ஆட்கொல்லி வேட்டை ஆடுது

This entry is part 1 of 13 in the series 3 மே 2020

O

image.png

சி. ஜெயபாரதன், கனடா

ஊமை  உலகப் போரிலே

ஆமைபோல் புகுந்து

ஆட்கொல்லி,

வேட்டை ஆடுது இன்னும்

வீட்டில் ஒளிந்து,

நாட்டை

நரக மாக்கிக் கொண்டு !

சொர்க்க பூமி

மயானக் காடுபோல்

காணுது !

பெட்டி பெட்டி யாகப் புதைக்க

செத்த உடல்கள்  

மீளாத

உறக்கத்தில் கிடந்தன !

உறவுகள்

உற்றார் இல்லை !

இரங்கல் கூறி அடக்கம் செய்ய

நெருங்க முடியாத

கரங்கள், கால்கள், கண்கள் !

முதியோர்  காப்பு இல்லம் அனைத்தும்

மரண மாளிகை ஆகும் !

துணிவுடன்

பணிபுரிய பணி மாதர் இல்லை !

உன்னுயிரைக் காப்பதா ?

இப்போது

என்னுயிரைக் காப்பதா ? 

இன்னுயிரைக் காக்க

என் உயிரை  இழப்பதா ?

ஊமைப் போரில் முன்னின்று

உயிர் கொடுத்தாலும்

உயிர் காக்க முடியாது போன

பிணிமயம் !

பேரிடர் !  பெருந்துயர் !  

மானிடர்

உற்பத்தி செய்த

மாபெரும் ஆட்கொல்லி !

வேருடன் அழிக்க

ஓர் ஊசி மருந்து தேவை !

ஆராய்ச்சி செய் ! ஆராய்ச்சி செய் !

ஆட்கொல்லி

மானிட நாட்கொல்லி !

யாதும்  ஊராச்சு ! யாவரும் உறவாச்சு !

வேதங்கள் ஒன்றாச்சு !

மதங்கள் இணைஞ்சாச்சு !

இனங்கள் ஒருங்காச்சு !

ஊரடங்கு, உலகடங்குச் சட்டம்

மீற வில்லை யாரும் !

நாடடங்கு,

வீடடங்கு விதிகள்  பற்பல

புவி எங்கும் நிலவும் !

வானூர்திகள் பற்பல இறங்கி

வையத்தில் தூங்கின !

இரயில் வண்டிகள் நின்றன !

சுற்றுலாக் கப்பல்கள்

முற்றும் முடங்கிப் போயின.

பூகோளச் சுழற்சி தணிந்து போனது !  

நீண்டு நெளியும்

நெடிய குகைப் பாதைக்கு

முடிவில்,

மானிடப் பிறவி காணும்

கீழ்வானச்  

சிவப்பொளி தெரியும்

விடிவில்லையா !

+++++++++++++++++

Series Navigationடகால்டி – சில கேள்விகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *