ஆழமும் தெளிவும் உள்ளவை [வ. ஸ்ரீநிவாசனின் எதைப்பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது” தொகுப்பை முன்வைத்து]

This entry is part 2 of 9 in the series 2 ஜூன் 2019

வ.ஸ்ரீநிவாசன் மதிநுட்பம் நூலோடு வல்லார் ஆவார். முன்னமே நாஞ்சில்நாடன் அவரைப் பற்றி என்னிடம் வியந்தோதி உள்ளார். அவரை ஒரே ஒரு முறை கோவையில் அவரில்லத்திற்குச்சென்று சந்தித்திருக்கிறேன். நெடுநாள் பழகியவர் போல் அளவளாவியது இன்னமும் நினைவிலிருக்கிறது. அவரெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு அண்மையில் வெளியாகி உள்ள “எதைப்பற்றியும் [அ] இதுமாதிரியும் இருக்கிறது”. கட்டுரைத்தொகுப்பு எனச் சொன்னாலும் இதில் உள்ளவை ஒரே கட்டுரையில் அடக்கப்பட்ட பல்வகைப்பட்ட சிறு பகுதிகள் என்று சொல்லலாம். அதாவது பத்தி எழுத்து வகையில் அமைந்தவை. படிக்கச் சலிப்பூட்டாதவை. இவை அனைத்துமே வார்த்தை மற்றும் சொல்வனம் இதழ்களில் வெளிவந்தவையாகும்.

      அவர் அவ்வப்போது கண்ட, கேட்ட, வாசித்த  அனுபவங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார் என்றும் சொல்லலாம். அவர் ஒரு முறை கொல்கத்தா இரயிலில் பயணம் செய்கிறார். அப்பெட்டியில் பயணம் செய்த முப்பது வயதுக்குள்ளான தம்பதிகளில் கணவன் ஏதோ ஒருகாரணத்திற்காக மனைவியைக் கன்னத்தில் அறைந்து விடுகிறார். பார்த்துக் கொண்டிருந்த அனைவருமே ஸ்தம்பித்துவிடுகிறார்கள். சிறிது நேரம் கழித்து அவர்களிருவரும் ஒன்றுமே நடக்காதது போல ஆகி விடுகிறார்கள். இதைக்காட்டும் அவர் “கிட்டத்தட்ட அனைத்துப் பெண்களுமே இத்தகைய ஆபாச, அராஜக , அநியாய, அவமானங்களை வாழ்வில் சந்தித்தே விடுகிறார்கள்” என்கிறார். அனைத்துப் பெண்களுமே என்ற சொற்றொடர்தான் இங்கே கவனிக்க வேண்டியதாகும்.

கிராமப்பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் இது நடக்கிறது. நன்கு படித்த பெண்களுக்கும் படிப்பு வாசனையே அறியாத பெண்களுக்கும் இது நடந்தேறுகிறது. வேலைக்குச்சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும் இவ்வாறு நடக்கிறது.”எல்லாப் பெண்களுமே தாழ்த்தப்பட்டவர்கள்தாம்” என அவர் முடிக்கும்போது இதை இன்னும் ஆண்களால் மாற்ற முடியவில்லையே என்னும் எண்ணத்தால் மனம் வலிப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

      ஆங்காங்கே சில அரசியல் சிந்தனைகளையும் எள்ளல் பாணியில் அவர் விதைத்துச்செல்கிறார். சிலவற்றைத் துணிந்தும் சொல்லியிருக்கிறார். கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் குறிப்பிடுகையில், ”வாரிசு அரசியல் இல்லாதவர்கள், ஜனநாயக முறையில் உள்கட்சித் தேர்தல் நடத்துபவர்கள், சொத்து அதிகம் சேர்க்காதவர்கள், தமக்கு வரும் எல்லாப் பரிசுகளையும் கட்சிக்குக் கொடுப்பவர்கள்” எனப்பாராட்டிக் கொண்டே போகிறார். ஆனால் அவர்களது குறைகளையும் சொல்வதுதான் முக்கியமானதாகும். அவர்களின் குறைகளைச் சுட்டிக் காட்டும் நேரத்தில் மற்ற கட்சிகளையும் எள்ளி நகையாடும் வரிகள் இவை.

      ”’தமிழன்’ சான்றிதழ் வழங்கும் பெரியார் பல்கலைக்கழகம். ‘  ‘இந்தியர்’ பட்டம் வழங்கும் ஆர்.எஸ்.எஸ். சர்வகலாசாலை மாதிரி ’முற்போக்கு’ ‘மதச்சார்பின்மை’ என்கிற ‘ட்யூயல் டிக்ரி’ வழங்கும் யூனிவர்ஸிடி’ இவர்கள்.

இன்னும் கூட அவர்களில் இருக்கும் விசித்திரங்களாக ஹிரேன் முகர்ஜி தினமும் காலையில் சம்பிரதாயமான புனஸ்காரங்கள் செய்வதையும், சீக்கிய தோற்றத்தில் ஹர்கிஷன் சிங் இருப்பதையும், நம்புதிரிபாடு விடியற்காலையில் பத்நாபனைத் தரிசிப்பதையும் காட்டுவார். இவையெல்லாம் கேலி செய்வதற்காக அன்று. நாம் இருப்பவற்றிலேயே நல்ல கொள்கைப் பிடிப்புள்ள தூய்மையானவர்கள் உள்ள கட்சி என்று எண்ணிக்கொண்டிருக்கும் அதிலேயே இவையும் நடைபெறுகின்றன என வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார்.

      அதுபோலவே ‘மோகமுள்’ பற்றிய இவரின் கருத்து மிக முக்கியமானதக இருப்பதோடு புதிதாகவும் இருக்கிறது. தி.ஜா வின் எழுத்துகள் பற்றிய ஜெயமோகன் கருத்திலிருந்தும் இவர் மாறுபடுகிறார். மோகமுள்ளைப் படித்து முடிக்கும்வரை நான் வேறு  உலகத்தில்  பாபு, யமுனாவோடு இருந்தேன் எனச் சொல்கிறார். “தி.ஜாவின் கதைகள் காமத்தின் பீறிடல்கள் என்கிறார் ஜெயமோகன். எனக்கு அவை ‘பொருந்தாக் காதல்’ பற்றியவை என்றே படுகிறது’ என்றெழுதுகிறார்.  ஆனால் அது பற்றிச் சற்று விரிவாக எழுத பத்தி அவருக்கு இடம் தரவில்லை என எண்ணுகிறேன். மோகமுள் பற்றி அவர் ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம்.

      ஒரு சிலருக்கு இலக்கியமே வாழ்வு என்றாகி விடுகிறது. சிலரோ தம் வாழ்வை முடிந்தமட்டும் இலக்கியத்தில் கழிக்கிறார்கள். இருவருமே இலக்கியத்தை ஒரு வகையில் விட முடியாதவர்கள். ஆனால் பலர் ”இதுக்கெல்லாம் எங்கேங்க நேரமிருக்கு?” என்கின்றனர். அவர்களுக்கு விடையாக இவர் எழுதுகிறார். “குடும்பம், வேலை ஆசாபாசங்களின் அலைக்கழிப்பு நடுவே ரகசியக் காதலைப் போல் இந்தப் பிரேமை, இதுதான் என்கிற தாபம், உறவு இலக்கியத்தோடு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது”

      எல்லாருக்கும் சொந்தபந்தங்கள், குடும்பப் பிரச்சனைகள், பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றுக்கு இடையிலே நம் வாழ்வு அமைவது தவிர்க்க முடியாதது. உண்மையான இலக்கிய ஆர்வம்தான் வேண்டும். அதைப்பெறுபவர்தாம் தேர்ந்த வாசகராகவும் நேர்மையான படைப்பாளியாகவும் மிளிரமுடிகிறது. இதைத்தான் ஸ்ரீநிவாசனின் எழுத்து தெளிவாக்குகிறது.

      இந்நூலில் ஆங்காங்காங்கே ஒரு சில அறிஞர்களின் வாழ்வு நிகழ்ச்சிகளையும் அவர்களின் சொற்களையும் எடுத்துக் கூறி உள்ளார். அவற்றில் ஜே.கே பற்றிய ஒரு பதிவு முக்கியமானது. ’ஜே.கே” எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஜே. கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி நாம் அறிவோம். தத்துவ மேதை ஆன்மிக அறிஞர்கள் என்றெல்லாம் அவரைப் பற்றிக் கூறுவார்கள். அவர் எந்த நாட்டிலும் நிரந்தரமாகத் தங்க மாட்டாராம். இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு சில மாதங்கள் தங்குவது அவர் வழக்கமாம். இதை அறிந்த இந்தியர் ஒருவர் ஒரு முறை அவரிடம், “நீங்கள் ஓர் இந்தியர். அதனால் இந்தியாவில்தான் தங்க வேண்டும். அதுதான் சரி, என்றதும், அவர் சொன்ன பதில்: “என் வீடு இந்த உலகத்தில்”. [My home is in this world]

      ஜே.கே போன்றவர்களை ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ, மதத்துக்கோ சொந்தமாக்க நினைக்கக் கூடாது. விவேகாநந்தர், ஷேக்ஸ்பியர் போன்றோரையும் அப்படித்தான் எண்ணவேண்டும். ஆனால் தற்பொழுது தமிழ்நாட்டின் சில கவிஞர்களையும், தலைவர்களையும் தத்தம் சாதிச்சிமிழுக்குள் அடக்கிப் பெருமை பீற்றிக் கொள்ளும் நிலை தலைதூக்கி வருவது வேதனைக்குரியது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

நாஞ்சில்நாடனின் நெருங்கிய நண்பராக இருப்பதனாலா என்னவோ வ. ஸ்ரீநிவாசன் சொல்லாராய்ச்சியிலும் படுகிறார். சொல் எனப்படுவது தன் கருத்தைத் தெரியப்படுத்த உதவும் சாதனமாகும். அதாவது கம்யூனிகேஷன் என்று கூடச்சொல்வார்கள். கம்யூனிகேஷன் என்பதைத் தமிழில் பெரும்பாலும் தொடர்பு என்கிறோம்.
      ”கான்டாக்ட் என்பதற்கும் அதுவே [இன்னமும்] சரியாக இருக்கிறது” என்கிறார் நூலாசிரியர். மேலும் அவர் எழுதுகிறார் “தெரியப்படுத்தல் என்னும் சொல் இன்ஃபார்ம் என்பதற்கும் சரியாக இருக்கிறது. “ஏன் ”தெரிதொடர்பு” என்று சொல்லக்கூடாது. சொல் சரியாக இருக்க இருக்க தெரிதொடர்பு சரியாக ஆகும்”

தெரிதொடர்பு என்னும் சொல் புதுச்சொல்தான், அது மிகவும் ஏற்றதாக இருக்கிறது என நினைக்கிறேன்.

    பல இடங்களில் சொல்லாராய்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. செம்மை எனும் சொல் குறித்த கருத்துகள் [பக்-148] முக்கியமானவை. நூலகங்கள், இசை, கிரிக்கெட் போன்றவை பற்றியும் குறிப்புகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

      இன்னும், ‘சிங்கப்பூரில் இட்லி’ ‘விருதுகள், பரிசுகள், பதவிகள், அங்கீகாரங்கள்’, ’பொழுதுபோக்கும் ரஜினியும்’, ‘பெயரிலென்ன இருக்கிறது?’ முதலான கட்டுரைகளும் அவசியம் படிக்க வேண்டியவை. வ.ஸ்ரீ யின் நடை படிக்கக் களைப்பில்லாததாகும்.  அவ்வப்பொழுது மின்னல் போல் தோன்றி மறையும் எள்ளல்கள் இடை இடையே அளவோடு இருப்பதைக் குறிப்பிட வேண்டும். இந்நூலின் கருத்துகள் ஆழமானவை, அதே நேரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. மரபில் தோய்ந்தோரும் நவீனத்தை நாடுவோரும் படித்தறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தொகுப்பு இது.

      [எதைப் பற்றியும் [அ] இது மாதிரியும் இருக்கிறது—-வ.ஸ்ரீநிவாசன்—கட்டுரைத் தொகுப்பு—வ,ஸ்ரீநிவாசன்; வெளியீடு: சிறுவாணி மையத்திற்காக பவித்ரா பதிப்பகம்; 24-5, சக்தி மஹால், சின்னம்மால் வீதி, கே.கே புதூர், கோவை 641038; பக்: 176; விலை  ரூ 160]

=====================================================================================

வளவ. துரையன், 20. இராசராசேசுவரி நகர், கூத்தப்பாக்கம், கடலூர் 607 002

பேசி 93676 31228; valavaduraiyan@gmaul.com

====================================================================================

Series Navigationகுரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்கசடு
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *