உண்மை எது பொய்யி எது ஒண்ணும் புரியல்லே…

author
3
0 minutes, 36 seconds Read
This entry is part 10 of 11 in the series 12 ஜூலை 2020

கோ. மன்றவாணன்

     பாடல் வாய்ப்பு இல்லாமல் வருந்திய வாலி அவர்கள் ஊருக்கே போய்ப் பிழைத்துக்கொள்ள முடிவு எடுத்த போது கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றைக் கேட்டார். அந்தப் பாடல் தந்த ஊக்கத்தால் ஊருக்குச் செல்லும் முடிவை மாற்றிக்கொண்டார் என்றவாறு ஒரு நிகழ்வை முகநூலில் ஒருவர் எழுதி இருந்தார். அது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அந்தப் பதிவை அப்படியே தருகிறேன்.

     “பாடலாசிரியராக வாய்ப்புக் கேட்டு அலைந்து, அலைந்து விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற கவிஞர் வாலி, சென்னை ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று டிக்கெட் எடுத்தார். அங்குதான் வாழ்வு தொடங்கியது. கண்ணதாசனைப் போல் பெரிய கவிஞர் ஆக வேண்டும் எனக் கனவில் சென்னை வந்தவர்தான் வாலி.  பலவருடப் போராட்டங்கள், கேலிப் பேச்சுகள், பசி, பட்டினி எனப் பல படிப்பினைகளைக் கற்றுக் கொடுத்தது திரையுலகம் . இறுதியில் இந்த திரையுலகமே வேண்டாம் என முடிவெடுத்து விட்டார். இனிமேல் இந்தத் திரையுலகமே வேண்டாம் ஊருக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என, டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்தார். எடுத்த டிக்கெட்டை உற்றுப் பார்த்துவிட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றார். ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்லும்போது வாய்ப்புக் கேட்டு அலைந்த கம்பெனிகளை நினைத்துப் பார்த்தார். எத்தனை அவமானங்கள், எத்தனை கேலி பேச்சுகள். பலவருடப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

     தான் பல வருடங்களாக அலைந்து திரிந்த தன் கால்களைப் பார்க்கிறார்.  சோர்வுற்று நடக்கின்றன. ஊரிலிருந்து எதற்காகச் சென்னை வந்தோம். பெரிய பாடலாசிரியராக வேண்டும், கண்ணதாசனைப் போல…  என எண்ணிக்கொண்டு வந்த நினைவுகளைப் பார்க்கிறார். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று இருக்கையில் அமர்ந்துகொண்டார். இன்னும் தான் செல்ல வேண்டிய ரயில் வரவில்லை என்பதைப் புரிந்து கொண்ட அவர், அங்கும் இங்கும் செல்லும் மக்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ரேடியோவில் பல பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறது . இதுபோல நமது பாடல் வராதா என ஏங்கிக் கொண்டு சென்னை வந்தோம். கடைசிவரை வரவில்லை. ஊருக்கே செல்கிறோம் என மனதைத் தேற்றிக் கொண்டார் . தன் பையில் இருக்கும் தனது கவிதைப் புத்தகத்தைப் பார்க்கிறார். உனக்கு அதிர்ஷ்டம் இல்லை. என் பேனா முனைக்கும் அதிர்ஷ்டம் இல்லை. ஊருக்குச் சென்றதும் முதலில் உன்னை அழித்து விடுகிறேன் எனக் கோபமானார். கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டது. தன்னால் முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் மனதைக் கொப்பளிக்க வைத்தது . வாழ்வில் எதற்கும் அதிர்ஷ்டம் தேவை. அது நமக்கு இல்லை எனத் தன்னைத்தானே வருத்திக்கொண்டார். இப்பொழுது தூரத்தில் ரயில் வண்டி வரும் சத்தம் கேட்கிறது.

     இப்போதாவது, இங்கே யாராவது திரைப்பட அன்பர்கள் வாய்ப்புத் தருகிறேன். ஊருக்கு செல்லாதே எனக் கூறுவார்கள் என மனம் ஏங்குகிறது. என்ன செய்வது தன் விதி இதுதான் என நொந்து கொண்டார் .

     கவிப்பேரரசு கண்ணதாசன் இன்முகம் அடிக்கடி நினைவில் வந்து செல்கிறது.  ரயில் வண்டி வந்து நிற்க வேண்டிய இடத்தில் வந்து நின்றது. மனதைத் தேற்றிக்கொண்டு பையைக் கையில் பிடித்துக் கொண்டு எழுந்து நின்றார் கவிஞர் வாலி. அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ரேடியோவில் அந்தப் பாட்டு ஒலித்தது. அதைக்கேட்ட கவிஞர் வாலி மனதிற்குள் மின்னல் அடிக்க ஆரம்பித்தது. அந்தப் பாடல் அவர் இதயத்தைத் துளைத்துக் கொண்டே இருந்தது.                100 யானை பலம் பெற்றார். அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பத் தயார் ஆனது. கையிலிருந்த டிக்கட்டைப் பார்த்தார். ரயில் கிளம்பக் கடைசி விசிலும் அடிக்கப்பட்டது. கையில் இருந்த டிக்கெட்டையும் இரயிலையும்  மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தார் கவிஞர் வாலி. ரயில் கிளம்பி விட்டது. கையில் இருந்த டிக்கெட்டைக் கிழித்து எறிந்தார் .

அவர் கேட்ட அந்தப் பாடல் வரிகள் மனதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது.  நாமும் பெரிய கவிஞன் ஆக வேண்டும். இதுதான் தன் முடிவு என்று  ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து வீறுநடை போட்டார். அவர் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட அந்தப் பாடல் இதோ….

          மயக்கமா கலக்கமா ..,

          மனதிலே குழப்பமா ..,

          வாழ்க்கையில் நடுக்கமா..,”

………………………………

     இதைப் படித்ததும் எனக்குள் அதிர்வு உண்டானது. இது தொடர்பாக வாலியே எழுதியதும் பேசியதும் என் நினைவுக்கு வந்தன.

     “நானும் இந்த நூற்றாண்டும்” என்ற தலைப்பில் புதிய பார்வை என்ற இதழில் வாலியின் வரலாற்றுத் தொடர் வந்தது. அதில் மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசன் பாடலால் தனக்கு ஏற்பட்ட உந்துதலை எழுதி இருந்தார். அது புத்தகமாகவும் வந்துள்ளது. அதைப் போலவே பொதிகைத் தொலைக்காட்சியில் வெளியான “வாலிப வாலி” என்ற தொடரிலும் அந்த உந்துதலை உணர்வெழுச்சியாய்ச் சொல்லி இருந்தார். இந்தக் கரோனா காலத்திலும் அதை மறுஒளிபரப்புச் செய்து இருந்தார்கள். நானும் பார்த்தேன். கேட்டேன்.

     அவர் சொன்னதை என் வரிகளில் சுருக்கமாகத் தருகிறேன்.

     “நான் பாடல் எழுதச் சென்னைக்கு வந்து மூன்று நான்கு ஆண்டுகள்வரை ஏழெட்டுப் பாடல்கள்தாம் எழுதி இருந்தேன். வருடத்துக்கு ஒன்றிரண்டு பாடல் எழுதினால் எப்படிக் காலம் தள்ளுவது என்று இருந்தேன். அப்போது மதுரையில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் கணேசன், என்னை மதுரைக்கு வந்துவிடும்படியும், அந்த நிறுவனத்தில் ஒரு வேலை போட்டுத் தருவதாகவும் கூறினார். அதன்படியே நான் மதுரைக்குச் சென்று உத்தியோகம் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அந்தச் சமயத்தில் என் அறைக்குப் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் எதேச்சையாக வந்தார். அவரிடத்தில் நீங்கள் சமீபத்தில் பாடிய பாடல் எது என்று கேட்டேன். சுமைதாங்கி என்ற படத்திற்காகப் பாடினேன் என்று சொல்லி, மயக்கமா கலக்கமா என்ற பாடலைப் பாடினார். அந்தப் பாடலைக் கேட்டதும் மதுரைக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொண்டேன் என்றவாறு சொல்லி இருந்தார். சென்னையிலே இருந்து பாடல் எழுதும் முயற்சியில் வெற்றிபெற வேண்டும் என்று மனஉறுதி கொண்டதை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அவருடைய பேட்டியில் கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடலின் சிறப்பைப் பற்றி ஒவ்வொரு வரியாக விளக்கியும் உள்ளார். இந்தப் பேட்டி இணையத் தளத்தில் பலரும் பார்க்க உள்ளது.

     நல்ல வேளை வாலியே சொல்லிவிட்டார். அதை வேறொருவர் சொல்லி இருந்தால் நம்பிக்கை இடறி இருக்கும்.

     இதுபோல்… ஒரே நிகழ்வை இரு வேறு விதமாக எழுதினால் உண்மை எது பொய் எது என்று தெரியாமல் மக்கள் மயங்குவார்கள்.

     வாலி சொன்ன உண்மை நிகழ்வுக்கும் முகநூலில் எழுதப்பட்ட நிகழ்வுக்கும் எத்தனை வேறுபாடுகள் என்பதைத் தினமலர் வார மலரில் வரும் எட்டு வித்தியாசங்கள் போல எண்ணிப் பார்க்கலாம். ஏராளமான வித்தியாசங்கள் கிடைக்கும். ஏன் இவர்கள் இப்படி எல்லாம் நம் கண்முன் நடந்த வரலாற்றிலேயே புனைவுகளைக் கலப்படம் செய்கிறார்கள்?

     இரு நிகழ்வுகளிலும் மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசன் பாடலால்தான் வாலி ஊக்கம் பெற்றார் என்பது மட்டும் உண்மை. அடிப்படை மாறவில்லை. அதுவரை மகிழ்ச்சிதான். நேரில் பார்த்ததுபோல் கதைகதையாக இட்டுக் கட்டுவதுதான் ஏன் என்று தெரியவில்லை.

     இந்த இரு நிகழ்வுகளில் முதலாவதாகக் குறிப்பிட்ட நிகழ்வுதான் பலரையும் கவர்கிறது. நாளை அதுவே நிலைபெறலாம். பொய்க்குக் கவர்ச்சி உண்டு. உண்மைக்குத்தான் ஒப்பனை இல்லையே!

     உங்களுக்குப் பிடித்த தலைவரைப் பற்றிய பத்துப் புத்தகங்களைச் சேகரித்துப் படியுங்கள். ஒரே நிகழ்வைக் குறிப்பிடும் போது எத்தனை முரண்கள் என நீங்களே கண்டு திகைப்பீர்கள். தலைகீழாக முரண்படும் பதிவுகளும் உண்டு.

     சமூக ஊடகங்களில் தம் கொள்கைகள் சார்ந்தும் தம் தலைவர்கள் பற்றியும் வகைவகையாக வண்ண வண்ணமாகப்  பொய் அலங்காரங்கள் செய்து வரலாற்றைக் கட்டி எழுப்புகிறார்கள். இறந்த தலைவர்களின் வாழ்க்கையில் நிகழாதவற்றையும் இவர்களின் எழுத்துகளில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள். அப்பாவிகளாகிய நாம் அவற்றை அப்படியே நம்பித்தான் ஆக வேண்டி இருக்கிறது. சரி பார்க்கத் தரவுகளும் இல்லை. சாட்சிகளும் இல்லை. தமக்கு வேண்டாதவர்களைப் பற்றி விதவிதமான விரோதமான புனைவுகளை மெய்போல் தோன்றுமாறு எழுதியும் தாழ்த்துகிறார்கள். போட்டோ ஷாப் என்ற படக்கடை மென்பொருள் வழியாகப் புனைவு ஆதாரங்களை வரைகிறார்கள்.

     வரலாறு என்பது ஆடை உடுத்தாமல் நிர்வாணமாகவே இருக்க வேண்டும். ஆல இலையளவு ஆடை உடுத்தினாலும் ஏதோ ஒன்று மறைக்கப்படும். ஆனால் சில வரலாறுகள் ஒப்பனைகளாலும் கற்பனைகளாலும் ததும்பி வழிகின்றனவோ என ஐயுற வேண்டி உள்ளது.

     சமூக ஊடகங்களில் வெளிவரும் தகவல்களில் உண்மையைப் பிரித்து எடுக்கும் வல்லமை தாராயோ?

Series Navigationசூரிய வம்சம் – நினைவலைகள். சிவசங்கரி. (வானதி பதிப்பகம்). (பகுதி 1 & 2)தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்
author

Similar Posts

3 Comments

  1. Avatar
    Dr J Bhaskaran says:

    உண்மைதான். பிரபலங்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் புனைவு கலந்து எழுதுவது, வரலாற்றை மாற்றும் முயற்சியாகும். கண்ணதாசன், எம் எஸ் வி, உ. வே. சா., காஞ்சிப் பெரியவர் எல்லோரைப் பற்றியும் வரும் செய்திகளில் பல முறண்கள் – உண்மை தெரிந்தவர்கள் அவ்வப்போது சரி செய்வது அவசியம்!

    1. Avatar
      BSV says:

      //எல்லோரைப் பற்றியும் வரும் செய்திகளில் பல முறண்கள் – உண்மை தெரிந்தவர்கள் அவ்வப்போது சரி செய்வது அவசியம்!//

      சரி செய்ய எவராவது முனைந்தார்களென்றால், கொலை மிரட்டல் விடுவார்கள்; ‘நூலைத் திரும்ப வாங்கு’; பதிப்பகத்துக்கு மிரட்டல் என்பதுதான் இந்திய வாழ்க்கை இப்போது. நம் கண்முன்னே வாழ்ந்த ஓர் ஆளுமையைப் பற்றி கூட உண்மையாக எழுதக்கூடாது. அவரைப் புகழ்ந்தே எழுத வேண்டும். இதன்படி, மிரட்டல் விடும் கூட்டம் தனக்கு வசதியாக வரலாற்றை மாற்றி எழுதிக்கொண்டு அதை ‘உண்மை தெரிந்தவர்கள் அவ்வப்போது சரி செய்ய’ முயன்றால் கொலை செய்யவும் துணிவார்கள்.

      பல எடுத்துக்காட்டுகள் வைக்க முடியும். ஒன்று, சில பத்தாண்டுகளுக்கு முன், மராட்டிய சிவாஜி பற்றி ஒரு வரலாற்றாராய்ச்சி நூல் எழுதினார் ஓர் அமெரிக்க வரலாற்றாய்வாளர். அதில் கூறப்பட்டவை சிவசேனையர்களுக்குப் பிடிக்கவில்லை. இந்தியாவுக்குள் நுழைந்தால் தலையை வெட்டுவோம் என்றார்கள். புனேயில் உள்ள டெக்கான் நூலகம் அவருக்கு நூல்கள் கொடுத்து உதவியதால் அந்நூலகம் எரிக்கப்பட்டது.

      தமிழ்நாட்டில் இராஜைராஜன் எங்க ஜாதி என்று 7 ஜாதி அமைப்புக்கள் சண்டையிடுகின்றன.

      தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் அனைவருமே உத்தமர்கள்; அவர்கள் ஆட்சி பொற்காலம் என்று மட்டுமே சொல்லவேண்டும். இல்லாவிட்டால் கொலை மிரட்டல் விடப்பட்டும் நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு போடப்படும்.

      இப்போதும் வருங்காலத்திலும் நம் சந்ததியர்கள் கற்கப்போவது வசதியாக மாற்றப்பட்ட வரலாறு மட்டுமே.

  2. Avatar
    Valavaduraiyan says:

    சிலநேரங்களில் இப்படித்தான் ஆர்வம் அதிகம் உள்ளவர்கள் அவசரக் கோளாறினால் பதிவு செய்து விடுகிறார்கள். நான் பல இடங்களில் படித்தவற்றின் படி பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடுவதைக் கேட்டுத்தான் வாலி மனம் மாறினார் என்பதுதான். வரலாற்றுப் பதிவுகளச் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.கவனத்தில் கொண்டு வந்த மன்றவாணன் பாராட்டுக்குரியவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *