டகால்டி – சில கேள்விகள்

author
0 minutes, 16 seconds Read
This entry is part 2 of 13 in the series 3 மே 2020

அருணா சுப்ரமணியன்

எஸ்.பி. செளதரி தயாரிப்பில் விஜய் ஆனந்த் எழுதி இயக்கி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “டகால்ட்டி” என்னும் ஆக்ஷன் காமெடி திரைப்படம்  குறித்தான எனது கருத்துக்களை இங்கு பதிவிடுகிறேன். 

தமிழ் சினிமாவில் வழமையாகிப்போன திரைக்கதை. மும்பையில் வசிக்கும் ஏகத்துக்கும் சொத்து சேர்த்து வைத்துள்ள பணக்காரன் சாம்ராட்டுக்கு ஒரு வினோத பழக்கம். தன்  மனதில் தோன்றும் பெண்ணுருவத்தை வரைந்து அதே சாயலில் உள்ள பெண்ணை எத்தனை செலவானாலும் தேடிக்  கண்டுபிடித்து தன்னிடம் சேர்ப்பிக்க கட்டளையிடுவான். அதனை சிரமேற்கொண்டு செய்து தர நாடெங்கிலும் பல கும்பல் காத்திருக்கின்றன . இவ்வாறு சாம்ராட் வரைந்த ஒரு பொண்ணை தேடும் ஒரு கும்பலின் தலைவனிடம் வேறொரு விவகாரத்தில்  மாட்டிக்கொள்கிறான் பிறரை ஏமாற்றிப்பிழைக்கும் “டகால்ட்டி” குரு ஆகிய கதாநாயகன். தன் உயிரை காத்துக்கொள்ளவும்  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பணம் பண்ணவும் அவர்கள் தேடும் பெண் தனக்கு தெரிந்தவள் என்றும் அவளை அவர்களிடம் ஒப்படைக்கிறேன் என்றும் பேரம் பேசுகிறான். பின்னர் அவளைத் தேடி கண்டுபிடித்து சாம்ராட் உதவியாளரிடம் ஒப்படைத்து பணத்தையும் பெற்றுவிடுகிறான். பணத்தை பெற்றவன் மனம் திருந்தி ஒப்படைத்த பெண்ணை அவர்களிடம் இருந்து மீட்டு வருகிறான்.  இது தான் கதை. 

ஆக்ஷன் காமெடி என்ற வகையில் இந்த படத்தை ரசித்து சிரிக்க ஒன்றுமே இல்லை. மாறாக சலிப்பூட்டும் காட்சிகளின் கோர்வையாகத் தான் விளங்குகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை எவ்வளவு மலிந்து போய் உள்ளது என்பதற்கு இன்னும் ஓர் எடுத்துக்காட்டு. இப்படி படங்களை உருவாக்குபவர்கள் மூளை என்ற ஒன்றை கழட்டி வைத்துவிடுவார்கள் போலும். இந்த படத்தை ரசிக்க வேண்டுமெனில் நமக்கும் அது  மருந்துக்கும் இருக்கக்கூடாது. இப்படத்திற்கு நேரமும் பணமும்  செலவு செய்வதைக் காட்டிலும் சும்மா இருத்தல் கூட நல்லது தான்.

எனினும், இந்த படத்தின் காட்சிகள் மூலம் என் மனதில் எழுந்த கேள்விகளை தொகுத்து பதிவு செய்ய விழைகிறேன்.

1.  தேடப்படும் பெண்ணாகிய கதாநாயகி “மல்லி” சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்னும் கனவில் இருப்பவள். இவள்தன் தங்கை மற்றும் சிலருடன் சேர்ந்து மார்க்கெட்டில் handycam கொண்டு வீடியோ எடுக்கிறாள். இதனால் இடைஞ்சல் பெற்றவர்கள் அவள் பெற்றோரிடம் அவள் மீது குற்றச்சாட்டு  வைக்கின்றனர். மல்லியை கூப்பிட்டு கண்டிக்கும் அப்பா கூறுவது, “நீ ஆசைப்பட்டவாறு எல்லாம் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தேன். இனி காலம் தாழ்த்த முடியாது தரகரிடம் சென்று கல்யாணத்துக்கான வேலைகளை ஆர்மபிக்கிறேன்.” இதற்கு அவர் அம்மாவும், “நீங்கள் தான் இவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கிறீர்கள்” என்று சாடுகிறார்.

எனது கேள்வி, பெற்ற பிள்ளைக்கு தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை தருவது போல்தானே கல்வி அறிவும். அது ஏன் பெண்களை படிக்க வைப்பதை மட்டும் அவளுக்கு செய்யும் பெரும் தொண்டு என்பது போல் தொடர்ந்து காட்டப்படுகிறது.   இதே இடத்தில் குற்றம் சாட்டப்பட்டது  தன் மகனாக இருக்கும் பட்சத்தில் இவர்களது பதில் என்னவாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.  தகுந்த நேரம் வந்தால் சந்தையில் விற்றுவிட  தீனிபோட்டு வளர்க்கும் ஆடு மாடுகள் போன்று  பெண் என்றால் கட்டிக்கொடுக்கவும் பிள்ளை பெறவும் மட்டுமே வளர்க்கப்படுவதாகவே காட்சிகள் அமைக்கப்படுவது ஏன் ?

2. திரையுலகில் டைரக்டர் ஆகவேண்டும் என்னும் ஆசையில் இருப்பவள் மல்லி. பெண்களின் பங்கு மிக குறைவாக இருக்கும் ஒரு துறையில் நுழைய துடிக்கும் ஆவல் கொண்டவள் அதற்கான தயாரிப்புகளில் எவ்வளவு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அந்த துறை சார்ந்து மற்றும் சமூகம் சார்ந்து எவ்வளவு யோசித்திருக்க வேண்டும். இவ்வகையான தயாரிப்புகளில் இறங்குபவள் மனித மனங்களை அறிந்தவளாகவும் இருப்பாள். இவளுக்கு இந்த சமூகம் குறித்து அதன் மனிதர்கள் குறித்து அவர்களை வைத்து கதை எழுத ஒரு குறைந்தபட்ச தெளிவும் அறிவும் இருக்கும். 

ஆனால், வீட்டில் திருமணம் செய்ய முடிவு செய்தவுடன் தன் லட்சியத்தை நோக்கி பயணிக்க வீட்டை விட்டு கிளம்பும் மல்லி, பிறரை ஏமாற்றி பிழைக்கும் குருவை நம்பி அவனுடன் திருச்செந்தூரில் இருந்து மும்பை வரை செல்வதாகவும், அவன் கூறும் பொய்களை எல்லாம் அப்பட்டமாக நம்புபவள் ஆகவும் காட்டப்படுகிறாள்.  இன்னும் இந்த திரைப்படத்தின் அனைத்து காட்சிகளிலும் இவளை ஒரு அப்பாவியாகவும் ஒரு சிறுமிக்கு இருக்கும் அறிவு கூட இல்லாதவளாக சித்தரிக்கப்படுகிறாள். ஒரு இக்கட்டான சூழலில் மாட்டியிருக்கும் பெண் தன்னை காத்துக்கொள்ள எந்த முயற்சிகளும் செய்யாதவளாய் இருப்பதாகவும், தன்னை மோசமான ஒரு இடத்தில் பணத்திற்காக ஏமாற்றி விட்டு சென்றவன் மனம் திருந்தி தன்னை மீட்டுச்செல்ல வந்த காரணத்தாலேயே அவன் மீது எந்த வித அற சீற்றமும்  கொள்ளாமல் அவன் மீது காதல்வயப்பட்டவளாய் காட்டப்படுகிறாள். 

இதைக்காட்டிலும் ஒரு பெண்ணை கேவலமாக சித்தரிக்க முடியாது. பெண் என்றாலே எந்த சுய சிந்தனையும் இல்லாமல் எல்லா நிலைகளிலும் ஒரு ஆணை சார்ந்தே இருக்கவேண்டியவள் என்று தொடர்ந்து காட்டப்படுகிறது. நாய்க்கு எலும்பு துண்டை வீசுவது போல்,  “அன்பு” என்று ஒன்றை வீசிவிட்டால் பெண்ணை எப்படி வேண்டுமானாலும் வளைத்துக்கொள்ளலாம் என்றே திரும்ப திரும்ப பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வகையான சித்தரிப்புகளின் விளைவுகளை தான் நாம் தினமும் நம் சமூகத்தில் கண்டுவருகிறோம்.

பெண்களின் மீது இழைக்கப்படும் பல சமூக குற்றங்களுக்கு இவ்வகையான ஆக்கங்களின்  பங்கு அதிகம். பொது வெளியில் பேசப்படும் தெரியவரும் குற்றங்களைப் போலவே வீட்டுக்குள் நாலு சுவற்றுக்குள் பெண்கள் சந்திக்க வேண்டிய சவால்களும் உண்டு.  இவ்வாறு அப்பாவிகளாகவும், சிறிதும் சுய சிந்தனை இல்லாதவர்களும் ஆகவே பெண்களை காட்டி வருவதால் இவ்வாறான படைப்புகளை பார்த்து வளரும் ஆண்களும் ஏன் பெண்களுமே கூட ஒரு பொய்யான கட்டமைப்பில் தங்களது எண்ணங்களை வளர்த்து கொள்கிறார்கள். பெண் என்பவள் சமூக இயங்குமுறையோடு பயணிக்க முடியாதவள் என்றும் அவளுக்கு பொது வெளி தகுந்தது இல்லை என்றும்  நம்பத்தொடங்குகிறார்கள். இதனால் இவர்களால் நிஜ வாழ்வில் சுய சிந்தனை பெற்ற அறிவார்ந்த தளங்களில் பயணிக்க விரும்பும் பெண்களை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஒன்று இவர்கள் பெண்ணியம் பேசும் திமிர் பிடித்தவர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள். இல்லையேல் இருக்கவே இருக்கு character assasination என்னும் ஆயுதம். பொது வெளியில் இயங்குவது என்றால் அவள் பல தரப்பட்ட மனிதர்களை கடந்து வர வேண்டும். இதில் ஒத்த கருத்து உடையவர்களுடன்  நட்புடன் பழகுதல் என்பது இயல்பான ஒன்று. ஆனால் ,  நம் சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே அவர்களுக்குள் ஏதோ இருக்கு என்று தான் பேச தொடங்கிடுவார்கள். இப்படியான பேச்சுக்கு வரைமுறையே இல்லை. 


ஆக்கங்களுக்கும் படைப்புகளுக்கும் ஒரு நல்ல சமூகத்தை கட்டமைக்கும் குறிக்கோளோடு படைக்கப்பட வேண்டும். ஆனால், விஜய் ஆனந்த் போன்ற பெரும்பான்மையினர் அளிக்கும் படைப்புகள் எல்லாம் வணிகரீதியில் கூட ஏற்றுக்கொள்ள  முடியாத சிறிதும் அறமற்ற குப்பைகளாகவே இருக்கின்றன. கட்டற்ற பாலியல் சுதந்திரம் பெற பாடுபடுவோர், பாய் பெஸ்டி குறித்தான விவாதங்களை முன்னிறுத்துவோர் எல்லாம் அதைக்காட்டிலும் இவ்வகையான படங்களை தடை செய்வதில் கொஞ்சம் கவனம் கொள்ளலாம். இவ்வாறான படைப்புகளை எல்லாம் கள்ளமௌனம் காத்து அனுமதிப்பதன் மூலம் மீண்டும் மீண்டும் குப்பைகளைத் தான் தமிழ் சினிமா சேர்த்துவைக்கிறது.


-அருணா சுப்ரமணியன் 

Series Navigationஆட்கொல்லி வேட்டை ஆடுதுதேவையற்றவர்கள் 
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *