
சென்ற ஆண்டு இந்நேரம்
சிரித்துக் கொண்டி ருந்தாள் என்னோடு.
நடமாடிய தீபம்
இன்று தொங்கும்
படமாகிப் போனாள் !
விதி வகுத்த வழி
இழுத்துச் செல்லும் எம்மை !
பூம்புகார் நகரிலிருந்து விதி
தம்பதிகளைத்
தள்ளிச் சென்றது போல்
என் துணைவிக்கு
இறுதி முடிவு !
++++++++++
அன்னிய மாதர் அனைவரும்,
ஒட்டுமில்லை எனக்கு
உறவுமில்லை !
மருத்துவ மனையில்
மனமுடைந்து
நான் அழும் போது
ஒடிவந்து அணைத்துக் கொண்டு
ஆறுதல் அளித்த அந்த
மருத்துவ மாது !
“மனைவி பிழைக்க மாட்டாள்
போவென,” என்னை
டாக்சியில் அனுப்பிய கனிவு
டாக்டர் மாது !
++++++++++++
மனைவி மரித்து விட்டாள்
எனத் தகவல் கேட்ட
உடனே
இரங்கல் மடலோடு
ஏந்திய
மலர்க் கொத்தோடு
இருகண்களில்
தாரை தாரையாய்க்
கண்ணீர் சிந்த
ஓடிவந்து அணைத்துக் கொண்டு
ஆறுதல் அளித்த
ஜெவோஹா விட்னஸ்
மாது !
அடுத்த நாள் ஆவி பறக்க
சுடச்சுட சூடாக
சூப்பு தயாரித்து எனது
கரங்களில் கொடுத்த அதே
கனடா மாது !
++++++++
மாதமிரு முறை
வீட்டைத் துடைக்க வரும்
பணி மாது !
வேலை செய்யப் போன
வீட்டில்
மனைவி மரித்து விட்டாள் எனக்
கேட்ட போதே
தேம்பித் தேம்பி அழுத மாது !
அடுத்த நாள்
பூக்கும்பா கொண்டு வந்த
வீட்டுப் பணி மாது !
துணைவி மரித்து விட்டாள் எனக்
பக்கத்து வீட்டுக்
காவல்துறை நண்பரிடம் நான்
சொல்லிச் சென்ற பின்,
நோயுடன் படுத்துக் கிடந்த
அவரது மனைவி,
கதவைப் பட்டெனத் திறந்து
போர்வை எதுவு மின்றித்
துள்ளி ஓடி வந்து
என்னை நிறுத்தி
தெருவிலே அழத மாது !
+++++++++++++++
மனைவி மரித்த தற்குக்
கண்ணீர் விட்ட
அன்னிய வனிதையர்.
மனப் பாறையில் செதுக்கி நான்
மறக்க முடியாத அந்த
மாதரெல்லாம்
பூதலத்தில் பிறந்த
புனித மகளிர் !
+++++++++++++++++
துணைவியின் இறுதிப் பயண
நினைவு நாள்
[9/11]
[நவம்பர் 9, 2018]
வெள்ளிக் கிழமை !
துணைவியின்
இறுதிப் பயண நாள் அது
தலைவலி
உள்ளதெனக் கூறி மாலை
ஐந்து மணிக்கு,
ஆரஞ்சுவில் ஓட்டலில
காபி தயாரித்து
என்னுடன் காபி அருந்தி
உரையாடியது,
அதன்
இளைய புதல்வியுடன் இனிதாய்ப்
பேசியது !
ஹார்வி, சுவிஸ் சாலே
ஓட்டலுக்குப் போவீர் என்று
எங்கள் திசையை மாற்றியது
இளைய மகள் !
இரவு உணவு உண்ணப்
போவது
ஆறு மணிக்குத் தான் என்று
மீண்டும் மீண்டும்
அழுத்திக் கூறியது
மனைவி !
ஆறு மணி தாண்டி
நாங்கள்
கார் போகும் போதுதான்
நேர்ந்தது 9/11 விபத்து !
இரத்தக் குழல் குமிழ் விரிந்து
உள்வெடிப்பு
உரத்த குரலில் வலியில்
கத்தினாள் !
என் நெஞ்சைப் பிளந்தது
அக்குரல் !
911 எண்களைத் தட்டினேன் !
மணியடித்து
அவசரக் காப்பு வாகனம்
வந்தது உடனே !
மருத்துவரிடம்
வலியோடு தன் பெயரை
வயதைச்
சொல்லி இருக்கிறாள் !
ஒருமுறை
மருத்துவ மனையில்
தாங்கா வலியுடன் தவித்துக்
கண்திறந்து பார்த்து
என் இடது கையைப் பற்றியது
இறுதியில் !
கண்மூடி, வாய்மூடிய சமயம்,
புதல்வியர் பேசிய போது
கால், கைவிரல் மட்டும் அசைந்தன,
இடது கண்ணில்
வடிந்தது ஒரு சொட்டுக் கண்ணீர்
துணைவியின்
இறுதிக் கண்ணீர் !
++++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன், கனடா
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 210 ஆம் இதழ்
- வள்ளுவர் வாய்மொழி _1
- துணைவியின் இறுதிப் பயண நினைவு நாள் [9/11] [நவம்பர் 9, 2018]
- போர்ப் படைஞர் நினைவு நாள்
- முதுமை
- மஞ்சி சினிமாலு: செகந்திராபாத்தும் தமிழ்த்திரைப்படங்களும்:
- 7. தோழி வற்புறுத்தபத்து
- சுப்ரபாரதிமணியனின் “ அண்டை வீடு “
- மழைப்பருவத் தொடக்கம்
- மந்தைவெளி மரணக்கிணறுகள்
iruthi payanam nov9.kannkalil kannirai varavazhaithu vittathu.anaithu maathukkalukkum nantri mattume samarpanam
உள்ளம் உருகினேன், ஜெயபாரதன். வேறென்ன சொல்ல?
மனத்தைத் தேற்றிக்கொள்ளுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்?
பரிவுடன்
ஜோதிர்லதா கிரிஜா
அன்புமிக்க கிரிஜா,
ஆறுதல் மொழிகள் கூறியதற்கு நன்றி.
ஐம்பத் தாறு ஆண்டுகள்
தம்பதிகள்
ஐக்கிய மாய் வாழ்ந்தோம்.
காலன் வரும் நேரம்
தெரியாப் பேரதிர்ச்சி, பெருவெடிப்பு !
பாலம் உடைந்த பின்பு
பயணித்தல் சிரமம்.
தீபம் அணைந்த பிறகு
நடைமுறை
திக்கு முக்கானது.
விடை பெறாமல் துணைவி
போனது
வேதனை ஆனது.
++++++++++++++
கனிவுடன்,
சி. ஜெயபாரதன்
பிரபஞ்சத்தின் அனைத்தையும் எழுதி வான் அறிவியலை அதன் தொழில்நுட்பங்களை எளிமையாகப் புரிய வைத்துக் கொண்டிருக்கும் ஜெயபாரதன் ஐயா தன் மொத்தப் பிரபஞ்சத்தையும் இழந்த பெருஞ்சோகம் துயரமளிக்கிறது.ஐயா மன உறுதியோடு இருக்க வேண்டிய தருணம்.மெல்ல மெல்ல மீண்டு வாருங்கள்.எழுதுங்கள்..