பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும் ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’ வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று இருப்பார், சாவித்திரி என்ற அந்த 10 வயது சிறுமி. தாஞ்சூர் கிராமத்தில் நான்கு ஏக்கர் நன்செய் நிலத்திற்கு நடுவே பண்ணை வீடாகத்தான் சாவித்திரியின் அப்பா மருது அந்த வீட்டைக் கட்டினார். அந்த இடத்தின் ரம்மியம் அவரை வெகுவாகக் கவர அதையே வசிக்கும் வீடாக மாற்றிக் கொண்டுவிட்டார். வீட்டிலிருந்து வெளிக் கேட்டு வரை ஒரு கார் செல்லும் பாதையுடன் வேலி அடைப்புக்குள் கம்பீரமாக நிற்கிறது சாவித்திரியின் வீடு . வீட்டில் சாவித்திரியும் அவர் அம்மா சசிகலா மட்டும்தான். வீரையன் தான் பெயருக்கு காவல்காரராய் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு கேட்டுக்கு அருகே அமர்ந்திருப்பார். உண்மையில் அவருக்கு வேலையே இல்லை. வார இறுதிகளில் அத்தனை சிறுமிகளும் சாவித்திரி வீட்டில்தான். நூல் தொங்கும் பாவாடையுடன் வரும் செல்லம்மாவை மடியில் வைத்துக்கொண்டு.பினாங்கிலிருந்து வந்த சாக்லெட்டை பேப்பர் நீக்கி ஊட்டிவிடும் அன்பு. ஏழு கல் வைத்து விளையாடும் ஓரிக்காய், பாப்பாத்தி நொண்டி ஆட்டம், தாயக்கட்டம் என வீடே அமர்க்களப்படும். வீட்டில் சாப்பிடுவதுபோல் இருக்கும் எல்லாவற்றையுமே சாவித்திரி அவர்களுக்குக் கொடுப்பார். சாவித்திரியின் எந்த ஆசைக்கும் அம்மா சசிகலா குறுக்கே நின்றதில்லை. அப்பா மருது என்கிற மருதகாசி பினாங்கில் ‘மினி மார்ட் நடத்திவருகிறார். மாதம் தவறினாலும் வரும் பார்சல்கள் தவறாது.
ஏகப்பட்ட மிட்டாய்கள், ரொட்டிகள், உடைகள் என்று எதற்குமே கவலையில்லாத வாழ்க்கைதான் சாவித்திரிக்கு.
சாவித்திரியின் சித்தப்பா அருள். அவருக்கும் மலேசியாவில்தான் தொழில். தமிழ் பேசும் மலாய்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சென்னை பூந்தமல்லியில் தனி பங்களா வீட்டில் சகல வசதிகளுடனும் இருக்கிறார். அவர் தாஞ்சூர் வந்தபோது சாவித்திரியின் அறிவுக் கூர்மையைக் கண்டு அவர் கிராமத்தில் வளர வேண்டியவரில்லை என்று சொல்லி சென்னைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். வயலின் வாசிக்க ஓர் ஆசிரியர், நடனத்திற்கு ஓர் ஆசிரியர், ஆங்கிலத்தில் சரளமாகப் பேச எழுத ஓர் ஆசிரியர், தற்காப்புக் கலைக்கு ஓர் ஆசிரியர் என்று சாவித்திரியை அறிவும் ஆற்றலும், வீரமும், விவேகமும் உள்ள பெண்ணாக உருவாக்கினார். பிரபல நடிகைகள் மற்றும் அரசியல்வாதிகளின் மகள்கள் படிக்கும் மிகப் பெரிய பெண்கள் பள்ளியில் சாவித்திரி படித்தார்.
இப்போது புகுமுக வகுப்பு. இப்போதிருக்கும் +2க்குப் பதிலாக 70 களில் புகுமுக வகுப்பு, கல்லூரியில் படிக்க வேண்டும். வகுப்புத் தோழிகள் பலரும் மலேசியாவிலிருந்து வந்தவர்கள்தான். அவர்களுக்கு மருதுவின் செல்வாக்கு தெரியும். அதனால் சாவித்திரிக்கும் மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது. வயது 20. திருமண வயதுதான். ஆனால் அதுபற்றிய எண்ணமோ, ஓர் ஆண் துணை தேவை என்ற உணர்வோ கூட சாவித்திரிக்கு இல்லை. ஆனால் பெற்றோர்கள் சும்மா இருக்க முடியுமா? பினாங்கில் மருது, மாப்பிள்ளை தேடத் தொடங்கிவிட்டார். தன் குடும்பத்துக்குச் சரிவராது என்று பலரை ஒதுக்கினார். சாவித்திரிக்கு பொருத்தமாக இருக்காது என்று ஏகப்பட்டோரை ஒதுக்கினார். சசிகலாவிடமும் சித்தப்பா அருளிடமும் கூட பல இடங்களிலிருந்து மாப்பிள்ளை பேசி வந்தது. தொடர்கிறது தேடல்கள்.
கோலாலம்பூரில் ஒரு பல்நோக்குக் கடை நடத்தி வருபவர் நீலா என்கிற நீலகண்டன் சுருட்டை முடியில் ஒன்றிரண்டு அவ்வப்போது நெற்றியில் விழுந்து ‘என்ன சேதி’ என்று விசாரிக்கும். முகத்தை உள்ளங்கைகளினால் அடிக்கடி தேய்ப்பார். முகம் முழுவதும் சிவப்புத் திட்டுக்களாக ரத்தம் தெரியும். எம்ஜியார் நிறம். அவரை எம்ஜியார் என்றால்தான் பலருக்கும் தெரியும். மடிப்புக் கலையாத உடுப்பு, சக வேலையாட்களின் தோளில் கைபோடும் எளிமை. 1ஆம் தேதி தவறாமல் சம்பளம் தந்துவிடும் நேர்மை என்று எல்லாருமே அவரைப் புகழோ புகழ் என்று புகழ்கிறார்கள். அவரின் சொந்த ஊர் தாஞ்சூருக்குப் பக்கத்திலேயே இருக்கும் அறந்தாங்கி என்பது இன்னொரு முக்கியமான சேதி. அவரை சிபாரிசு செய்தார் மருதுவின் நெருங்கிய நண்பர். ஒரே ஒரு செய்தி மட்டும் மருதுவுக்கு உறுத்தியது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி அந்தப் பெண் 3 மாத்த்திலேயே ஆஸ்த்மா நோயினால் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்ட செய்திதான் அது. நீலாவின் மற்ற குணங்குளுக்கு நடுவே அது ஒரு குறையாகவே தெரியவில்லை. அந்தப் பெண் நோயினால் இறந்ததற்கு இவர் என்ன செய்ய முடியும்? அழகு, திறமை என்று பார்த்தால் நீலாவைப்போல் மாப்பிள்ளை கிடைப்பது அரிது. ஃபேஸ் புக், வாட்ஸ்அப் என்று எதுவுமே இல்லாத எழுபதுகளின் காலம். புகைப்படங்கள் மட்டுமே பகிர்ந்துகொள்ளப்பட்டன. சாவித்திரியின் புகைப்படம் நீலாவுக்கும், நீலாவின் புகைப்படம் சாவித்திரிக்கும் அனுப்பப்பட்டது. மருது முடிவு செய்கிறாரென்றால் ஆயிரம் காரணங்களை யோசித்துத்தான் முடிவு செய்வார் என்று சாவித்திரிக்கு நன்றாகத் தெரியும். சாவித்திரியின் ஒரே பதில் ‘அப்பாவுக்கு சரி யென்றால் எனக்கும் சரி’
புதுக்கோட்டையில் ஒரு திருமண மண்டபத்தில்தான் திருமணம் நடந்தது. அதுவரை அப்படி ஒரு திருமணம் அந்தப் பகுதியில் நடந்ததில்லை. கோலாலம்பூர், பினாங்கிலிருந்து மட்டும் 100 பேர் வந்திருந்தனர். அப்போதெல்லாம் மலேசியப் பயணம் எம்.வி சிதம்பரம் கப்பலில்தான் நடந்தது. ஒரு மாத காலம் ஒதுக்காமல் இந்தியா வரமுடியாது. நீலாகூட கப்பலில்தான் வந்தார். தாஞ்சூரிலுள்ள சாவித்திரி வீட்டின் அழகில், அந்தச் சூழ்நிலையில் சொக்கிப்போய் தாஞ்சூரிலேயே இருந்தார். அவர் வந்து 3 மாதங்களாகிவிட்டன. இன்னும் ஒரு வாரத்தில் கோலாலம்பூர் புறப்பட வேண்டும். சாவித்திரியையும் விரைவில் அழைத்துச் செல்ல வேண்டும்
சாவித்திரி இப்போது இரண்டு மாத கர்ப்பம். அன்று காலை நீலா கோட்டையூர் போய்வருவதாகச் சொல்லிப் புறப்பட்டார். கோட்டையூர், காரைக்குடி, மன்னார்குடி, மாயவரம் ஊர்களைச் சார்ந்தவர்கள்தான் நீலாவின் கடையிலும் அவர் நண்பர்கள் கடைகளிலும் வேலை பார்க்கிறார்கள். கோட்டையூர் செல்வதும் கோலாலம்பூரிலிருந்து வந்திருக்கும் ஒரு நண்பரைப் பார்க்கத்தான். இரவு 8 மணிக்கு தாஞ்சூர் திரும்பிவிட்டார். சட்டையைக் கழற்றிக்கொண்டே சாவித்திரியிடம் கேட்டார்.
‘இன்று சாயங்காலம் புதுக்கோட்டை சரவணா ஸ்டோருக்குச் சென்றாயா?’
‘ஆமாம்’
‘என்னிடம் சொல்லியிருந்தால், எதுவானாலும் நான் வாங்கிவந்து தந்திருப்பேனே. நீ எதற்காக உன் அம்மாவுடன் சென்றாய்?’
நீலா என்கிற பாம்பு மெதுவாக தன் சட்டையைத் தோலுரிக்கிறது. ‘நான் சென்றது இவருக்கு எப்படித் தெரியும்? அதுவும் அந்தக் கடைக்குத்தான் சென்றேன் என்று எப்படித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும் இவ்வளவு முக்கியப்படுத்தி ஏன் விசாரிக்கிறார்?’ சாவித்திரி வெகுண்டார். வித்தியாசமாக ஏதோ ஒன்று தெரிந்தது. ‘யாரையோ வேவுபார்க்க நியமித்திருக்கிறார். அதற்கு அவசியம் என்ன?’ சாவித்திரி யாருக்கும் பயந்து பழக்கமில்லை. பளிச்சென்று சொன்னார்.
‘போகவேண்டுமென்று தோன்றியது. போனேன்.’
அந்தப் பேச்சு அத்தோடு முடிந்துவிட்டது ஆனாலும் கேள்விகளும் பதில்களும் சாவித்திரியைக் குடைந்து கொண்டே இருந்தது. சிந்தித்தார். ஓர் அமைதி கலைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் 5 நாட்களில் கோலாலம்பூர் செல்ல ஏற்பாடு. அதற்கிடையில் ‘மாயவரம் போய் வருகிறேன் ‘ என்று சொல்லி ஒரு நாள் புறப்பட்டார். இரவு 10 மணிக்கு வந்தார். சாவித்திரியை அவர் பார்த்ததில் சில தீப்பொறிகள் விழுந்தன. ஏதோ நடக்கப்போகிறதோ? கேட்டார்.
‘திருச்சி போனாயாமே? நான்தான் ஏற்கனவே சொன்னேனே. நீ எதற்காகப் போனாய்? எங்கெங்கெல்லாம் போனாய்?’
‘போகவேண்டுமென்று தோன்றியது. போனேன். உங்களைக் கேட்டுப் போகவேண்டும் என்று தோன்றவில்லை. எனக்குப் பிடித்ததைச் செய்ய என்னை யாரும் இன்றுவரைத் தடுத்ததில்லை. இப்படிக் கேட்பது எனக்குப் பிடிக்கவில்லை. அருவருப்பாய் இருக்கிறது.’
சாவித்திரி சொல்லி முடிக்கவில்லை. தன் வலதுகையை இடது புறமாக உயர்த்தி வளைத்து.. இதோ இன்னும் கால்நொடியில் சாவித்திரியின் கன்னத்தில் இறங்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்தக் கையை நண்டு கவ்வுவதுபோல் சாவித்திரி தன் வலது கையால் கவ்வினார். இடது கையால் மேசை மீதிருந்த கண்ணாடி டம்ளரை அடித்து உடைத்து ஒரு துண்டை நீலாவின் விழிகளுக்குக் குறி வைத்தார் சாவித்திரி. அதே நிலையில் நீலாவின் அடுத்த அசைவுக்காக சாவித்திரி காத்துக்கொண்டிருந்தார். நீலா விபரீதமாக ஏதாவது செய்ய முற்பட்டால் அவன் கண்களைக் கிழித்துவிட சாவித்திரியால் முடியும். அட! சாது மிரண்டால் என்பார்களே. அது இதுதானோ? நீலாவிடம் இப்படி ஒரு குணம் இருப்பது யாருக்குமே தெரியவில்லை.
நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 16ஆம் நூற்றாண்டு மன்னர்கள் பல மனைவிகளோடு வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆண்ட அரண்மனைகள் ஆக்ராவிலும் ஜெப்பூரிலும் இன்னும் அப்படியே பாதுகாக்கப்பட்டிருக்கிறது. எப்படியெல்லாம் தன் மனைவிமார்கள் அயலார் கண்களுக்குப் படக்கூடாது என்றும் தன் மனைவிமார்கள் யாரும் வேறு ஒரு ஆணைப் பார்த்துவிடக்கூடாது என்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை வடிவமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல. மனைவிமார்களே கூட சந்தித்துப் பேசிக்கொள்ளவும் அவர்கள் அனுமதித்ததில்லையாம். அதுபோன்ற மன்னர்கள் இப்போதெல்லாம் இல்லை. ஆனால் அந்தக் குணாதிசயம் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். மனோவியல் ரீதியில் அதற்குப் பல பெயர்கள் உண்டு. தன் மனைவியை யாராவது பார்த்தாலோ, அல்லது யாராவது தன் மனைவியைப் பார்த்தாலோ அவர்களுக்கு கண்களை யாரோ கொள்ளிக் கட்டையால் குத்துவதுபோல் இருக்கும். கொதிக்கும் வெந்நீருக்குள் குதிப்பதுபோல் இருக்கும். அப்படி ஒரு நோய்தான் நீலாவுக்கு. ஆனால் யாருக்குமே தெரியாமல் இருந்ததுதான் ஆச்சரியம். ஆனால் சாவித்திரி அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லையே. மிக ஜாக்கிரதையாக பின்வாங்கினார் நீலா. வேகமாக விருந்தினர்கள் தங்கும் வேறு அறைக்குச் சென்று உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். அதிக சுதந்திரத்தில் வாழ்ந்த பரிசுத்தமான எந்தப் பெண்ணாலும் சிறு சந்தேக உணர்வையும் சகித்துக் கொள்ள முடியாது. நீலா என்கிற பாம்பு சட்டையை முழுதாக உரித்துவிட்டது. சாவித்திரியின் இன்னொரு முகமும் பளிச்சென்று தெரிந்துவிட்டது.
நீலாவின் முதல் மனைவி இறந்தது இயற்கையான மரணம் என்பது பொய். அது இயற்கைக்கு மாறான மரணம். சாவித்திரிக்கு நடந்ததுதான் அந்தப் பெண்ணுக்கும் நடந்தது. சாவித்திரிக்கு இருந்த தைரியம் எல்லாருக்கும் இருக்குமா என்ன? நீலாவின் கரம் அவர் கன்னத்தில் கனமாக இறங்கியபோது அந்தப் பெண் தடுமாறி பின்பக்கம் விழுந்தார். இரும்புப் பெட்டகத்தின் கூர் நுனி பிடரியைக் குத்தி ஒரு நரம்பு அறுந்துவிட்டது. 30 நாட்கள் கோமாவில் கிடந்து அந்தப் பெண் செத்துப் போனார். போஸ்ட் மார்ட்டத்தில் அந்தப் பிடரிக் காயத்தை மறைக்க ஏகப்பட்ட காசு செலவு செய்தார் நீலா. இயற்கையான மரணம் என்று வகைப்படுத்தப்பட்டு அந்த மரணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மருதுவின் செல்வாக்கு, சாவித்திரியின் தைரியம் நீலாவுக்குள் நெருப்பை இறக்கியது. நிச்சயமாக சாவித்திரி காவல்துறைக்குச் செல்லலாம். தன்னைத் தாக்க முயற்சித்ததாக புகார் தரலாம். தன் பழைய வழக்கு மீண்டும் எடுக்கப்படலாம். இன்னும் பெரிதாக அது உருவாக்கப்படலாம். எல்லாமுமே சாவித்திரியின் குடும்பத்தால் செய்ய முடியும். கோலாலம்பூர் செல்வதற்குள் சாவித்திரி அப்படி ஒரு புகார் கொடுத்து எஃப் ஐ ஆர் பதிவாகிவிட்டால் நீலா வெளிநாடு செல்லமுடியாது. அப்படி நடந்துவிடக்கூடாது என்று நீலா பயந்தார்.
இன்னும் இரண்டு நாட்கள் அவர் மிகமிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இதற்கிடையில் அறந்தாங்கி சென்று சில வேலைகளை முடித்துவிட்டு அவர் புறப்பட வேண்டும். அறந்தாங்கியிலிருந்து தன் பெட்டிகளை தாஞ்சூருக்குக் கொண்டு வந்து அங்கிருந்து புறப்பட திட்டம்.
அடுத்த நாள் அவர் அறந்தாங்கிக்குப் போகும்போது கேட்டுக்கு வெளியே ஒரு பூட்டைப் போட்டுவிட்டு புறப்பட்டார். வீரையா ஓடிவந்து சேதியைச் சொன்னனார். ச்சிகலா சாவித்திரியை அமைதிப்படுத்தினார். ‘அப்பாவுக்கு எல்லாம் சொல்லியாகிவிட்டது. அப்பா பார்த்துக் கொள்வார். உடனே விவாகரத்துக்கு மட்டுமல்ல அவர் வாழும் ஊரிலோ சொந்த ஊரிலோ தலைகாட்ட முடியாத அளவுக்கு அப்பாவால் செய்யமுடியும். அமைதியாயிரு. அவன் கப்பலேறட்டும் முதலில்’ என்றார். டீக்கடை மூக்கையாவின் மனைவி சரோஜா தனக்கு நிறைய காசு கொடுத்து வேவு பார்க்கச் சொன்ன விஷயத்தையும் போட்டுடைத்தார். சாவித்திரி பொறுமையாகவே இருந்தார்.
அன்று இரவு தாஞ்சூர் திரும்பிய நீலா எந்த விபரீதமும் நடக்காததில் அமைதியானார். அடுத்த நாள் காலை நாகப்பட்டிணம் புறப்பட எல்லா ஏற்பாடுகளும் செய்தபோது சாவித்திரி அறையை விட்டு வெளியே வரவில்லை. ‘போய்வருகிறேன்’ என்று சுவர்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் நீலா. ஆனாலும் கப்பல் நாகப்பட்டிணத்திலிருந்து புறப்படும்வரை அவரால் நிம்மதியாக இருக்கமுடியாது.
நாகப்பட்டிணத்திலிருந்து கப்பல் நீலாவுடன் புறப்பட்டுவிட்டது. எல்லாச் சேதிகளும் மருதுக்குச் சொல்லியாகிவிட்டது. கோலாலம்பூர் இறங்கியதும் ஒரு பூகம்பத்தை அவர் எதிர்நோக்க வேண்டும். சாவித்திரியையும் ச்சிகலாவையும் பினாங்குக்கு வரவழைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இனிமேல் நீலா தூங்கமுடியாது. மருது என்ற மலையை நிச்சயமாக அவரால் எதிர்கொள்ள முடியாது. கப்பல் சென்று கொண்டிருக்கிறது. பங்க் என்பது மலிவான வகுப்பு. அதற்கடுத்து டார்மிடரி 1, அடுத்து டார்மிடரி 2. நீலா டார்மிடரி 2ல் பயணிக்கிறார். அதுதான் உயர்ந்த வகுப்பு. அந்த அறையில் அவர் மட்டும்தான். கழிவறை இணைக்கப்பட்டிருந்தது. வீட்டில் சொகுசாக தூங்குவதுபோன்ற வசதி. ஆட்டம் கூட அதிகமாக உணரமுடியாது. வெளி இரைச்சல்கள் உள்ளே கேட்காது
கப்பலின் மேல்தளத்தில் நின்றுகொண்டு ஓரங்குல நீளமிருக்கும் அந்த உயர் ரக வேர்க்கடலையை கொரித்துக் கொண்டிருக்கிறார். மேகங்களற்ற விரிந்த வானத்தையும், சில பறவைகளையும், அந்தக் கடல்வெளியையும், கப்பல் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் இடத்தில் அந்த நீல மை வண்ணம் வெள்ளியாகத் தெறிக்கும் அழகையும் அது மீண்டும் நீல நிறமாகிவிடுவதையும், அவ்வப்போது தெரியும் சில மீன்களையும் அவர் பார்த்துக் கொண்டு வந்தாலும் ‘ஒரு பெண் நம்மை அடிக்க கை ஓங்கிவிட்டாளே… அவளுக்குப் பயந்துவிட்டோமே…என்று எண்ணியபோது அவரால் எதையுமே ரசிக்கமுடியவில்லை. அடுத்து என்ன நடக்கும் என்பது அவர் கையிலில்லை. அது மருதுவின் கையிலும் சாவித்திரி கையிலும் இருக்கிறது. இதுவரை அவர் பார்த்தது சாவித்திரியின் பாதிப்பலம் தானோ? கற்பனையிலேயே அவர் செத்துக் கொண்டிருந்தார். இரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தன் டார்மிடரிக்குத் திரும்பினார்.
நடு இரவு. கப்பலில் எங்கிருந்தோ புகை வருகிறது. பங்க் பகுதியிலிருந்துதான் வருகிறது. பங்கில் இருப்பவர்கள் அவசர அவசரமாக தன் உடமைகளை அள்ளிக்கொண்டு கப்பலின் மேற்பகுதிக்கு விரைகிறார்கள். தீ டார்மிடரியை நெருங்கிய போது அபாயச் சங்கு பலமாக ஊதியபோதுதான் நீலாவுக்குத் தெரிகிறது. குளிர்சாதனப் பெட்டி புகையைக் க்க்கியது. லேசாக வெப்பத்தை உணர்ந்தார். டார்மிடரி கதவைத் திறக்க முற்பட்டபோது அதைத் திறக்க முடியவில்லை. பலம்கொண்ட மட்டும் இழுத்தார். தெரிந்தவர் பெயரையெல்லாம் சொல்லி குடல் வெளியே வந்து விழுந்துவிடும் அளவுக்குக் கத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஏற்கனவே செத்துவிட்டது. தீயணைப்புப் படை தீயை அணைப்பதில் மூழ்கியிருந்தது. நீலாவின் டார்மிடரியில் அந்த வெளித்தாப்பாளைப் போட்டது யார்? சக பயணியா? அல்லது நீலாவின் முதல் மனைவியா? எல்லாரும் திடுதிடுவென்று ஓடும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டுவிட்டது. ஏராளமான பொருட்கள் நாசம். இறந்தவர்கள் பட்டியலில் முதலாவதாக இருந்தவர் நீலா. அந்த டார்மிடரி அறையிலிருந்து கரிக்கட்டையாக அவரின் உடல் மீட்கப்பட்டது.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 212 ஆம் இதழ் இன்று (15 டிசம்பர் 2019) வெளியிடப்பட்டிருக்கிறது
- 2019
- கரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.
- இந்தியாவின் உண்மையான கம்யூனிஸ்ட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்
- குறுங்கவிதைகள்
- சாது மிரண்டால்
- அமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்
- குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.