மெய்ப்பாட்டிற்கும் ஏனைய இலக்கிய கொள்கைகளுக்குமான உறவு

author
3 minutes, 38 seconds Read
This entry is part 6 of 14 in the series 26 ஏப்ரல் 2020

முனைவர் பீ. பெரியசாமி,

தமிழ்த்துறைத்தலைவர்,

டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விளாப்பாக்கம் – 632521.

முன்னுரை

               தொல்காப்பிய மெய்ப்பாட்டியலானது உலகமொழிகளில் உள்ள பல்வேறு கொள்கைகளோடு பல்வறு தொடர்புடைய ஒர் இலக்கிய கொள்கையாக உள்ளது. உலகில் உள்ள பல்வேறு இலக்கிய கொள்கைகளுக்கும் மெய்ப்பாட்டியலே முதன்மையானதாகும். பிற்கால இலக்கிய கொள்கைகளுக்கு வழிவகுத்தவர் தொல்காப்பியர் என்றால் மிகையாகா. மெய்ப்பாடானது ரசம், சுவை, உவமை, நோக்கு, பொருட்பாடு, விறல், சத்துவம் ஆகியவற்றோடு கொண்டுள்ள உறவை  நிறுவதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும். இதனையே இக்கட்டுரை ஆய்கிறது.

மெய்ப்பாட்டிற்கும் சுவைக்குமான உறவு

தொல்காப்பிய உரையாசிரியர்கள் மெய்ப்பாட்டைச் சுவை என்ற சொல்லால் குறித்துள்ளனர். வடமொழியாளர்களின் செல்வாக்கு மிக்க காலம் உரையாசிரியர்களின் காலம். ஆதலால், வடமொழியாளர்கள் கூறும் இரஸத்தின் மொழிபெயர்ப்பான சுவை எனும் சொல்லால் மெய்ப்பாட்டைக் குறித்தனர் எனலாம். அடியார்க்கு நல்லாரும்  மெய்ப்பாட்டைச்  “சுவை”1  என்றே குறித்துள்ளார்.   மேலும்,   கு.  கோதண்டபாணி பிள்ளை  மெய்ப்பாட்டைச்  “சுவை” எனக் குறிப்பது சிறப்பாகும்.  இதனை,  தண்டியாசிரியரும்,

உண்ணிகர் தன்மை புறத்துத் தோன்ற

எண்வகை மெய்ப்பாட்டினியல்வது சுவையே.” (தண்டியலங்காரம்நூ – 21)

எனக் கூறியுள்ளமையைக் காணலாம்.  எனவே, இடைக்காலத்தில் மெய்ப்பாட்டைச் சுவை என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கம் இருந்தமை புலனாகின்றது.

“சுவையினை வடநூலார் ரஸம் என்பர். உவகை, வெகுளி, பெருமிதம், இளிவரல் ஆகிய நான்கு சுவைகளும் முதற்சுவைகள் என்பர் பரதர்.  இந்நான்கினின்றும் முறையே நகை, அழுகை, மருட்கை, அச்சம் என்பன தோன்றுகின்றன.”3 எனச் சரளா இராசகோபாலன்  கூறுகின்றார். “சுவைக்கு மெய்ப்பாடுகளே அடிப்படை. ஆகவே பாவனா சக்தியால் சுவை விளைவிப்பதே கவி லரூணமாகும்.”4 இதன் வழி ரசக் கோட்பாடு என்பது  மெய்ப்பாட்டியல்  கோட்பாட்டின்  வெளிப்பாடே எனலாம். மேலும், “‘சுவை என்பது காணப்படு பொருளால்  காண்போரகத்தின்  வருவதோர் விகாரம்’,  என்றும்  ‘மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று’  என்றும் இளம்பூரணர் விளம்புவர். இது நாடகநூல் அடிப்படையிலான விளக்கம்.”5  எனத் தமிழண்ணல்;  கூறுகின்றார்.

“மெய்ப்பாடு ஏதுவாக உள்ளத்து நிகழுஞ் சுவையே,  சுவையெனின்,  உள்ளமும்  மெய்ம் முழுதும்  பரந்த  ஓருணர்வேயாகலின்  அதன் கட்படுவதும்  மெய்ப்பாடேயாம்.  இஃதிவ்வாறருக்க   மெய்ப்பாடும் சுவையும் வேரென்பர்.  அலங்கார நூலார்க்கு வேண்டுவது  சுவையுணர்வாற் பிறந்த கூற்றே என்பதனையும், அவர் கூறும் சுவை என்னும் சொல் இரஸம் என்னும் வட சொல்லை  ஒருவற்றான்  மொழி பெயர்த்துக் கொண்டது ஆதலையும்,  நாடக நூலுட் கூறப்பெறும் மெய்யும் உணர்வும் ஒன்றாகிய சுவையும்  அலங்கார நூலுள்  கூறப்பெறும் சுவை கூற்றாகிய அதுவும்,  வேறுபடுதலையும் நுண்ணுணர்வால் பகுத்துணர மறந்தனர் போலும்,  சுவைக்கு மெய்ப்பாடு  ஏதுவாமோ?  ஆகாதோ? என்னும் தடை விடைகளை எழுப்புகிறது அவர் முடிவு. சுவை வேறு மெய்ப்பாடு வேறு எனின் உள்ளத்துச் சுவைக் குறிப்பு  நிகழ்ந்த பின்னரே மெய்ப்படுதல் வேண்டும்.  மெய்ப்பட்டபின்  சுவைக் குறிப்பு  நிகழுமெனின்  சுவைக்கப்படு பொருளை உணரும்  பொறியுணர்வே  ஆண்டு அந்தக் காரணமாகிய உள்ளத்தின் ஒரு கூறு ஆகலின், சுவை நிகழ்ந்த பின்னரே மெய்ப்பாடு நிகழ்தல் வேண்டுமென மறுக்கச் சுவையும் மெய்ப்பாடும் ஒருங்கு இயங்குவனவாய் ஒன்றென்பதாய் தோன்றுமென்பாரோடோ, அலங்காரத்துள் அவரவர் கிளவியும் கூற்றுமாகக் கூறவேண்டி வேறுபடுப்பாரோடோ நமக்கு மாறுகோளில்லை ‘நாடக நிலையுள் நிகழும் சுவை வேறு மெய்ப்பாடு வேறு’ என்பாரோடுதான் ஈண்டு மலைவென்க. சுவையென்பதே உள்ளத்தின் புடைபெயர்ச்சியாகிய மனத்துள் நிலையாக நிகழும் உண்மை நிகழ்ச்சியின் தோற்றம் என்று விளக்கிக் கொள்வது பொருந்தும். ஆசிரியர் தொல்காப்பியர் கருத்தும் இதுவே ஆதல் வேண்டும். ஆகவே, அலங்கார நூலார் நெறியே சென்று நாடக நிலையுள் வேண்டப்படும் சுவையை மெய்ப்பாட்டோடு வேறுபடுத்துதல் பெருந்தவறு என்பது பெறப்படும்.”6 என ந.பார்த்தசாரதி  கூறுகின்றார்.  இதன்வழி சுவை வேறு மெய்ப்பாடு வேறு அல்ல இரண்டும் ஒன்றே என்பர்.

“மெய்ப்பாட்டைச் சுவை எனக் குறிப்பது சிறப்பின்மையாகும்.”7 என கு.கோதண்டபாணி  கூறுகின்றார். “மெய்ப்பாடு என்பதும் சுவை என்பதும் ஒன்றே.”8 என ந.சுப்புரெட்டியார்   கூறுகின்றார்.  இவருடைய கருத்து ந.பார்த்தசாரதி அவர்களின் கருத்தோடு ஒத்துள்ளது.  “நடிப்பு என்ற சுவையின் சாறுகள் அடங்கிய இயல் தொல்காப்பிய  மெய்ப்பாட்டியல்  எனலாம்.”9  என ஆறு. அழகப்பன்  நாடகவியல் நோக்கில் கூறுகின்றார்.  இதில் மெய்ப்பாட்டை அவர் சுவை எனும் சொல்லால் சுட்டிச் செல்வதைக் காணலாம்.

“சுவையுணர்வு  அடிமனம்  சார்ந்தது. இவ்விளக்கம் உளவியல் அடிப்படை உடையதாகும். எல்லோர்க்கும்  அடிமன  உணர்வுகள் பொது என்றாலும்,  அவை கலையுணர்வுடன் கலைச்சூழல்களில் வெளிப்படும்போது மட்டுமே சுவைகள் அல்லது ரசங்கள் என்ற பெயருக்கு உரிமையுடையவை ஆகின்றன.”10 எனத் தமிழண்ணல்  கூறுகின்றார். இதில் மனவுணர்வுகள் அனைத்தும் மெய்ப்பாடுகளாகி விடுவதில்லை. அவை தகுந்த சூழலில் சரியான விதத்தில் வெளிப்படும்போது மட்டுமே அவைகள் மெய்ப்பாடுகளுக்குரிய தகுதியினைப் பெறுகின்றன என்பதை அறிய இயலுகின்றது.

 “‘மெய்ப்பாடு’  வேறு; ‘சுவை’  வேறு;  என்ற கருத்து தொல்காப்பியருக்கு  தெளிவுபட  இருந்துள்ளது. செய்யுளுறுப்புகளுள் ஒன்றே மெய்ப்பாடு என்பதும்  அதனைச்  சுவை என்று அவர் குறிப்பிடாததும் பற்றி தொல்காப்பியத்தின் வழி அறிய முடிகிறது. இவை இரண்டு சொற்களும் தொல்காப்பியத்தில் பல இடங்களில் பல்வேறு விதமாக ஆளப்பட்டுள்ளது.  பரதமுனிவரின்  சுவைக் கோட்பாட்டினின்றும் இது அடிப்படையான வேற்றுமை உடையது.”11  என இரா.சந்திரசேகரன்  கூறுகின்றார். இவருடைய கருத்து கு.கோதண்டபாணி அவர்களின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் அதே சமயம் மெய்ப்பாடும் இரசமும் ஒன்றே என வாதிடும் ந.பார்த்தசாரதி மற்றும் ந.சுப்புரெட்டியார் அவர்களின் கருத்திற்கு முரண்பட்டுள்ளது என்பதைக் காண முடிகின்றது.

“கலையுணர்வு எல்லோருக்கும் இயற்கையாகவே அமைந்திருப்பது போலவே  சுவையுணர்வும்  எல்லோர்க்கும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. சிலர் நுட்பமான சுவை வேறுபாடுகளையும் உணர வல்லவர்களாக இருத்தல் போல் ஒரு சிலர் கலைத்திறன் மிக்கவர்களாக உள்ளனர்.  நாவின் சுவையுணர்வு,  உண்டு பயிலும் பயிற்சியால் வளர்வதுபோல் கலைத்திறனும்  கலைப் பயிற்சியால் வளர்வது உண்டு. நுகரும் தகுதி எல்லோருக்கும் உண்டு. பயிற்சியும் திறனும் ஒரு சிலருக்கே உண்டு. எல்லோருக்கும் தகுதியிருந்தால் தான் எல்லோருக்கும் உணவின் சுவை உணர முடிகின்றது. எல்லோருக்கும் கலையுணர்வு ஓரளவு இருப்பதால் தான் இசை,  ஓவியம் போன்ற கலைகளை எல்லாரும் போற்ற முடிகிறது. ஒரு சிலருக்கே பயிற்சியும் திறனும் மிகுதியாக இருப்பதால்  மட்டுமே சுவையாக சமைக்க  வல்லவர்களாகவும்  இருக்கிறார்கள். இசை,  நாடகம் முதலிய கலைகளிலும் படைக்கும் கலைஞராகவும்  திறனாய்வாளராகவும்  விளங்குகின்றனர். உணவை மேற்போக்காக நுகர்வோர் பலராகவும் ஆராய்ந்து நுகர்வோர் சிலராகவும் படைத்து மகிழ்வோர் ஒரு சிலராகவும் இருத்தல் போலவே கலையிலும்  மேற்போக்காக  நுகர்வோரும் ஆழ்ந்து நுகர்வோரும் உள்ளனர். அவர்களுக்குள் கலைத்திறன் வேறுபாடு இருந்தபோதிலும், எல்லோருக்கும் கலையுணர்வு ஓரளவேனும் அமைந்திருத்தல் உண்மையாகும். அவை ஒரு சிறிதும் அமையப் பெறாதவர்கள் கலையை  மேற்போக்காகவும்  நுகர்தல் இயலாது. கலைக்கு உரிய உணர்வு நம் உள்ளத்தே ஓரளவு அமைந்திருந்தால் தான் சிறந்த கலைஞர்களின் படைப்புக்களையும் நாம் ஓரளவு நுகர முடிகின்றது. ஓவியம்,  நாடகம்,  இசை,  பாட்டு முதலிய எல்லா கலைகளுக்கும் இந்த உண்மை பொருந்துவதாகும்.”12  என  அட்சன்   கூறுகின்றார்.  இவருடைய கூற்றுப்படி மெய்ப்பாடுகள் என்பது இலக்கியங்களில் மட்டுமல்லாது நுண்கலைகளிலும் வெளிப்படும் தன்மை வாய்ந்தது என்பதை அறிய முடிகின்றது.

“இடைக்காலத்தில் மெய்ப்பாட்டைச் சுவை என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கம் இருந்தமை புலனாகிறது.”13  என மு.பொன்னுசாமி  கூறுகின்றார்.  இதன்வழி  மெய்ப்பாட்டிற்குச்  சுவை என்ற பெயர் தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்படவில்லை என்பதையும் பிற்காலத்தில் வந்த அறிஞர்களாலேயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய இயலுகிறது.

மெய்ப்பாட்டுக்கும் நாடகத்திற்குமான உறவு

அகப்பாடல்கள் அனைத்தும் நாடகப் பாங்குடன் புனையப்படுதல் வேண்டும் என்ற கருத்துடைய தொல்காப்பியர். அந்நாடகப் பாங்கிற்கு இன்றியமையாத ‘மெய்ப்பாடு’ பற்றி விரிவாக ‘மெய்ப்பாட்டியலில்’ எடுத்துரைத்துள்ளார். “மெய்ப்பாட்டினை நாடக வழக்கிற்கும் செய்யுள் வழக்கிற்கும் அங்கமாக் கொள்ளுதல் தமிழ் இலக்கண மரபாகும்.”14  என க.வெள்ளைவாரணர் கூறுகின்றார்.  இதன் வழி நாடகத்திலும் மெய்ப்பாடும் வெளிப்படும் என்பதை அறிய முடிகின்றது. 

“நாடகத்தினுள் காணும் சுவைக்கும் கவிதையினுள் காணும் சுவைக்கும் வேறுபாடு உண்டு. நாடகத்தில் மெய்ப்பாடுகளை நடிப்போர் காட்ட, உணர்வோர் எளிதில் அதன் வயப்படுவர். கவிதையில் சுவைப்போர் காட்சி  உணர்வின்றிக்  கருத்துணர்வாலேயே  சுவைகளை நுகர்வார்.  செஞ்சொல் புலமை மிக்க புலவர்கள் ஆற்றல் வாய்ந்த சொற்களின் மூலம் மெய்ப்பாடு உணர்வுகளைப் படிப்போரின் உள்ளத்தில் எழுப்புகின்றனர்.”15 என கு.மோகனராசு  கூறுகின்றார். இதன் வழி நாடகத்தில் காணும் மெய்ப்பாட்டுக்கும் செய்யுளில் காணும் மெய்ப்பாட்டுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை அறிய முடிகின்றது.

“நாடகங்களில்  32  எனக் கூறப்படும் (மெய்ப்பாட்டின்) எண்ணிக்கை தான் இலக்கியத்தில் எட்டாக அடங்குகிறது. ஏனெனில் நாடகத்தில் காணப்படுபொருள்,  பொறியுணர்வு,  மனநிகழ்ச்சி,  வெளிப்பாடு என்ற நான்கு  நிலையுண்டாதலின்  எண்ணான்கு  முப்பத்திரண்டாகும். இலக்கியத்தில் பாடுபொருள், படிப்பவர் மன உணர்வு என்ற இரண்டே உண்டாதலின்  எண்ணிரண்டு  பதினாறாகும்.  அவற்றுள்ளும் படிப்பவர் மனவுணர்ச்சியாகிய  சுவையே எஞ்சி நிற்பதாகலின் அதனை எட்டென அடக்குதலே இலக்கியத்திற்கு ஏற்றதாகும்.”16  எனத்  தமிழண்ணல்  கூறுகின்றார்.  இதன் வழி நாடகத்தில் காணும் மெய்ப்பாடுகளே  32  எனவும் இலக்கியத்தில் உணரக்கூடிய அல்லது விளங்கக் கூடிய மெய்ப்பாடுகள் 16  என்பதும் அறிய இயலுகிறது.

“நாடகத்தில் மட்டுமின்றி நாடகமே போன்று ஆடிப்பாடி இன்பம் நுகரும் வாழ்க்கையிலும் மெய்ப்பாடுகள் காணப்படுதலால், ‘நாடகத்தில் தோன்றிய’  என்றோ, ‘கூத்துள் தோன்றிய’  என்றோ கூறாமல்  ‘பண்ணைத் தோன்றிய’ (தொ.மெ.நூ.1)  என்றார் தொல்காப்பியர்.  கூத்துள்  தோன்றிதேயாயினும்  இங்குப் பேசப்படுவது செய்யுளுள் – இலக்கியத்துள் அமையும் மெய்ப்பாடு பற்றியதே என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.”17   எனத்  தமிழண்ணல்  கூறுகின்றார்.  இதன் வழி நாடகத்தில் மட்டுமல்லாது அனைத்து நுண்கலைகளிலும் மெய்ப்பாடு வெளிப்படும். ஆனால் சிறப்பு கருதி இங்கே தொல்காப்பியர்  பேசியிருக்க  கூடியது செய்யுள் வழக்கே என்பதை அறிய இயலுகிறது.

“நாடகம்,  நாட்டியம் ஆகிய  இரண்டிற்கும் உயிர் நடிப்பேயாகும்,  அந்த   மெய்ப்பாட்டினைத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் நன்கு விரித்துரைக்கின்றது.தொல்காப்பியர்  குறிப்பிடும் எண்வகை மெய்ப்பாடும் (தொ.மெ.247) அவற்றிற்கு மேலாக விரித்துப் பேசும் சில மெய்ப்பாடும் (தொ.மெ.256)  நடிப்பின் நுட்பங்களை நன்கு விளக்கும் உரைகற்களாகும்.”18  எனவும்  “ஒரு நடிகனுக்கும்,  ஒரு நாடக ஆசிரியனுக்கும்  மெய்ப்பாட்டியல்  நாடகக் கலையைக்  கற்றுத்தரும்  “வேதம்”  எனலாம்.”19  எனவும்  “நாடகத்தின் உணர்ச்சியைத் தூண்டிக் கருத்துக்களை மனதில் ஆழமாகப் பதிய வைத்து இன்பம் தருவதன் பொருட்டுக் கையாளப்படும் உத்திகள் பல உண்டு. அவற்றுள்  ‘சுவைகள்’ என்பதும் ஒன்று. இவை நாடகம் காண்பார்கள்  வழிப்புகுந்து  கருத்தைக் கவர்ந்து களிப்பூட்ட வல்லவை. உணவுப் பண்டங்கட்கு உப்பு சுவையூட்டுவதைப்போல நாடகத்திற்கு சுவையூட்டுவன இவை.”20 என ஆறு. அழகப்பன்  கூறுகின்றார்.

“மெய்ப்பாடு என்பது இன்றைய பொது வாழ்வில்,  நாட்டிய சாத்திரம் கூறும்  உணர்ச்சிக்குறிப்பு (Bhava), சுவை (Rasa), ஆகியவற்றுடன் இயைபுபட்ட ‘நடிப்புடன்’ (Acting),  தொடர்புடையதாகவே தமிழறிஞர்களால் கருதப்பட்டு வருகிறது.”21  எனவும்  “செய்யுளுடன்  தொடர்புடையதாகக்  குறிக்கப்பெறும் தொல்காப்பிய  மெய்ப்பாட்டியல், ‘மெய்யின்கண் படுகின்ற உணர்ச்சிக் குறிப்புகள்’ பற்றிப் பேசுகின்றதால் தமிழில் நடிப்பு பற்றிய அறிவியல் பூர்வ முதல் பதிவாய் அது அமைகின்றது. தமிழின் நடிப்புக் கோட்பாட்டிற்கான ஆகிருதிகளை அகம், புறம் அமைப்பினூடே, தொல்காப்பிய மெய்ப்பாட்டிலிருந்தே தொடங்க முடியும்.”22 எனவும் இராமசுவாமி கூறுகின்றார்.

மெய்ப்பாட்டுக்கும் உவமைக்குமான உறவு

உவமை கூறுங்கால் மிகப் பெரியவற்றையும் மிகச் சிறியவற்றையும் உவமை கூறுகின்றோம். அவை உள்ளத்தில் தோன்றும் மெய்ப்பாட்டின் காரணமாகப் பொருந்து வதேயன்றி உண்மையில் பொருந்தாது.  ‘வானத்தைப் போன்ற குன்று; அவ்வானத்திலுள்ள விண்மீன்களைப் போன்ற சுனைகள்’ என்றால் எவ்வாறு பொருந்தும்? வானம் எத்துணை பரப்புடையது? விண்மீன்கள் எண்ணிக்கையில் அடங்குமோ? ஒரு மனவுணர்வில் அவை கூறத்தக்கன. அங்ஙனம் கூறினால்தான் மெய்ப்பாடு தோன்றும். தொல்காப்பியர் உவமையியலில் உவமையுடன் மெய்ப்பாட்டை இணைத்து உவமையால் மெய்ப்பாடு விளைவதைச் சுட்டியுள்ளார். இதனை,

“மெய்ப்பாடு உவமை பற்றித் தொல்காப்பியத்தில் காணப்பெறினும்  அணியிலக்கணத்தைப் பற்றிய தனி நூல் பழங்காலத்தில் தமிழில் இல்லை,  வடமொழியிலுங் கூட அலங்காரத்தை வரையறுக்கும் இலக்கணம் பிற்காலத்தே தான் தோன்றியதென்று ஆய்வாளர்கள் கூறுவர்.”23 என வடநூலார் கூறுகின்றனர். ஆனால் இக்கருத்து மாறுகொள தக்கதாக உள்ளது. காரணம் மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் –என்ப எனும் சொல்லாடலை நூ-1, 3, 4, 19 ஆகிய விடங்களிலும்; மொழிப எனும் சொல்லாடலை நூ.13, 14, 15, 16, 17, 18 ஆகிய நூற்பாக்களிலும்; என்மனார் புலவர் என்ற சொல்லாடலை நூ.26 – ல்; பயன்படுத்தியுள்ளார். இதன் பொருள் என்னவென்றால் என்ப – என்றார் – என்று கூறுவர்; மொழிப என்றாலும் என்றார் – என்று கூறுவர்; என்மனார் புலவர் என்றால் என்று கூறுவர் புலவர் என்பதாகும். இதன்வழி வடநூலார் அணியிலக்கணமே மெய்ப்பாட்டுக்கு அடிப்படை என்று கொளின். அந்த அணியிலக்கண நூல் தமிழில் கட்டாயம் இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகின்றது.

“மெய்ப்பாடு வகைதொகை,  நிலைக்களன்,  களவு, கற்பிற்குரிய மெய்ப்பாடுகள், பொதுவான மெய்ப்பாடுகள், மெய்ப்பாட்டியலில் கூறும் தொல்காப்பியர் உவமவியலுள்  உவமை,  மெய்ப்பாடு என்ற இரண்டிற்கும் இடையேயான உறவைப் பற்றிப் பேசுகிறார். ஒன்றை மிகுத்துக் கூறவும் குறைந்துக் கூறவும் உவமை கையாளப்படும். அவ்வாறு ஒப்புமை படுத்திக் கூறுகையில் மெய்ப்பாடு புலப்படும்.”24 என்று கூறுகின்றார் ஜெ.சியாமளா. அதன்வழி மெய்ப்பாட்டுக்கும் உவமைக்கும் இடையேயுள்ள ஒற்றுமையை அறிய இயலுகிறது.

பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்                   

வழிமருங்கு அறியத் தோன்றும் என்ப” (தொல்.உவம.19)

ஒன்றனைப் பெருகவும் சிறுகவும் கூறுதல் மெய்ப்பாட்டின் வழியாகப் புலப்படத் தோன்றும். (இளம், உரை) பெருமை பற்றியும் சிறுமை பற்றியும் ஒப்புமை கொள்ளப்படும் உவமை மெய்ப்பாடு எட்டன் வழித் தோன்றும்.  (பேரா. உரை) “மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்க உவமை உருவகம் என்பன பெரிதும் உதவுவனவாம். தொல்காப்பியர் வினை,  பயன்,  மெய்,  உரு (நிறம்) என உவமை தோன்றக் காரணமான பொதுப் பண்புகளைச்  சுட்டிச்  செல்கிறார்.  அங்ஙனமாயின் பயனையோ,  வினையையோ  கண்டு மட்டும் அறிதல் இயலாது கேட்டும் மோந்தும் சுவைத்தும் உற்றும் உணர வேண்டிய வினைகள் (செயல்கள்) பயன்கள் பலவுள.”25 என்று கூறுகின்றார் தமிழண்ணல். இதன்வழி மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்க உவமையும் உருவகமும் தம்முள் இயைந்து செயல்படுகின்றன என்பதை அறிய இயலுகின்றது. “இங்குப் பெருமை, சிறுமை என்பன பொருள்களின் பெருக்கம் சுருக்கங்களையும் இன்ப துன்பக் கூறுபாடுகளின் பெருக்கம் சுருக்கங்களையும் குறித்து நிற்பன என்பதும் பெருமை சிறுமை பற்றிய இவ்வுவமைகள் மெய்ப்பாட்டோடு பொருந்திவராத நிலையில் இவற்றால் பயனில்லை என்பதும் இளம்பூரணர் கருத்தாகும்”26 என்று க.வெள்ளைவாரணர்  கூறுகின்றார்.

மெய்ப்பாட்டுக்கும் நோக்குக்குமான உறவு

“‘நோக்கு’ என்ற இலக்கிய கொள்கை மெய்ப்பாட்டுடன் தொடர்புடையது என்பது பேராசிரியர் கருத்து. “மாத்திரை முதல் அடிபா முடியும் வரை  அனைத்துறுப்புக்களையும் முழுமை நோக்கில் பயன் கோடல் நோக்காகும்” அவ்வாறு பயன்  கொள்ளுமாறமைந்த  செய்யுட் திறனே ஆகுபெயராய் ‘நோக்கு’ எனப்படுகிறது. நோக்கமைந்த செய்யுளிலேதான் மெய்ப்பாடு தோன்றும். அதனால் தான், ‘நோக்குறுப்பினால்  உணர்ந்த  பொருட்பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடு’ எனப் பேராசிரியர் தம் உரை விளக்கத்தில் கூறியுள்ளார்.”27 என்று சந்திரசேகரன் கூறுகின்றார். இதன் வழி நோக்கும் மெய்ப்பாட்டுடன்  தொடர்புடையதே என்பதை அறிய இயலுகின்றது.

“நோக்கு உறுப்பினால் உணர்ந்த  பொருட்பிழம்பினைக்  காட்டுவது மெய்ப்பாடு. (ஒவ்வொரு பாடலையும் மறித்து நோக்குவதால், அதன் அடைமொழி முதல்  தொடர்நிலை வரை ஒவ்வோர் உறுப்பும் நன்கு உணரப்படுகின்றன. அதனால் பாடலின் கருத்து,  பொருட் பிழம்பாகப் படிப்பவர் மனத்தில் தோன்றுகின்றது).”28 எனத் தமிழண்ணல்  கூறுகின்றார்.

மெய்ப்பாட்டுக்கும் பொருட்பாட்டிற்குமான உறவு

“மெய்ப்பாடு பொருட்பாடு என்பன ஒரு பொருள் தரும் தொடர்களாய் ஆளப்படினும் இவற்றிடையே நுண்ணிய வேறுபாடும் உளது. பொருள் அழுத்தமாய் உணர்வை வெளிப்படுத்தும் பாங்கில், தெளிவாக புலனாகுமாறு செய்வதே மெய்ப்பாடாகும். வெறுமனே பொருளறிதல் எல்லாம் மெய்ப்பாடாகிவிடாது. மெய்யில் தோன்றுதல்,  மெய்த்தோன்றுதல், அதிலுள்ள மெய்ம்மையே தோன்றுதல்,  மெய்யாக,  மெய்வடிவாகத்  தோன்றுதல்,  கண்ணுக்கு  மெய்யாகித்  தோன்றுதல் என்ற பொருள் எல்லாம் தொல்காப்பியர் காலத்தேயே நன்கு உணரப்பட்ட பொருள்களாகும்.  பிற்காலத்தேதான்  அவைகளெல்லாம் மறக்கப்பட்டுப் போயின. அதன் இடத்தையும் சுவை பிடித்துக்கொண்டது. இரசக் கோட்பாட்டுச் செல்வாக்கு ஏற்பட ஏற்பட முன்னைய மெய்ப்பாட்டுக் கோட்பாட்டுப் பொருள் அலகுகள் யாவும் ஆளப்படாமல் அறியப்படாமல் போயின.”29 என்று தமிழண்ணல் கூறுகின்றார். இதன்வழி மெய்ப்பாட்டுக்கும் –  பொருட்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை  அறிய இயலுகின்றது.

மெய்ப்பாட்டிற்கும்  பொய்ப்பாட்டிற்க்குமான உறவு

“தொல்காப்பியர் உலகியலில், வாழ்வில் ஆடிப்பாடி மகிழும்போது ஏற்படும் இன்ப அனுபவத்திலிருந்து நாடகமும் இலக்கியமும் தோன்றின எனக் கொள்கிறார். இலக்கியத்தைக்  கேட்டும் படித்தும் பெறும் மெய்ப்பாட்டையே விளக்குகிறார்.  நாடக வழக்கினதாகிய  அக இலக்கியம் பற்றி மிக விரித்துரைக்கின்றாரே அல்லாமல் நாடகம் பற்றித் தொடர்புப்படுத்தி எதுவும் கூறவில்லை. பாடலைப் படிக்கும்போது மனத்தில் தோன்றும் ‘பொருட்தோற்றம்’ ‘பொருட்பிழம்பு’, ‘கண்டாங்கு வெளிப்படுத்தும் பொருள்’  மெய்ப்பாடு எனப்படுகிறது. அம்மெய்ப்பாடு நகை உணர்வைத் தோற்றுவிக்கும் அல்லது  நகையுருவை விளைவிக்கும் என்பதே அவர் கருத்து. முடவன் செல்லும் செலவும் குழந்தை பேசும் மழலையும் மனத்தில் ‘உரு’வாகின்றன. அவற்றை அவை தோற்றுவிக்கும்  அவ்வுருவத்தோற்றம்  உணர்வேயாதலின்  ‘நகை’  என்ற ஓர் எல்லை பரப்பினுள்  அடக்குகிறார். எனவே அஃது நகைச்சுவை அன்று;  நகை மெய்ப்பாடு ஆகும். உடம்பின்கண் இயல்பாக எழுவன மெய்ப்பாடுகள் எனவும் போலியான நடிப்பால் எழும்பும் புறஉடற்குறிகள் பொய்ப்பாடுகள்.”30 எனவும்கு.கோதண்டபாணிப்பிள்ளை கூறுவார்.  மேலும் அவர் மெய்ம்மை வெளிப்பாடு மெய்ப்பாடு எனவும் விளக்குவார்  வடமொழியாளரின் சுவைக்கொள்கை சிறப்புடையதன்று என்பது அவர் கருத்தாகும். 

சுவை – குறிப்பு – விறல் இடையேயான தொடர்பு

இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு என்பன அறுசுவைகள். இவை நாவாகிய பொறி வழியாக ஒருவர்  உள்ளத்தே  தோன்றும் உணர்ச்சிகள். இவ்வுணர்ச்சிகளைத்  தரும் சுவைப் பொருட்கள் முறையே கரும்பு,  வேம்பு,  புளி,  உப்பு, கடுக்காய்,  மிளகு போன்றவை. கரும்பினைச் சுவைக்கும் போது விருப்பமும், வேம்பினைச் சுவைக்கும் போது வெறுப்பும் தோன்றுவதை உள்ளக் குறிப்புகள் எனலாம். இத்தகைய உள்ளக் குறிப்புகளைக் கொண்டு இச்சுவையுணர்ச்சிகள்  வெளிப்படுங்கால் முகமலர்ச்சி,  முகச்சுளிப்பு முதலாய மெய்க்குறிகளை “விறல்” அல்லது “சத்துவம்” என்பர்

“சுவையுணர்ச்சியே  விருப்பு,  வெறுப்பு  முதலியவைகளைத் தந்து கண்ணீரரும்பல், மெய்ம்மயிர்  சிலிர்த்தல் முதலிய  மெய்க்குறிகளுடன்  வெளிப்படுவதாதலின் சுவையெனினும்,  மெய்ப்பாடு எனினும் ஒக்கும்”31 என்பர் மேலும், “விறல் பத்து வகைப்படும். அவை  மெய்ம்மயிர்  சிலிர்த்தல்,  கண்ணீர்  வார்தல்,  நடுக்கமெடுத்தல், வியர்த்தல், தேற்றம்,  களித்தல்,  விழித்தல்,  வெதும்பல்,  சாக்காடு,  குரற்சிதைவு என்பன. அவ்விறல்  சுவைகளிலே மனக்குறிப்பு உளதாய வழி உடம்பிலே தோற்றும்;  உடம்பினும் முகத்துமிகத் தோற்றும்; முகத்தின் மிகத்தோற்றும் கண்ணில்; கண்ணின் மிகத் தோற்றும் கண்ணின் கடையகத்து. இவை எட்டென்பது வடநூலார் மதம்”32 என்பர். இங்ஙனம் இலக்கணநூலார் கூறும் சுவைக்கப்படும் பொருள்,  சுவை,  குறிப்பு,  விறல் என்பனவற்றையே உளவியலாளர் முறையே பொருள் (Object), புலன்காட்சி (Perception), பொது உணர்வு அனுபவம், உடல்நிலை மாறுபாடுகள் (Organic States) என்பர்

 “சுவையுணர்வு என்பது அவ்வெட்டுவகைச் சுவைகளையும் தோன்றச் செய்கிற பொருள்களைக் கண்டபோது உருவாகின்ற பொறியுணர்வுகள். குறிப்பு என்பது,  பொறியுணர்வினால் உண்டாகிற மன உணர்வு. விறல் என்பது சத்துவம் என்றும் பெயர் பெறும். அது, மன உணர்வினால் ஏற்படுகின்ற மெய்ப்பாடு. அதாவது, உடம்பிலே தோன்றுகிற மயிர்க்கூச்சு,  நடுக்கம் முதலியன.”33  என மயிலை சீனி.  வெங்கடசாமி கூறியுள்ளார். சுவை-குறிப்பு–விறல்  முதலியவற்றின்  வேறுபாட்டைக் கூறுவார். மேலும், நாடகவியல் ஆசிரியர்  ‘விறல்’  என்பதை விளக்குமிடத்து,  “இச்சையின்றித் தாமேயெழுந்து,  புறத்திற்றோன்றுஞ்  சத்துவமே விறல்”34  எனக் குறிக்கிறார்.

மெய்ப்பாடு மகிழ் அனுபவமாதல்

“செய்யுளின் உறுப்பாக விளங்கும் ‘மெய்ப்பாடு’ (உண்மை அனுபவ நிலை) என்பது, செய்யுள் படைப்பவர் – செய்யுள் வாசிப்பவர் என்னும் இரண்டு தளத்திலும் உருவாக்கக் கூடியது என்பதுதானே சரியாயிருக்க முடியும்? தசரூபகத்தின் உரைகாரர்கள் விளக்குவது போல், ‘சுவை’க்குரிய  இந்த  ‘மகிழ் அனுபவம்’  (Relish)  செய்யுளை வாசிப்பவருக்குக் கிடைக்கிற அதே நேரம், அந்த மகிழ் அனுபவத் தன்மையை உருவாக்கித் தருவது அந்தச் செய்யுள் என்கிற படைப்புதான் என்பதும் உண்மை.”35 என V.K.Chari,   தமது Sanskrit Criticism, எனும் நூலில் கூறியுள்ளார். இதன்வழி மெய்ப்பாடு (சுவை) என்பது படைப்பவர் – வாசிப்பவர் ஆகிய இரு தளங்களிலும் செயல்படக் கூடியது என்பதனை அறிய இயலுகின்றது.

முடிவுரை

ரசக் கோட்பாட்டை உலகிற்கு உணர்த்திய பரதர் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு, மெய்ப்பாட்டிற்குச்  சுவை என்ற பெயர் தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்படவில்லை என்பதையும் பிற்காலத்தில் வந்த அறிஞர்களாலேயே இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அறிய இயலுகிறது. நாடகத்தில் காணும் மெய்ப்பாடுகளே  32  எனவும் இலக்கியத்தில் உணரக்கூடிய அல்லது விளங்கக் கூடிய மெய்ப்பாடுகள் 16  என்பதும் அறிய இயலுகிறது. பெருமை, சிறுமை என்பன பொருள்களின் பெருக்கம் சுருக்கங்களையும் இன்ப துன்பக் கூறுபாடுகளின் பெருக்கம் சுருக்கங்களையும் குறித்து நிற்பன என்பதும் பெருமை சிறுமை பற்றிய இவ்வுவமைகள் மெய்ப்பாட்டோடு பொருந்திவராத நிலையில் இவற்றால் பயனில்லை என்பதும் இளம்பூரணர் கருத்தாகும். ‘நோக்கு’ என்ற இலக்கிய கொள்கை மெய்ப்பாட்டுடன் தொடர்புடையது என்பது பேராசிரியர் கருத்து. மெய்ப்பாட்டுக்கும் –  பொருட்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை  அறிய இயலுகின்றது. இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, உறைப்பு என்பன அறுசுவைகள். இவை நாவாகிய பொறி வழியாக ஒருவர்  உள்ளத்தே  தோன்றும் உணர்ச்சிகள். இவ்வுணர்ச்சிகளைத்  தரும் சுவைப் பொருட்கள் முறையே கரும்பு,  வேம்பு,  புளி,  உப்பு, கடுக்காய்,  மிளகு போன்றவை. கரும்பினைச் சுவைக்கும் போது விருப்பமும், வேம்பினைச் சுவைக்கும் போது வெறுப்பும் தோன்றுவதை உள்ளக் குறிப்புகள் எனலாம். இத்தகைய உள்ளக் குறிப்புகளைக் கொண்டு இச்சுவையுணர்ச்சிகள்  வெளிப்படுங்கால் முகமலர்ச்சி,  முகச்சுளிப்பு முதலாய மெய்க்குறிகளை “விறல்” அல்லது “சத்துவம்” என்பர். மெய்ப்பாடு (சுவை) என்பது படைப்பவர் – வாசிப்பவர் ஆகிய இரு தளங்களிலும் செயல்படக் கூடியது. எனும் முடிவுகள் இக்கட்டுரையில் கிடைத்துள்ளன. இதன்வழி மெய்ப்பாடானது ரசம், சுவை, உவமை, நோக்கு, பொருட்பாடு, விறல், சத்துவம் ஆகியவற்றோடு கொண்டுள்ள உறவை அறியலாம்.

அடிக்குறிப்புகள்

  1. சாமிநாதையர்.உ.வே(பதி),, சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை, ப – 83
  2. கோதண்டபாணி. தி, கம்பரும் மெய்ப்பாட்டியலும், பக். – 16, 17
  3. முனைவர் சரளா இராசகோபாலன், காமத்துப்பாலில் வெகுளிச்சுவை, ப.99.
  4. திருமணம் செல்வக்கேசவராய முதலியார்,‘வசனம்’,தமிழ் வியாசகங்கள்,ப.91.
  5. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப.13.
  6. நா. பார்த்தசாரதி, கவிதைகலை, பக். 101-102.
  7. கு. கோதண்டபாணி பிள்ளை, கம்பரும் மெய்ப்பாட்டியலும், பக். 16-17.
  8. ந.சுப்புரெட்டியார், தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை, ப.274.
  9. முனைவர் ஆறு.அழகப்பன், தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும், ப.56.
  10. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப.266.
  11. டாக்டர் இரா.சந்திரசேகரன், தமிழ்ச்சிற்றிலக்கியங்கள், பக்.70 -71.
  12. W.H. Hudson, An Introduction to the Study of Literature, p.126
  13. டாக்டர் மு.பொன்னுசாமி,சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.23.
  14. க. வெள்ளைவாரணன், தொல்காப்பியச் சிந்தனைகள்,ப.242.
  15. கு.மோகனராசு (பதி), திருக்குறள் காமத்துப்பாலில் எண்வகைச் சுவைகள், ப.100.
  16. தமிழண்ணல், சங்க இலக்கிய ஒப்பீடு, ப.86.
  17. தமிழண்ணல், தொல்காப்பிய இலக்கிய கொள்கைகள், ப.173.
  18. முனைவர் ஆறு.அழகப்பன், தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும், ப.56.
  19. மேலது, ப.65.
  20. மேலது, ப.80.
  21. மு.இராமசுவாமி, நாடகம் பேச இன்னுமே இருக்கிறது…., ப.84.
  22. மு.இராமசுவாமி, தமிழ் நாடகம் நேற்று இன்று நாளை, ப.12.
  23. History of Sanskrit Poetried, Vol-I P.17.
  24. ஜெ.சியாமளா, சங்ககால அரசு உருவாக்கம், ப.57.
  25. தமிழண்ணல், தொல்காப்பிய இலக்கிய கொள்கைகள், ப.190.
  26. க.வெள்ளைவாரணன் (பதி.);, தொல்காப்பியம் – உவமையியல் ப.96.
  27. டாக்டர் இரா.சந்திரசேகரன், தமிழ்ச்சிற்றிலக்கியங்கள், ப.71.
  28. தமிழண்ணல், தொல்காப்பிய இலக்கிய கொள்கைகள், ப.167.
  29. மேலது, ப.194.
  30. கு. கோதண்டபாணிப் பிள்ளை, கம்பரும், மெய்ப்பாட்டியலும், பக்.7-15.
  31. S.V.Subramanian, Tolkappiam In English Content And Cultural Translation, P.502.
  32. உ.வே.சா.ஐயா; (ப.ஆ.), சிலப்பதிகாரம், ப.84.
  33. மயிலை சீனி வெங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், ப.132.
  34. வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரிகள், நாடகவியல், ப.220.
  35. V.K.Chari, Sanskrit Criticism,p.23.

mail id: periyaswamydeva@gmail.com

Series Navigation3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்இழப்பு !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *