கோ. மன்றவாணன்
சாலை நெடுகிலும் விளம்பரப் பதாகைகள் கண்ணில் பட்டவண்ணம் உள்ளன. அழகுத் தமிழை அலங்கோலப் படுத்தியே அந்த விளம்பர வாசகங்கள் உள்ளன. அதுபற்றி எந்தத் தமிழருக்கும் கவலை இல்லை. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்ற கண்ணதாசன் பாடல் ஒன்றில் “இங்குச் சரியாத் தமிழ் பேசறவங்க யாருமில்ல” என்று எழுதி இருப்பார். அதுபோல் “இங்குச் சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல” என்று நாமும் பாடலாம்.
அரசியல் கட்சியினர் வைக்கும் பதாகைகள் சிலவற்றுள் தமிழ் தலைகுனிந்து கிடக்கிறது. அவற்றில் உள்ள எழுத்துப் பிழைகளால் பொருள் மாறிவிடுவதும் உண்டு. படித்தால் சிரிப்பு வரும். இவ்வாறு எழுதியவர்களுக்குத் தலைவர்கள் மீது பற்று மிக உண்டு. தமிழின் மீதும் நேயம் மிக உண்டு. தெரிந்து செய்த தவறுகள் இல்லை.
தமிழ்ச் சொல்தொடர்களில் காணும் பிழைகளில் ஏராளமான நகைச்சுவைகள் உள்ளன. பலர் பேசக் கேட்டிருக்கிறேன். நானும் படித்துச் சிரித்திருக்கிறேன். அவற்றை வேறொரு சமயத்தில் பேசலாம்.
சின்னதாக விளம்பரம் ஒன்று வந்தது.
இந்தக் கரோனா காலத்து ஓய்வில் அந்த விளம்பரத்தில் உள்ள எழுத்துப் பிழைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தேன்.
தவறு சரி
வீணாகதிர் – வீணாக்காதீர்
விவசாயின் – விவசாயியின்
ஊயிர் – உயிர்
இனியா – இனிய
அணைத்து – அனைத்து
பகுதிகளீலும் – பகுதிகளிலும்
வீடுகளூக்கு – வீடுகளுக்கு
கயத்ரி – காயத்ரி
சாம்பர் – சாம்பார்
சரசம் – ரசம்
ஊறூகாய் – ஊறுகாய்
கடலுரில் – கடலூரில்
மேற்கண்ட எழுத்துப் பிழைகள் மட்டுமின்றி ஒற்றுப் பிழைகளும் உள்ளன. இதுபோல் வரும் விளம்பரங்களில் உள்ள எழுத்துப் பிழைகளைக் கண்டுபிடித்து விளையாடலாம்.
இத்தகைய தவறுகளுக்கு எல்லாம் காரணம் தமிழ்க்கல்வியின் இன்றைய நிலைதானோ? ஆங்கில வழியில் படித்த பலருக்கு “எனக்குத் தமிழ் வராது” என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. நிரம்பப் படித்தவர்களின் சொல்தொடர்களிலும் நிறைய தவறுகள் இருக்கின்றன. படித்து நல்ல வேலையிலுள்ள என் நண்பர் ஒருவர் கவிதை எழுதுவார். கவியரங்குகளில் கவி படித்துக் கைத்தட்டல் வாங்குவார். கவிதை நூலும் வெளியிட்டு உள்ளார். அவருடைய கவிதையை அவருடைய கையெழுத்தில் படிக்கும்போது, தமிழின் தலையெழுத்து என்ன ஆகுமோ என்று மனம் பதைக்கும். ர ற ல ள ழ ந ண ன ஆகிய எழுத்துகள்… வர வேண்டிய இடத்தில் வராமலும் வரக்கூடாத இடத்தில் வந்தும் தமிழ்த்தாயை அவமதிக்கும். அதுமட்டுமின்றிக் குறில் நெடில் வேறுபாடு தெரியாமல் பல சொற்களை எழுதுவார். ஆனாலும் அவர் பலரும் பாராட்டும் கவிஞர்தான்.
மேடைகளில் அழகாகப் பேசும் ஒருவர் எனக்கு மடல் அனுப்பினார். முகவரியில் என் பெயரை மண்ரவனன் என்று எழுதி இருந்தார்.
கடை விளம்பரங்களில் ளு ளூ என்பவற்றை லு லூ என்பதன் சாயலில் எழுதுவோர் உள்ளனர். கிட்டதட்ட எல்லா ஓவியர்களும் இந்தத் தவற்றைச் செய்வார்கள். முள்ளும் மலரும் என்ற பட விளம்பரத்தில் ளு என்பதை லு என்பதன் சாயலில் எழுதி இருந்தார்கள். தற்போதைய கணினி அச்செழுத்துகளில் இந்தத் தவறு நேர்வதில்லை. எனினும் ஒன்றிரண்டு எழுத்துரு வகைகளில் இந்தத் தவறு நுழைந்துதான் உள்ளது.
தமிழில் மயங்கொலிப் பிழைகள் பலருக்கும் ஏற்படுகின்றன. ந, ண, ன ஆகிய மூன்று எழுத்துகளும் கிட்டதட்ட ஒன்று போலவே ஒலிக்கின்றன. ர, ற ஆகியவையும் அப்படியே. ல, ள, ழ ஆகியவையும் ஒலிமயக்கம் தருகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள ஒலி வேறுபாடுகளைக் கற்றுத் தருவோர் குறைவு. ஆசிரியர்களில் சிலருக்கு “ழ” வருவதில்லை. அது அவர்களின் பலக்க வலக்கம். ஒரு காலத்தில் உழுந்து என இருந்த சொல், உளுந்து என்றாகி அகராதியில் இடம்பிடித்ததற்கு இதுவே காரணம். இத்தகைய தவறுகள் நேராது இருக்க எழுத்துகளில் கண்ணூன்றி, மனம் ஊன்றி நிறைய படிக்க வேண்டும்.
தரமான பதிப்பகம் வெளியிட்ட ஒரு புதினத்தில் பக்கத்துக்குப் பக்கம் தப்புகள் நிறைந்திருந்தன. நல்ல தமிழில் எழுதப்பட்ட புதினம் அது. அந்தத் தவறுகளுடனே வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. ஆசிரியரிடத்தில் கேட்டேன். முறையாக மெய்ப்புப் பார்க்கப்பட்டது என்றும் மெய்ப்புத் திருத்திய கோப்பை அனுப்புவதற்குப் பதிலாகப் பிழையிருந்த கோப்பை அச்சகத்துக்கு அனுப்பிவிட்டார்கள் என்றார்.
புகழுடை எழுத்தாளர்களில் ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுவோர் யாரும் இலர். ஒருமை பன்மை மயக்கம் நேராமல் எழுதுவோர் யாரும் இலர். உயர்திணை அஃறிணை மயக்கத்தில் இருப்போர் உளர். தமிழின் இலக்கணம் குறித்துப் பெரும்பாலான இதழாளர்களுக்கு அக்கறை இல்லை. அவர்களை விடுங்கள். “தமிழ் படித்தோர் சிலரும் தமிழைத் தவறாக எழுதுகின்றனர்” என்ற நிலை எனக்கு நேர்ந்ததே என்று தமிழ்த்தாய் எங்கோ இருந்து புலம்பக் கூடும்.
ஓர் ஊரில் இரண்டு தமிழறிஞர்கள் இருந்தால், அவர்கள் இடையே தகராறுகள் ஓய்வதில்லை. ஒற்று மிகும் என்று ஒருவர் வாள்வீசுவார். மிகாது என்று மற்றொருவர் ஈட்டி பாய்ச்சுவார். தமிழறிஞர்களே தடுமாறும் போது, நாம் தவறி விழுவதில் நியாயம் உண்டு.
எழுத்துப் பிழைகளுக்காக… இலக்கணப் பிழைகளுக்காக எந்த நாடும் தண்டனை விதிப்பதில்லை. அதனால் பிழை செய்வதற்கு நமக்கு உரிமை உண்டு என்று ஆனந்தப் பள்ளு பாட வேண்டியதில்லை. மொழியைத் தவறில்லாமல் எழுதுவது என்பது பேராளுமை.
இந்தத் தவறுகள் எல்லாம் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்? நல்ல தமிழாசிரியரைத் தேடிப் பயனடையலாம். ஆனால் அவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
ஏற்கனவே நாம் தட்டச்சு இட்டோம். செல்பேசியில் தொட்டச்சு இடுகிறோம். நம் தமிழ் அறியாமையால் இதில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது குரலச்சு வந்துவிட்டது. நாம் பேசும் போதே அச்சாகிவிடுகிறது. இனி, சுருக்கு எழுத்தர்களுக்கும் வேலை இல்லை. இந்தக் குரலச்சில் மயங்கொலிப் பிழைகள் ஏற்படுவதில்லை. குறில் நெடில் தவறுகளும் வருவதில்லை. சில வேளைகளில் சொற்கள் மாறி வேறு சொற்கள் தோன்றும். அவற்றைப் படித்துப் பார்த்துச் சரி செய்துகொள்ளலாம்.
தவறு இல்லாமல் தமிழ் எழுத மென்பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன. பிழைதிருத்திகளும் உள்ளன. ஒற்றுப்பிழை இல்லாமல் எழுதுவதற்கு நாவி என்ற மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இந்த மென்பொருள்களில் குறைகளை நீக்கி, மேலும் செழுமை செய்து வருகின்றனர். வருங்காலத்தில் துல்லியமாகத் தமிழ் எழுத இவை உதவும். தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்காகத் தமிழைப் படித்துக் காட்டும் வசதியும் வந்துவிட்டது. இந்த மென்பொருள்களே இனி நமக்குத் தமிழ் ஆசிரியர்கள்.
இந்தக் கட்டுரையை நண்பரிடம் படித்துக் காட்டினேன். தமிழைத் தவறாக எழுதினால் சம்பளம் குறைந்துவிடாது. வாழ்க்கை ஒன்றும் பாழ்பட்டுப் போகாது என்றார்.
- திருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.
- கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)
- சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்
- இந்தக் கரோனா காலத்தில், இரக்கமற்ற வீட்டுக்காரன் விரட்டியடித்ததால், கைக்குழந்தையுடன் வீதிக்கு வந்த உதவி இயக்குநர் குடும்பம்
- சரியாத் தமிழ் எழுதுறவங்க யாருமில்ல…
- கிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை
- தவம்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- பைபிள் அழுகிறது
- கவிதைகள்
- ஒரு நாளைய படகு
- கம்போங் புக்கிட் கூடா
- தொற்று தந்த மாற்று வழிக் கல்வி
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- வெகுண்ட உள்ளங்கள் – 4
- ஏதோ ஒன்னு எனக்காக இருக்குது
- விமரிசனம்: இரு குறிப்புகள்