அவர்களையெல்லாம் விட்டுப் பிரிவது எனக்கும் கவலை தந்தது.
          விழியிழந்தோர் பள்ளியில்தான் பெரும் சோகம். அங்கு நான் சென்றதும் சிறு குழந்தைகள், ” டாக்டர் …டாக்டர் .. ” என்று மழலையில் சொல்லிக்கொண்டு என் கால்களைக் கட்டிக்கொண்டனர். அவர்களையெல்லாம் விட்டுப் பிரிவது மிகுந்த மன பாரத்தைத் தந்தது.
          வளாகத்தின் வெளியிலுள்ள நண்பர்களிடமும் விடை பெற்றபோது அவர்களும் வருந்தினார்கள் . அவர்களில் குறிப்பாக வேல்முருகன், கம்யூனிஸ்டு கருப்பையா, பாபா டியூட்டோரியல் அமீர் பாதுஷா , தபால் அலுவலம் ஊழியர்கள் குணசேகரன் ,ஜெயசீலன், திருப்பத்தூர் கடைத்தெருவில் முத்து மெடிக்கல் அபு பக்கர், பழக்கடைக்கார இஸ்லாமிய நண்பர்  ஆகியோர் அடங்குவர். இவர்களிடமெல்லாம் நான் திரும்ப வரமாட்டேன் என்பதுபோல்தான் விடைபெற்றேன்.
          தங்கையும் நானும் ஊர் சென்று இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டுதான் சென்னை புறப்பட திட்டமிட்டோம். திருவள்ளுவர் பேருந்தில் ஏறியபோது எங்களை வழியனுப்ப பால்ராஜ் , கிறிஷ்ட்டோபர், தேவஇரக்கம் ஆகியோர் உடன் வந்தனர். போய்ச் சேர்ந்ததும் கடிதம் போடச் சொன்னார்கள். முடிந்தால் திரும்பிவிடச் சொன்னார்கள். அவர்களின் முகங்களில் சொல்லமுடியாத சோகம் குடிகொண்டிருந்தது. என்னை வைத்து மருத்துவமனையில் மாற்றங்கள் கொண்டுவர வாஞ்சை கொண்டிருந்தனர். அந்த தைரியத்தில் தலைமை மருத்துவரை பகிரங்கமாக எதிர்த்துக் கொண்டவர்கள். இனி நான் அங்கு இல்லாத வேளையில் அவரால் பழிவாங்கப்படலாம். அதை எப்படி அவர்கள் சமாளிப்பார்கள் என்பது தெரியவில்லை. நான் இங்கேயே நிரந்தரமாக இருப்பேன் என்ற நம்பிக்கையில் என்னுடன் சேர்ந்து புரட்சியில் ஈடுபட்டவர்கள். இப்போது நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு நான் ஓடுவதுபோல் இருந்தது.
          அன்று இரவு பேருந்து பிரயாணம் முழுதும் திருப்பத்தூர் பற்றிய எண்ணமாகவே இருந்தது. கொஞ்சமும் தூங்கவில்லை. அங்கு தங்கியிருந்து பணியாற்றிய காலத்தில் நடந்தவை பற்றிய எண்ண அலைகளால் நெஞ்சம் அலைமோதியது.
          விடிந்தபோது சிதம்பரம் வந்துவிட்டோம். பால்பிள்ளை கூண்டு வண்டியில் வந்து காத்திருந்தான். வண்டி அருகில் படுத்திருந்த எங்கள் வீட்டு காளைகள் இரண்டும் எங்களைக் கண்டதும் எழுத்து நின்று தலையை ஆட்டி வரவேற்றன.நான் அவற்றைத் தட்டிக்கொடுத்தேன். நுகத்தடியில் அவற்றைப் பூட்டியபின்பு சவாரிக்கு தாயாராயின. போகும் வழியில் சூடாக தேநீர் பருகினோம். காலைப் பனியில் வீசிய குளிர் தென்றலில் அந்தச் சுவையான தேநீர் புத்துயிர் தந்தது.
          சாலையில் வேறு வாகனங்கள் இல்லாததால் காளைகள் மகிழ்ச்சியுடன் சாவரியில் ஈடுபட்டன. அரை மணி நேரத்தில் வீட்டு வாசலில் நின்றன. பால்பிள்ளை  வழிநெடுக என்னுடன் பேசிக்கொண்டுதான் இருந்தான். வண்டியை ஓட்டவில்லை. காளைகள் தானாகவே ஓடிவந்துவிட்டன! அப்பா அவற்றைத் தட்டித்தந்து கஞ்சித்தண்ணீரும் புண்ணாக்கும் வைத்தார்.அவரின் செல்ல காளைகள் அவை!
          கிராமத்தில் இருந்த இரண்டு நாட்களும் இன்பமும் சோகமும் கலந்திருந்தது. உறவினருடன் மீண்டும் இருந்தது இனபம். அவர்களை விட்டுப் பிரியவேண்டுமே என்பதில் சோகம். செல்வராஜும் கலைசுந்தரியும் வந்திருந்தனர்.அண்ணன் அண்ணியிடம் முன்பே சொல்லிவிட்டோம். உறவினர் வீடுகள் ஒன்று விடாமல் சென்று வந்தோம். பெரிய தெரு சென்று மாமா வீட்டிற்கும் , அங்குள்ள சின்னம்மாக்களின் வீடுகளுக்கும்  சென்று வந்தோம்.
          அம்மாவுக்கு மிகுந்த கவலைதான். எல்லாரும் கொஞ்ச காலம் ஒன்றாக இருந்தோம். இப்போது மீண்டும் நாங்கள் இருவரும் பிரிந்து தொலை தூரம் செல்வது அம்மாவுக்கும் பெருத்த ஏமாற்றம்தான்.முன்பு அப்பா சிங்கப்பூரில் இருபது வருடங்கள் இருந்துவிட்டு திரும்பினார்.நானும் சிங்கப்பூரில் பத்து வருடங்களும் கல்லூரி விடுதிகளில் ஆறு வருடங்களும் இருந்துவிட்டு வந்துள்ளேன். உடன் பிறந்த அண்ணனுடன்கூட இன்னும் மனம் விட்டு தாராளமாகப் பேச முடியவில்லை. பிரிந்திருந்த நாங்கள் ஒரு குடும்பமாக இப்போதுதான் தெம்மூரில் ஒன்று கூடி மகிழ்கிறோம். இப்போது மீண்டும் நாங்கள் இருவரும் பிரியப்பாகிறோம். அம்மாவை எப்படி ஆறுதல் படுத்துவது என்பது தெரியவில்லை.
          கலைமகளுக்கு அழுதுகொண்டுதான் அம்மா விடை தந்தார். கலைமகளும் கண்ணீருடன்தான் விடை பெற்றாள்.உறவினர்கள் யாருமே இல்லாமல் அவள் சிங்கப்பூர் செல்கிறாள். அந்த சோகம் அளவிடமுடியாததுதான்.
          சிதம்பரம்  தொடர்வண்டி நிலையத்திலிருந்து இரவு துரித வண்டியில் ஏறி தாம்பரம் புறப்பட்டோம்.இரவெல்லாம் பயணம். விடிந்தபோது தாம்பரம் வந்தடைந்தோம். அத்தை வீட்டில்தான் தங்கினோம். மறுநாள் சென்னை துறைமுகம் சென்றோம்.
          வழியனுப்ப அத்தை மகன் பாஸ்கரன் வந்திருந்தான். ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் கப்பல் பிரம்மாண்டமாக மிதந்து நின்றது. முன்பே நான் மனைவியுடன் பயணம் செய்த அனுபவம் எனக்கு. கலைமகளுக்கு இரண்டு பெண்கள் தங்கும் அறை. நான் ஆண்களை பகுதியில் தங்கினேன். அன்று மாலை கப்பல் புறப்பட்ட்து.
          சிங்கப்பூர் செல்ல ஏழு நாட்கள். நான் கொண்டுவந்திருந்த சிங்கப்பூர் வெள்ளிகளை வைத்துக்கொண்டு உல்லாசமாக இருந்தேன்.நீண்ட நாட்களுக்குப் பிறகு கூர்ந்த அங்கர் பீர் பருகினேன். அந்தப் பகுதியில் நடைபெறும் ” ஹவ்சி ஹவ்சி ” என்னும் விளையாட்டில் பங்கு கொண்டேன். மாலையில் கலைமகளுடன் கப்பலின் மேல்தளத்தில் நின்று கடலின் அழகையும் தொலைவில் தொடுவானத்தையும் கண்டு களித்தேன்.
         ஐந்து நாட்களில் பினாங்கு வந்துவிட்டொம். பின்பு கிள்ளான் வழியாக சிங்கப்பூர் வந்தடைந்தோம். துறைமுகத்தில் கோவிந்தசாமியும் பன்னீரும் வந்திருந்தனர். பன்னீர் என்னை கட்டிப் பிடித்துக்கொண்டான்.அனால் கோவிந்தசாமியோ ஏதோ யோசனையில் இருந்தான்.
          கோவிந்தசாமி தங்கையைப் பார்த்தான்.
          ” கலைமகளையும் அழைத்து வந்து விட்டாயா? ” என்று கோவிந்தசாமி என்னிடம் அப்போது கேட்டது எனக்கு வியப்பையூட்டியது. அவன்தான் இருவருக்கும் கப்பல் பயணச் சீட்டு அனுப்பியிருந்தான். இப்போது ஏன் அப்படி கேட்கிறான்.
          அப்போது பன்னீர் என்னை தனியே அழைத்து, ” உனக்கு ஒரு பெரிய அதிர்ச்சியான செய்தி காத்துள்ளது. ” என்றான்.
          அது கேட்டு நான் திகைத்து நின்றேன்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்புதிய கோட்பாடு ! பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.
author

Similar Posts

Comments

  1. Avatar
    Nannilam Elangovan says:

    திண்ணை இதழ் என் வீட்டுத் திண்ணைக்கே வந்துவிட்டது.என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது.திண்ணை இலக்கியப் பண்ணையாய் உலகெங்கும் சிறகு விரிக்க முனையட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *