சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு

This entry is part 4 of 9 in the series 2 டிசம்பர் 2018

பி எஸ் நரேந்திரன்

இந்தியப் பள்ளி, கல்லூரி பாட நூல்களை எவ்வாறு இந்திராகாந்தியும், கம்யூனிஸ்டுகளும் கெடுத்துச் சிதைத்தார்கள் என்பதனை மிக அருமையாக விளக்கியிருக்கியிருக்கிறார் எஸ் எல் பைரப்பா.

எமர்ஜென்ஸிக்குப் பிறகு தேர்தலில் தோற்கிறார் இந்திரா. அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் ஜனதாக் கட்சியின் ஆட்சி அல்பாயுசில் முடிகிறது. அதற்குப் பின்னர் நடந்த தேர்தலில் இந்திராகாந்தி கம்யூனிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து பொதுத்தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றியும் பெறுகிறார். அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியக் கல்வித் திட்டங்களை அமைக்கும் உரிமையைக் கோருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். இந்திராவும் அதற்குச் சம்மதிக்கிறார்.

இந்தியக் கல்வித்திட்டம் பலகோடி மாணவர்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வலிமை கொண்டது. அவர்களின் மனதில் விஷவிதையை எளிதில் தூவும் வாய்ப்பும் கொண்டது என்பதால் கம்யூனிஸ்டுகள் அதனைக் கோரிப்பெறுகிறார்கள். எதிர்ப்பு எதுவும் வராமல் இருக்கும் பொருட்டு இந்திரா காந்தி ஐந்துபேர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்கிறார். அதற்குத் தலைமையாக மத்திய அரசின் உயரதிகாரியும், அவருக்கு மிகவும் வேண்டப்பட்டவரான ஜி. பார்த்தசாரதியை நியமிக்கிறார். ஜி,பார்த்தசாரதி இந்திரா குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்பதினை நினைவில் கொள்ளவேண்டும்.

அந்த ஐந்துபேர்கள் கொண்ட குழுவில் எல். பைரப்பாவும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். கர்நாடகத்தைச் சேர்ந்த பைரப்பா இந்தியாவில் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஒரு கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து கொண்ட, கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டுவரத் தகுதியுள்ள ஒருவர்.

ஒரு சுபயோக சுபதினத்தில் இந்தக் குழு, ஜி. பார்த்தசாரதி தலைமையில் தில்லியில் கூடுகிறது. இந்தியக் கல்வித் திட்டத்தை முழுமையாக கம்யூனிஸ்டுகளின் கையில் ஒப்படைக்கவேண்டும், அதற்கு ஒரு கண்துடைப்பு நாடகம் மட்டுமே இந்தக் குழு என பார்த்தசாரதிக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அதனை முழுமையாக நிறைவேற்றும் எண்ணத்துடன் பார்த்தசாரதி இருக்கிறார் என்பது பைரப்பாவிற்குத் தெரியவில்லை.

கூட்டத்தில் பைரப்பா தன்னுடன் கலந்து கொண்ட மற்ற நான்குபேர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போகிறார். அரசாங்கம் தங்களையும் ஒருபொருட்டாக மதித்துத் தங்களை இந்தக் கமிட்டியில் போட்டதை நினைத்து ஒருவித பரவச நிலையில் இருக்கிறார்கள் அவர்கள். இவர்கள் வெறும் வெத்துவேட்டு ஆமாம்சாமிகள் என்பதினைப் புரிந்து கொள்கிறார் பைரப்பா.

கூட்டம் ஆரம்பிக்கிறது. கூட்டத்தின் முதல் பகுதியாக “இந்தியப் பாடத்திட்டத்தில் இருக்கும் முகலாயர்கள் குறித்த எதிர்மறையான பாடங்களை உடனடியாக நீக்கவேண்டும்” என ஆரம்பிக்கிறார். ஆச்சரியமடையும் பைரப்பா, “எதற்காக அப்படிச் சொல்கிறீர்கள்?” எனக் கேட்கிறார்.

“முகலாயர்கள் இந்துக் கோவில்களை இடித்தார்கள். ஹிந்துக்களை வாள்முனையில் மதமாற்றம் செய்தார்கள். ஜிஸியா வரிவிதித்து இந்துக்களைத் துன்புறுத்தினார்கள் என்றெல்லாம் மாணவர்கள் படித்தால் அவர்கள் மனதில் முகலாயர்களைக் குறித்து வெறுப்பு வளரும். எனவே அதனை நீக்க வேண்டும்” என்கிறார் ஜி.பா.

“ஆனால் அதுதானே உண்மை. அதனை நீக்கினால் மாணவர்கள் எப்படி உண்மையை அறிவார்கள்? அப்படியே நீக்கினாலும் அவர்கள் வேறுவழியில் அதனை அறிந்து கொள்வார்களே. பொய்யான தகவல்களைத் தங்களுக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தது குறித்து கசப்படைவார்கள் அல்லவா?” என்கிறார் பைரப்பா.

பார்த்தசாரதி அதனை எதிர்பார்க்கவில்லை. தான் சொல்வது அத்தனைபேர்களும் தலையாட்டுவார்கள் என்ற எண்ணத்தில் இருந்தவர் அவர். மற்ற நான்குபேர்களும் வாயே திறக்காமலிருக்கையில் இந்த ஆள் மட்டும் கேள்வி கேட்கிறானே என்கிற எரிச்சலில், “வரலாற்றைத் தெரிந்து கொள்வதால் என்ன பிரயோஜனம்? சென்றகாலத்தைக் குறித்து மாணவர்கள் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?” என்கிறார் எரிச்சலுடன்.

“மாணவரகள் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது என்பதனை விடுங்கள். ஆனால் வரலாற்றுப்பாடம் வரலாற்றுப்பாடமாக அல்லவா நடத்தப்பட வேண்டும்?” என பைரப்பா வாதிடுகிறார். பைரப்பா சொல்வதில் இருக்கும் உண்மை பார்த்தசாரதிக்கும் தெரிகிறது. ஆனால் அவருக்கு இடப்பட்ட உத்தரவு வேறுமாதிரியானது. இதுவெறும் போலி நாடகம் என்கிறதில் தெளிவாக இருக்கிற அவருக்கு பைரப்பாவின் வாதங்கள் முள்ளாகத் தைக்கின்றன. எரிச்சலின் உச்சத்திற்கே போய்க் கூச்சலிட ஆரம்பிக்கிறார் அவர்.

இப்படியாக இருவரும் தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிக்கையில் மதிய உணவு இடைவேளை வருகிறது. எல்லோருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர உணவு விடுதியில் உணவு பரிமாறப்படுகிறது. வாழ்க்கையில் ஒருமுறை கூட ஐந்து நட்சத்திர ஓட்டலில் காலடி எடுத்து வைக்காத பைரப்பாவுடன் இருந்த மற்ற நான்கு கமிட்டியினரும் வாயைப் பிளக்கிறார்கள்.

நடக்கும் நாடகத்தைக் கசப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் பைரப்பாவைத் தனியாக அழைக்கும் பார்த்தசாரதி, “நீயும் நானும் தென்னிந்தியர்கள். நான் தமிழன். நீ கன்னடன். நமக்குள் எதற்குச் சண்டை? அரசாங்கள் சொல்லுவதைச் செய்துவிட்டுப் போகலாமே? நமக்கு நல்லபெயராவது மிஞ்சுமே?” எனப் பசப்பலுடன் பேசுகிறார். பதில் எதுவும் சொல்லாமல் அமர்ந்திருக்கிறார் பைரப்பா.

உணவு இடைவேளைக்குப் பின்னர் தொடர்ந்த கூட்டத்தில், “இப்போது நாம் இரண்டாவது பகுதியைக் குறித்துப் பார்க்கலாம்” எனச் சொல்லும் பார்த்தசாரதியிடம் “முதல் பகுதியே இன்னும் தெளிவாகவில்லை. முதலில் அதனை முடிவு செய்யலாம்” எனக் கறாராகச் சொல்கிறார் பைரப்பா.

பைரப்பா தன்னுடன் உடன்படமாட்டார் எனப் பார்த்தசாரதிக்குப் புரிந்துவிடுகிறது. தடாலடியாகக் கூட்டத்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போகிறார். ஆனால் அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்னர் அந்தக் கமிட்டியிலிருந்து தான் நீக்கப்பட்டதாகத் பைரப்பாவுக்குத் தகவல் கிடைக்கிறது. அவருக்குப் பதிலாக இர்ஃபான் ஹபீப்பின் சீடர் ஒருவர் நியமிக்கப்பட்டதாக அவர் அறிகிறார். அதனைத் தொடர்ந்து கமிட்டிக் கூட்டம் கோலகலமாக நடந்து முடிகிறது. இந்தியப் பாடத்திட்டங்களை கம்யூனிஸ்டுகள் வெற்றிகரமாகக் கைப்பற்றினார்கள். தில்லியின் ஜே.என்.யூ. போன்ற பல்கலைக்கழகங்களும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியப் பாடத்திட்டங்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியவர்களில் மிக, மிக முக்கியமானவர்கள் இர்ஃபான் ஹபீப்பும், ரோமிலா தாப்பரும் என்பதினை இங்கு சொல்லியாக வேண்டும். இருவருமே கம்யூனிச கைக்கூலிகள். இன்றைக்கு இந்தியப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயிலும் அடிப்படை உண்மையற்ற வரலாற்றுப்பாடங்களைத் திரித்தும், அழித்தும் கெடுத்தவர்கள் இவர்கள் இருவரும்தான். இன்றும் அவர்கள் கெடுத்துவைத்த பாடத்திட்டங்களையே நமது குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் சோகம்.

இந்தியப் பாடத்திட்டங்கள் மாறாதவரை இந்தியக் குழந்தைகள் தரமான கல்வி பயில்வது என்பது சாத்தியமில்லை. அதற்கு முதலடியாக கல்வித்திட்ட வரையறையில் இருக்கும் கேடுகெட்ட கம்யூனிஸ்ட்டுகளைத் தூக்கியெறிய வேண்டும். ஆனால் மோடி அரசால் இன்றுவரை அதனைச் செய்ய இயலவில்லை. மோடி அரசின் மீது எனக்கு இருக்கும் வருத்தங்களில் இதுவும் ஒன்று.

இனிவரும் காலங்களிலாவது கல்வித்துறையில் உண்மையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுத்தாலன்றி இது சாத்தியமில்லை. எனவே இதனை வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம்.

Series Navigationமுகலாயர்கள் இந்தியர்களல்லர்.கிள்ளைப் பத்து
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *