தேவதை துயிலும் கல்லறை

author
0 minutes, 52 seconds Read
This entry is part 7 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

அலைமகன்

01                                                                                       

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் நான் மீராவை முதன் முதலில் சந்தித்த போது அது ஒரு முன்பனி காலத்தின் மிக அற்புதமானகாலை வேளையாக இருந்தது.   மிக மெல்லிய ரம்மியமான குளிர் உடலை வருடிக்கொண்டிருந்தது. அது மிகப்பழைய, ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு கலாசாலை. ஆங்கிலேயர்கள் அதனை மிகுந்த கரிசனத்துடன் விக்டோரியா காலத்துக் கலைநயம் குறையாமல் அமைத்திருந்தனர். அதன் பாதையோரம் பூத்துக்கிடந்த றோசாக்களில் பனித்துளிகள் சீராக்கப்பரவி பன்னீர் தெளித்து விட்டது போல காட்சியளித்தன. கலாசாலையின் நீண்ட பாதை நெடுகிலும் இருபுறமும் சீராக வளர்த்திருந்த நீல ஜகராண்டா மரங்களிலிருந்து பாதை முழுவதும் ஊதாப் பூக்கள் மெதுவாக உதிர்ந்துகொண்டிருந்தன. இடையிடையே வீசிய மெல்லிய காற்றில் மரங்கள் அசையும் போது ஊதாப்பூக்களும் நீர்துளிகளும் பாதைகளில் பரவி ஒரு மாயாலோகம் போன்ற காட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. மறுபுறம் நீண்டு பரவியிருந்த ஒரு சீராக வெட்டப்பட்ட புல்வெளிகள் பனித்துளிகளைத் தாங்கி அப்போதுதான் மெதுவாக பரவ தொடங்கியிருந்த மெல்லிய சூரிய ஒளியில் பட்டு மின்னிக்கொண்டிருந்தன. மீராவை நான் சந்தித்த கணம் இப்போதும் எனக்கு மனதில் அழியாமல் பசுமையாக இருக்கிறது. அவளது குதிக்கால்வரை நீண்டிருந்த ஆடை ஊதாவும் வெள்ளையும் கலந்து அந்தச் சூழலுக்குப் பொருந்துவதாக இருந்தது.  சிறகுகளை விரித்து கழுத்தை உயர்த்தி நடைபோடும் அன்னப்பறவையைப்போல அந்த ஊதாப்பூக்களுக்கு நடுவே ஏறத்தாழ மிதந்தபடி வந்தாள். நான் கலாசாலையில் சேர்ந்து இரண்டு நாட்கள் தான் ஆகிவிட்டிருந்தன. மீரா என்னை நோக்கி வந்து கழுத்தை ஒய்யாரமாகச் சாய்த்துச் சிரித்தபோது சூரிய ஒளி அவளது சிரிப்பில் பட்டு இருமடங்காகப் பிரகாசித்தது. என்னிடம் கேட்ட முதல்க்கேள்வியே எனக்கு எதிர்பாராததாக இருந்தது.

“எப்போதும் நேரத்துடனேயே வந்துவிடுவீர்களா?” பதிலை எதிர்பாராமல் அழகாகச் சிரித்தாள். பொதுவாகவே அவளது முகம் சிரித்துக்கொண்டேயிருப்பது போலத்தோன்றும். அன்று நான் நேரத்துடன் வந்தது தற்செயலானதுதான். எனினும் அதற்குப்பிறகு அதனையே பழக்கப்படுத்திக் கொண்டேன். மீராவுக்கும் எனக்கும் காதல் மலர்ந்தபோது எங்கள் இருவருக்கும் பொதுவான குணங்கள் மிகக் குறைவாக இருந்தன.  வீட்டிலே நான் ஒரு ஆணைப்போல அல்லாமல் பெண்பிள்ளையைப்போல வளர்க்கப்பட்டிருந்தேன். மீரா எனக்கு நேர் எதிர்மாறு. இப்போது யோசிக்கும்போது அவளது அந்த இயல்புதான் எனக்கு அவளை சந்தித்த கணமே பிடித்துப்போக காரணமாக இருந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. மீராவுக்கு கலாசாலைப் படிப்பில் மட்டுமல்ல பல மொழிகளிலும் நல்ல பாண்டித்தியம் இருந்தது. மிகத் துணிவானவள். உண்மையில் நான் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டாம் உலகயுத்தம் முடிவடைந்து சில காலங்களே ஆகியிருந்தன. நகரத்தின் நிலைமைகள் முழுவதும் சீரடைந்திருக்கவில்லை. கலாசாலை மாலையில் முடிவடைந்ததும் நானும் மீராவும் அருகில் உள்ள பூங்காவுக்குச் சென்று பொழுதைக்கழித்தபின்  இரவு எனது அறைக்கு திரும்பும்போது, எனக்கு உண்மையில் நடுக்கமாக இருக்கும். தெருவோரம் சில பிச்சைக்காரர்கள், அவர்கள் பிச்சை எடுப்பது போலவே இருக்காது. ஏதோ நாங்கள் அவர்களுக்குக் கடன்பட்டவர்கள் போன்ற தோரணையில் பணம் பறிப்பார்கள். தெருவெங்கும் நிறவெறி ஊறிக்கிடந்தது. இப்போதுபோல இல்லாமல் அப்போதெல்லாம் குடிபெயர்ந்து வந்த குடும்பங்கள் அந்தி சாய்ந்ததும் வீடுகளுக்குள் முடங்கிவிடும். அப்போதெல்லாம் மீரா அருகில் ஒரு வாடகைக்காரை எடுத்துக்கொண்டு வந்து என்னை எனது அறைக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு பின்னர்தான் வீட்டுக்குத் தனியே போவாள். அதைவிட மீராவிடம் இன்னொரு சிறப்பான குணமொன்றிருந்தது. எப்பிடியாவது நண்பர்களை இணைத்து தன்பக்கம் வைத்திருந்து எந்தக் கடினமான வேலைகளையும் பொறுப்பேற்றுச் செய்து முடிப்பாள். நானோ அதிகம் பேசாதவன். வாசிப்புப்பழக்கத்தையும், கவைக்குதவாத தத்துவங்களையும் தவிர நடைமுறைவாழ்க்கைக்கென என்னிடம் மிகச்சிலவே சேமிப்பில் இருந்தன. இந்த நிலையில் என்னுடன் தனது வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாக மூன்றாம்வருடத்தில் அவள் சொன்னபோது உண்மையில் ஒருவித தயக்கமும் அதேவேளை அடிமனதில் கட்டற்ற மகிழ்ச்சியும் எனக்குள் தோன்றின. உண்மையில் என்னிடம் மீரா எதை விரும்பினாளென்று எனக்குத்தெரியாது. நான் சிலவேளை இந்த கேள்வியை காதலிக்கும் போதும் திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகும் அடிக்கடி கேட்டிருக்கிறேன். அதற்கு எப்போதும் அவளது ஒரே பதில் “இதோ பாருங்கள்! உங்களுக்கும் எனக்கும் முற்பிறவியில் ஒரு பந்தம் இருந்தது. இப்போதும் அது தொடர்கிறது.” என்று சொல்லிவிட்டு கழுத்தைச் சரித்து அழகாகச் சிரிப்பாள். முதல் முதலில் என்னை பார்த்தபோது சிரித்த அதே சிரிப்பு.

நானும் மீராவும் திருமணம் செய்துகொண்ட போது அவள் வீட்டில் எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. அவளின் பெற்றோர் பலவருடங்களுக்கு முன்பே இங்கு வந்து குடியேறிவிட்டனர். அவர்கள் வந்தபோது அவர்கள் மட்டும்தான் அவர்களது வட்டாரத்தில் ஆசியாக்காரர்கள். ஒரு சில சீனாக்காரர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணக்கிடைப்பார்கள். வடஇந்தியாவில் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து அந்தக்காலத்திலேயே பத்து வயதில் இந்த நாட்டுக்கு வந்திருக்கிறாள். தாங்கள் வசிக்கின்ற ஒரு நாட்டில் இலங்கையன் ஒருவனை திருமணம் செய்து ஏன் அவள் சந்தோசமாக வாழ முடியாது என்ற எண்ணமே அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். உண்மையில் மீராவுக்கும் அவளது குடும்பத்தவருக்கும் இந்தியப்பழக்கவழங்கள் மீது பெரியளவு ஈடுபாடு இருந்ததில்லை. அவர்களோ மீராவோ கோவிலுக்குப் போய் நான் இதுவரை கண்டதேயில்லை. அவர்களின் வீடு உயர்வகுப்பு ஆங்கிலேயப் பண்பாட்டை பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. மீரா மனதளவிலும் தோற்றத்திலும்  ஒரு வெள்ளைச்சீமாட்டி, ஆனால் ‘கறுப்பி.’

படிப்பு முடிந்ததும் எனக்கு ஊருக்குச்செல்லும் எண்ணம் சிறிதுகூட இல்லை. இங்கே வரும்போது நிறைய வாக்குறுதிகளை அம்மாவுக்குக் கொடுத்திருந்தேன். எப்போதும் கோவிலுக்குப் போய், பக்கத்தில் உள்ள வைரவருக்கும் ஒவ்வொரு நாளும் விளக்கு வைத்து வணங்கும் ஒரு பிள்ளை எப்பிடி சத்தியம் மீறுவான். போதாதென்று நான் மூத்த பிள்ளை. எனக்கு கீழே ஒரு தம்பியும் இரண்டு தங்கைகளுமாக குஞ்சு குருமன்கள் இருந்தார்கள். நீண்ட கப்பல் பயணத்தின் மூலம் இங்கே வந்ததற்குப்பிறகு மாதாமாதம் அம்மாவுக்குக் கடிதம் எழுதுவது ஒரு மிக முக்கியமான வேலையாகவிருந்தது. ஒவ்வொருநாளும் நடந்தவை குறித்து மாதமொருமுறை எழுதுவது என்பது ஒரு நேர்த்தியான பாடக்குறிப்பை எழுதுவதற்கு நிகரானது. மீராவைச் சந்தித்த சிறிது நாட்களின் பின்னர் அம்மாவுடைய சத்தியத்தை மீறுபவன் ஆகிவிட்டேன். மீராவுக்குக் கலாசாலையிலேயே வேலை கிடைத்தது. அத்துடன் எனக்கும் இலங்கைக்குப்  போகும் கனவு நிரந்தரமாகக் காணாமல் போனது.

திருமணமாகி பலவருடங்களாக எனக்கு மீரா தனது குடும்பத்தைப் பற்றி எதுவும் சொன்னதில்லை. என்னையும் எதுவும் கேட்டதில்லை. ஆனால் இடைக்கிடை ‘தெற்கத்தி நாடோடி’ என்று என்னை கேலி செய்வாள். ஆனால் ஒரு அழகான மாலைப்பொழுதில் வீட்டுத்தோட்டத்தில் ஓய்வாக இருக்கும் போது மீரா எனக்குத்தன் கதையைச் சொல்ல தொடங்கினாள்.

02

நான் சிறுவயதில் வளர்ந்தது எல்லாம் என்னது சித்தியின் மடியில்தான். உண்மையில் நான் சித்தியைப் போல என்று எல்லோரும் சிறுவயதிலிருந்தே சொல்வார்கள். ரூபவதி எனும் அவளின் பெயருக்கு ஏற்ப மிக அழகாக உயரமாக இருப்பாள். நான் முழுக்க முழுக்க சித்தியின் சாயல்தான். மிகத்துணிவானவள். அவளுக்கு ஓரளவு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டது. கணவர் ராணுவத்தில் இருந்தார். எப்போதாவது ஒரு தடவைதான் வருவார். எனவே அவள் எங்களோடுதான் அதிகம் வசித்தாள். நான் ஐந்து வயதாயிருக்கும்போதே என்னைக்கூட்டிக்கொண்டு அருகிலுள்ள ஆற்றங்கரைக்குப் போவாள். அங்கே அவள் நீந்துவதை வேடிக்கை பார்க்க எனக்கு எப்போதும் விருப்பமாகவிருக்கும். அவ்வளவு நளினமாக, வேகமாக நீந்துவாள். அதனால் சித்தியின் புண்ணியத்தில்தான் நான் ஏழுவயசிலேயே மிக அநாயாசமாக நீந்தக்கற்றுக்கொண்டேன்.    

அந்தக்காலங்களில் இரவில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் நடமாடத் தயங்குவார்கள். ஆனால் சித்தி இந்த தயக்கங்கள், பயங்கள் இவற்றையெல்லாம் கண்டறியாதவள். நானும் சித்தியும் ஒரு நவராத்திரியின்போது யாருக்கும் சொல்லாமல் நள்ளிரவில் பக்கத்திலுள்ள பூசை நடைபெறாத ஒரு காளிகோவிலுக்குச் சென்று விளக்கேற்றியிருக்கிறோம்.

அடிக்கடி நான் சித்தியிடம் கேட்பேன்.

“சித்தி உங்களுக்கு எப்பிடி ஒரு பயமும் இல்லாமல் இருக்கிறீர்கள்?”

“இதோ பாரடி! பெண்பிள்ளைகளுக்கு ஆண்களைவிட துணிவு எப்போதும் அதிகம். அதை நீ எப்போது ஞாபகம் வைத்துக்கொள்”

“அப்பிடியா பெண்பிள்ளைகள் வீட்டுக்குள் அடக்கமா இருக்கவேண்டும் என்று அம்மா அண்டைக்குச்  சொன்னாரே; அம்மா எப்பிடி பொய் சொல்லுவார்?”

” உன் அம்மா நீந்துவாரா?”

“இல்லையே அவளுக்கு எப்பிடி தெரியும்”

“ஆனால் நீ எப்பிடி அழகாக நீந்துகிறாய்?”

“அது……..நீங்கள்தான் எனக்கு சொல்லிதந்தீர்களே!”

“அதேதான், பெண்பிள்ளைகளுக்கு எதை சொல்லித்தருகிறார்களோ அதேயே உண்மையென்று நம்புகிறார்கள்; ஆனால் சொல்லித்தருவது எல்லாமே உண்மை இல்லை”

“பின்னே எப்பிடி சித்தி? “

“அதாவது நீ ஒன்றை செய்து பார்க்காமல் மற்றவர்கள் சொல்வதைமட்டும் நம்பினால் எப்பிடி உனக்கு அது தெரியும்? இப்போது உன் அம்மா உன்னால் நீந்த முடியாது என்றுதான் சொல்லியிருப்பாள். ஆனால் நீ நீந்தும்வரை உனக்கு அது உண்மையென்றுதான் நினைப்பாய்”

” அப்போ அப்பா செய்வது எல்லாம் நானும் செய்யலாமா?”

“நிச்சயமா! ஆனால் அதற்கு உனக்கு துணிவும் நம்பிக்கையும் வேண்டும்”

“துணிவும் நம்பிக்கையும் வரவேண்டும் என்றால் என்ன செய்வது?”

“அது ரொம்பச்சுலபம்; என்னைப்பார்த்து நடந்துகொள்” 

சொல்லிவிட்டு அழகாக கழுத்தை சரித்து சிரித்தாள்.

இதைவிட சித்தி படிப்பிலும் நல்ல கெட்டிக்காரி. அவளும் அம்மாவும் அப்போது திண்ணைப்பள்ளியில்தான் பன்னிரண்டு வயதுவரை படித்தார்களாம். அப்போதே சித்தி ஆர்வமாக ஆசிரியரை கேள்வி மேல் கேள்வி கேட்டுத்தொந்தரவு செய்வாளாம். நிறைய பாட்டுகளும், கவிதைகளும் எப்போதும் சித்தி எனக்குச் சொல்லுவாள். காட்டில் புலியிடம் மாட்டிய சிறுமியை வனதேவதை காப்பாற்றிய பாடலை அழகாகப் பாடிக்காண்பிப்பாள். அந்த விதத்திலும் நான் அம்மா போல் இல்லாமல் சித்திபோலதான் இருந்தேன். ஏனென்றால் அம்மாவுக்கு இந்த திண்ணைப்பள்ளிக்கூட படிப்பில் சுத்தமாக ஆர்வம் இருக்கவில்லை.”

“ஆமாம் சித்தி, சித்தப்பா வந்தால் நீங்கள் இப்பிடி திரிவதைப்பற்றி எதுவும் உங்களை கண்டிக்கமாட்டாரா?”

 “ஏன் அப்பிடி கேட்கிறாய்?”

“ஏனென்றால் அம்மா எதையும் அப்பாவிடம் கேட்டுத்தான் செய்கிறாள்”

“எனக்கு அதைப்பற்றித் தெரியாது. ஆனால் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். அதில் யார் என்ன குறை சொல்ல முடியும்”

நான் பதிலேதும் பேசவில்லை.

“சரி மீரா நீ இங்கே வந்ததுக்குப் பிறகு இந்தியாவுக்கு சென்று சித்தியை மீண்டும் பார்க்கவில்லையா?” நான் கதையில் குறுக்கிட்டேன்.

“இல்லை. இங்கே வந்ததுக்குப் பிறகு நிறையத்தடவை அம்மாவிடம் அடம்பிடித்திருக்கிறேன், இந்தியாவுக்குப் போகவேண்டும் என்று. ஒரே காரணம் சித்தியைப் பார்க்கவேண்டும் என்பதுதான். நான் வரும்போதுகூட சித்திக்குக் சொல்லிவிட்டு வரவில்லை. கப்பலில் ஏறி இரண்டு நாட்கள் நான் சாப்பிடவே இல்லை. சித்தியைக் கண்ணில் காட்டாமல் என்னை இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு இங்கே வந்து பள்ளிக்கூடம் போகத் தொடங்கினதும் வெள்ளைக்காரர்கள் போல பேசிப்பழக்கவே நேரம் சரியாகவிருந்தது. எனக்குச் சித்தியின் நினைவு மெல்ல மெல்ல மங்கத்துவங்கிவிட்டது. ஆனால் எப்போதும் இந்தியாவுக்குத் திரும்புவது பற்றி அம்மாவுக்கோ அப்பாவுக்கோ துளியும் ஆர்வம் இருக்கவில்லை.”

சிலவேளைகளில் அப்பா “மீரா நீயே சித்திபோலதான் இருக்கிறாய். அதனால்தான் நாங்கள் தனியே சித்தியைப்  பார்க்கப் போகவில்லை” என்று விளையாட்டாய்ச் சொல்லுவார். 

“ஆனால் எனக்கு இன்றுவரை இருக்கிற ஆசை உங்களுடன் சேர்ந்து சென்று ஒருதடவை சித்தியைப் பார்த்துவிட்டுவரவேண்டும். நானும் அவளும் நீந்திய ஆற்றங்கரையில் நீங்களும் நானும் ஒருமுறை நீந்தவேண்டும். அது மட்டும்தான் ஒரே ஆசை.”

மீராவின் கண்களில் இருந்து ஒருசொட்டு கண்ணீர் எனது மடியில் விழுந்தது. எனது தோளில் ஆதரவாக சாய்ந்துகொண்டாள். திருமணம் முடித்து இவ்வளவு காலத்திலும் மீரா இவ்வளவு தூரம் நெகிழ்ந்ததே இல்லை. பேரக்குழந்தை கண்டதன் பின்னரும் இந்த ஆசையை இவ்வளவு காலமும் தேக்கிவைத்திருக்கிறாளா? ஒருவேளை தாய் தகப்பன் விரும்பாதபடியால் அதைப்பற்றி அவர்களுடன் மேலும் கதைக்கவில்லை போலும். சித்திக்கு ஓரளவு வயசாகியிருக்கும். இனிமேலும் தாமதிக்காமல் உடனடியாக இந்திய விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டியதுதான். மீராவுக்கு எப்போதும் கொடுத்துதான் பழக்கம். இப்போதுதான் எனது வாழ்க்கையில் முதல்முறையாக ஒன்றைக் கேட்டிருக்கிறாள்.

03

தாத்தா கதையினை நிறுத்தியபோது கண்கள் கலங்கியிருந்தன. சாய்வுநாற்காலியில் ஓய்வாகச் சாய்ந்துகொண்டார். தாத்தா சொன்ன இந்தக்கதையை இன்றுதான் முழுமையாக கேட்கிறேன். ஒவ்வொருதடவையும் தாத்தா இந்தக்கதையை சொல்லத்தொடங்கும்போது நான் முழுமையாக இருந்து கேட்டதேயில்லை. ஏதாவதொருவேலை குறுக்கிட்டு விடும். அல்லது அலெக்ஸ் போன் செய்துவிடுவாள். தாத்தாவிடம் சொல்வதற்கு சுவாரசியமான காதல்க்கதையொன்று இருப்பது இன்றுதான் எனக்குத் தெரியும். 

” சரி தாத்தா சித்தியை நீங்களும் பாட்டியும் போய் பார்த்தீர்களா?”

கதையில் எனக்கும் இன்று ஆர்வம் தொற்றிக்கொண்டது.

தாத்தா சிறிதுநேரம் மொனமாகவிருந்தார். பின்னர் திடீரென குலுங்கி அழத் தொடங்கினார். எனக்கு சங்கடமாகப் போய்விட்டது.

” இல்லை நாங்கள் பயணம் செய்வதற்கு முதல்நாள் இரவுதான் என்னுடன் இருந்து மீரா இரவுணவை உண்டாள். மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவளாக இருந்தாள். சித்திக்குக் கொடுப்பதற்கென்று மிகச்சிறந்த விலையுயர்ந்த போர்வையொன்றை வாங்கி வைத்திருந்தாள். ஆனால்….”

“ஆனால்?”

” விடிந்ததும் மீரா படுக்கையை விட்டு எழுந்திருக்கவேயில்லை” 

குலுங்கியழுத தாத்தாவை எப்பிடிச் சமாதானப்படுத்துவதென்று தெரியவில்லை. என் கண்கள் குளமாகியிருந்தன.

04

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேலையென்பது மிகவும் சுவாரசியமானது. ஆனால் பார்ப்பதற்கு ஒருபோதும் சுவாரசியமாக இருக்காது. வடஇந்தியாவில் களஆய்வுப்பணிகளுக்காக நான் பணியாற்ற வந்திருக்கிறேன். UNESCO நிறுவனம் இந்திய மத்திய அரசுடன் இணைந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஆராய்ச்சியாளர்களை இணைத்து ஆறு மாதங்கள் ஆய்வுப்பணியை ஒழுங்குசெய்திருந்தது. நாங்கள் இந்தியாவுக்கு வந்திறங்கும் வரையும் ஆய்வுப்பிரதேசம் முடிவுசெய்யப்படவில்லை. ஆறுமாதம் ஒரு தொல்பொருள் பிராந்தியத்தில் தங்கியிருப்பதற்கு அலெக்ஸ் மறுத்துவிட்டாள். வரும்போது ஒரு இந்திய நண்பியைக்  கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்பதுமட்டும்தான் அவளது நிபந்தனை.

இந்தியா வந்ததும் வடஇந்தியாவில் ஒரு கிராமத்தை எனக்கு ஆய்வுக்காக ஒதுக்கிருந்தார்கள். நானும் எனது இரு உதவியாளர்களும் அங்கே கூடாரம் அடித்துத் தங்கியிருந்தோம். உள்ளூர்க்காவல்துறையின் உதவியைப் பெற்றுக்கொள்ளமுடியுமென்று மாவட்ட ஆட்சியர் எமக்குச் சொல்லியிருந்தார். பாட்டியின் பூர்விகம் அதிஷ்டவசமாக சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவில்தான் இருந்தது. எனக்கு ஒதுக்கிய பிரதேசம் நான் அதன் வயது என்று அனுமானித்த காலத்திலிருந்து சற்றும் முன்னேறியிருக்கவில்லை. கிராமத்தில் மின்சாரமே இல்லை. கல்வீடுகள் அரிதிலும் அரிதாக இருந்தன. சரியான வீதிகள் இல்லாத கிராமத்துக்குள் பயணம் செய்ய கைபேசி அலைவரிசைகள் மிகவும் தயங்கி நின்றன. தினந்தோறும் இரவில் வெகு தூரத்திலிருந்து வரும் அலெக்ஸின் காதல் ததும்பும் வார்த்தைகள் அந்தச் சீரற்ற பாதைகளில் மோதி கொழுப்பு நீக்கிய பாலைப்போலச் செறிவு குறைந்து வந்து சேர்ந்தன. நல்ல குடிநீரைத் தேடி சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டிருக்கிறது. எனது உதவியாளர்களுக்கு தொல்பொருட்களைச் சேகரிப்பதைக்காட்டிலும் தண்ணீர் சேகரிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. தினம்தோறும் காலையில் ஒருவன் மாலையில் ஒருவனாக மாறிமாறிப் புகார் சொல்லியபடி இருந்தனர். காலநிலைவேறு பாலைவனக்காலநிலை போல வாட்டியெடுத்தது.   

மாலையில் தண்ணீர் சேகரிக்கும் இடத்துக்கு ஒருமுறை நான் உதவியாளர்களுடன் சென்றபோது நிறைய இளம்பெண்கள் குடத்துடன் வந்திருந்தனர். என்னைக்கண்டதும் அனைவரும் சற்றே ஒதுங்கி நிண்டனர். உடனே சற்று நழுவியிருந்த முக்காடுகளை முந்தானையை இழுத்துச் சரிசெய்துகொண்டனர். இங்கே ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வெளிநாட்டவன் அதுவும் ஒரு வெள்ளைக்காரன் தன்னை ஒரு கோமகனாக நினைத்துக்கொள்வதை தவிர்க்கவே முடியாது. அப்பாவின் புண்ணியத்தில் எனக்கு ஹிந்தி நன்றாக எழுதவும் வாசிக்கவும் தெரியும். ஆனால் பேசுவது மிக இலக்கணச்சுத்தமாக மட்டுமே வரும். ஒரு முட்டாள்தனமான கேள்வி ஒன்றுடன் எனது வாழ்க்கையின் முதலாவது ஹிந்தி சம்பாஷணையை ஆரம்பித்தேன்.

“இவ்வளவு தூரம் ஒவ்வொருநாளும் தண்ணீர் எடுக்க வருகிறீர்கள். சிரமமாக இல்லையா?”

எனது ஹிந்தி அவர்களுக்குச் சிரிப்பை வரவழைத்திருக்கவேண்டும். ‘க்ளுக்’ என்று சிரித்தார்கள். அவர்கள் என்னைக்கண்டு ஒதுங்கி நின்றபோது எனது தலையில் ஏறியிருந்த கிரீடம் இப்போது சற்றே ஒளிமங்கிப்போயிருந்தது. அங்கே நின்ற துடியான ஒருத்தி வெடுக்கென்று சொன்னாள்.

“இல்லையே இங்கே வந்தால்தான் நாங்கள் எங்கள் தோழிகளைப் பார்க்கமுடியும்”  

அன்று ஞாயிற்றுக்கிழமை. நான் என் உதவியாளர்களுடன் அதிகாலையிலேயே வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு பாட்டியின் கிராமத்துக்குச் சென்றோம். அந்த கிராமம் கிட்டத்தட்ட அழிந்துவிட்ட தொல்நகரம் போல காட்சி தந்தது. மக்கள்தொகை மிகவும் குறைவாக இருந்தது. உண்மையில் இந்த இடத்தைத்தான் எனக்கு ஆய்வுக்கு ஒதுக்கியிருக்கவேண்டும். பாட்டியின் பூர்வீக வீட்டைக் கண்டு பிடிப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

அதை வீடு என்று சொல்லமுடியாது. ஒரு மிகப்பழையயான மாளிகைப்போல இருந்தது. வெளிப்புறச்சுவர்கள் முழுவதும் கருமை படர்ந்திருந்தது. பாட்டியின் தாய்தந்தையர் மிகப்பெரிய குடும்பத்ததைச்சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எனது உதவியாளர்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை.

உட்புறம் இரண்டு மேல்த்தளங்கள் அதுமட்டுமன்றி நிலக்கீழ்த்தளம் ஒன்றும் இருந்திருக்க வேண்டும். ஆனால் அது முற்றாக அடைபட்டிருந்தது. மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் முழு ஊரும் தெளிவாகத் தெரிந்தது. இங்கே இருந்துதான் பாட்டி விடிந்ததும் சூரியஉதயத்தைக் கண்டுக் கழித்திருப்பாள். அவளுடன் நிச்சயம் அவளது சித்தியும் இருந்திருப்பாள். பாட்டியும் சித்தியும் சேர்ந்து காட்டில் புலியிடம் மாட்டிய சிறுமியை வனதேவதை காப்பாற்றிய பாடலைப் பாடியிருப்பார்கள். இப்போது கண்டுகளிக்க சூரியன் மட்டுமே இருக்கிறது.

தனது குடும்பப்பெண்கள் மிகவும் தைரியசாலிகள் என்று பாட்டி சொன்னது ஞாபகம் வந்தது. இவர்கள்தான் அப்போது விதிகளை உருவாக்குபவர்களாக இருந்திருக்க வேண்டும். நிச்சயம் தோழிகளைச் சந்திக்க கிணற்றடிக்கு வந்த பெண்களின் பாட்டிகளுக்கு நீந்தத் தெரிந்திருக்காது.

மாளிகையில் இருந்து கீழே இறக்கிவரும்போது எனக்கு மாளிகையெங்கும் பெண்களின் கொலுசுசத்தம் ஒலிப்பது போன்ற பிரமையேற்பட்டது. உண்மையில் நான் ஒரு மிகப்பெரிய குடும்பத்தின் வாரிசு. ஒருகாலத்தில் ஊரையே கட்டியாண்ட வம்சம். வெளியே வந்து மாளிகையை மேல்நோக்கி அண்ணார்ந்து பார்த்தேன். ஒரு பட்டத்து இளவரசனின் பார்வை.

அரண்மனையின் பின்புறம் மிகப்பெரிய மைதானம் போன்ற வெளி. இதுவும் அரண்மைக்குரியதுதான். அன்று நேரம் போனதே தெரியவில்லை. அந்தி சாயத்தொடங்கியிருந்தது. மாளிகையின் வெளிப்புறத்தைச் சுற்றிப் பார்க்கத்தொடங்கினேன். வளவின் மூலையில் தெற்குப்பக்கமாக ஒரு சிறிய அறைபோன்ற அமைப்பு. ஆர்வம் மேலிட அதைநோக்கிப்போனேன். அது தெற்கு நோக்கி அமைந்த ஒரு சிறிய கோவில்போல இருந்தது. உட்புறத்தில் ஒரு பெரிய நடுகல். அறையின் உள்ளே தூசு பிடித்திருந்தது. உண்மையில் நடுகல்லில் சந்தனம் மற்றும் குங்குமம் வைத்த அடையாளங்கள் தென்பட்டன. ஆனால் வழிபாடு நடந்து நிச்சயம் பல ஆண்டுகளிருக்கும். நடுகல்லில் சில எழுத்துக்கள் மங்கலாக தென்பட்டன.

எனக்கு ஆர்வம் தாங்கவில்லை. உடனடியாக எனது பையில் இருந்து தூரிகையை எடுத்து நடுகல்லைச் சுத்தம் செய்யத்தொடங்கினேன். பின்னர் வெள்ளைப்பூச்சை எடுத்து எழுத்துக்கள் மீது சீராக்கப்பரவினேன். எல்லாம் நான் தொல்பொருட்களில் எழுத்துக்களைக்கண்டறிய பயன்படுத்தும் மிக எளிமையான முறைகள் தான். பின்னர் ஹிந்தியில் இருந்ததை வாசிக்க தொடங்கினேன்.

ரூபவதி சதி ஸ்தல் எனும் வார்த்தைகள் நடுகல்லில் துல்லியமாகப்புலப்பட்டன.

                                                                —முடிந்தது—

Series Navigationபிச்சைஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *