அழகர்சாமி சக்திவேல்
சரித்திரப் புத்தகங்களுள், நிறைய ஆண்-ஆண் ஓரினக் காதல் கதைகள் சொல்லப்பட்டு இருப்பதை நம்மால் படித்து உணர முடிகிறது. ஆனால் எங்கேயோ ஒரு சில வரலாற்றுக் குறிப்புகளில் மட்டுமே பெண்-பெண் ஓரினக் காதல் சம்பவங்கள் சொல்லப்பட்டு இருப்பது ஒரு விந்தையான விசயம்தான்.. ஏன் இந்த பாரபட்ச நிலை என்று ஆராய்ந்தோமானால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். மனிதச் சமூகம் ஆண்-ஆண் ஓரினக்காதலையே, அதிக அளவிலே, கேலியும் கிண்டலும் சமூக நிந்தனையும் செய்து வந்து இருப்பதால், சரித்திரம் அதை மட்டுமே அங்கங்கே குறித்து வைத்து இருக்கிறது. லெஸ்போ என்ற நாட்டில் பிறந்த சாப்போ என்ற பெண் எழுதிய பெண் ஓரினக்காதல் கவிதைகள்தான் லெஸ்பியன் என்ற பெண்-பெண் ஓரினக்காதலின் ஒரு முக்கிய வரலாற்று அடையாளமாய் நமக்கு இன்று வரை தெரிய வருகிறது. ஒரு பெண் இன்னொரு பெண்ணோடு நெருங்கிப் பழகுவதை சமூகம் இன்று வரை அதிக அளவில் கண்டு கொள்வதில்லை என்பது கண்கூடு. சம்பந்தப்பட்ட கணவன்மார்கள், தம் மனைவி ஒரு லெஸ்பியன் என்பதைப் பொதுவாய் வெளியில் வந்து சொல்வதும் இல்லை. அத்தோடு, காம உறவில், பொதுவாய், இயங்குவது ஆணாய் இருப்பதால், அவனுக்கு தேவையான காம சுகத்தை, பெண்ணின் உடலில் மீது அவனே இயங்கி தேடிப் பெற்றுக்கொள்வதால், லெஸ்பியனாய் இருக்கும் அந்தப் பெண்ணின் மனஉளைச்சல் முற்றிலும் வெளியே தெரியாமலே போய் விடுவது ஒரு சமூகக்கொடுமை. சில நேரங்களில், அந்த சமூகக் கொடுமையைத் தாண்டி வெளியே வர சில பெண்கள் நினைக்கிறார்கள். அப்படி வருகையில் பெரும் சமூக நிந்தனைக்கும் உள்ளாகிறார்கள். அப்படிப்பட்ட இரு லெஸ்பியன் பெண்களின் அவஸ்தையான வாழ்க்கையே கரோலின் கதை ஆகும்.
திருமதி பாட்ரிசியா ஹை ஸ்மித் என்பவரால், 1952-ஆம் ஆண்டு, எழுதப்பட்ட, ‘தி பிரைஸ் ஆப் சால்ட்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமே கரோல் திரைப்படம் ஆகும். கரோல் என்ற இந்த வெற்றிகரமான திரைப்படம், 2015-ஆம் ஆண்டு வெளிவந்து, பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கே பெருத்த வரவேற்பைப் பெற்ற படம் ஆகும். அதே திரைப்பட விழாவில், படத்தில் நடித்த ஒரு கதாநாயகி ரூனி மாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டதும் ஒரு சிறப்பு ஆகும். இந்தப் படம் ஆறு அகாடமி விருதுகளுக்கும், ஒன்பது கோல்டன் க்ளோப் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டதோடு, எண்பது உலக விருதுகளை வென்ற படம் என்று நான் சொன்னால் உங்களுக்கு கைதட்டத் தோன்றுகிறது அல்லவா?. திரு ஹெய்ன்ஸ் என்ற இந்தப் படத்தின் இயக்குனர் ஒரு ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கையாளர் ஆகும். என்றாலும், ஒரு பெண்-பெண் ஓரின உறவை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் படத்தில் சொல்லி இருக்கும் இயக்குனரது திரைப்படத்திறமையை நாம் பாராட்டாமல் இருந்துவிட முடியாது. கூடவே படம் முழுதும் காதல் காவியம் பேசும் அந்த காமெரா..ஆகா…விரிந்து பரந்த, அமெரிக்காவின் இயற்கை அழகைக் காட்டுவதாய் இருந்தாலும் சரி, நிர்வாணக்கோலத்தில் உடல் உறவு கொள்ளும் அந்த இரண்டு அழகிய பெண்களின் உடம்பைக் காட்டுவதாக இருந்தாலும் சரி…காமிரா எப்போதும் ஒரு ஒளிக்கவிதை படைத்துக் கொண்டே இருக்கிறது என்று சொன்னால அது இங்கே சாலப்பொருந்தும். நான் கிறிஸ்தமஸ் காலங்களில், பனி படர்ந்த அமெரிக்க வீதிகளில், இரவில் நடந்து போய் இருக்கிறேன். வெளிச்சம் குறைந்த பகுதிகளில், நிலா வெளிச்சம் பனிக்கட்டிகளின் மீது பட்டுத் தெறிக்கும் காட்சியும், தூரம் தூரமாய்த் இருக்கும் வீடுகளில் தெரியும் கிறிஸ்தமஸ் மர விளக்குகளும் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் நான் சொன்ன அத்தனை கிறிஸ்தமஸ் காட்சிகளையும் அழகுறப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். படத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொருவர், படத்தின் இசை அமைப்பாளர் திரு கார்ட்டர் பெனெடிக்ட் ஆகும். சிறந்த இசை அமைப்பாளர் அகாடமி விருதுக்காய், இந்தப் படத்தின் மூலம் அவர் பரிந்துரைக்கபட்டார் என்பதில் இருந்தே நாம் படத்தின் இசைப்பெருமையை ஊகித்து விடலாம். படம் முழுதும் ஓடும் மென்மைக்குப் பின்னால், சோகம் கலந்து ஓடும் அந்த மெல்லிய இசை நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.
‘தி ப்ரைஸ் ஆப் சால்ட்’ என்ற இந்தப் படத்தின் ஆதிகர்த்தாவான நாவலின் தலைப்பு குறித்து பல கருத்துக்கள் உண்டு. பெரும்பாலானோரின் கருத்து இதுதான். பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வரும் புழை நீரின் சுவை கொஞ்சம் உப்பு நிறைந்தது. பெண்-பெண் ஓரின உடல் உறவின் ஒரு முக்கிய அங்கம் பெண் உடல் உறுப்பை சுவைப்பது. எனவே, இன்னொரு ஓரினப் பெண்ணின் உப்புக்காய், தன் கணவனோடு கூடிய இல்லற வாழ்வையும் குழந்தையையும் இழக்கும் ஒரு பெண்ணின் சோகக்கதையைத்தான் “தி ப்ரைஸ் ஆப் சால்ட்” என்ற நாவலும், கரோல் என்ற அதன் படத்தழுவலும் சொல்கின்றன என்பது அந்தப் பெரும்பாலானோர் கருத்து.
படத்தின் கதை இதுதான். கதாநாயகி கரோல் ஒரு குடும்பப்பெண்மணி. ஒரு பிள்ளை பெற்றவள். இருப்பினும் அவளுக்கு மன நிறைவைத் தருவது லெஸ்பியன் என்ற பெண்-பெண் உடல் உறவே. தனக்கும், அப்பி என்பவளுக்கும் இருந்து, பின் முடிந்து போன லெஸ்பியன் உறவை தனது கணவனிடமே கரோல் ஒரு முறை சொல்லி விடுகிறாள். அதில் இருந்தே கணவனுக்கு மனைவியிடம் ஒரு சந்தேகம். கணவன் மனைவியை அதிகமாய் உதாசீனப்படுத்த ஆரம்பிக்க பிரச்சினை முற்றுகிறது. கணவன் விவாகரத்து கோரி கோர்ட்டில் முறையிடுகிறான். கரோல் சோகம் கொள்ளுகிறாள். விவாகரத்துக்கு சம்மதிக்க அவளுக்கு ஆசை இருந்த போதும், தனது குழந்தையை விட்டுத்தர அவளுக்கு முற்றிலும் ஆசை இல்லை. இந்த நிலையில், ஒரு கிறிஸ்தமஸ் கால இரவில், தனது பிள்ளைக்கு கிறிஸ்தமஸ் பரிசு வாங்க ஒரு கடைக்குச் செல்கிறாள். அங்கே படத்தின் இன்னொரு கதாநாயகி ஆன தெரசாவை சந்திக்கிறாள். தெரசா புகைப்படம் எடுப்பதில் வல்லவள். ஒரு திறமையான போடோகிராபர் ஆக வேண்டும் என்ற கனவோடு, பகுதி நேரமாய் கடையில் வேலை பார்க்கிறாள். கடையில் சந்திக்கும் இருவருக்கும் காதல் மலர்கிறது. கரோல் தெரசாவை தனது வீட்டுக்கு அழைக்கிறாள். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது கரோலின் கணவன் உள்ளே வருகிறான். அவன் சந்தேகம் வலுக்கிறது. இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்ற கரோலின் கணவன் தனது குழந்தையை கரோலிடம் இருந்து பறித்துக்கொண்டு போகிறான். கரோல் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என சட்டத்தின் முன் நிருப்பீக்க விழைகிறான். அதற்காய், கரோலின் நடவடிக்கையைக் கண்காணிக்க ஒரு ஒற்றனை நியமிக்கிறான். இது தெரியாத கரோல், மன உளைச்சலோடு மறுபடியும் தெரேசாவை சந்திக்கிறாள். இம்முறை இருவரும் ஒரு கிறிஸ்தமஸ் விடுதிக்குச் செல்கிறார்கள். உடல் உறவும் கொள்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து வந்த ஒற்றன் அவர்கள் உடல் உறவைப் படம் எடுத்து, கரோல் கணவனுக்கு அனுப்பி விடுகிறான். கரோலுக்கு இது தெரிய வர, சண்டை போடுகிறாள். இருப்பினும் அவள் குழந்தை அவளுக்கு இனி கிடைப்பது கடினம் என்பதை கரோல் உணர்ந்து கொள்கிறாள். எல்லா நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டே, கூடவே அவமானப்படும் தெரேசாவை ஒரு’ கட்டத்தில் அம்போ என விட்டுவிட்டு பிரிந்து போகிறாள் கரோல். தெரேசா அளவு கடந்த வேதனையுடன் தனது இல்லம் வருகிறாள். கரோலின் காதல் உள்ளே இருந்தாலும், தனது புகைப்பட ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் தெரசாவிற்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வேலை கிடைக்கிறது.
கரோலுக்கும் அவள் கணவனுக்கும் விவாகரத்து ஆகி விடுகிறது. கூடவே கரோல் இடம் இருந்து அவள் குழந்தையும் பறிக்கப்படுகிறது. மனம் சோர்ந்து போன நிலையில், கரோல் ரியல் எஸ்டேட் அதிபராய் ஒரு புதுவடிவம் எடுக்கிறாள். மறுபடியும் கரோலும் தெரசாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் இம்முறை, தெரேசா, கரோலை மன்னிக்காது விலகிப்போகிறாள். கரோல் அழுகிறாள். ஒரு மாலை நேரத்தில் தன்னை விரும்பும் ஒரு ஆண் நண்பனோடு ஒரு பார்ட்டிக்கு செல்கிறாள் தெரேசா. அழகிய அவளைப் பார்க்கும் ஆண்கள் அவளை மொய்த்தபோதும், அந்தக் கூட்டத்திடம் இருந்து ஏதோ ஒரு வகையில் தான் அன்னியப்படுவதாய் தெரசா உணர்கிறாள். அவள் மனம் முழுதும் கரோல் வந்து போக, பார்ட்டியை விட்டு வெளியேறி கரோலினைப் பார்க்க விரைகிறாள். கரோலும் தெரசாவும் மகிழ்ச்சியாய் சந்திப்பதோடு படம் முடிகிறது.
ஒரு பெண்ணுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் நேரும் காதல் உணர்வுகளை இவ்வளவு நேர்த்தியாக எந்தப் படத்திலும் காட்டவில்லை என்பது உண்மை. முக்கியமாய் அந்த உடல் உறவுக்கட்டம். தெரசா என்ற தனது காதலியின் முழு நிர்வாண உடம்பையும் பார்த்து மனம் சிலிர்க்கும் கரோலின் நடிப்பு பிரமாதம். ‘தான் ஒழுக்கக்கேடானவள்’ என்ற அடிப்படையில் தனது கணவன் விவாகரத்து கோரும்போது, கரோலின் ஆவேச நடிப்பு பாராட்டத்தக்கது. மறுபுறத்தில், தெரேசாவின் ஆண் காதலன், தெரசாவிற்கு முத்தமழை பொழிகையில், ஒரு வித வித்தியாசமான உணர்வுடன் தெரசா அவன் முததங்களை மறுக்கும் காட்சி அருமையிலும் அருமை. காற்றிலே, மனம் நிறைந்த இரண்டு பூக்கள் ஒன்றை ஒன்று உரசும்போது நம்மில் ஒரு பரவசம் ஏற்படும். அது போன்ற பரவசமே கரோல் தெரசாவின் ஓரினக்காதலிலும் சொல்லப் பட்டு இருக்கிறது என்று நான் சொன்னால் அது மிகையாகாது.
- பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- முகங்கள் மறைந்த முகம்
- ‘பங்கயம்’ இட்லி!
- தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்
- படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்
- பீசா நகரில்
- பங்களா கோமானே !
- சூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்
- உயர்த்தி
- டிரைவர் மகன்
- மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு
- மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்
- சூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் ?