நீ வாழ்ந்த காலத்தில்
நீ எட்டாத சிங்கை இன்று
உன் எட்டயபுரமானது
உன் தடித்த மீசையும்
தலைப் பாகையுமே
தமிழானது
தமிழ் ஓர் அத்தியாயமாய்
என் வாழ்க்கை
தமிழே எல்லாமுமாய்
உன் வாழ்க்கை
ஏட்டுப் படிப்பின்றி
இமயம் வென்றாய்
காற்றைச் சுவாசித்து
கவிதை செய்தாய்
பிறப்பும் இறப்புமாய்
எல்லார் வாழ்க்கையும்
இறப்பே பிறப்பாய்
உன் வாழ்க்கை
என் கவிதைப் பயிருக்கு
பொறுக்குவிதை தந்த
‘நறுக்’ கவிஞனே
கொஞ்சம் தள்ளி நில்
உன் தாளலடியில்தான்
என் தன்மானம் தேடுகிறேன்.
கடற்கரையில் நின்றேன்
உன் கர்ஜனை கேட்டேன்
மின்னலின் சொடுக்கில்
உன் மிடுக்கு கண்டேன்
என் நாடித்துடிப்பில்
உன் நடைவேகம் கண்டேன்
நீ இறந்தாய்
தமிழ்த்தாய் அழுதாள்
தமிழ்த்தாயைத் தேற்ற
தரணி திரண்டது
சில ஈக்கள் மட்டுமே
‘என்ன சேதி’ என்று
எட்டிப் பார்த்தது.
அமீதாம்மாள்