முன்னெச்சரிக்கை :
- இதுதான் என்னால் கொடுக்க முடிந்த சிறிய தலைப்பு
- இது சிறு அல்லது நெடுங்கதை ? இல்லை ! குறுநாவல்,நாவல் ? ஊஹூம் ! ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட
.
ஸிந்துஜா
4
இந்தக் காலத்தில்தான் அரைக் கிளாஸ் தாண்டுவதற்கு முன்பே ட்யூஷன் வைக்கும் பழக்கம் வந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இது தொன்று தொட்டு வரும் பழக்கம்தான். இராமாயண காலத்தில் குருகுல வாசம் வழக்கில் இருந்த போது, ஆசிரியர் மாணவர்களுக்கு குருகுலத்தில் இலவசமாக அளித்த கல்வி, சென்ற நூற்றாண்டில் ஆசிரியர் அவரது வீட்டில் மாணவர்களுக்கு இலவசமாக இல்லாமல் அளிக்க ஆரம்பித்ததுதான் ட்யூஷன். நான் நான்காவது படிக்கும் போது கணக்கில் படு வீக்காக இருக்கிறேன் என்று என் தந்தை மிகவும் கவலைப்பட்டு என்னை டியூஷனுக்கு அனுப்பினார். அவருக்கு “கணக்கு என்றாலே எனக்குப் பிடிக்கவில்லை “என்று சொன்ன மைக்கல் ஃபாரடேயைப் பற்றியும், “என்னால் கணிதத்தில் தேர்ச்சியுற்றவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும் ஆனால் அவர்களால் என்னை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியாது ” என்று சொன்ன தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றியும் தெரியாமல் இருந்ததுதான் என் வாழ்வின் துரதிர்ஷ்டம்.
எனக்கு கணக்கு வாத்தியார் தாமஸ் சாரைக் கண்டால் எப்போதும் பயம். மூன்றாம் வகுப்பு வரை, கூட்டல் கழித்தல்களுக்காகத்தான் கடவுள் கையில் விரல்களைக் கொடுத்திருக்கிறான் என்று பெரிதும் நம்பியிருந்தேன் நான்காம் வகுப்புக்கு வந்த போது கால் விரல்களையும் உபயோகப் படுத்தும் வித்தை இருப்பதாக என் வகுப்பில் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த முருகவேள் சொன்ன போது எனக்கு ஆச்சரியமாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஆனால் இதை ரொம்ப நாள் நீடிக்க விடாமல் தாமஸ் சார் இருந்த போதுதான் எனக்கு சனி தசை ஆரம்பித்தது. என் தவறான விடைகளுக்காக அவர் ஊசியை வைத்துக் குத்துவது போல நகநுனியால் தொடைச் சதையைப் பிடித்துக் கிள்ளுவார். வலியில் உயிரே போகும். அழுதால் தலையில் குட்டுவார். ‘ வருந்தி அழைத்தாலும் வாராத வாரா’ என்று அவ்வையார் சொன்னது என் கணக்குப் பாடத்துக்கு என்று நான் நினைத்துக் கொண்டிருக்க ‘நெஞ்சம் புண்ணாக’ தாமஸ் சார் என் தொடைகளின் மூலம் எனக்குக் கணக்கு புகட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் என் தந்தை அவரிடம் என்னை டியூஷனுக்கு அனுப்பியது முதல் சார் மாறி விட்டார். தப்பாகக் கணக்குப் போட்டாலும் அவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்து எப்படி சரியாகப் போட வேண்டும் என்று வீட்டு ட்யூஷனில் சொல்லிக் கொடுத்தார். வகுப்பில் அவரிடம் டியூஷனுக்கு வராத பையன்களின் தொடைகள் மட்டுமே மாட்டிக் கொண்டிருந்தன என்று பல வருஷங்கள் கழித்துதான் எனக்கு உறைத்தது. பெண்களுக்கு மட்டும்தான் பின்புத்தி இருக்க வேண்டுமா என்ன?
கணக்கு எனக்கு அலர்ஜி என்று நான் சொல்லிக் கொண்டாலும் , அது என்னை விடுவதாயில்லை. பிற்காலத்தில் என் பெண் க்ளூனி கான்வென்டில் எட்டாவது படிக்கும் போது கணக்கில் வீக்காக இருக்கும் மாணவிகளை environmental science என்ற பாடம் படிக்க மாற்றி விட்டார்கள். ஏழாம் வகுப்பு வரை அவள் கணக்குப் பாடத்தில் என்னிடம் சந்தேகம் கேட்கும் போது எடிசனும் ஃபாரடேயும் எனக்குத் தன்னம்பிக்கையைத் தந்து அவளுக்கு உதவினார்கள். நான் அவளை டியூஷனுக்கு அனுப்பவில்லை. நான் படித்தது க்ளூனி கான்வென்ட் போல ஒரு கிறிஸ்துவப் பள்ளிக் கூடமான ஆர். ஸி. ஸ்கூலில்தான். அவர்களும் environmental science பற்றித் தெரிந்து கொண்டு என்னைக் கிள்ளுக் காயங்களிலிருந்து தப்புவித்திருக்கலாம். விதி வலியது ! யார் என்ன செய்ய முடியும்?
ஐந்து வகுப்பு வரையிலும் படித்து முடித்து ஆறாம் வகுப்பு போகும் போது, ஆறாம் வகுப்புக்கு மேல் படிக்கிறவன்கள் , பெற்றோர்கள், ஆசிரியர்கள் சிநேகிதர்கள் எல்லோர் மூலமாகவும் கிலியை ஏற்படுத்தும் ஒரு தகவல் பரப்பப்படும். ஆறாம் க்ளாசில் இங்கிலீஷ் படிக்க வேண்டும். ஆமாம். இன்று யு.கே.ஜி.யில் ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் படிக்கவும் வாண்டுகளுக்குக் கற்றுக் கொடுத்து அவைகளும் சக்கை போடும் நேரத்தில் நான் ஆறாம் வகுப்பில்தான் ஏ.பி.ஸி .டி படிக்க ஆரம்பித்தேன் என்று நினைத்துப் பார்க்கும் போது சிரிப்பு வருகிறது.ஆறாம் வகுப்பு ஆங்கிலத்தைப் பொறுத்த மட்டில் முதல் வகுப்புக்கு சமானம் என்று நினைத்தோ என்னவோ, என்ன எழுதினாலும் ஆங்கிலத்தில் பெயில் போட மாட்டார்கள். தரையில் உட்கார்ந்து கொண்டு, நாக்கைத் துருத்தியபடி, பென்சிலை வைத்து நான் ஆங்கிலத்தில் கிறுக்குவதை என் அம்மா பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்பாள். பரீட்சையில் மார்க் குறைந்தாலும் குழந்தைக்கு எப்படி மார்க் போடறதுன்னு தெரியல அவளுக்கு என்று என் டீச்சரைத் திட்டுவாள்.
ஆர்.ஸி. ஸ்கூலில் எட்டாம் வகுப்பு வரைதான் இருந்தது. அதனால் மேலே படித்து ‘கவர்மெண்டு எக்சாம்’ எழுத ஒரு ஹை ஸ்கூலைத்தான் தேடித் போக வேண்டும். நான் ஏழாம் வகுப்புக்குள் நுழைந்த போது என் அப்பாவுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர், அவரது மனைவி-ஸ்கூல் டீச்சர்- புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளியில் சேரப் போவதாகவும் , அதனால் என்னையும், அகல்யாவையும் அங்கு சேர்த்து விடலாம் என்றும் சொன்னார். ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த ஸ்கூலில் நாங்கள் சேர்க்கப்பட்டோம். ஸ்கூலில் மொத்த மாணவர்களே 32 பேர்தான். எங்கள் வகுப்பில் 3 பேர். என்னையும் அகல்யாவையும் தவிர பாப்பையா என்று ஒரு பையன். அவன் ஒன்பதாம் கிளாஸ் சார் மூலம் ஸ்கூலில் சேர்க்கப்பட்டதாகக் கூறினான்.
ஸ்கூலுக்குப் போய் வருவது ஏதோ தாமஸ் சார் வீட்டுக்குப் போய் வருகிற மாதிரி இருந்தது.
எங்கள் டீச்சரின் பெயர் எலிசபெத். அவளும் வீட்டில் எதோ குழந்தைகளை வளர்க்கிற மாதிரி நடத்தினாள். அவள் கணவர் எங்கள் இருவரின் பெற்றோர்களுடன் சேர்ந்து வேலை பார்ப்பவர் என்கிற எண்ணமும் இந்த சீராட்டலுக்குக் காரணமாயிருக்கலாம். அவள்தான், இங்க்லீஷ், கணக்கு, விஞ்ஞானம், சரித்திரம், பூகோளம் என்று எல்லா சப்ஜெக்ட்டுக்கும் ஆசிரியை. ஓவிய வகுப்புக்கு தனி மாஸ்டர். தமிழ் கற்பிக்க ஒரு தனி ஆசிரியர் விரைவில் வருவார் என்றார்கள்.
சில நாட்கள் கழித்து எங்கள் மூன்று பேருக்கும் தமிழ் கற்பிக்கும் ஆசான் வந்தார். வெள்ளை வெளேரென்று உடை. நல்ல உயரம்.. மரியாதையை எழுப்பும் தோற்றம். முகத்தில் லேசான சிரிப்பு. எப்போதும். சன்னமான குரல். எங்களைக் கட்டிப் போட்டு வைக்க வந்தவர் போல் வகுப்பில் வந்து உட்கார்ந்தார். மறுநாள் தலைமை ஆசிரியர், பிரேயர் நடந்த சமயம் “இவர்தான், நம்ம ஸ்கூலில் புதுசாக வந்து சேர்ந்திருக்கும் தமிழ் ஆசிரியர் நா. பார்த்தசாரதி” என்றார்.
——————————————-
- கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்
- ஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..
- கவிதைகள்
- அவரவர் நிலா!
- 2018 ஜூனில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.
- தொடுவானம் 228. தொழுநோயாளிக்கு மறுவாழ்வு
- உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)
- கழுத்தில் வீக்கம்
- எல்லாம் பெருத்துப் போச்சு !