சூதும் அன்பும் சேர்ந்ததே உலகம்…………..

author
0 minutes, 15 seconds Read
This entry is part 7 of 7 in the series 23 பெப்ருவரி 2020

 எஸ்.ஜெயஸ்ரீ. கடலூர்

        எழுதிய நூல்களும்,பெற்ற விருதுகளும் கிட்டத்தட்ட சம எண்ணிக்கையில் இருக்க, தமிழ் கூறும் நல்லுலகில், ஆன்மிக, பக்தி இலக்கியத்திற்கும், சங்க இலக்கியத்திற்கும், நவீன இலக்கியத்திற்கும் குறைவே இல்லாத பல வடிவங்களில் தன் பங்கைத் திறம்பட ஆற்றி வருபவர் வளவ.துரையன் அவர்கள்.

சங்க இலக்கியங்களை எளிமையான முறையில் அனைவரும் படிக்கும் விதமாகச் செய்ய வேண்டும் என்று பெரும் ஆவல் மிக்கவர். அதே ஆவலோடு, மனித உறவுகளின் வாழ்வியல் சிக்கல்களையும் போராட்டங்களையும், தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நிகழ்ச்சிகளையும் மிகவும் எளிமையாக சிறுகதையாக்குகி.றார். தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள் கூட கதையாகின்றன. இப்படி வாழ்க்கையை உற்று நோக்கி மனித இயல்பைப் புரிந்து கொள்ள முயல்வதாலேயே பலருக்கும் இனிமையான நண்பராக இருப்பவர் வளவ..துரையன்.

150 கதைகள் அடங்கிய அவரது முழுத்தொகுப்பு வந்து விட்டது. தொடர்ந்து சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபடியே இருக்கிறார் அவர். அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்துள்ளது  16 கதைகள் அடங்கிய  தொகுப்பு ”அன்று,இன்று,இனி”.

  •      
  • இந்தத் தொகுப்பில், இந்தத்தலைப்பில் எந்தக் கதையும் இடம்பெறவில்லை.ஆயினும், தொகுப்பை வாசித்து முடிக்கும்போது, இந்தத் தலைப்பு இத் தொகுப்பிற்குப் பொருத்தமானதாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.
  •  
  • தொகுப்பின் முதல் கதையான ”வாரிசு” தொடங்கி, பெரும்பாலான கதைகளில் சூதும், சூழ்ச்சியும் உலவுகின்றன. புராண காலத்திலிருந்து, இதிகாச காலந்தொட்டு, இன்று வரை அவை மனித மனங்களை ஆட்டிப் படைப்பதை உணர்த்துவதாலேயே இந்தத் தொகுப்பிற்கு அவர் இந்தத் தலைப்பு பொருத்துமானதாக இருக்கும் என்று நினைத்திருக்கக் கூடும்.
  •  
  • ’வாரிசு’ கதை பாரதப் போரை நல்லபடியாக முடித்து வைப்பதற்காக கிருஷ்ணன் செய்த தர்மமான அது பாண்டவர் வெல்வதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியாகத்தான் பார்க்கப்படுகிறது என்று கூறுகிறது. கிருஷ்ணாவதாரத்தை பூர்ணாவதாரமாகக் குறிப்பிடுகிறோம். ஏனெனில், தெய்வம் மனிதனாக, மனித உணர்வுகளோடு வாழ்ந்து காட்டிய அவதாரம்.
  • அந்த அவதாரத்தின், மகாபாரதத்தின், ஒரு சிறிய பகுதியை எடுத்துக் கொண்டு, இந்தக் கதையை ஆக்கியிருக்கிறார். அரவானைத் தந்திரமாக, தன் வாயாலேயே பலி ஆவதற்கு சம்மதிக்க வைத்து, பொய்யாக திருமணமும் நடத்தி, அவன் செய்த சூது, சாபமாகக் கடைசியில் அவன் உள்பட யது குலமே அழிவதற்குக் காரணமாயிற்று. இந்தச் சூதும் கபடமும் தொடர்வதை இத் தொகுப்பின் நிறைய கதைகளில் காண முடிகிறது.
  •  
  • நிச்சயம் கதையில், கண்ணன், தன் வீட்டுச் சொந்தக்காரன் கண் முன்னாலேயே, தான் குடியிருக்கும் வீட்டைத் தன் வீடு என்று சொல்கிறான். வாடகையே தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். எப்படியோ தன்னிடம் ஜாதகம் பார்க்க வரும் குடும்பங்களை சம்பந்தியாக்குகிறார் கணேச ஜோசியர்.
  •  
  • கடன் வாங்கிவிட்டுக் கடனைத் தராமல் ஒவ்வொரு முறையும் கடன் கொடுத்தவர் கேட்கும்போது  ஒத்திபோட்டுக்கொண்ட வரும் திண்டுக்கல்லார்.
  • தான் கூப்பிட்டு வேலைக்கு வராததாலோ, அல்லது இவர்கள் ஏழைகள்தானே என்ற எண்ணமோ, தன் வயக்காட்டில் வேலை செய்யும் கம்சலாவை பலாத்காரம் செய்யும் சின்ன ஆண்டை, அதற்கு பழி தீர்க்கும் கம்சலாவும், அவள் புருஷனும் என்று இந்த சூதும், அதற்குப் பதிலும் இப்படி நீண்டு கொண்டே போகிறது.
  •  
  • தொகுப்பினூடே மன்னிப்பும், அன்பும் கூட இழையோடுகிறது அத்தனை கதைகளிலும். கிருஷ்ணன் அரவான் சாபம்தான் என்று உணர்கிறான். அதன் மூலம் தான் செய்தது தவறுதான் என உணர்கிறான் என்றுதானே அர்த்தம். கம்சலாவும், அவள் கணவனும் ஆண்டையின் மனைவியை வதைக்க நினைக்கவில்லை. மாறாக அவளை வருத்தம் உணர வைக்கிறார்கள்.
  •  
  • கடன் கொடுத்ததைத் திருப்பி வாங்கத்தான் போகிறார்கள் கூட்டமாக. ஆனால், அவர் குடும்பச் சூழலைப் பார்த்து விட்டு, அவர் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பரவாயில என்று அதற்கு முழுக்குப் போடுகிறார் கடன் கொடுத்தவர். வீட்டின் சொந்தக்காரராக இருப்பவர், தன் முன்னாலேயே பொய் சொல்வது தெரிந்தும், எப்படியோ அவர் மகளுக்குத் திருமணம் நடக்கட்டும் என்று சும்மா விடுகிறார்.
  •  
  • ஆடு மல்லிகைக் கொடியைத் தின்பது முதலில் வருத்தமாக இருந்தாலும், ஆடு தின்னக் கொடி இல்லையே என்று மீண்டும் கொடியை வளர்க்கிறாள் சகுந்தலா..

இப்படி அன்பும் எங்கும் தழைத்து ஓங்குவதால்தான், அந்த ஒளியில் மனிதர்களின் சூதும், கபடும் காணாமல் போகிறது. உலகம் இன்னும் உய்த்துக் கொண்டிருக்கிறது. இப்படிப் பார்க்கும்போது வளவ.துரையனின் தொகுப்பின் தலைப்பு சரிதான் என்றே சொல்லலாம்.

சில உதாரணங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது சலிப்பூட்டுகிறது. (கோபித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருப்பது போல தெருக்கள், விரட்ட விரட்டப் புண்ணில் வந்து அமரும் ஈக்கள்).

சிறுகதை எழுத ஆசைப்படுபவர்களுக்கு இப்படியும் எளிமையாக எழுதலாம் என்று நம்பிக்கையைக் கொடுப்பதாக வளவ. துரையன் கதைகள் அமைந்திருக்கின்றன. மிகவும் சிரமமான எழுத்துகளாக இல்லாமல், எளிமையை விரும்பிப் படிப்பவர்களுக்கு நிச்சயம் இந்தத் தொகுப்பினைப் பிடித்து விடும். பலரும் வாழ்க்கையில் சந்தித்திருக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைகளாக இருப்பதால் எழுத்தாளரை நெருக்கமாக உணர முடியும். அப்படி உணரச் செய்த வளவ. துரையனுக்குப் பாராட்டுகள். 

சிறந்த முறையில் அச்சாக்கம் செய்திருக்கும் சொல்லங்காடி பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

                     ——————————-

( அன்று இன்று இனி- சிறுகதைத்தொகுப்பு- வெளியீடு: சொல்லங்காடி பதிப்பகத்தார்.  விலை: ரூ.140/-)

==============================================================================எஸ். ஜெயஸ்ரீ,  36ஏ, அண்ணா நகர், கூத்தப்பாக்கம், கடலூர். 607002

பேசி: 94860 78070

Series Navigationபெரியார் தமிழகத்துக்கு கொடுத்த ஒரு பெரிய கொடை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *