கோ. மன்றவாணன்
தமிழகத்தின் பல ஊர்களில் இலக்கிய அமைப்புகள் உள்ளன. அவர்களால் முடிந்த அளவில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். சிலர் இலக்கியத்தையும் தமிழையும் வளர்க்கிறார்கள். சிலர், தங்களைப் பற்றிய புகழை வளர்ப்பதற்காகவே அந்த அமைப்புகளைப் பயன்படுத்துகிறார்கள். நெல்லுக்குப் பாயும் போது சற்றுப் புல்லுக்கும் பாய்வதுபோல் என்றொரு பழமொழி உண்டு. நெல்லுக்குப் பாய்வதுபோல் தங்களின் புகழை வளர்த்தாலும் புல்லுக்குப் பாய்வதுபோல் தமிழுக்கும் இலக்கியத்துக்கும் சிறுபயன் கிடைக்கத்தான் செய்கிறது.
பட்டி தொட்டி எங்கும் நாடு நகரம் எங்கும் திரை நடிகர்களுக்கான மன்றங்கள் உண்டு. ஆனால் இலக்கிய அமைப்புகள் மிகச்சிலவே உண்டு. அந்த அமைப்புகளை உண்மையான பொதுநோக்கம் கொண்டு நடத்துபவர்களில் பெரும்பாலோர் பொருளியலில் மிகவும் பின் தங்கியவர்கள். பிறரின் உதவிகளுடன்தாம் நிகழ்ச்சிகளை நடத்த முடியும். அதற்காக அவர்கள் படும்பாடுகள், பழிச்சொற்கள், அவமானங்கள், அலைக்கழிப்புகள் ஏராளம்.
அழைப்பிதழ் அச்சடிப்பு, அஞ்சல் செலவு, தட்டி விளம்பரம், ஒலிஒளி அமைப்பு, அரங்கு வாடகை, சிற்றுணவு, பேச்சாளர் ஊதியம், தங்கும் விடுதிக் கட்டணம் எனப் பல செலவுகளைச் செய்ய வேண்டும். இதற்குப் பெருந்தொகை வேண்டும். ஒவ்வொருவராய்ப் பார்த்துப் பொருள் சேர்த்து நிகழ்ச்சியை நடத்துவது என்பது போதும் போதும் என்றாகிவிடும். இதனால் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த முடியாமல் பல இலக்கிய அமைப்புகள் மூடுவிழா கண்டுவிட்டன. மடல்கட்டு (லெட்டர்பேட்) அமைப்புகளாகச் சில உள்ளன. உள்ளுக்குள் நடக்கும் போட்டி பொறாமைகளால் உடைந்து, பின் மறைந்து போன அமைப்புகள் நிறைய உண்டு.
நிகழ்ச்சியைக் குறைந்த செலவில் நடத்துபவர்களால் மட்டுமே தொடர்ந்து இயங்க முடிகிறது. திருவிழா போல் நடத்துபவர்கள், மத்தாப்பு வெளிச்சமாய் மின்னி மறைந்து விடுகிறார்கள்.
செலவு குறைவாகத் திட்டம் இடுபவர்கள், பள்ளிக்கூட அறைகளில் நண்பர்களின் வீட்டு மாடிகளில் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அச்சு அழைப்பிதழ் செலவைத் தவிர்க்க, நகல் அழைப்பிதழ்களுக்கு நகர்ந்தார்கள். அஞ்சல் அட்டைகளில் எழுதி அழைத்தார்கள். செல்பேசி வழியாகக் குறுஞ்செய்தி அழைப்புக்குப் பழகினார்கள். வினவி (வாட்ஸப்) வந்த பிறகு, அதில் தொட்டச்சு செய்து அனுப்பினார்கள். தற்காலத்தில் படக்கடை (போட்டோ ஷாப்) மென்பொருள் மூலமாக அழைப்பிதழ் வடிவமைத்து அனுப்புகிறார்கள். ஆக மொத்தத்தில் அழைப்பிதழ்களுக்கான செலவும் அவற்றை அனுப்புவதற்கான செலவும் இல்லாமல் போய்விட்டன.
ஒலிஒளி அமைப்புக்காக நிறைய செலவு ஆவதைத் தவிர்க்க, சில அமைப்பினர் நன்கொடையாளர்கள் வழியாக ஒலிபெருக்கி (ஆம்ப்ளிபயர்) ஒலிக்குழல் (சவுண்ட் ஆர்ன்), ஒலிவாங்கி (மைக்) ஆகியவற்றைத் தொகுப்பாக வாங்கி வைத்து நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இதைச் சுருக்கமாக மைக்செட் என்றோ ஒலிக்கருவிகள் என்றோ நான் சொல்லி இருக்கலாம். சில தமிழ்ச்சொற்களைக் கற்றுக் கொள்ளுங்களேன் என்பதற்காகவே ஒவ்வொரு கருவியாகக் குறிப்பிட்டேன். தற்போது சிறுகூட்டம் நடத்தும் அளவுக்குக் கையடக்கமான ஒலிபரப்புப் பெட்டகம் வந்துவிட்டது. அதைச் சொந்தமாக வாங்கி வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். ஒலிக்கருவிகள் இல்லாமலேயே நிகழ்ச்சியை உணர்வு ததும்ப நடத்துபவர்களும் உண்டு.
நிகழ்வின் இடைப்பொழுதில் தேநீரும் மேரி மாச்சில்லுகளும் (பிஸ்கெட்டுகள்) கொடுத்து வருவது தொடர்ந்துவரும் வழக்கம். நண்பர்கள் குழாமின் உதவியோடு அந்தச் செலவைச் சரிகட்டுகிறார்கள். மேரி மாச்சில்கள் மேல் ஒரு சலிப்பு வந்துவிட்டது. எனவே ஐந்து ரூபாய் குட்டே மாச்சில் பொதியுறைகளைக் (பாக்கெட்டுகளை) கொடுக்கலாம் என்று சொல்லி வருகிறேன். சில அமைப்பினர் அதைப் பின்பற்றுகிறார்கள். சிலர் நிகழ்வின் முடிவில் பெருஞ்செலவில் விருந்து அளிக்கிறார்கள். அவர்கள் இலக்கியத்தில் மேல்தட்டினர். அவர்கள் நம்மோடு சேர மாட்டார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்போரும் பல இடர்ப்பாடுகளைப் பொறுத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கு வந்து செல்கிறார்கள். அதற்காகப் பேருந்து, தானி ஆகியவற்றில் பயணம் செய்யும் செலவு, சொந்த வண்டிகள் இருந்தால் அதற்கான எரிபொருள் செலவு, உடன் அழைத்துவரும் நண்பா்களுக்கான செலவு போன்றவற்றையும் செய்ய வேண்டியதாகிறது. நீண்ட நேரம் நிகழ்ச்சி நடந்தால் பேருந்து கிடைக்காத நிலைமை. நிகழ்ச்சியை உரிய நேரத்தில் தொடங்க முடியாத நிலைமையில் காத்திருப்பு. இவற்றை எல்லாம் பொறுத்துக்கொண்டு இலக்கிய அன்பர்கள் சிலர் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
கூட்டத்தில் கேள்வி கேட்டே பேர் வாங்கும் புலவர் திருக்கூட்டம் உண்டு. அவர்களைச் சமாளிக்க முடியாது. கூட்டத்தில் எழுந்து எதிர்வாதம் செய்வார்கள். அவை நாகரிகம் கருதி அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை.
இவ்வளவையும் கடந்துதான் இலக்கிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த இடர்ப்பாடுகளுக்கு இறுதிப்புள்ளி வைப்பதற்கான ஒரு தொழில்நுட்பம் வந்துள்ளது. கரோனா தீநுண்மி காலம் வழங்கிய கொடை என்று சொல்லலாம். இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே இருந்ததுதான் என்றாலும் கரோனா காலத்தில்தான் அனைவருக்கும் அறிமுகம் ஆனது.
ஜூம், கூகுள் மீட் போன்ற செயலிகள் மூலம் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் அரங்கு வாடகை இல்லை. ஒலிஒளிச் செலவு இல்லை. சிற்றுணவுகள் வழங்க வேண்டியதில்லை. பேச்சாளருக்கான விடுதிக் கட்டணம் இல்லை. வருகை தருவோருக்குப் போக்குவரத்துச் செலவு இல்லை. வீட்டுக்குள் இருந்தபடியே நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முடியும். உலகின் எந்த மூலையில் இருப்போரும் பங்கேற்க முடியும். சிறப்புப் பேச்சாளர் பேசும் போது யாரும் குறுக்கிடாதவாறு கட்டுப்பாடு உண்டு. கேள்வி நேரம் ஒதுக்க முடியும். விவாதம் செய்ய முடியும்.
யாராவது மன்றவாணன்கள் இடக்கு மடக்காகக் கேள்வி கேட்டுச் சலசலப்பை ஏற்படுத்தினால், அவர்களைத் தவிர்க்கும் வழிமுறைகள் உண்டு. ஒரே நேரத்தில் பலர் கேள்வி எழுப்புவது தவிர்க்கப்பட்டு ஒவ்வொருவராகக் கேள்வி கேட்கும் வகையில் ஒருங்கிணைப்பாளரிடம் கடிவாளம் உண்டு. கூட்டத்தை ஒழுங்கமைவு செய்வதற்கு வேண்டிய அத்தனை வழிமுறைகளும் இருக்கின்றன.
இந்தக் கரோனா தீநுண்மி காலத்தில் தமிழகத்தில் பலர் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். யாரும் இலக்கியக் கூட்டங்கள் நடத்தலாம். உலகின் எந்த மூலையில் இருந்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இந்தச் செயலிகளும் இலவசமாகவே கிடைக்கின்றன. கட்டணச் செயலிகளும் உண்டு. அவற்றை இலக்கிய மேல்தட்டினர் வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்கூட Cisco Webex என்ற செயலி வழியாக வட்டாரத் தமிழ் என்ற பொருளில் ஏழு நாள் பயிலரங்கம் நடத்துகிறது. இனிவரும் காலங்களில் இலக்கியக் கூட்டங்கள் எல்லாம் இணைய வழியில்தான் நடக்கும். இலக்கிய நண்பர்களை நேரில் பார்த்துப் பேசுகிற மகிழ்ச்சியை இணையவழிக் கூட்டங்கள் தராது என்று எதிர்க்குரல் கேட்கும். எந்தப் புதுமையும் எந்த இலகுவான வசதியும் வருகிற போது, இதுபோன்ற குரல்கள் எழுந்து அடங்கும்.
பொதுவாக நகரத்தில் இரண்டு மூன்று கல்லூரிகள் இருக்கின்றன. பத்துப் பன்னிரண்டு பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. அவற்றில் தமிழ் சொல்லித் தரும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உண்டு. ஓரிருவரைத் தவிர, தமிழ் கற்பிப்போர் யாரும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதே இல்லை. பங்கேற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். கட்டாயப்படுத்த முடியாது. ஆனாலும் தமிழாசிரியர்கள்தாம் தமிழ்வளர்ச்சிக்கு மிகவும் வேண்டியவர்கள். கல்விச் சாலையோடு நின்றுவிடாமல் பொதுச்சாலைக்கு அவர்கள் வந்தால், தமிழ் இனி மெல்ல வளரும். இனியேனும் அவர்கள் தமிழுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இல்லத்தில் இருந்தபடி இணையவழி இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பார்களா?
தமிழுக்கு அந்தக் கொடுப்பினை இருந்தால் நல்லது.
- அகநானூற்றில் பதுக்கை
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 223 ஆம் இதழ்
- மெய்நிகர் சந்திப்பு:திருப்பூரில் நாடக முயற்சிகள் : சுப்ரபாரதிமணியன்
- இல்லம் தேடிவரும் இலக்கியக் கூட்டங்கள்
- ரமணிச்சந்திரன் மற்றும் முகநூல் எழுத்தாளர்களின் தேவை
- தனிமை
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- இன்னும் சில கவிதைகள்
- காலாதீதத்தின் முன்!
- மொழிவது சுகம் மே 26, 2020 – மலர்கள் விட்டு ச்சென்ற வெற்றிட த்தில் ………
- எம். வி வெங்கட்ராம் நூற்றாண்டு நிறைவு நினைவில்
- எந்தக் கடவுளும், எந்த மதமும் உங்களைக் காப்பாற்ற முடியாது !