செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 9 in the series 2 டிசம்பர் 2018

மாத்யு டேவிஸ்

மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்னால், நாம் வாழும் பூமியும் மனிதர்கள் வாழ உகந்ததாக இல்லை. இது கொதித்தெழும் எரிமலைகள் உமிழ்ந்த கார்பன் டை ஆக்ஸைடாலும், நீராவியாலும், சூழ்ந்திருந்தது. ஒரு செல் உயிரிகள் கந்தகத்தை வைத்துவாழ்க்கையை ஓட்டிகொண்டிருந்தன. பெரும்பாலான காற்றுமண்டலம், கார்பன் டை ஆக்ஸைடாலும், மீத்தேனாலும் சூழ்ந்து (நம் போன்ற விலங்குகளுக்கு) விஷமாக இருந்தது

இரண்டரை பில்லியன் வருடங்களுக்கு முன்னால், ஏதோ ஒன்று நிகழ்ந்தது. மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது. ஏராளமான ஆக்ஸிஜன் வந்ததும், யூகரியோட்கள் என்னும் உயிரிகள் ஆக்ஸிஜன் உண்டு கார்பன் டை ஆக்ஸைடை உமிழும் வண்ணம் உருவாயின. இன்னும் சில பில்லியன் வருடங்கள் கழித்து நம்மை போன்று பலசெல் உயிரிகள் இன்று நடமாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆக்ஸிஜன் எங்கேயிருந்து வந்தது? சயனோ பாக்டீரியா என்ற வகை பாக்டீரியாக்களால் இந்த ஆக்ஸிஜன் வந்தது. இது நீலப்பச்சை நிறத்தில் ஒற்றை செல் உயிரிகளாக தண்ணீரின் மேல் மிதந்து கொண்டு, சூரிய ஒளியை வைத்து கார்பன் டை ஆக்ஸைடை உடைத்து ஆக்ஸிஜன் என்ற தேவையற்ற உப உற்பத்தி பொருளை வெளியே தள்ளிகொண்டிருந்தன.

நாம் இழுக்கும் ஒவ்வொரு மூச்சுக்காற்றுக்கும் நாம் சையனோபாக்டீரியக்களுக்கு நன்றி செலுத்தவேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் ஆக்ஸிஜன் அவை கொடுத்தது. இதுவே நவீன பூமியில் இன்று பல்வகை உயிரினங்கள் இருக்க காரணம். எது பூமி கொடுக்கிறதோ அதனை எடுத்துகொள்ளவும் செய்கிறது. தப்பவெப்ப மாற்றம், அணு ஆயுதப்போர்கள், உலகளாவிய வியாதி பரவல், அல்லது நாம் அறியமுடியாத ஏதேனும் மாபெரும் அழிவு நமது பூமியை வாழத்தகுந்ததற்றதாக மாற்றினால், நாம் புது வீடு தேடவேண்டியவர்களாக ஆவோம். ஆனால் நமக்கு அருகாமையில் இருக்கும் செவ்வாய் கிரகத்திலோ ஆக்ஸிஜன் இல்லை.

சொல்லபோனால் அங்கே வளி மண்டலமே இல்லை.

பூமியில் எவ்வாறு மாபெரும் ஆக்ஸிஜனேற்றம் நடந்ததோ அதே போல செவ்வாயில் ஆக்ஸிஜனேற்றம் செய்யமுடியும் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். அதற்கு செவ்வாயில் நுண்ணுயிரிகளை பயன்படுத்துவது ஒரு வழி

செவ்வாய் மெல்ல மெல்ல பூமி போல ஆவதை ஓவியரின் கற்பனையில் இந்த படத்தில் பார்க்கலாம்.

செவ்வாய் பூமியை விட மிகவும் மாறுபட்டதாக இருந்தாலும் நுண்ணுயிரிகள் மூலம் செவ்வாயை மாற்றுவதற்கு ஏற்றதாகவே இருக்கிறது. செவ்வாயின் வளி மண்டலம், 95 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடை கொண்டது. இது சயனோ பாக்டீரியாக்களுக்கு தேவையான உணவு. இதனை கொண்டு அவை ஆக்ஸிஜனை உருவாக்கலாம். சயனோபாக்டீரியாக்களுக்கு தேவையான இன்னொரு உணவு தண்ணீர். அது செவ்வாயில் மிக மிக குறைவு. ஆனால் செவ்வாயில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. அதன் துருவங்களில் பனியாக உறைந்திருக்கும் தண்ணீரை வெளியே கொண்டுவந்தால், செவ்வாய் 18 அடி ஆழமான கடலில் இருக்கும் என்று சில கணிப்புகள் சொல்லுகின்றன.

திரவ வடிவத்தில் செவ்வாயில் தண்ணீர் மிக மிக குறைவாகவே இருக்கிறது. செவ்வாயின் குளிர்காலத்தில் அதன் மலைகளிலிருந்து தண்ணீர் ஓடிய தடங்கள் இருக்கின்றன. இந்த கருப்பு வரிகள் பருவ நிலைக்கு ஏற்று மாறுகின்றன.

அந்த படத்தை இங்கே காணலாம்.

ஆகவே செவ்வாயை பூமிபோல மனிதர் வாழ தகுந்ததாக ஆக்க, தண்ணீர் எங்கே இருக்கிறதோ அங்கே சயனோ பாக்டீரியாக்களை கொட்ட வேண்டும். நான் இங்கே சொல்வது போன்று அவ்வளவு எளிய விஷயம் அல்ல. இதற்கு நல்ல திட்டமிடலும், திறமையும் ஆராய்ச்சியும் வேண்டும். ஆனால் அடிப்படை கருத்து அதுதான். அதாவது செவ்வாயின் வளிமண்டலத்தை சூடாக்கும் வாயுக்களை அங்கே உற்பத்தி செய்யவேண்டும்.

பூமியில் இருக்கும் பிரச்னைக்கு நேர்மாறானது செவ்வாயில் செய்யவேண்டியது. செவ்வாயை சூடாக்கி அங்கே இருக்கும் வளிமண்டலத்தை கடினப்படுத்தி அதன் துருவங்களில் இருக்கும் பனிக்கட்டிகளை உருக்க வேண்டும். நிறைய தண்ணீர், நிறைய சயனோபாக்டீரியக்கள் பல்கிப்பெருக காரணமாகும். தற்போதைய செவ்வாயின் தட்பவெப்பம் மனிதர் அங்கே இருக்க உகந்தது அல்ல. ஏனெனில் அதன் தற்போதைய வெப்பம் – 81 டிகிரி பாரன்ஹீட்.

சயனோ பாக்டீரியாக்கள் மூலம் செவ்வாயை மாற்றும் திட்டம் ஏற்புடையதாக இருப்பதால் ஏற்கெனவே நாஸா என்னும் அமெரிக்க நாட்டின் விண்வெளி அமைப்பு ஆரம்பகால பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. மார்ஸ் எகோபோயெஸிஸ் டெஸ்ட் பெட் என்னும் திட்டம் எதிர்கால இயந்திர பயணங்களில் அங்கமாக இருக்கும் என்று திட்டமிடப்படுகிறது. இது ஒரு உருளை வடிவத்தில் இருக்கும். இதன் உள்ளே சயனோபாக்டீரியாக்கள் இருக்கும். இந்த உருளை தண்ணீர் இருக்கும் இடத்தில் பதிக்கப்படும். இதற்குள் இருக்கும் அறையில் சயனோபாக்டீரியாக்கள் விடுவிக்கப்படும். அதன் உள்ளே இருக்கும் அளவுமானிகள் எந்த அளவுக்கு ஆக்ஸிஜன் மற்றும் இதர வாயுக்கள் உற்பத்தி ஆகின்றன என்று கணக்கிடும்

இந்த பரிசோதனையின் ஒரு பகுதி பூமியிலேயே பரிசோதிக்கப்பட்டு இதன் முடிவுகள் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கின்றன. இருப்பினும் செவ்வாய் போன்ற முழுக்கிரகத்தையும் சயனோபாக்டீரியாக்களால் மாற்றுவது என்பது மிகப்பெரிய அளவில் இருப்பதால் பெரும் சவாலை கொண்டிருக்கிறது.

செவ்வாயின் இன்னொரு முக்கியமான குறைபாடு அதில் காந்த புலம் இல்லாமல் இருப்பது. பூமியில் இருக்கும் காந்த புலமே, சூரியனிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்தும் வரும் ஆபத்தான கதிர்களை விரட்டி காக்கிறது. ஒருகாலத்தில் செவ்வாயில் காந்த புலம் இருந்தது. செவ்வாயில் காந்த கற்கள் இருப்பதை வைத்து இதனை அறிகிறொம். ஒரு காலத்தில் எதனாலோ அங்கே இருந்த காந்த புலம் அழிந்துவிட்டது. காந்த புலம் இல்லாமல் இருப்பதால், சூரிய கதிரியக்கத்தால் அங்கே தொடர்ந்து தாக்குதல் நடக்கும். அது அங்கே நீண்டகாலம் நம்மை போன்ற சிக்கலான உயிர்கள் வாழ்வதை இயலாததாக்கும்

மேலும் சூரிய காற்று எனப்படும் வாயு தொடர்ந்து செவ்வாயை தாக்குவதால், அதிலிருக்கும் வளி மண்டலம் மெல்ல மெல்ல கரைந்து போய்க்கொண்டே இருக்கிறது. ஆகவே நாம் அங்கே சயனோ பாக்டீரியாக்களால் ஆக்ஸிஜனை உருவாக்கினாலும், பெரும்பாலானவை செவ்வாயின் வளிமண்டலத்தில் தங்காமல் வெளியேறி விண்ணில் மறைந்துவிடும்.

அதிர்ஷ்டவசமாக இந்த விஷயங்கள் தாண்டமுடியாத சவால்கள் அல்ல. தற்காலிகமாக கூண்டு வடிவ கட்டிடங்களை செவ்வாயில் கட்டி, உருவாக்கும் ஆக்ஸிஜன், சையனோ பாக்டீரியா, நாம் ஆகியவற்றை காத்துகொள்ளலாம். நீண்ட கால திட்டமாக சக்தி வாய்ந்த ஒரு காந்தத்தை செவ்வாய்க்கும் சூரியனுக்கும் இடையே நிறுத்தி வைத்து காந்த புலத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று நாஸா கணக்கிடுகிறது. இது போன்ற தொடர்ந்த செயல்களா, சையனோ பாக்டீரியாக்களால் ஆக்ஸிஜன் உருவாகி, மேலும் இது துருவத்தில் இருக்கும் பனியை கரைத்து நீராக்கி, செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலம் கடினமடைந்து நாம் வாழ தகுந்த இரண்டாம் வீடாகும்.

செவ்வாய்

Series Navigationபருப்பு உருண்டை குழம்புமுகலாயர்கள் இந்தியர்களல்லர்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *