குறளில் கல்வியியல் சிந்தனைகள் – ஒரு பார்வை

author
3 minutes, 19 seconds Read
This entry is part 11 of 13 in the series 3 மே 2020

முனைவர் பீபெரியசாமி,

தமிழ்த்துறைத்தலைவர்,

டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விளாப்பாக்கம் – 632521.

Mail id: periyaswamydeva@gmail.com

Cell: 9345315385

முன்னுரை

ஒவ்வொரு மனிதனுக்கும் கல்வியே சிறந்த அறிவாற்றலை அளிக்கவல்லது.  அக்கல்வியே  சான்றோரிடத்தும்  நம்மைக்  கொண்டு  செல்லும் இயல்புடையது.  ஒரு பிறவியில் தான் கற்ற கல்வியானது  ஏழுபிறவிக்கும்  வந்து நன்மைசெய்யும் என்கிறார் வள்ளுவர்.  இவ்வாறான பல்வேறு ஆற்றல்களையுடைய கல்வியியல் சிந்தனைகள் எவ்வாறு திருக்குறளில் திறம்பட  எடுத்தியம்பப்பட்டுள்ளது  என்பதை ஆய்வதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

கல்வியின் சிறப்பு

கல்வியே அனைத்து செல்வங்களிலும் உயர்வானது என்பதை,

மன்னனும் மாசறக் கற்றோனும் சீரு தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடைமயோன் – மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமல்லாம் சிறப்பு. (மூதுரை, பா. 26)

எனும் பாடலில், ஒரு நாட்டின் அரசனையும், சந்தேகமறக் கற்று அறிந்தவனையும் ஒப்பிட்டுப் பார்த்தால் கற்றவனே அதிக பெருமை உடையவன். அரசனுக்கு அவனது நாட்டில் மட்டும் தான் மரியாதை உண்டு. ஆனால் கற்றவனுக்கோ, அவன் செல்கின்ற இடமெல்லாம் மரியாதை கிடைக்கும் என மூதுரை கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது. இதனை நாலடியார்,

களர் நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்

விளை நிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்

கடை நிலத்தோ ராயினும் கற்றறிந்தோரைத்

தலை நிலத்து வைக்கப்படும். (நாலடி.133)

எனும் பாடலில், களர் நிலத்தில் உப்பானது பிறப்பெடுக்கும். இந்த உப்பை விளையும் நிலத்தில் விளைந்த நெல்லைவிட உயர்வானதாகக் கருதுவர். அதுபோல, தாழ்ந்த குடியில் பிறந்திருப்பினும், கற்றறிவு பெற்ற மக்களை உயர்ந்த இடத்தில் வைத்து இவ்வுலகம் போற்றும் என்று கல்விக்குக் கிடைக்கும் மரியாதையைக் காட்டுகிறது.

ஆசிரியனின் குணநலன்கள்

நூலைக் கற்பிக்கும் ஆசிரியன் உயர்ந்த ஒழுக்கமுள்ள  குடிப்பிறப்பும்  அருள் பண்பும்  தெய்வம் போற்றுதலும் கொள்கையிலே மேன்மையும் கல்வி – கலைகள் பயில்வதிலே தெளிந்த அறிவும்  மாணவர்களுக்குப்  பாடப்பொருளை எளிதில் சொல்லி உணர்த்தும் சொல்லாற்றலும் பயன்தரும் நிலத்தைப் போன்ற பெருமையும் மலையைப் போன்ற அசையாத மன உறுதியும் தராசு போன்ற நடுநிலை தவறாத நேர்மையும் மலர் போன்ற முகமலர்ச்சியும் உலக வழக்கம் சார்ந்த காட்சி அறிவும் பிறர் விரும்பும் உயர்ந்த பண்பாகும். இவை போன்ற ஆக்கம் தருகின்ற பிறர் செயல்பாடுகள் பெற்றிருக்க வேண்டும் என்பதை,

குலனரு டெய்வங் கொள்கை மேன்மை

கலைபயி றெளிவு கட்டுரை வன்மை

நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும்

உலகிய லறிவோ டுயர்குண மினையவும்

அமைபவ னூலுரை யாசிரி யன்னே. (நன். நூ.26)

என நன்னூலார்க் கூறியுள்ளார்.  ஆசிரியர் எதற்கு அஞ்சக்கூடாதென கூறுகின்றார் வள்ளுவர்,

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல். (குறள் 727)  

எனும் பாடலில், அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் உள்ள கூர்மையான வாள் போன்றது என்கிறார். மேலும்,

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். (குறள் 728)

எனும் பாடலில், நல்ல அறிஞரின் அவையில் நல்லப் பொருளைக் கேட்பவர் மனதில் பதியுமாறு சொல்ல முடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே என்கிறார். மேலும்,

கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். (குறள் 729)

எனும் பாடலில், நூல்களைக் கற்றறிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர்,  கல்லாதவரை  விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர் என்கிறார். மேலும்,

உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். (குறள் 730)

எனும் பாடலில், அவைக்களத்திற்கு  அஞ்சி  தாம்  கற்றவைகளைக்  (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர் என்கிறார்.

மாணாக்கர்களின் குணநலன்கள்

நல்ல மாணவர்களின் இயல்பினை நன்னூலார்,

நல்ல மாணாக்கனின் இயல்பினை நன்னூலார்,

அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி

அன்னர் தலையிடை கடைமா ணாக்கர் (நன். நூ. 38.)

அன்னமும், பசுவும் போன்றவர்கள் தலைமாணாக்கர்கள் என்றும் மண்ணும் கிளியும் போன்றவர்கள் இடைநிலை மாணாக்கர்கள் என்றும் இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி போன்றவர்கள் கடைநிலை மாணாக்கர்கள் என்றும் மூன்று நிலையாக பிரித்துக் கூறுகின்றார்.

அன்னப்பறவை நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்பதுபோல தலை மாணவன் ஆசிரியர் கூறும் கருத்துகளில் சிறந்தவற்றை மட்டும் ஏற்றுக்கொள்வான். பசு, புல் கண்ட இடத்தில் மேய்ந்த பின் தன் உரையிடம் சென்று மேய்ந்ததை நன்றாக மென்று விழுங்கும் அதுபோலவே தலைமாணவன் ஆசிரியன் வாய்த்தது பொழுதில் அவரிடம் கேட்ட பாடங்களைத் தனித்த இடம் சென்று சிந்தித்து ஆராய்வான்.

நிலம் (மண்) ஒருவன் உழைத்த திறமையினை அறிந்து தக்க  விளைச்சலைத்  தரும்.  அதுபோல, இடைமாணவன் ஆசிரியர் கற்பித்த அளவிற்கு அறிவு பயன் அடைவான். கிளியானது சொன்னதையே சொல்லும் அதுபோல ஆசிரியர் சொன்னவற்றைத் தவிர வேறு அறிவை பெறாதவன் இடைமாணக்கன்.

இல்லிக்குடம் என்பது ஓட்டை குடம் இதில் நீரை நிரப்பி வைத்தால் உடனே ஒழுகிப்போகும்.  இதுபோலவே, கடைநிலை மாணவன் மனத்திலே கேட்ட பாடம் தங்காது .ஆடு ஒரு செடியில் மட்டும் வாய்வைத்து வயிறார மேயாது பச்சை கண்ட இடமெல்லாம் அலையும். அதைப்போல, இவனும் பல ஊர்களிலே உள்ள ஆசிரியர்களிடம் பாடம் கேட்டும் அறிவு நிரம்பமாட்டான். எருமைமாடு ஒரு குட்டை நீரைக் கலக்கியே குடிக்கும். அதுபோல, இவனும் ஆசிரியனின் மனம் இருக்க நயந்து கொண்டு குறைந்த அறிவோடு நின்றுவிடுவான்.

நெய்யரி என்னும் பன்னாடை சக்தியினை ஒழுகவிட்டுவிட்டு சக்கையை மட்டும் பற்றிக்கொள்ளும் இதுபோலத் தான் இவன் ஆசிரியர் கூறும் நல்ல கருத்துக்களை அறிவிலே வைத்துக்கொள்ளாமல் தீய செய்கைகளை மேற்கொள்வான்.  இவ்வாறு  இல்லிக்கும்  ஆடு, எருமை, நெய்யரி ஆகியவற்றோடு கடைநிலை  மாணாக்கர்களை நன்னூலார் ஒப்பிட்டுள்ளார். வள்ளுவர்,

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்(குறள் 724)

எனும் பாடலில், கற்றவரின் முன் தான் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார். மேலும்,

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு (குறள் 725)

எனும் பாடலில்,  அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும் என்கிறார்.

கல்வியின் உயர்வு

பொருள் செல்வமானது வெளியுள்ள பருப்பொருள் ஆதலால் அது வெள்ளத்தால் அழியும்; வெந்தழலால் வேகும். கல்வியோ நமது உயிரைப் பற்றி உள்ளேயிருக்கும் நுண்பொருள். ஆதலால் அது வெள்ளத்தால் அழியாது; வெந்தழலால் வேகாது. பொன், நிலம், வீடு முதலிய பருப்பொருள்கள் அரசர்களால் கைப்பற்றப்படும். கல்வியோ அறிவுருவான நுண்பொருள். ஆதலால் அஃது அவர்களால் கைப்பற்றப்பட மாட்டாது. செல்லமானது பிறருக்கு எடுத்துக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்;  கல்வியைப் பிறர்க்கு  எடுத்துச்  சொல்லச் சொல்ல அளவில்லாமல் பெருகும்.  செல்வத்தைப் பாதுகாப்பதற்கு அளவு கடந்த முயற்சி வேண்டும்;  கல்வியைப் பாதுகாப்பதற்கு அத்தகைய முயற்சி வேண்டுவதில்லை. இவற்றால் கல்வி, செல்வத்தினும் சிறப்புடைய அழியாச் செல்வமாய் இருக்கின்றது.  கல்வியே அனைத்திலும் முதன்மையானது.  அக்கல்வி பெற்றோர் எவ்வாறு வாழவேண்டும் என்பதைக் கொன்றைவேந்தன்,

நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு (கொன்றை வேந்தன், பா.53)

எனும் பாடலில், அறநூல்களைப் படித்து அறிந்து அவை கூறுகின்ற நற்பண்புகளோடு வாழ வேண்டும் என்கிறது. வள்ளுவர் இதனை,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் (குறள் 69)

எனும் பாடலில்,  தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய்,  தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள். மேலும்,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு

மாடல்ல மற்ற யவை. (குறள் 400)

எனும் பாடலில், கேட்டை விளைவிக்காத விரும்பும் செல்வம் கல்வி அது ஒருவருக்குப் பணத்தைப் போன்றது அல்லாமல் வேறொன்று இல்ல .என்றார். அதாவது ஒருவர்க்குக் கல்வி அழிதல் இல்லாத விழுச்செல்வமாகும். எனவே,  அழியக்கூடிய மற்றைய செல்வங்கள் செல்வம் ஆகா என்றார். புறநானூற்றில் ஆரியப்பட்டைக் கடந்த நெடுஞ்செழியன்,

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே. (புறம்.183)

என்று சங்ககாலத்தில் கல்வி கற்பதில் ஆண், பெண் இருபாலர்க்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டதை எடுத்துரைக்கின்றார். மேலும், தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்கு தேவைப்படும் பொழுது உதவி செய்தும்,  மிகுந்த அளவு பொருள் கொடுத்தும் ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்விகற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக“ என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால்,  மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் கல்வி கற்கச் செல்வான் என்கிறார்.

நல்ல நட்பு அளிப்பது கல்வி

உலகத்தில் உள்ள அனைத்து உறவுகளையும் விடச் சிறப்பானது நட்பு, நல்ல நட்பு ஒருவனுக்கு வாழ்வில் அமைந்துவிட்டால் அவன் வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியாக இருப்பான். அவ்வாறான நட்பு கல்வியில் சிறந்தவர்களுக்கு எவ்வாறு அமையும் என்பதை வள்ளுவர்,

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு (குறள் 425)

எனும் பாடலில், உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கி கொள்வது சிறந்த அறிவு, முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாத அறிவு என்கிறார். மேலும்,

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில் (குறள் 394)

என்ற குறளில் சந்திப்பதில் மகிழ்ந்து பிரிவில் வருந்துவது அறிஞர்களின் குணம் எனவும் கூறியுள்ளார். மேலும்,

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு (குறள் 783)

எனும் பாடலில், பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நூற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலை போன்றதாகும். கல்விக்கு முடிவு கிடையாது என்று கூறிய நாலடியாரைப் போல் அறிவுக்கு முடிவு கிடையாது என்று வள்ளுவர் கூறியுள்ளார்.

தொட்டனைத் ஊறும் மணற்கேணி மாந்தரக்குக்

கற்றனைத் ஊறும் அறிவு  (குறள் 396)

எனும் பாடலில், மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் ஊறும். அதுபோல பல நல்ல நூல்களைக் கற்கக் கற்க அறிவு பெருகும் முடிவடையாது என்பது இக்குறளின் பொருள். மேலும்,

யாதானும் நாடாமல் ஊராமால் என்ஒருவன்

சாந்துணையும் கல்லாத வாறு (குறள்.397)

எனும் பாடலில், கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனை தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்? என்பதிலிருந்து கற்றவர்க்கு எல்லோரும் சொந்தமானவர்கள் என்பதனை அறியலாம்.

அறிவுடையார் செயல்

அறிவுடைய மனிதர்கள் தான் எந்த செயல் செய்தாலும் அதன் விளைவுகளை முன்கூட்டியே யோசித்து அந்த செயலை செய்யலாமா வேண்டாமா என முடிவெடுப்பர். ஆனால் அறிவற்றவர்களோ ஒரு செயலை செய்து விட்டு அதன் விளைவினை எண்ணி வருந்துவர். அறிவுடையார் எவ்வாறானவர் என்பதை வள்ளுவர்,

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில் (குறள் 428)

எனும் பாடலில், அஞ்சதகுந்தைக் கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும், அஞ்சத் தக்கத்தைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும் என்கிறார். மேலும்,

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனு மிலர். (குறள் 430)

எனும் பாடலில்,  அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர், அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர் என்கிறார். மேலும்,

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு. (குறள் 426)

எனும் பாடலில், உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும் என்கிறார்.

பிறவிதோறும் கல்வியின் பயன்

கல்வி என்ற அதிகாரத்தில் ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவியிலும் அவனுக்குப் பயன்படும் என்ற கருத்தை,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

என்று கூறியதிலிருந்து தெளிவாகின்றது.

மெய்யறிவு

மெய்யறிவு என்பது தெளிந்த அறிவு. நல்லது கெட்டதை ஆய்ந்துணரும் அறிவு. இதனை வள்ளுவர்,

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 355)

எனும் பாடலில்,  எப்பொருள்  எத்தன்மையதாய்த்  தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு என்கிறார். மேலும்,

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி  (குறள் 356)

எனும் பாடலில், கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர் என்கிறார். மேலும்,

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும் (குறள் 373)

எனும் பாடலில்,  ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும்  அறிவே மேம்பட்டுத் தோன்றும் என்கிறார்.  மேலும்,

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராத லரிது(குறள் 419)

எனும் பாடலில், நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது என்கிறார்.

அரசனின் ஆளுமை

ஒரு அரசன் என்னதான் செல்வத்தில் உயர்ந்தவனாக இருந்தாலும் அவனுக்கென்ற அடிப்படை அறிவும் மக்களின் நிலையும் ஆராயும் திறமும் பெற்றிருந்தால் மட்டுமே உலகம் அவனைப் போற்றும். இதனை வள்ளுவர்,

தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு (குறள் 383)

எனும் பாடலில், காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை என்கிறார். மேலும்,

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். (குறள் 543)

எனும் பாடலில், அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும் என்கிறார். மேலும்,

உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல் (குறள் 743)

எனும் பாடலில்,  உயரம்,  அகலம்,  உறுதி,  பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர் என்கிறார். மேலும்,

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு. (குறள் 632)

எனும் பாடலில்,  அஞ்சாமையும்,  குடிப்பிறப்பும்,  காக்கும் திறனும்,  கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன் என்கிறார்.

கல்லாதார் இயல்பு

கல்வி இலாதவன் கலர் நிலம் என்பர். கல்வி அறிவில்லாத மனிதனின் இயல்பினை வள்ளுவர்,

விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர். (குறள் 410)

எனும் பாடலில்,  அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக்  கற்றவரோடு  கல்லாதவர்,  மக்களோடு விலங்குகளுக்கு  உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர் என்கிறார். மேலும் வள்ளுவர்,

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்  (குறள் 395)

என்று விளம்புகிறார் வள்ளுவரும். அதாவது கற்றவர் மேலானோர் என்றும், கல்லாதவர் கீழானவர் என்றும் கூறி விளக்குகிறார். மேலும்,

கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. (குறள் 402)

எனும் பாடலில், கற்றவரின் அவையில் கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது என்கிறார். மேலும்,

உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர் (குறள் 406)

எனும் பாடலில், கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர் என்கிறார்.

செவிவழிக் கல்வி

நேரில் சென்று கல்வி கற்க இயலாவிட்டாலும் செவிவழிக் கேட்டாவது தன் கல்வி அறிவை வளர்ந்துகொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர்,

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்  (குறள் 412)

எனும் பாடலில், செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்குத் துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும் என்கிறார். மேலும்,

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து (குறள் 413)

எனும் பாடலில், செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார் என்கிறார்.

கல்வியின் மேன்மை

கல்வி கரையில் கற்பவர் நாள் சில ஆதலால் நீரை நீக்கிப் பாலைப் பருகும் அன்னப் பறவையைப் போல அறிவுடையோர் நூலில் தன்மைகளை அறிந்து நல்ல நூல்களையே கற்க வேண்டும் என்பதைப் பின்வரும் நாலடியார் பாடல் உணர்த்துவது அறியத்தக்கதாகும். இதனை,

கல்வி கரையில் கற்பவர் நாற்சில

மெல்ல நினைக்கின் பிணிபல் தென்னிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து (நாலடி.135)

எனும் பாடலில், நாலடியார் மெய்ஞ்ஞான நூல்களைக் கற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. களர் நிலத்தில் தோன்றும் உப்பையும் சான்றோர் நல்ல நஞ்சை நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கருதுவர். அதுபோல் கற்றறிந்தவர்களாக இருந்தால் அவர்களையே மேலான குடியில் உயர்ந்த இடத்தில் வைத்து சான்றோர் போற்றுவர்,

கடைநிலத்தோ ராயினும் கற்றறிந் தோரைத்

தலைநிலத்து வைக்கப் படும்  (நாலடி.133)

எனும் பாடலில் கூறியுள்ளார். ஆதலால் கல்வியால் உயர்குடிப் பிறப்புக்குரிய மதிப்பையும் பெறலாம் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்கலாம் என்னும் கருத்தும் இப்பாடலில் இடம் பெற்றிருப்பது நோக்கத்தக்கதாகும். மேலும் வள்ளுவர்,

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு (குறள் 424)

எனும் பாடலில்,  தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாக  பதியுமாறு சொல்லி,  தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமானப் பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும் என்கிறார். மேலும் திருவள்ளுவர்,

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார் (குறள்.399)

எனும் பாடலில், தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக் கல்வியையே) விரும்புவர் என உரைத்திருப்பது இங்கு நோக்கத்தக்கதாகும். அதேபோல், ஒருவன் தன் மக்கட்குச் செல்வம் எனச் சேர்த்து வைக்கத்தக்கது கல்வியே என்பதை,

எச்சம் எனஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற் றல்ல பிற (நாலடி.132)

என்னும் நாலடியார் பாடல் வரிகளால் அறிகின்றோம்.

அறிவற்றவன் செயல்

அறிவற்றவன் தான் காணாததைக் கண்டதாகவும், கேளாததைக் கேட்டதாகவும், தான் செய்யாததைச் செய்ததாகவும் சொல்லி இன்புறுவர். இதனை,

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும் (குறள் 845)

எனும் பாடலில், அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல்,  அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும். இதனை,

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பானூ லோர்க்குந் துணிவு (குறள் 533)

எனும் பாடலில்,  மறதியால் சோர்ந்து  நடப்பவர்க்கு  புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும் என்கிறார்.

முடிவுரை

·       கல்வியே சிறந்த செல்வம், அச்செல்வத்தை அளிக்கும் ஆசானே உயர்ந்த தெய்வம் என எண்ணி மாணாக்கர்கள் முறையாகக் கற்றுணர்ந்தால், நல்ல நட்பு கிட்டும்.

·       அறிவுடைய மனிதர்கள் தான் எந்த செயல் செய்தாலும் அதன் விளைவுகளை முன்கூட்டியே யோசித்து அந்த செயலை செய்யலாமா வேண்டாமா என முடிவெடுப்பர்.

·       ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறவியிலும் அவனுக்குப் பயன்படும்.

·       மெய்யறிவு என்பது தெளிந்த அறிவு. நல்லது கெட்டதை ஆய்ந்துணரும் அறிவாகும்.

·       அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோல் ஆகும்.

·       அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

·       செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும் என்கிறார்.

·       கல்வியால் உயர்குடிப் பிறப்புக்குரிய மதிப்பையும் பெறலாம் சாதிய ஏற்றத் தாழ்வுகளையும் ஒழிக்கலாம்.

·       இவற்றின்வழி கல்விதான் ஒருமனிதனின் உயர்வுக்கும் தாய்வுக்கும் அடிப்படையானது என்பது பெறப்பட்டது.

துணைநூற்பட்டியல்

  1. குருநாதன் (ப.ஆ) (2003), புறநானூறு மூலமும் உரையும், வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4.பா.  183
  2. ந.மு. வேங்கடசாமி நாட்டார், கொன்றைவேந்தன், சாரதா பதிப்பகம், சென்னை, 2007.
  3. ந.மு. வேங்கடசாமி நாட்டார், மூதுரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2007.
  4. பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1975.
  5. புலியூர் கேசிகன் (உரை), நாலடியார், செண்பகா பதிப்பகம், சென்னை. 2013.
  6. முனைவர் பீ. பெரியசாமி (உரை), நன்னூல், சொந்த பதிப்பு, பிரபா அச்சுக் கூடம், வேலூர் -1. 2020.
Series Navigationஎன்னுடைய நூல்கள் அமேஸான் கிண்டில் பதிப்பாகதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *