டியோ ச்யூ ராமாயி

author
0 minutes, 9 seconds Read
This entry is part 1 of 7 in the series 23 பெப்ருவரி 2020

அழகர்சாமி சக்திவேல்

கைகேயி : “தசரத மன்னர் ஆன என் கணவரே.. முன்னர் எனக்குக் கொடுத்த வரத்தின் படி, ராமன், பதினான்கு வருடம், காட்டில் வாசம் செய்ய வேண்டும். என் மகன் பரதன், இந்த அயோத்தியை ஆள வேண்டும்”

ராமன் ஆகிய நான் : “உத்தரவு தாயே. தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்.” “   

சிங்கப்பூரில், சீனப் பேய்த்திருவிழா ஆரம்பித்துவிட்டது. சீனச் சந்திர நாட்காட்டியின், ஏழாவது மாதத்தில், நரகத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, ஆவிகள் சிங்கப்பூர் முழுவதும் அலைய ஆரம்பித்துவிட்டன. சிங்கப்பூர் சீன மக்கள், ஆவிகளாய் அலையும், தத்தம் முன்னோர்களை வரவேற்க, படையல்கள் படைக்கவும் ஆரம்பித்து விட்டார்கள். கூடவே, காகிதத்தில் செய்யப்பட்ட பணத்தாள்கள், காகிதத் தங்க நகைகள், ஜாஸ் ஸ்டிக் என்ற ஆளுயர ஊதுபத்திகள், காகிதக் கார்கள் போன்ற ஆவிகளுக்குப் பிடித்த இத்யாதிப் பொருட்கள் யாவையும், சிங்கப்பூரின்  ஆங்காங்கே, தீயில் இட்டு எரிக்கவும், சீனமக்கள் ஆரம்பித்துவிட்டார்கள். சீனப் பேய் மாதத்தின் பதினைந்தாவது நாள். ஆன இன்று, ஆவிகளை மகிழ்ச்சிப்படுத்த, கேட்டாய் கலை நிகழ்ச்சிகளும், சீக்கூ என்ற சீனத் தெருக்கூத்துகளும், அங்கெங்கே சிங்கப்பூர் தெருக்களில் தொடங்கிவிட்டன. நானும், இப்போது அப்படிப்பட்ட ஒரு சீனத்தெருக்கூத்தில்தான், ராமனாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். முனைவர் பட்டம் பெற்ற, டாக்டர் சுவா சூ பாங்கால், சீன மொழியில் எழுதப்பட்ட, ராமாயணா என்ற இந்த டியோ ச்யூ சீனத்தெருக்கூத்தில்தான், நான் ராமனாய், கைகேயியின் முன், சீன வசனம் பேசிக்கொண்டு இருக்கிறேன்  எனது பெயர் மேடம் சொர் கிம்.

டியோ ச்யூ தெருக்கூத்துகளில், ஆண்களுக்கு இணையாக, பெண்களும் கதாநாயகன் வேடம் போடுவார்கள்.  செங் என்ற இந்த ஆண் வேடம் போட, பெண்கள் நிறையப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் ராமனாய் நடிப்பது இதுவே முதல்முறை. எனக்கு முன், இந்த வேடம் ஏற்று நடித்த மேடம் டான் ஹ்வீ, நிறையப் பாராட்டுக்கள் பெற்றவர். மேடம் டான் ஹ்வீயின் ஆண் நடிப்பிற்கு, நிறையச் சீன ரசிகர்கள் உண்டு. முக்கியமாய், சீதாவுடன் அவர் ராமனாய் நடிக்கும் அந்தக் காதல் காட்சிகள். “ஆண் சிருங்காரத்தை அவ்வளவு அசத்தலாகக் காட்டுவார் மேடம் ஹ்வீ” என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். இப்போது மேடம் டான் ஹவீ, கனடா நாட்டுக் குடியுரிமை வாங்கி, அங்கேயே தங்கி விட்டதால், ராமனாய் நடிக்க, எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

நாற்பத்து ஐந்து வயதைக் கடந்த எனக்கு, இளவயதிலேயே  காதல் திருமணம் நடந்து முடிந்தது, எனது கணவர் இறந்து, பத்து வருடங்கள் ஓடி விட்டது. இப்போது இருபத்தி நான்கு வயதில் ஒரு பையன் இருக்கிறான். இந்தச் சீனத்தெருக்கூத்துக்களால், சிங்கப்பூரில் யாரும் பெரிதாய் வருமானம் ஈட்டி விட முடியாது. எப்போதாவது, சில நேரங்களில் மட்டுமே நடத்தப்படும், இந்த தெருக்கூத்தில் நான் நடிப்பதற்குக் காரணம் பணமல்ல, மாறாய், சீனத் தெருக்கூத்துக் கலைஞர்களான, எனது தாய் தந்தையர், என்னில் விதைத்துச் சென்ற கலை ஆர்வமே, உண்மைக் காரணம். தலைமுறை தலைமுறையாய் நடிக்கப்படும், இந்த டியோ ச்யூ சீனத்தெருக் கூத்திற்கு, சிங்கப்பூரில் ரசிகர்கள் ஆரம்பத்தில் அதிகமாகத்தான் இருந்தார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல, மேற்கத்திய நாகரிகத்தின் தாக்கத்தாலும், மாண்டரின் என்ற எளிய வடிவத்திற்கு, சீன மொழி மாற்றப்பட்டதாலும், கடின மொழிநடை கொண்ட, டியோ ச்யூ தெருக்கூத்திற்கு, ரசிகர்கள் குறைந்து போனார்கள்.. இருந்தாலும், இந்த மாபெரும் கலைவடிவம், அழிந்து விடக்கூடாது என்ற வைராக்கியத்தில்தான் நான் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். நான் வேலை பார்த்து பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம், எனக்கு இல்லை. இறந்து போன எனது கணவரின் சொத்தில் வரும் வருமானமே என் குடும்பம் வாழப் போதுமானது. தவிர, இப்போது என் மகன், படித்து முடித்து ஒரு சிறந்த கால்நடை வைத்தியர் ஆகிவிட்டான். சிங்கப்பூரில் இருக்கும் அவனது பெட் கிளினிக்கிற்கு நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். முக்கியமாயப் பூனைகள் வைத்தியத்தில், எனது பையன் சமர்த்தன். பூனைகள் வைத்து, வீட்டில் கூட, ஏதாவது ஆராய்ச்சி செய்துகொண்டு இருப்பான். போன வாரம் கூட, இரண்டு பூனைகளை வீட்டிற்கு எடுத்து வந்து ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறான்.

கைகேயி வரம் கேட்டு, ராமன் காட்டுக்குச் செல்லும் காட்சியை, நான் நன்றாக நடித்து முடித்து விட்டேன். இனி, அடுத்த காட்சியில், ராவணன் தோன்றுவான். ராவணனாய், “ஜிங்” வடிவத்தில், நின்றுகொண்டு இருந்த அண்ணன் லி வை, மேடையேறுவதை, பார்த்துக்கொண்டே, நான் கீழே இறங்கினேன். ஜிங் ஒப்பனை செய்து கொள்வது என்பது, சாதாரண விஷயம் அல்ல. முகம் முழுக்க, பல்வேறு கருப்பு வெள்ளை வண்ணங்களில் அரிதாரம் பூசிக்கொள்ள வேண்டும். நான் மேடையில் இருந்த ராவணன் முகத்தைப் பார்த்தேன். அண்ணன் லி வை, உண்மையிலே ஒரு வில்லத்தனமான அரிதாரத்தை, முகம் முழுவதும் பூசி இருந்தார். அண்ணன் லி வை அப்படி ஒன்றும், என்னைப் போல பணம் படைத்தவர் அல்ல. மாறாய், மக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டில், ஒரு சிறிய வேலையே பார்க்கிறார். ‘தெருக்கூத்து, தெருக்கூத்து’ என்று அலைந்து, தனது படிப்பறிவை கூட்டிக்கொள்ளாதவர். நாடகமே அவரது உண்மைச் சொத்து. அண்ணன் லி வையின் கலை ஆர்வம், என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

நான் அடுத்து, வனத்தின் நடுவில், சீதையிடம் காட்டும் சிருங்காரக் காட்சிக்குத் தயார் ஆக வேண்டும். நான் போட்டிருந்த ராஜா உடையைக் கழற்றி, வன உடையை அணிந்து கொண்டேன். மேடைக்குப் பின்னால் இருந்த, அந்தப் பந்தலில், என்னைப் போல மற்ற கலைஞர்களும், அவரவர் ஒப்பனைகளைப் போடுவதிலும், வசனங்களை மனப்பாடம் செய்வதிலும், மும்முரமாக இருந்தார்கள். டியோ ச்யூ தெருக்கூத்தில், பொதுவாய் நான்கு கதாபாத்திரங்கள் அவசியம் இருக்கும். ஒன்று செங் என்ற கதாநாயகன். இரண்டு டான் என்ற கதாநாயகி. மூன்று ஜிங் என்ற வில்லன். நான்கு ச்சாவ் என்ற கோமாளி. இந்த நான்கு கதாபாத்திரங்களுடன், ஏதோ ஒரு காட்சியில், கூட்டத்தோடு கூட்டமாய் வந்து போகும் வு ச்சாவ் கதாபாத்திரங்களும் உண்டு. எங்கள் இந்த ராமாயண நாடகத்திலும், நிறைய நடிகர்கள் நடிக்க வந்திருந்தார்கள்.

எனக்கு, இப்போது தண்ணீர் தாகம் எடுத்தது. ஓரத்தில் தண்ணீர் போத்தல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இடம் நோக்கி நான் நடந்து சென்று, ஒரு போத்தல் எடுத்து, தண்ணீர் குடித்தபோதுதான், நான் அந்தக் காட்சியைக் காண நேர்ந்தது. எங்கள் நாடகத்தின் ச்சாவ் கோமாளி, யாரோ ஒருவருக்கு, திரைச்சீலையின் ஓரத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தான். முத்தம் வாங்கியவர் யார் என, நான் எனது தலையை நீட்டிப் பார்த்தேன். முத்தம் வாங்கியவரும் ஒரு ஆண்தான். அவர் எங்கள் குழுவில், வு ச்சாவ் வீரராக நடிக்க வந்தவர். “ச்சே.. கண்றாவி” நான் அருவருப்பில், சற்று சத்தமாகவே சொன்னேன். அவர்கள் இருவர் காதுகளிலும், என் சத்தம் கேட்டபோது, இருவரும் சரேலென விலகினார்கள்/ நான் வேகமாய் எனது இடத்திற்கு வந்து சேர்ந்தேன். கொஞ்ச நேரம், கோபத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. “என்ன மனிதர்கள் இவர்கள்”. நான் ஒரு வித வேதனையோடு முணுமுணுத்தேன். இப்போது கோமாளி எனது அருகில் வந்தான். “சாரிக்கா.. அவர் எனது காதலன்” என்றான். நான் கோமாளியை இப்போது கோபமாய்ப் பார்த்தேன். “அவன் அசரவில்லை. “அக்கா… என் காதலும் உண்மையானதுதான். ஆனால், நீங்கள் இதை நினைத்து, உங்கள் கவனத்தைத் தயவுசெய்து தவறவிட வேண்டாம். நாடகம்தான் அக்கா எனக்கு முக்கியம். நம் நாடகம் ஜெயிக்கவேண்டும். நீங்கள்தான், இந்த நாடகத்தின் கதாநாயகன். ப்ளீஸ் அக்கா” அவன் என்னிடம் கெஞ்சினான்  எனது கோபம் குறைந்தது. நான் எனது ஒப்பனையில் இப்போது முழுக்கவனம் செலுத்தினேன்..   

வன உடையில் இருந்த நான், லட்சுமணன், சீதை, மான் வடிவில் இருந்த மாரீசன் ஆகிய அனைவரும் மேடையின் ஓரத்தில், இப்போது தயாராக இருந்தோம். முதலில், மாரிசன், சீதையின் முன்னால், மானாய்த் துள்ளித் துள்ளிக்குதித்து ஓடினான். சீதைக்கு அந்த மாரீசன் மானைப் பிடிக்க ஆசை வந்தது. ராமனாகிய நானும், இலட்சுமணனும் மேடைக்குள் வந்தோம். இப்போது, சீதையின் அழகில் மயங்கி நான் பேசும் வசனம், இருவரும் சேர்ந்து பாடும் காதல் பாட்டு. எல்லாம் முடிந்தது. நான், சீதையிடம் எனது காதல் முகபாவங்களைக் காட்டி நடித்தேன். காதல் காட்சி முடிந்தவுடன், நான் மேடையின் கீழ் இருந்து கைதட்டல்கள் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், யாருமே கை தட்டவில்லை. எனக்கு அது பெருத்த் ஏமாற்றத்தைக் கொடுத்தது. சீதை இப்போது “எனக்கு அந்த மான் வேண்டும் ராமா” என்று என்னைக் கேட்க, நான் “பிடித்து வருகிறேன் கண்மணி” என்று கூறியபடியே, மேடையின் ஓரத்திற்கு நடந்தேன். இலட்சுமணன் என்னைப் பின் தொடர்ந்தான். நான் மேடையை விட்டு இறங்கி, அடுத்த் காட்சிக்குத் தயார் ஆனேன். அந்தக் காதல் காட்சிக்குப் பிறகு, நான் நடித்த அத்தனைக் காட்சிகளுக்கும், எனக்குக் கைதட்டல்கள் கிடைத்தது. முக்கியமாய், வு செங் ஒப்பனையில், போர் வீர ராமனாய் வந்து, நான் ராவணனை வதம் செய்த அந்தக் காட்சியில், எனக்குப் பலத்த கைத்தட்டல்கள் கிடைத்தது.

நாடகம் முடிந்தது. நான் என் ஒப்பனைகளை கலைக்க ஆரம்பித்தேன். ரசிகர் ஒருவர் எனது அருகில் வந்தார். சீன மொழியில் பேச ஆரம்பித்தார். “மேடம்.. நான் இந்த ராமாயணா நாடகத்தை விரும்பிப் பார்ப்பவன். இன்று நீங்கள் வெளுத்து வாங்கி விட்டீர்கள்.” என்று பரவசமாய்ச் சொன்னபோது, எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “அப்படியா.. ரொம்ப சந்தோசம் “ நான் வாய்பிளந்து சொன்னேன். “ஆனால்…” அவர் நிறுத்தி நிதானமாய்ச் சொன்னார். “சீதையிடம், நீங்கள் காதலை வெளிப்படுத்தும் அந்த சிருங்காரக் காட்சியும் பாடலும் சரியாய் அமையவில்லை. உங்கள் சிருங்கார மனோபாவம், அவ்வளவாய் வெளியே தெரியவில்லை.” என்றார். எனக்கு, அவர் பேச்சு, இப்போது கவலையைக் கொடுத்தது. “இதற்கு முன்னால், ராமனாய் நடித்த மேடம் டான் ஹ்வீ, இந்தக் காதல் காட்சியில், பிரமாதமாக நடிப்பார்.. இப்போது அவரோ, கனடாவில் நிரந்தரமாகக் குடியேறி விட்டார்”. ரசிகர் சற்றே அலுத்துக் கொண்டார். நான், என் கவலை தோய்ந்த முகத்தை, அவரிடம் காட்ட விரும்பாமல், வலிய ஒரு புன்னகையை, வரவழைத்துக் கொண்டேன். “நானும் அப்படியே நடிக்க முயல்கிறேன் நண்பரே” என்றேன். ரசிகர் போய் விட்டார். ஆனால், அவர் பேச்சு மட்டும், என்னுள் ஆழமாய்ப் பதிந்து போனது. நான், எனது காரை நோக்கி நடந்தேன். கோமாளி எனது அருகில் ஓடிவந்தான். “பேசாதே” என்று கோபமாய்ச் சொல்லியபடியே, நான் காருக்குள் நுழைந்தேன். அவன் என் கோபத்துக்கு வருத்தப்படாது, என்னைப் பார்த்து சிரித்தான். “எனது செயல் நியாயமானது” என்பது போன்ற அவனது முகபாவனையை என்னால் ரசிக்க முடியவில்லை. நான், காரை வேகமாக ஒட்டி, வீடு வந்து சேர்ந்தேன்.  “நள்ளிரவு ஆகி விட்டது. நிச்சயம் மகன், அவன் கிளினிக்கில் இருந்து வந்து இருப்பான். சாப்பிட்டுவிட்டு தூங்கியும் இருப்பான். நான் என்னிடம் இருந்த சாவி கொண்டு, கதவை மெல்லத் திறந்து உள்ளே போனேன். முதலில் நன்கு குளித்தேன். எனக்குப் பசியாக இருந்தது. மேசையில் இருந்த ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டுக் கொண்டே, கதவின் ஓரம் சென்றேன். அங்கே, அங்கே.. என் மகன் போ ச்சுன் கொண்டுவந்து இருந்த அந்த இரண்டு பூனைகளும், சத்தம் போடாமல் என்னமோ செய்து கொண்டு இருந்தது. நான், அந்த குறைந்த வெளிச்சத்து இருட்டில், பூனைகள உற்றுக் கவனித்தேன். இரண்டுமே ஆண் பூனைகள்தான். ஒரு ஆண் பூனை, இன்னொரு ஆண் பூனையின் மீது ஏறி..

என் ஆத்திரம் இப்போது என் தலைக்கேறியது. நான் அருகில் இருந்த கம்பை வேகமாய் எடுத்தேன். “சனியன்களே.. ஒழிந்து போங்கள்” என்றபடியே, மடார் மடார் என்று என் ஆத்திரம் தீர, பூனைகளை அடித்தேன். ஒரு மூலையாய் மாட்டிக்கொண்ட இரண்டு பூனைகளும், தப்ப வழி தெரியாமல், “வீல்.. வீல்” என்று கத்தின. நான், அப்போதும் எனது விளாசலை நிறுத்தாமல், இன்னும் பலங்கொண்டு அடித்தேன். ஒரு பூனையின், ஒரு காலில் ரத்தம் கொட்டியது. இன்னொரு பூனைக்கோ, முதுகு மேல்த்தோல் கிழிந்து, ரத்தம் தரையில் ஓடியது. பூனைகளும், நானும் போட்ட சத்தத்தில், என் மகன் போ ச்சுன், ஓடி வந்தான். “அம்மா..என்ன அநியாயம் செய்கிறீர்கள்.. நிறுத்துங்கள் அம்மா” என்றபடியே, கோபத்துடன், என்னிடம் இருந்த கம்பைப் பிடுங்கினான். நான் கம்பை அவனிடம் தராமல், கையிலேயே வைத்துக்கொண்டேன். எங்கள் போராட்டத்துக்கு இடையில், பூனைகள் இரண்டும் தப்பித்து ஓடின. மகன் போ ச்சுன்னும், “ என் ஆராய்ச்சி மண்ணானதே” என்றபடியே, அவைகளை விடாது துரத்திக்கொண்டு ஓடினான். அதற்குள் பூனைகள் தாவி, வீட்டை விட்டு வெளியில் ஓடின. கதவைத் திறந்துகொண்டு மகனும் ஓடினான். நான், எனது அறையில் வந்து படுத்துக் கொண்டேன்.

ரொம்ப நேரம் கழித்து, மகன் உள்ளே வந்தான். அவன் கைகளில் பூனைகள் இல்லை. “அம்மா.. எனது ஆராய்ச்சியை பாழ்படுத்தி விட்டீர்கள் அம்மா” என்று கோபமாய்க் கத்தினான். நானும், பதிலுக்குக் கத்தினேன். “என்ன இழவு ஆராய்ச்சி இது.. இந்தப் பூனைகள் போனால் போகட்டும். வேறு பூனைகளைப் பிடித்துக் கொள்”. எனக்கு, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியது. என் மகன், இப்போது அளவுகடந்த வருத்தத்துடன், என் மீது வந்து நின்றான். “அம்மா… வேறு பூனைகள் எனக்குக் கிடைக்கலாம். ஆனால், இது போன்ற பூனைகள் கிடைப்பது அரிது அம்மா”. கதவை, “படால்” என்று கோபத்துடன் சாத்தியவன், அவன் அறைக்குப் போய் விட்டான். மறுநாள் காலை, நான் தூங்கி எழுந்து பார்த்தபோது, அவன் அறை மூடியிருந்தது. “மருத்துவப் பணிக்காய், அவன் கிளினிக் சென்று விட்டானோ?” என்று யோசித்த நானும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. வழக்கம் போல, நான் எனது வீட்டுக் கடமைகளை, நான் செய்ய ஆரம்பித்தேன். ஆனால் மனம் மட்டும், ஏனோ நிம்மதி இல்லாமல் தவித்தது. நேற்று நாடகத்தில், அந்த நாடக ரசிகர் சொன்ன அந்த விமர்சனம், என் மனக்கண் முன் ஓடியது. “சிருங்கார ரசம் ஏன் எனக்கு சரியாய் வரவில்லை? சிருங்கார ரசத்தை, நடிப்பில் கூட்ட, நான் என்ன செய்ய வேண்டும்?” என் மனம் தவிப்பாய்த் தவித்தது. “தனது நடிப்பில் குறை இருக்கிறது” என்று தெரிந்தால், ஒரு உண்மையான கலைஞனின் மனது, என்ன பாடுபடுமோ, அந்த உணர்ச்சிகள்தான், எனக்கும் தோன்றியது என்றாலும், எனது நிம்மதி ஏனோ என்னை விட்டுப் போய்விட்டது.

இரவு வந்தது. பையன் வருவான் என்று நான் எதிர்பார்த்துக் காத்து இருந்தேன். ஆனால் அவன் வரவே இல்லை. இப்போது எனக்கு சற்றே பயம் வந்தது. நான், அவனுக்கு போன் அடித்தேன். போனை எடுத்தவன் “என்ன அம்மா?” என்று எரிச்சலுடன் கேட்டான். என் கவலை கூடியது. “ஏன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை? எங்கே இருக்கிறாய்?” நான் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவன் குறுக்கிட்டுப் பேசினான். “எனது மனது சரியில்லை அம்மா. நான், எனது காதலி ஜோயல் வீட்டிற்கு வந்து விட்டேன். நீங்கள் சாப்பிட்டு படுங்கள். எனக்காக காத்து இருக்க வேண்டாம்” மகன் அப்படிச் சொல்லிவிட்டு, போனையும் கட் செய்தான். என்னையும் அறியாமல், எனது கண்களில் இருந்து, கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது. என் மகனுக்கு ஒரு காதலி இருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். ஜோயலை அவன், விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறான் என்பதும் எனக்குத் தெரியும். ஜோயல் வீட்டிற்கு அவன் அடிக்கடி போவதும் எனக்குத் தெரியும். ஆனால், ஒரு போதும் இரவில் அவன், அவளோடு தங்கியது இல்லை. இரவானால், எப்படியும், வீட்டிற்கு வந்து “சாப்பாடு போடுங்கள் அம்மா” என்று என் கையால்தான் சாப்பிடுவான். இன்றுதான், இந்தப் புதுப் பழக்கம் ஆரம்பித்து இருக்கிறான். “தாய்ப்பாசம் அவ்வளவுதான் போலும். இருக்கட்டுமே.. இரண்டு பூனைகளுக்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா? அவன் செய்வதைச் செய்யட்டும்” என் மனம் வீம்பு பிடித்தது. அடுத்த நாள், நான் அவனைக் கூப்பிடவில்லை. அவன் நான்கைந்து முறை கூப்பிட்டும், நான் பதில் ஏதும் சொல்லவில்லை. இதே நிலை, மூன்று நாட்கள் தொடர்ந்தது. என்னுள், கவலை இருந்தபோதும், எனது ,மனம் இப்போதும் வீம்பு பிடித்தது. அப்போதுதான், அந்தப் போன் வந்தது. எனக்கு முன்னர் ராமனாய் நடித்த, மேடம் டான் ஹ்வீ, கனடாவில் இருந்து சிங்கப்பூர் வந்து இருக்கிறாளாம். என்னைப் பார்க்க, அவள் ஆவலாய் இருப்பதாய், ராவணனாய், ஜிங் வேடம் போடும், லி வை அண்ணன்,  போனில் சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் அடுத்த நாள், மேடம் டான் ஹ்வீயைப் பார்க்க, அவள் தங்கி இருந்த ஹோட்டலுக்குப் போனேன்.

நான், அறைக்கதவை தட்டியவுடன், கதவைத் திறந்து, வரவேற்று, என்னை உள்ளே கூட்டிக்கொண்டு போனாள் மேடம் டான் ஹ்வீ. மேடம் டான் ஹ்வீ, என்னை விட உயரமாய் இருந்தாள். ஆஜானுபாகுவான, மேடம் டான் ஹ்வீயை, யார் பார்த்தாலும், அவள் மீது நிச்சயம் ஒரு மரியாதை வந்து விடும். அப்படிப்பட்ட காந்தப் பார்வை, அவள் கண்களில் இருந்தது. அவளை அப்படியே ராமபிரானாய் நான் கற்பனை செய்து பார்த்தேன். என், கற்பனையில், ராமரின் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்தி இருந்தாள் மேடம் டான் ஹ்வீ. ராமனாய் நடித்த அந்த ராமாயி மீது, எனக்கும் மதிப்புக் கூடியது. நான், அவள் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்தேன். நாற்காலியில் உட்கார்ந்த நேரத்தில் இருந்தே, நாங்கள் இருவரும், டியோ ச்யூ சீனத் தெருக்கூத்துக் கலை பற்றியே, முழுவதுமாய்ப் பேசிக்கொண்டு இருந்தோம். சீனத் தெருக்கூத்து, சிங்கப்பூரில், ஆரம்பத்தில் நுழைந்த விதம், அந்தத் தெருக்கூத்தை வளர்த்த நாடக் நடிகர்கள், நடிகையர்கள், மற்றும் நாடகம் போட, பண உதவி செய்த புரவலர்கள், சிங்கப்பூருக்குள் சினிமா நுழைந்தபிறகு ஏற்பட்டுப் போன, நாடகக் கலை வளர்ச்சியின் தொய்வு, முக்கியமாய், சற்றே கடுமையான சீன மொழிகளில் இருந்து. மாண்டரின் என்ற எளிமையான மொழியை, சிங்கப்பூர் உள்ளே புகுத்தியதால், பழமையான சீன மொழியில் இருந்த சீனத் தெருக்கூத்துக் கலை, இன்னும் தொய்ந்து போன சோகம்.. ராமாயிக்களான நாங்கள் இருவரும், எங்களை மறந்து பேசிக்கொண்டே போனோம். அப்போதுதான் நான் எனது அந்த சந்தேகத்தைக் கேட்டேன்.       

“நாடக ரசிகர் ஒருவர் சொல்கிறார். நான் காட்டும் சிருங்கார ரசம், அவ்வளவு போதவில்லையாம். மேடம் டான் ஹ்வீ காட்டும் சிருங்கார ரசம், ரசிகர்களை, தன்னை மறந்து கை தட்ட வைத்து விடுமாம். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” நான் சிறுபிள்ளை போல, இந்தக் கேள்வியைக் கேட்டதுதான் தாமதம். மேடம் டான் ஹ்வீ கலகலவெனச் சிரித்தாள். அவள் நிதானமாகப் பேசினாள்.. “நீங்கள் நடிக்கும் சிருங்கார நடிப்பும் இயல்பானதே. எனது சிருங்கார நடிப்பும் இயல்பானதே” என்று மேடம் டான் ஹ்வீ சொன்னபோது, எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. “பிறகு ஏன் உங்கள் நடிப்புக்கு மட்டும் கை தட்டுகிறார்கள் மேடம் டான் ஹ்வீ?” நான் ஒரு வித பதட்டத்தோடு வினவினேன். அவளோ எந்தப் பதட்டமும் அடையவில்லை. அவள் சொன்னாள். “ஆனால் எனது உடல் இயல்பு வேறு, உங்களது உடல் இயல்பு வேறு”. என்றாள். அவள் சொன்னது எனக்குப் புரியவில்லை.

மேடம் டான் ஹ்வீ தொடர்ந்தாள். “சிருங்கார ரசம் என்பது, காதல் சம்பந்தப்பட்டது மட்டும் அல்ல. இனக்கவர்ச்சியும் சிருங்கார ரசத்துக்குள் அடங்கி இருக்கிறது. என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவள் சொன்னபோது, என்னால் முற்றிலும் அவள் சொல்ல வந்த கருத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. மேடம் டான் ஹ்வீயே, இன்னும் தொடர்ந்தாள். “உலகத்தில் எத்தனையோ ஆண்மை நிறைந்த நடிகர்கள், பெண் வேடம் போடுகிறார்கள். அவர்களால், ஒரு பெண்ணின் குரலில் பேச முடியும். ஒரு பெண்ணின் நளினத்தையும் காட்ட முடியும். ஆனால், இன்னொரு ஆண்மை நிறைந்த ஆண் முன்னால், இயல்பான சிருங்கார ரசத்தை, ஒரு ஆண்மை நிறைந்த பெண் வேட நடிகனால், காட்டவே முடியாது. இனக் கவர்ச்சி இருந்தால் மட்டுமே, இயல்பான சிருங்கார ரசத்தை, நடிப்பில் காட்ட முடியும். பெண்ணாய் நடிக்கும் ஆண் நடிகனுக்கு மட்டுமே. நான் சொல்லும் உண்மை பொருந்தும் என்று நினைத்து விட வேண்டாம். ஆண் வேடம் ஏற்று நடிக்கும், பெண்ணுக்கும் இதே உண்மை, கச்சிதமாகப் பொருந்தும். நீங்கள் ஒரு பெண்.. பெண்ணான உங்கள் இயல்பு எதுவோ, அதற்கேற்பவே நீங்கள் சிருங்காரம் காட்டுகிறீர்கள். அதில் தவறில்லை” மேடம் டான் ஹ்வீ சொன்னபோது, எனது குழப்பம் இன்னும் அதிகமானது. “அப்புறம் எப்படி உங்களால் மட்டும் எப்படி அவ்வளவு ஆண்மை சிருங்கார ரசம் காட்ட முடிகிறது? நான் ஆச்சரியமாக வினவினேன். கொஞ்ச நேரம், மேடம் டான் ஹ்வீ எனக்குப் பதில் சொல்லவில்லை. “சொல்கிறேன்” என்றவர், “மேரி.. இங்கு கொஞ்சம் வா” என்று சொன்னவுடன், உள்ளிருந்து மேரி என்ற அந்த அழகியப்பெண், இன்னொரு அறையின் உள்ளே இருந்து வந்தார். மேடம் டான் ஹ்வீயின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். மேடம் டான் ஹ்வீ தொடர்ந்தாள். “இவள் எனது ஆருயிர்த் தோழி, கனடா நாட்டைச் சேர்ந்தவள். இவளை, நான் எனது மனதில் நினைத்துக் கொள்ளும் போதெல்லாம், எனது ஆண்மை சிருங்கார ரசம் ரொம்பவே கூடிப்போகும். நானும் அதனால் நன்றாக காதல் வசனம் பேசி நடிப்பேன். கைதட்டலும் பெறுவேன்” என்று சொல்லும்போதே, மேடம் டான் ஹ்வீயின் கண்களில் கண்ணீர் பெருகியது. நான் பதறிப் போனேன். மேடம் டான் ஹ்வீ, கண்ணீருடன் தொடர்ந்தாள். “என் ஆருயிர் மேரிக்காகவே, நான் கனடா உரிமை பெற்றேன். மேரியோடு துணையாய் வாழவே, நான் அங்கேயே  நிரந்தரமாகத் தங்கி விட்டேன். ஆனால், அதனால், நான் எனது நாடகக்கலையை முற்றிலுமாக இழந்து இருக்கிறேன். ஒன்றை இழந்து, ஒன்றைப் பெற்றேன். இது எனது தலைவிதி”. மேடம் டான் ஹ்வீ, இப்போது கதறிக் கதறி அழுதாள். நான் அவள் நிலை கண்டு, மிகவும் வருந்தினேன். “உலகம் பலவிதம். மக்கள் பலவிதம்.” எனக்கு இப்போது ஒரு மனத்தெளிவு பிறந்தது.

நான், அவளிடம் தெளிவுடன் பேசினேன். “டான் ஹ்வீ, சிங்கப்பூர், இப்போது எவ்வளவோ மாறி இருக்கிறது. இன்னும் சிங்கப்பூர் மாறும். உங்கள் இனக்கவர்ச்சி எப்படி இருந்தாலும், நாடகக் கலையை, இன்னும் உங்களால் தொடர முடியும். கனடாவிலும் தொடரலாம். சிங்கப்பூரிலும் தொடரலாம். நம்பிக்கையுடன் இருங்கள். காலம் உங்கள் பக்கம்”. நான் அவளை இப்போது தேற்றினேன். “ஆழ்ந்த நன்றிகள்” என, அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். நான் விடை பெற்று வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டின் கதவைத் திறந்துதான் தாமதம். பூனைகள் இரண்டும், மேசையில் இருந்து தாவி ஓடின. ஒரு பூனையின் காலில், மருந்துக்கட்டு போடப்பட்டு இருந்தது. இன்னொரு பூனையின் முதுகுக் காயத்துக்கு, மருந்து போடப்பட்டு இருந்தது. நான் காயப்படுத்திய அதே பூனைகள். “எப்படி வந்தது?” நான் அதிக ஆச்சரியம் அடைந்தேன். உள்ளே இருந்து மகனும், ஜோயலும் வந்தார்கள். மகன் சொன்னான். “அம்மா.. கஷ்டப்பட்டு பூனைகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டேன். நான் செய்யும் ஓரினச்சேர்க்கை ஆராய்ச்சிக்கு, இந்த இரண்டு பூனைகள் அவசியம் தேவை அம்மா. அவைகள் சற்று குணம் ஆகும் வரையில், ஜோயல் வீட்டிலேயே தங்கி விட்டேன் அம்மா. என்னை மன்னியுங்கள்;” மகன் பேசிக்கொண்டு போனான். நான், இப்போது பூனைகளின் அருகில் சென்றேன். பூனைகளைச் செல்லமாகத் தடவினேன். திடீரென்று ஒரு பூனை பேசியது. “நான் நீல யட்சி. இது அன்ன யட்சி. எனது காதல் ஜோடி”. பூனைப் பேச்சில், நான், என் மகன், ஜோயல் மூவருமே திடுக்கிட்டோம். பூனை இப்போது பாடியது.

நான் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை நீல யட்சி.

என் காதலுக்கும் வாழ்வு உண்டு வாடா மச்சி.

பாட்டுப் பாடிக்கொண்டே, ஆவிகளான பூனைகள் இரண்டும், இப்போது, அழகிய கொண்டைக் குருவிகளாய் மாறின. ஒரு கொண்டைக் குருவியின் ஒரு கால், காயப்பட்டு இருந்தது. இன்னொரு குருவியின், ஒரு இறக்கை, வெளுப்பாய் இருந்தது..இரண்டும் வெளியில் படபடத்துப் பறந்து போயின.

சிங்கப்பூரின், பேய்த்திருவிழா முடிந்து போய்விட்டது. சிங்கப்பூரில் அலைந்து கொண்டு இருந்த ஆவிகள் அனைத்தும், மறுபடியும், சந்தோசமாய் நரகத்துக்குக் குடி பெயர்ந்தன. எனக்குள்ளும் இப்போது ஒரு நிம்மதி வந்தது. நான், இப்போது, என்னுடன், கோமாளியாய் நடித்தவனைத் தேடி, மன்னிப்பு கேட்க போய்க்கொண்டு இருக்கிறேன். நான் வானத்தைப் பார்த்தேன். வானவில், என் மனதைப் போலவே, வானத்தை நிறைத்து இருந்தது.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *