பிச்சினிக்காடு இளங்கோ(18.12.2018)
சாங்கி விமானநிலையம் முனையம் மூன்றில் வந்து இறங்கி குல்லிமார்ட் குடியிருப்பை நோக்கி பயணிக்கும்போது திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஊருநோக்கி பயணித்தது மனம்.
உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற நிலை அப்போது.
என்னசொல்லியும் கேட்கவில்லை மனம்.
தீவு விரைவுச்சாலையில் வேகமாய்ப் பயணிக்கும்போது மனம்மட்டும் தாவிச்சென்றுவிட்டது.
சாலை இருபுறமும் இருக்கும் செடிகள், பூக்கள், முன்னே போய்கொண்டிருக்கும் வாகனங்களனைத்தையும் கண்கள் நோட்டமிட்டாலும் மனம் பார்க்கச்சென்றது அம்மாவை.
அம்மாவுக்கு வயது 90த்தாண்டியிருக்கும்.
தன்னம்பிக்கையும் தைரியமும் அம்மாவின் அடையாளங்கள்.
அவைதாம் அம்மாவின் பலம்.
இந்த வயதிலும் தன்னைப்பார்த்துக்கொள்வதில், தனக்கு வேண்டியதைத் தானே செய்துகொள்வதில் அம்மாவுக்கு தனி அக்கறை உண்டு.
அம்மாவுக்கு இப்போது காதும் கேட்பதில்லை, கண்ணும் தெரிவதில்லை.
கிட்டே சென்று சைகைகாட்டினால் புரிந்துகொள்ளும்.
இல்லையென்றால் அம்மாவின் விருப்பப்படி பேச்சு தொடரும்.
வேண்டியவர்களின் பெயர்களையெல்லாம் அம்மா சொல்வது வழக்கம் ,கண்முன்னே இருப்பவர்களைத்தவிர.
திசையைக்காட்டினால் அத்திசையில் உள்ளவர்களையெல்லாம் சொல்லும். திசையை அருகிலும் தொலைவிலும் சைகையால் காட்ட அதற்கு ஏற்றாற்போல் நினைவில் இருப்பவர்களையெல்லாம் சொல்லும்.
எதிரே இருப்பவரைமட்டும் எளிதில் சொன்னதில்லை.
இறுதியாக எதிரே இருப்பவரைச்சொல்லிமுடிக்கும்போது ஒரு நாடகம் நடந்து முடிந்ததுபோல் ஆகிவிடும்.
அப்புறம்தான் ஒரு நிம்மதி.
தொடர்ந்து விசாரிப்பும் விசாரணையும் நிகழும். எவ்வளவுதான் மருமகள் கவனித்தாலும் ஒரு குறையைச்சொல்லிவிட அம்மா மறந்ததில்லை. மூத்தமருமகளின் கவனிப்பில்தான் அம்மாவின் ஆயுள் நீடிப்பது உண்மை.
இது அம்மாவின் அடிமனத்தில் இருக்கும் ரகசியம்.
ஆனால், இதை அம்மா எளிதில் வெளிக்காட்டியதில்லை.
அவ்வப்போது உறவினர் வீட்டு நிகழ்வுகளில் ஒருநாள் இருநாள் தங்கும்போதுதான் மூத்த மருமகளின் கவனிப்பும் உணவும் அம்மாவின் நினைவுக்கு வரும்.
“ உடனே என்னை என் வீட்டில் கொண்டுபோய் விடுங்கள். ஒரு நிமிசம் இங்கே இருக்கமாட்டேன்” என்று அடம்பிடிக்கும்போதுதான் மற்றவர்கள் உணர்வார்கள்.
அந்த இடத்தில் பெத்த மவ சொன்னாலும் கேட்டதில்லை. மகளுக்கே ஆச்சர்யமாய் “ தெனமும் குறைசொல்லும் அம்மா இப்படி ஆசப்படுது!” – என்ற வியப்பு வந்துபோனதுண்டு. ஏனென்றால் தினமும் ஒருதடவையாவது மகள் அம்மாவைப் பார்க்கத்தவறுவதில்லை. அதனால்தான் என்னவோ அம்மாவுக்கு மருமகள் மீது குறைசொல்லும் எண்ணம் வந்துவிடுகிறது.
கண்ணுதெரியாத , காது கேட்காத அம்மாவோடு மகள் உரையாடும் காட்சி அன்றாடம் நிகழும்.
முடிவில் மகள் களைத்துப்போய் முகம்வாட வீட்டுக்குத்திரும்புவது வழக்கம். ஆனாலும் மகளைப்பார்த்த திருப்தியும் அம்மாவோடு பேசிய நிறைவும் ஏற்படுவது அன்றாட நிகழ்வு. சண்டைகூட போட்டுக்கொள்வார்கள். மகள் ஒன்றுசொல்ல அம்மா ஒன்றுசொல்ல இருவருக்கும் இடையில் ஒரு போர்க்களம் உருவாகும்.
கடைசியில் ஒருவழியாக சமாதானமடைந்து, தலையில் அடித்துக்கொண்டு தாய்மகள் பாசம் ஒரு முடிவுக்கு வரும். இது அன்றாடம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் தொடர்ந்து நிகழும். மருமகள் வீட்டில் மீன் குழம்பு என்றால் மகள் வீட்டில் கோழிக்குழம்பு.மருமகள் வீட்டில் கோழிக்குழம்பு என்றால் மகள் வீட்டில் மீன்குழம்பு.இதுவும் மூத்த மருமகளின் வேதனைக்கு ஒரு காரணம். மகளைத்திருப்திபடுத்த மருமகளைக் குறைசொல்வது அம்மா கடைபிடிக்கும் தந்திரம். இதைப்பார்த்து, அம்மா-மகள் உரையாடலைக்கேட்டு கொதித்து அடங்குவது மருமகளின் வாடிக்கை.
நாள்தவறாமல் அசைவம் சமைத்தும் ,சுடச்சுட கொடுத்தும் மாமியார் குறைசொல்வதை மூத்தமருமகளால் தாங்கமுடிவதில்லை.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மூத்தமகன் மெளனம் கடைபிடிப்பது இயல்பு. அம்மாவோடுஅமர்ந்து பேசினால் மனைவிக்கும் கொஞ்சம் இடிக்கும்.
பேசாமல் இருந்தால் அம்மாவுக்கு வருத்தம். பேசுவோமே என்று அம்மாவின் அருகில் அமர்ந்தால் அம்மாவின் பேச்சு இருக்கிற அமைதியை கெடுத்துவிடும்.
அதற்காகவே கொஞ்சம் இடைவெளியைக்கடைபிடிப்பது மூத்தமகனின் வழக்கம். தாளாத வயதிலும் தாய்மகள் உரையாடல்காட்சி கிடைத்தற்கரியது.
இது அவ்வீட்டில் அன்றாட நிகழ்ச்சி.மாமியார் மாமனார் இல்லாத வீடுதான் இன்றைக்கு மகிழ்ச்சியான வீடு என்ற கருத்து இன்றைய கதை,கவிதை,நகைச்சுவை எல்லாவற்றிலும் இடம்பெற்றிருப்பதை நாம் படிக்கிறோம்; பார்க்கிறோம். யார்தான்மறுக்கமுடியும்.
விடுப்பு முடிந்து சிங்கப்பூர் புறப்பட்ட மூத்த மகன் அம்மாவிடம் விடைபெற்றுக்கொண்டபோது அம்மாவின் மனதில் ஏற்பட்ட கனத்தையும் முகத்தில் தோன்றிய கவலையையும் மூத்தமகன் கவனிக்கத்தவறவில்லை.மூத்தமகனுக்கு எல்லாம் ஆண்பிள்ளைகள். மருமகள்களோடு வாழவேண்டிய சூழல். பேரன்களைக்கண்டு நிம்மதியடைவது எதார்த்தம். எவ்வளவோ கஷ்டமிருந்தாலும் மனதில் கனமிருந்தாலும் பேரப்பிள்ளைகளோடு உரையாடும்போது அவை கரைந்துவிடுவதுண்டு. அவை மறைந்துவிடுவதும் அவற்றை மறந்துவிடுவதும் மூத்தமகனின் இயல்பாகும்.
அது தான் அவனுக்குக்கிடைத்தவாழ்க்கை.
மகள் பறிமாறுவதற்கும் மருமகள் பறிமாறுவதற்கும் வித்தியாசம் இல்லாமலில்லை.கோபத்தோடு மகள் பறிமாறினாலும் தாய் அல்லது தந்தை மனம் வருத்தமடைவதில்லை . இயல்பாக மருமகள் பறிமாறினாலும் வருத்தம் அடைவதற்கு ஆயிரம் காரணங்கள் தயாராகஇருக்கும்.. என்ன செய்வது?……..ம்ம்ம்…. பெருமூச்சு விடத்தான் முடியும்.
அன்றுமாலை தேக்கா கடைத்தொகுதியில் அமர்ந்துகொண்டு இலக்கிய இதழைப்புறட்டிக்கொண்டிருந்த மூத்தமகனை, 2015-ல் சாகித்ய அகாடமி விருபெற்ற அ. மாதவனின் நேர்காணலால் வந்த அதிர்ச்சியும் கவலையும் கவ்விக்கொண்டது. மாதவனின் மூத்த மகள் கலைச்செல்வி, இளையமகள் மலர்விழி.மகள்வீட்டில் வசிக்கும்போதுதான் அவருக்கு அந்தப்பரிசை அறிவித்தார்கள். பாத்திரக்கடை வைத்துப்பிழைக்கும் ஒரு மனிதனுக்குள் வாழும் எழுத்தாளனையும் அவனுடைய வாழ்க்கையையும் அசைபோடத்தொடங்கினார் மூத்தமகன் .விருதுகளை, பரிசுகளை எண்ணாமல் வாழ்ந்த மாதவனின் எழுத்துத்தடம் எழுத்துலகில் நடைபயில்வோருக்குப் பால பாடமாக அமைந்தது.
80 வயதைத்தாண்டித்தான் அவர் வீடுதேடி பரிசு வந்திருக்கிறது.
பரிசு, விருதல்ல இங்கே தாக்கத்திற்குக் காரணம்.
ஒரு நேர்காணல் இப்படித்தன்னை இதுபோல் பாதித்ததில்லை என்பது மூத்த மகனின் முடிவு.
இந்த வயதிலும் எளிமையாய் வாழும் மாதவனின் வாழ்க்கையில் ஒரு நிறைவு இருப்பது உண்மை.
அது விருதால் வந்ததல்ல என்பது இன்னும் தெளிவான உண்மை.
கடந்த காலத்தையும் கடக்கவேண்டிய காலத்தையும் எண்ணி வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டிருந்தார் மூத்தமகன்.
மகள்வீட்டில் வாழும் மாதவனை உள்வாங்கும்பொழுதான் ஊரில் காது,கண் சரியாக கேட்காத அம்மாவுடன் மகளும் பேசிக்களைத்து ஓயும் காட்சியைப் பார்த்துத்திரும்பியது மனம்.
—பிச்சினிக்காடு இளங்கோ (16.1.2019)