ஸ்பேஸ்X ராக்கெட் ஏவிய விண்சிமிழ் முதன்முதல் அகில தேச விண்வெளி நிலையச் சந்திப்பு நிகழ்த்தி பாதுகாப்பாய் புவிக்கு மீண்டது

This entry is part 1 of 9 in the series 10 மார்ச் 2019

FEATURED

Posted on March 9, 2019

ஸ்பேஸ்-X விண்சிமிழ் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது

Space X Rocket Falcon -9 First Launch with Dragon Capsule to International Space Station to dock and return

[ February 28, 2019 ]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா

+++++++++++++++++

1. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

2. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

3. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

4. https://www.space.com/nasa-spacex-clear-crew-dragon-for-first-launch.html

5. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

6. https://phys.org/news/2019-03-dragon-capsule-successfully-rocket-spacex.html#nRlv

6(a)  https://spacenews.com/nasa-gives-go-ahead-for-spacex-commercial-crew-test-flight/

7. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

8. http://spaceref.com/missions-and-programs/nasa/spacex-launches-first-nasa-commercial-crew-demonstration-mission.html

9. http://spaceref.com/international-space-station/space-station-crew-opens-hatch-to-crew-dragon-after-docking.html

10.http://www.spacedaily.com/reports/SpaceX_launches_Dragon_test_capsule_to_ISS_999.html

11. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

12. https://www.bbc.com/news/science-environment-47453951

13. https://www.bbc.com/news/science-environment-47477617

14. https://www.spacex.com/news/2013/03/31/reusability-key-making-human-life-multi-planetary

ஸ்பேஸ் X டிராகன் விண்சிமிழ் முதன்முதல் விண் சந்திப்பு நிகழ்த்தி புவிக்கு மீண்டது.

2019 மார்ச் 8 இல் அமெரிக்காவின் முதல் தனித்துறை விண்சிமிழ் முதன்முதல் அகில தேச நிலையச் சந்திப்பை [ இணைப்பு + நீக்கம் ] [ Space Station Docking ] நிகழ்த்தி, புவிச் சூழ்வெளி வெப்பத்தைக் கடந்து, மீள் நுழைவு விபத்தின்றிப் பாது காப்பாய் அடலாண்டிக் கடலில் நான்கு பாராச்சூட் குடைகள் தாங்க வந்து இறங்கியது.  இம்முயற்சி அமெரிக்கத் தனியார் துறை நுட்பச் செல்வந்தர் இலான் மஸ்க் [ Elon Musk ]  புரிந்த பெரும் விண்வெளி  வெற்றிச் சாதனையாகக் கருதப் படுகிறது.  மனிதரற்ற விண்சிமிழில் நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள், உணவுப் பண்டங்கள் மட்டுமே இருந்தன.  புவி நோக்கி மீளும் போது, ஒலி மிஞ்சிய வேகத்தில் இறங்கிய விண்சிமிழுக்குப் போதிய வெப்பக் கவசம் பூசப்பட்டதால் “மீள் நுழைவு”  [Re-Entry] இயக்கத்தில் விபத்து எதுவும் நேரவில்லை.  டிராகன் விண்சிமிழ் பிளாரிடாவிலிருந்து 270 மைல் [450 கி.மீ] தூரத்தில் கடல் மீது மெதுவாக இறங்கியது.

டிராகன் விண்சிமிழ் விளக்கம்

2011 ஆண்டுவரை  அகிலதேச விண்வெளி நிலையச் சந்திப்பு செய்து, விமானிகளையும் உணவுப் பண்டங்களையும் ஏற்றி இறக்கி வந்தவை  விண்வெளி மீள்கப்பல்கள்  [Space Shuttles].  குறைபாடுள்ள மீள்கப்பல்கள் இரண்டு பழுதடைந்து இருமுறை விபத்துகள் நேர்ந்து பல விமானிகள் உயிரிழந்தார்.  அதனால் விண்வெளி மீள்கப்பல்கள் ஓய்வு பெற்று நிறுத்தம் அடைந்தன.  எட்டு ஆண்டுகள் கழிந்து, இப்போது தனியார் நிறுவனம் இலான் மஸ்க் தலைமையில் ஸ்பேஸ்-X அசுர ராக்கெட் பயிற்சி மூலம்  அமெரிக்கா முதன்முதல்  அகில்தேச விண்வெளி நிலையச் சந்திப்பு, ரஷ்யன் சோயஸ் ராக்கெட்  பயன்பாட்டை நிறுத்தி உள்ளது.  ரஷ்யாக்கு ஒருமுறை, ஒருவர் பயணச் சந்திப்புக்கு 80 மில்லியன் டாலர் அமெரிக்கா  தரவேண்டும்.  2019 ஜூலையில் டிராகன் -2 விண்சிமிழ் இரண்டு அமெரிக்க விமானிகளை  [ Robert Behnken & Douglas Hurley ] அகிலதேச விண்வெளி நிலையத்துக்கு  ஏந்திச் செல்லும்.

 American Astronauts Robert Behnken & Douglas Hurley

Linking Space Station

Space Shuttle Docking with International Space Station

[ Space Shuttles Shut down in July 2011 ]

Hubble Telescope Launching

Space Shuttle Launches Hubble Telescope

++++++++

அண்டவெளி வேட்கையில் அமெரிக்கத் திட்டங்களின் இரண்டாம் கட்டம்!

முதற் கட்டத்தில் விண்வெளி விமானி ஒருவர் ஓட்டும் மெர்குறித் [Project Mercury] திட்டம், அடுத்து இருவர் இயக்கும் ஜெமினித் [Project Gemini] திட்டம், மூன்றாவது மூவர் செல்லும் அபோலோ [Project Apollo] போன்ற திட்டங்கள் பல வெற்றிகரமாய் நிறைவேறிச் சந்திரன், செவ்வாய், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களை ஆராய்ந்த பிறகு, நாசா [NASA] விண்வெளிப் படையெடுப்பின் அடுத்த கட்டத்தை ஆரம்பித்தது. இரண்டாம் கட்டத்தில் ஏழு நபர் பயணம் செய்யும் விண்வெளி மீள்கப்பல், கொலம்பியா [Space Shuttle, Columbia] 1970 இல் உதயமாகி, 1977 இல் உருவாகி, 1981 ஏப்ரல் 12 ஆம் தேதி அதைப் பயிற்சிப் பயணத்திற்கு அனுப்பி, புதிய விண்வெளி யுகத்தை நாசா திறந்து வைத்தது! கொலம்பியா மீள்கப்பல் இருபதாம் நூற்றாண்டு உருவாக்கிய ஓர் நூதனப் பறக்கும் வாகனம்! அது ஏவுகணை போல் [Missile] ஏவப்பட்டு, அண்டவெளிச் சிமிழ்போல் [Spacecraft] சுழல்வீதியில் [Orbit] சுற்றி வந்து, இறக்கை முளைத்த ஜெட் விமானம் போல் [Aircraft], தரைதொட்டு இறங்கும் முத்திறம் உடைய, ஓர் ஒப்பில்லா பொறி நுணுக்க யந்திரம்!

மீள்கப்பல் ராக்கெட் முதுகில் ஏற்றப் பட்டு, பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வந்து, பணி முடிந்தபின் பூமிக்குச் சாதாரண ஊர்தி போல் மீளும் ஓர் சுமைதாங்கிக் கப்பல் [Cargo Ship]. மீண்டும் மீண்டும் பயன்படும் விண்வெளிப் பணிகளுக்காகவே, மீள்கப்பல் உருவாகி விருத்தி செய்யப் பட்டது. முதலில் தோன்றிய மெர்குரி, ஜெமினி, அபோலோ ஆகிய விண்சிமிழ்கள் யாவும் ஒருமுறை பயன்படுத்திய பின்பு உபயோகம் இல்லாமல், பின்னர் பொருட் காட்சியகத்தில் சரித்திர நினைவுச் சின்னங்களாய் ஓய்வு பெற்றன!

விண்வெளி மீள்கப்பல் திட்டத்தின் குறிக்கோள்கள்

விண்வெளி மீள்கப்பலின் சுமைதாங்கி அறை மிகவும் அகண்டது! அதில் ஐந்து ஆஃப்ரிக்க யானைகளை ஏற்றிக் கொண்டு விடலாம்! விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் செல்வது, அண்டவெளி நிலையத்திற்குப் [Space Station] பண்டங்கள் கொண்டு செல்வது, ஆய்வு செய்யும் பயணிகளை ஏற்றிச் செல்வது, பூமிச் சுழல்வீதியில் சுற்றி வரும் ஹப்பிள் தொலை நோக்கியைச் [Hubble Space Telescope] செப்பனிடுவது அல்லது புதுப்பிப்பது, செயலற்ற துணைக் கோள்களைக் [Satellites] கைப்பற்றிப் பூமிக்குக் கொண்டு வருவது, சுற்றி வரும் துணைக் கோள்களைப் பராமரிப்பது, அண்டவெளி ஆய்வகத்தில் ஆராய்ச்சிகள் நடத்துவது, அரசாங்கப் படைத்துறையின் உளவுப் பணிகளுக்கு [Military Missions] உதவுவது ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

Space Shuttle -6

திட்டப்படிக் கொலம்பியா [Columbia], சாலஞ்சர் [Challenger], டிஸ்கவரி [Discovery], அட்லாண்டிஸ் [Atlantis], என்னும் நான்கு மீள்கப்பல்கள் உருவாக்கப் பட்டு அண்டவெளியில் யாத்திரை செய்து வருகின்றன. 1980-1990 ஆண்டுகளுக் குள் இவை குறைந்தது ஆண்டுக்கு 50 பயணங்கள் வீதம் பணி புரியத் திட்டங்கள்! இவற்றில் சாலஞ்சர் 1986 இல் ஏவுதளத்தில் புறப்பட்டு ஏறும் போது வெடித்து விபத்துக்குள்ளாகி [Challenger Disaster] உள்ளிருந்த ஏழு விண்வெளி நிபுணர்களும் உயிரோடு வெந்து சாம்பலாயினர்! பிறகு சால்ஞ்சர் இடத்தைப் பூர்த்தி செய்ய எண்டவர் [Endeavour] மீள்கப்பல் அமைக்கப் பட்டது.

விண்வெளி மீள்கப்பல் அமைப்பாடு சமயத்தில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பொறியியற் துறை நுணுக்கங்களைப் பரிமாறிக் கொண்டன என்பது மெச்சத் தகுந்த நிகழ்ச்சி! ரஷ்யாவில் 1978 இல் உதயமாகி, 1987 இல் மனிதரற்றுச் சுயக் கட்டுப்பாட்டில் ஏவப்பட்டு, 155 மைல் உச்சி வீதியில் சுற்றி 3:25 மணி நேரம் பயிற்சிப் பயணம் செய்து, வெற்றிகரமாய்ப் பூமிக்கு மீண்ட புரான் விண்வெளி மீள்கப்பல் [Buran Space Shuttle] ஏதோ ஒரு காரணத்தால் 1993 இல் தடைபட்டுப் பிறகு பயன்படுத்தப் படாமல் போனது! ஆனால் அமெரிக்கா தான் முதன் முதல் ஆக்கிய கொலம்பியா மீள்கப்பலை, ரஷ்யாவின் புரான் மீள்கப்பலின் பிரதியாக உருவாக்கிச் சில வேறுபாடுகளுடன் மாற்றி அமைத்தது!  ஐந்து அண்டவெளி மீள் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு அவற்றில் இரண்டு விபத்துக்குள்ளாகி, அனைத்து விமானிகளும் இறந்தனர்.  அவைகள் 1981 முதல் 2011 வரை 135 விண்வெளிக் குறிப்பணிகள் புரிந்து, மூன்று நிரந்தரமாய் ஓய்வெடுத்தன.  முக்கியப் பணிகள் : ஹப்பிள் தொலைநோக்கி ஏவியது; பல துணைக்கோள்கள் ஏவியது;   அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்கள் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கவை.

Space Shuttle -5

விண்வெளி மீள்கப்பல் கட்டமைப்பின் முக்கிய உறுப்புக்கள்

கொலம்பியா மீள்கப்பல் 9 பில்லியன் டாலர் செலவில் ராக்வெல் கார்பொரேசன், பாம்டேல், காலிஃபோர்னியா [Rockwell Corporation, Palmdale, California] தொழிற் கூடத்தில் 1978 ஆண்டு உருவான விண்வெளி யந்திரம்! ஆரம்பத் தளச் சோதனைகள் முடிந்தபின், டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் [Dryden Flight Research Centre, Edwards California] அதன் பறப்பு முறைகள் யாவும் பயிற்சி செய்யப் பட்டன. ஏவு தளத்தில் நின்ற 187 அடி உயரமும், 2000 டன் எடையும் கொண்ட கூட்டமைப்பில் [Space Shuttle Assembly] இறக்கை யுள்ள சுற்று ஊர்தி [Winged Orbiter], எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank], எரித்திடவ இரட்டை ராக்கெட்டுகள் [Solid Fuel Twin Rockets] யாவும் ஒருங்கே இணைக்கப் பட்டிருந்தன. 154 அடி நீளமும் 29 அடி விட்டமும் கொண்டது, எரித்திரவ வெளிக்கலன். அதன் இருபுறமும் 150 அடி நீளம், 14 அடி விட்டமுள்ள ராட்சத ராக்கெட்கள்! விண்ணோக்கிய மூக்குடன் DC-9 ஜெட் விமானத் தோற்ற முடைய கொலம்பியா மீள்கப்பல், நீண்ட வெளிக்கலன் முதுகில் ஏறிக்  கொண்டிருந்தது.

இரட்டை ராக்கெட்டுகள் அதி தீவிரமாய்ப் பற்றி எரியும் அலுமினியப் பொடியைத் [Aluminium Powder] திடக்கன எரிபொருளாய்ப் [Solid Fuel] பயன்படுத்தின. வெளிக்கலனில் திரவ ஹைடிரஜன் [Liquid Hydrogen 380,000 gallon], திரவ ஆக்ஸிஜன் [Liquid Oxygen 140,000 gallon] தனித்தனி கலன்களில் நிறைக்கப் பட்டிருந்தன. ராக்கெட் ஏவுதளத்தில் சுடப் படும் போது, இரண்டு திரவ வாயுக்களும் அதிக அழுத்தத்தில் கலந்து கனல் பற்றி, மீள்கப்பலின் பிரதம எஞ்சின் மூன்றும் இயங்கின. ஒவ்வொரு வினாடியும் 1000 பவுண்டு எரிதிரவம் எஞ்சின்களுக்குத் தேவைப்படுகிறது. மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியை நெருங்கும் முன்பே, வெளிக்கலன் காலியாகி அற்று விடப்பட்டு, வாயு மண்டல வெப்பத்தில் எரிந்து தூள் தூளாகிறது!

விண்வெளி மீள்கப்பலின் சாதனங்கள், இயக்க முறைகள்

மீள்கப்பலில் முன்புறம் கருவிகளை இயக்கும் விமானிகள், பல ஆய்வுச் சாதனங்கள், கட்டுப்பாடு செய்யும் மின்கணனிகள், மின்னியல் வன்கலன்கள் [Electronic Hardwares], நடுவே சுமை தாங்கும் கூடாரம், வால்புறத்தில் மூன்று பிரதம உந்து எஞ்சின்கள் யாவும் பொருத்தப் பட்டிருந்தன. 67 அடி நீளம், 15 அடி விட்டமுள்ள நடுக் கூடாரம் 29.5 டன் சுமையை விண்வெளிக்குத் தூக்கிச் செல்ல முடியும்! ஆனால் மீண்டும் பூமிக்கு இறங்கும் போது 14.5 டன் சுமையைத்தான் ஏற்றிக் கொள்ள முடியும்! சுமைதாங்கி அறையில் தொலைத் தொடர்பு [Communication], படைத்துறை [Military], வானியல் [Astronomical] ஆகியவற்றின் பணிகளைப் புரியும் துணைக்கோள்கள் [Satellites] சுழல்வீதி யிலிருந்து ஏவப்பட எடுத்துச் செல்லப்படலாம். மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் சுற்றி வரும் போது நுண்ணீர்ப்பு [Micro-gravity] என்று சொல்லப்படும் எடையின்மையை [Weightlessness] ஆராயலாம். நாசா பிற நாட்டினர் ஆய்வகங்களை ஏற்றிச் சென்று, விண்வீதியில் ஏவி விடலாம்.

Space Shuttle -8

ஏவுதளத்தில் 2000 டன் எடையுள்ள கொலம்பியா விண்வெளிக் கூட்டமைப்பு, பல்வேறு உந்து விசைச் சாதனங்களால் [Multiple Propulsion Systems] 3000 டன் உதைப்பில் [Thrust] நேர் செங்குத்தாக மேலே எழுகிறது! மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் பணிகளை முடித்து விட்டு, தனது ராக்கெட் எஞ்சின்களை இயக்கி, விண்வெளி யிலிருந்து திரும்பி, பூமியை நோக்கிக் கீழே பாய்ந்து, பூகோள வாயு மண்டலத்தின் கடும் வெப்ப உராய்வில் [Intense Friction Heat] வெந்து சிதைந்து விடாமல், பாதுகாப்பாய் இறங்கி, ஓர் சாதாரண விமானம் போல் தளமட்டத்தில் [Horizontal] தரையைத் தொடுகிறது! மீள்கப்பலில் விமானக் குழுவகத்தின் பின்னால் அமைந்த, தூரக் கையாட்சி ஏற்பாட்டில் [Remote Manipulator System] சுயமாய் இயங்கி, 50 அடி நீளும் கனடாக் கரம் [Canada Arm] சுமையைத் தூக்கவும், சுமையை இறக்கவும் பயன்படுகிறது.

பூமி நோக்கிப் பாயும் மீட்சிப் [Re-entry] பயணத்தில், வாயு மண்டலத்தின் உராய்வு வெப்பத்தில் மீள்கப்பல் எரிந்து போகாதவாறு, சிலிகேட் நார் சூட்டுத் தடுப்புத் தகடுகள் [Silicate Fibre Thermal Insulation Tiles] உறைபோல் ஒட்டப்பட்டு பாதுகாப்பு செய்கின்றன. மீள்கப்பலின் சிலிகேட் நார்கள் குறைந்தது 100 விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு நீக்கப் பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். நலிந்த எடை கொண்ட அந்த காப்பு நார்கள் 1260 டிகிரி C உஷ்ணத்தைக் கூடத் தாங்கும் வலிமை யுள்ளவை!

Space Shuttle -16

டிரைடென் பறப்பாய்வு மையகத்தில் ஆரம்பச் சோதனைகள் யாவும் வெற்றிகரமாக முடிந்து கொலம்பியா மீள்கப்பல் போயிங் 747 [Boeing 747] முதுகில் ஏற்றப் பட்டு, பிளாரிடா கனாவரல் முனை [Cape Canaveral, Florida] ஏவு தளத்திற்குத் தூக்கிச் செல்லப் பட்டது!

முதல் மீள்கப்பல் கொலம்பியாவின் முன்னோடிப் பயிற்சிப் பயணம்

அமெரிக்காவின் கனாவெரல் ராக்கெட் ஏவுதள முனையில் 1981 மார்ச் 14 ஆம் தேதியே 187 அடி உயரக் கொலம்பியா கோபுரக் கூட்டமைப்பு தயாராக நின்று கொண்டிருந்தது. அதன் முதல் பயிற்சிப் பயணச் சோதனை நீடிப்பது, இரண்டு அல்லது மூன்று நாட்களே! அது பூமியைச் சுற்றி வரப் போகும் சுழல்வீதி [Earth Orbit] உயரம் 150 மைல், பயிற்சிக்காகத் தணிவாக்கப் பட்டுள்ளது! அதை இயக்கி முதலில் செல்பவர் இருவர்! அண்டவெளி விமானிகள் ஜான் யங், அடுத்தவர் ராபர்ட் கிரிப்பென் [Astronauts John Young, Robert Grippen]. கொலம்பியா வின் ஆணையாளர், 50 வயதுள்ள ஜான் யங் அபோலோ விண்வெளி நிலவுத் திட்டத்தில் [Apollo Moon Program] நான்கு முறை அண்ட வெளியில் சுற்றிச் சிறப்புற்றவர்! ராபர்ட் கிரிப்பென் முதலில் பயணம் செய்யும் ஓர் விமானி.

Space Shuttle -21

அவர்கள் இருவரும் கொலம்பியா மீள்கப்பல் இறக்கைகளின் நிலைபாட்டை [Stability of Wings] அண்டவெளியில் சோதிக்க 36 தடவைப் பூமியைச் சுற்றி வரப் போகிறார்கள்! முடிவில் செங்குத்தாகப் பாய்ந்து, மொஜாவே பாலைவனத்தில் [Mojave Desert, California] இறக்கம்! அந்த முதல் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாக முடிந்தால், அடுத்து 36 மீள்கப்பல் பயண ஏற்பாடுகள் தொடரத் திட்டமிடப் பட்டன! மீள்கப்பலில் எதிர்பாராத விபத்து எதுவும் ஏற்பட்டால், இருவரும் உயிர் தப்பிக் கொள்ள, வெளியேற்றும் ஆசனங்கள் [Ejection Seats] அமைக்கப் பட்டிருந்தன!

திரட்சி எரிபொருள் [Solid Fuel] இயக்கும் முதற் கட்ட இரட்டை ஊக்கி ராக்கெட்டுகள் [First Stage Twin Booster Rockets], மற்றும் மூன்று மீள்கப்பல் ராக்கெட்டுகள் முதல் இரண்டு நிமிடங்கள் சுடப் பட்டு, மீள்கப்பல் மணிக்கு சுமார் 3000 மைல் வேகத்தில் நேர் மேலே எழுச்சி பெற்று 31 மைல் உயரத்தில் சென்றதும், இரட்டை ராக்கெட்டுகள் அற்றுக் குடை பிடித்துக் [Parachute] கொண்டு கடலில் விழுகின்றன. பிளாரிடாவுக்கு அருகே கடலில் காத்திருக்கும் கப்பல் ஒன்று, அவற்றைக் கடலில் கண்டு பிடித்து மறுபடியும் பயன்படுத்தக் கரை சேர்க்கிறது. இரண்டு ஊக்கி ராக்கெட்டுகள் ஓய்ந்த பின்னும், மீள்கப்பலின் மூன்று பிரதம ராக்கெட்டுகள் தொடர்ந்து இன்னும் ஆறு நிமிடங்கள் இயங்கி, மீள்கப்பலை 1200 டன் உதைப்புடன் [Thrust] 59 மைல் உயரத்தில் தள்ளி, 99% சுற்று வேகம் [Orbital Velocity] அடைந்து, பூமியின் சுழல்வீதியை நெருங்குகிறது. அப்போது, வெளிக்கலன் அற்று விடப்பட்டுத் தூளாகிச் சிதறி இந்து மகாக்கடலில் விழுகிறது. முடிவில் கப்பலின் இரண்டு சிறு எஞ்சின்கள் இறுதி உந்து விசை தந்து, மணிக்கு 17,500 மைல் வேகத்தில் மீள்கப்பல் பூமியின் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றி வர 150 மைல் உயரத்தில் தள்ளி விடப் படுகிறது.

Control Room

அண்டவெளி மீள்கப்பல் ஆட்சி அறை. 

Click to enlarge

அண்டவெளிப் பணிகளை முடித்த பிறகு, மீள்கப்பலின் சிறு எஞ்சின்கள் இயங்கி மணிக்கு 17,600 மைல் வேகத்தில், கப்பல் சுழல்வீதி யிலிருந்து விடுபட்டுக் கொண்டு [De-Orbiting], அதன் மூக்கு பூமியை எதிர் நோக்கித் திரும்புகிறது. 50 மைல் உயரத்தில் வாயு மண்டலத்தின் கடும் உராய்வுக் கனலைத் தாங்கிக் கொள்ளக், கப்பல் சாய்ந்து 40 டிகிரிக் கோணத்தில் வயிற்றைக் காட்டிக் கொண்டு, புவியை நோக்கிப் பாய்கிறது. அப்போது அதன் அசுர வேகத்தைத் தணிக்க, கப்பலின் எதிர்ப்புற ராக்கெட்டுகள் [Retro-rockets] சுடப்படுகின்றன. மீள்கப்பல் அதன்பின் ஒரு விமானம் போல் தனது இறக்கைகளை இயக்கிக் கட்டுப்பாடு முறைகளைக் கையாண்டு தரையில் கம்பீரமாக வந்து இறங்குகிறது. அப்போது மணிக்கு 220 மைல் வேகத்தில் தரையில் ஓடும் விமானத்தின் வேகத்தைத் தணிக்க, வால்புறத்தில் ஒரு பாராசூட் குடை விரிகிறது. மீள்கப்பலின் தரைதொடும் [Touchdown] இயக்கப்பாடுகள் எல்லாம் சுமார் அரை மணி நேரத்துக்குள் நிகழ்ந்து விடுகின்றன.

Space Shuttle -22

Click to enlarge

விண்வெளி மீள்கப்பல்கள் ஆற்றிய அண்டவெளிப் பணிகள்

கொலம்பியா தனது முதற் சோதனைப் பயிற்சிப் பயணத்தை 1981 ஏப்ரலில் வெற்றிகரமாய் முடித்த பிறகு, ஐந்தாண்டுகள் சிறப்பான பணிகள் பல செய்யப் பட்டுள்ளன. 1983 ஏப்ரலில் சாலஞ்சர் தன் முதல் பயணத்தை முடித்து, நவம்பரில் அடுத்து அமெரிக்க, ஈரோப்பிய நாடுகளின் 71 விஞ்ஞானத் தேர்வுகள் [Scientific Experiments] புரிய, முதல் விண்வெளி ஆய்வகத்தைத் [Space Lab] தூக்கிச் சென்றது. 1984 ஏப்ரலில் பரிதியின் உச்சத் துணைகோள் [The Solar Maximum Satellite] சுழல்வீதியிலே செப்பனிடப் பட்டது.

Space Shuttles -7

Click to enlarge 

Space Shuttle Path

அதே வருடம் நவம்பரில் முடமாய்ப் போன பலாப, வெஸ்டார் [Palapa, Westar] துணைக்கோள்கள் சுழல்வீதியிலிருந்து பற்றி இழுக்கப் பட்டு, பூமிக்கு எடுத்து வரப்பட்டன. 1985 ஆகஸ்டில் முதன் முதல் விண்வெளியில் ஒரு துணைக்கோள் [Syncon IV-3] ஏவப்பட, சாலஞ்சர் உதவி செய்தது. அடுத்து 1986 ஜனவரியில் சாலஞ்சர் புறப்படும் போது வெடித்து [Challenger Disaster] ஏழு நபர்கள் மாண்டபின், ஏறக் குறைய மூன்று ஆண்டுகள் மீள்கப்பலின் பயணங்கள் ஒத்திப் போடப் பட்டன! அச்சமயம் அதுபோல் விபத்து எதுவும் நேராதவாறு மீள்கப்பல்களில் பல புதிய பாதுகாப்புச் சாதனங்கள் சேர்த்திடப் பட்டன.

1986 ஆம் ஆண்டிலிருந்து 50 மேற்பட்ட மீள்கப்பல் குறிப்பணிகள் [Space Shuttle Missions] எவ்வித விபத்தும் நேராமல் முடிந்துள்ளன. முக்கியமாக மே மாதம் 1989 இல் வெள்ளி விண்கோளை நோக்கி ஏவிய மாஜெல்லன் [Magellan], அக்டோபர் 1989 இல் வியாழன் விண்கோளை நோக்கி ஏவிய காலிலியோ [Galileo], ஏப்ரல் 1990 இல் ஏவிய ஹப்பிள் விண்தொலை நோக்கி [Hubble Space Telescope], அக்டோபர் 1990 இல் பரிதியை ஆராய ஏவிய யுலிஸிஸ் [Ulysses] யாவும் சிறப்பாக, மீள்கப்பல் சுமைதாங்கி அறை யிலிருந்து ஏவிவிடப் பட்டவை.

Launching Space Hubble Telescope

1993 டிசம்பரில் முதன் முதல் ஹப்பிள் தொலைநோக்கிப் பராமரிப்புக் குழு காட்சிச் சாதனத்தைச் [Optics] செப்பனிட்டு, மின்னியல் ஏற்பாடுகளைச் [Electronic Systems] சீர்திருத்தியது. 1995-1998 ஆண்டுகளில் அமெரிக்காவின் மீள்கப்பல்கள் ஒன்பது தடவைப் பயணம் செய்து, ரஷ்யாவின் அண்டவெளி நிலையம், ‘சமாதானம் ‘ [MIR Space Station] என்பதோடு இணைப்பு [Docking or Linkup] செய்து, சரித்திரப் புகழ் பெற்றன. அப்பயிற்சி முறை அனுபவங்கள், அடுத்து 1998 ஆண்டில் தயாராகப் போகும் அகில நாட்டு அண்ட வெளி நிலைய [International Space Station] இணைப்புக்குப் பயன்படும்.

Space Shuttle -20

ஹப்பிள் தொலைநோக்கி ஏவுதல்

விண்வெளி மீள்கப்பல் சாலஞ்சர் ஏவிய பிறகு போது மரண விபத்து!

வெண்ணிலவை நோக்கி முயன்ற விண்வெளிப் படையெடுப் பில், அமெரிக்காவின் முதல் உயிர்ப்பலி 1967 ஜனவரி 27 ஆம் தேதி நிகழ்ந்தது! அபோலோ விண்சிமிழில் தினமும் பங்கு கொள்ளும் பயிற்சியின் போது, உள்ளே தீப்பற்றி மூன்று சிறந்த விமானிகள் எட்வர்டு ஒயிட் [Ed White], ராஜர் காஃபி [Roger Chaffee], விர்ஜில் கிரிஸ்சம் [Virgil Grissom] உயிரோடு எரிந்து சாம்பலாயினர்! பத்தொன்பது ஆண்டுகள் கழித்து, அதை விடக் கோர மரணம் 1986 ஜனவரி 28 ஆம் தேதி அன்று நிகழ்ந்தது! 1981 முதல் பயிற்சிக்குப் பின்பு 26 மீள்கப்பல் பயணங்கள் வெற்றிகர மாக நடந்தேறின. 1986 ஜனவரி 28 இல் ஏவுதளத்தில் எழும்பிடத் தயாராக இருந்த சாலஞ்சர் மீள்கப்பலில் ஏழு நபர்கள் தமது ஆசனத்தில் அமர்ந்திருந் தனர். ராக்கெட் எஞ்சின்கள் திட்ட நேரத்தில் தீக்கனலைக் கக்கி, சாலஞ்சர் மீள்கப்பல் பெருமிதமோடு மேலே கிளம்பியது. ஒரு நிமிடம் கழித்து 50,000 அடி உயரத்தில் பாய்ந்து ஊடுருவிச் செல்லும் போது, அடுத்த நிமிடப் பணி முடிந்து, ஊக்கி ராக்கெட்கள் [Booster Rockets] அற்று வீழ்ந்தன. அப்போது எதிர்பாரதவாறு ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது! அது மரணத் தவறு! மாபெரும் சிறு தவறு! மறக்க முடியாத தவறு! மன்னிக்க முடியாத தவறு!

உயிரிழந்த சாலஞ்சர் மீள் கப்பல் விமானிகள் 

பயணம் துவங்கி ஒன்றரை நிமிடத்தில், சாலஞ்சர் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த மாபெரும் எரித்திரவ வெளிக்கலன் [Liquid Fuel External Tank] திடாரென வெடித்தது! உடனே மீள்கப்பல் சுக்கு நூறாய் உடைந்து சிதறியது! அண்டவெளிப் பயணம் தொடங்கும் முன்பே, எல்லாம் முடிந்து விட்டது! உள்ளே அடைபட்டிருந்த ஏழு நபர்களுக்கும் வெளியே என்ன நிகழ்ந்து விட்டது என்பது தெரியாமலே போய் விட்டது! அகால மரணம் எய்த திறமைசாலிகளின் பெயர்கள் [இடமிருந்து வலம் முன்புறம்]: மைகேல் ஸ்மித், ஃபிரான்சிஸ் ஸ்கோபி, ரோனால்டு மெக்நாயர், [பின்புறம்] எல்லிஸன் ஓனிசுகா, கிரிஸ்டா மெக்காலிஃப், கிரிகரி யார்விஸ், ஜூடி ரெஸ்னிக்.

விபத்தின் விளைவுகளைச் சீராக உளவு செய்ததில், ஊக்கி ராக்கெட்டின் மேலுறை இணைப்பில் [Booster Rocket Casing Seams] உள்ள ரப்பர் O வளையத்தில் [Rubber O-Ring] பழுது ஏற்பட்டு அது பிளந்து, தீப்பற்றிய திடப் பொருள் கசிந்து, வெளியே உள்ள எரித்திரவ வெளிக்கலனைச் [Liquid Fuel External Tank] சூடாக்கவே, 154 அடி நீளமுள்ள வெளிக்கலன் வெடித்தது! ஒரு சிறு ரப்பர் வளையப் பழுது ஏழு விண்வெளி வீரர்கள் கோர மரணத்துக்கும், 9 பில்லியன் டாலர் பண விரையத்துக்கும் காரணம் ஆனது! அடுத்து மூன்று ஆண்டுகளுக்குத் திட்டமிட்ட பயணங்கள் யாவும் தடைப் பட்டு, அது போன்ற அபாய விபத்து எப்போதும் நேரா வண்ணம் பல பாதுகாப்புச் சாதனங்கள் மீள்கப்பலில் சேர்க்கப் பட்டன!

Space Shuttle -12

அண்டவெளி மீள் கப்பல் கீழ் இறங்குகிறது.

நாசாவின் எதிர்கால விண்வெளி மீள்கப்பலின் குறிப்பணிகள்

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில், அகில நாட்டு அண்டவெளி நிலைய அமைப்புப் [International Space Station] பணிகளுக்கு மீள்கப்பல்களின் பெரும்பான்மை யான பயணங்கள் திட்டமிடப் பட்டுள்ளன. அப்பணிகள் 2004 இல் முடிவு பெறும். அகில நிலையம் தயாரானதும் அங்கு விமானிகள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், பொறி நுணுக்கர், பராமரிப்பாளர் அடிக்கடி போய்வர விண்வெளி மீள்கப்பல் பயன்படும். 1998 இல் அட்லாண்டிஸ் [Atlantis] மீள்கப்பல் புது நிலையப் பணிகளுக்காகப் புதுப்பிக்கப் பட்டது. புதிய காட்சி முகப்புகள் [New Displays], முற்போக் கான கப்பல் நகர்ச்சிச் சாதனங்கள் [Navigational Equipment], அகில நிலையத்தோடு இணைக்க காற்றடைப்பு அறை [Airlock Chamber] ஆகிய புது ஏற்பாடுகள் சேர்க்கப் பட்டன. அதன் உந்து சக்தியும், குளிர்ப்புச் சாதனமும் [Power & Cooling System] பெருக்கப் பட்டன. அத்துடன் மீள்கப்பல்கள், ஹப்பிள் விண்தொலை நோக்கிப் பராமரிப்பு, துணைக் கோள் ஏவுதல், செயலற்ற துணைக் கோள் மீட்டுதல் போன்ற ஒழுங்காய் நிகழ்ந்து வரும் பணிகளுக்கும் பயன்படும்.

Shuttle Parts

நாசா மீள் கப்பல் கட்டமைப்பு உறுப்புகள்

திட்டப்படி விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் 2012 ஆண்டில் ஓய்வு பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! நாசா தற்போதைய மீள்கப்பலைப் போன்ற, சிறப்பு X-38 விண்கப்பலை அகில நிலையத்தின் அபாயக் காப்பு யந்திரமாக [Emergency Lifeboat] உருவாக்க திட்டமிட்டுள்ளது. 1998 இல் பயிற்சிச் சோதனைகள் யாவும் முடிந்து, X-38 பாதுகாப்புக் கப்பல் 2003 ஆண்டில் பறப்பதற்குத் தயாராகும்!

‘ஒரு கட்ட சுழல்வீதி எழுச்சி ராக்கெட் ‘ [Single Stage to Orbit Rocket] உடைய புதிய ராட்சதக் விண்கப்பல் [X-33] ஒன்று சோதனைக் களத்தில் இயங்கிச் சீரான முறையில் வளர்ச்சியாகி வருகிறது! 21 நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் உருமிக் கொண்டு உயரப் போகும் அந்த அசுர ராக்கெட், ஒரே மூச்சில் ஊதப்பட்டு, ஒரே பாய்ச்சலில் தாவி விண்கப்பலைப் பூகோளச் சுழல்வீதியில் எறிந்துவிடும்!

****************************

தகவல் :

1. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

2. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

3. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html

4. https://www.space.com/nasa-spacex-clear-crew-dragon-for-first-launch.html

5. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

6. https://phys.org/news/2019-03-dragon-capsule-successfully-rocket-spacex.html#nRlv

https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/

8. http://spaceref.com/missions-and-programs/nasa/spacex-launches-first-nasa-commercial-crew-demonstration-mission.html

9. http://spaceref.com/international-space-station/space-station-crew-opens-hatch-to-crew-dragon-after-docking.html

10.http://www.spacedaily.com/reports/SpaceX_launches_Dragon_test_capsule_to_ISS_999.html

11. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission

12. https://www.bbc.com/news/science-environment-47453951

13. https://www.bbc.com/news/science-environment-47477617

14. <a href=”https://www.spacex.com/news/2013/03/31/reusability-key-making-human-life-multi-planetary” rel=”nofollow” style=”border:0px;font-family:inherit;font-style:inherit;font-weight:inherit;margin:0px;outline:0px;padding:0px;vertical-align:baseline;color:rgb(136,36,81)

15. https://spacenews.com/nasa-gives-go-ahead-for-spacex-commercial-crew-test-flight/

+++++++++++++++++++++++++++++++++

Space Shuttles 

1. https://www.nasa.gov/externalflash/the_shuttle/

2.https://www.nasa.gov/externalflash/the_shuttle/

3. http://science.howstuffworks.com/space-shuttle.htm

4. https://www.nasa.gov/mission_pages/shuttle/main/index.html

5. https://en.wikipedia.org/wiki/Space_Shuttle  [May 24, 2016]

+++++++++++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  March 9, 2019  [R-2]

Series Navigationகவிதையும் வாசிப்பும் – 5 -கவிஞர் ஜெயதேவனின் ஒரு கவிதையை முன்னிறுத்தி…..
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *