மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று

author
0 minutes, 6 seconds Read
This entry is part 11 of 23 in the series 26 ஜூலை 2020

அழகர்சாமி சக்திவேல்

விஜயா என்கிற விஜயன்

சிங்கப்பூர் காலாங் எம்ஆர்டிக்கு பக்கத்தில் இருந்த, அந்த பழைய அடுக்குமாடி வீட்டில், நான் அந்தப் பகல் வேலையிலும், எனது தனியறையில், தூங்கிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல, அப்பாவின் அதட்டல் கேட்டு, நான் விழித்துக்கொண்டேன்.  

“பகல்லே, ஒரு பொண்ணு, இவ்ளோ நேரம் தூங்குற அளவுக்கு, ஏன் அந்த ராத்திரி வேலைக்குப் போகணும்? சிங்கப்பூர்லே.. இல்லாத வேலைகளா? ஏன், நீ, வேற வேலைக்குப் போனாதான் என்ன விஜயா?”.. படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முடியாத என் நோயாளி அப்பா,  எப்பவும் புலம்பும், அதே புலம்பல்கள்தான்,

“என்னாலேதான், ஒரு வேலைக்குப் போக முடியாத அளவுக்கு, உடம்பு நிறைய நோய்களோடு. படுத்த படுக்கையாயிட்டேன் இல்லேன்னா, உன்னைய, இந்த மாதிரி ராத்திரி வேலைக்கு எல்லாம் அனுப்புவனா விஜயா?: மறுபடியும் அப்பாவின் புலம்பல்.

“அப்பா.. போதும்பா”… நான், கைகளை வெட்டி முறித்துக்கொண்டே, எழுந்தேன். வானொலியில், ஒலி 96.8-இல், பழைய பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.

“காயா இது பழமா.. கொஞ்சம் தொட்டுப் பாக்கட்டுமா..

படு சுட்டி.. இளங்குட்டி.. தண்ணித் தொட்டியில் அமுத்தட்டுமா.

பறிச்சாலும், துணி போட்டு மறைச்சாலும் கண்ணே..

பளிச்சென்று தெரியாதோ இளமாங்காய் முன்னே”

பாட்டைக் கேட்டவுடன், திடீரென்று, நான் எரிச்சல் ஆனேன். “அப்பா.. அந்த வானொலியை நிறுத்துங்கள்”, நான், என் அறையில் இருந்து கத்தினேன். படுத்திருந்த, அப்பா, ரிமோட் கொண்டு, அவசரம் அவசரம் ஆக, வானொலியை, நிறுத்தினார். “என்னம்மா ஆச்சு” அவர் குரலில், கவலை இருந்தது. நான், பதில் பேசாமல், கண்ணாடியில் தெரிந்த, என் பெரிய மார்பகங்களைப் பார்த்தேன்.

“என்னை, எரிச்சலூட்டும், அந்த மார்பகங்கள், எப்போது என்னை விட்டு அகலும்? மார்பகங்கள் நீக்கும் அந்த ஆபரேசனுக்குத் தேவையான, பணத்தை நான் எப்போது சேர்த்து முடிப்பேன்? எப்போது, நான் ஆண் போல் மாறுவேன்? விடை தெரியாத அந்தக் கேள்விகள் என் மனதை அரிக்க, நான் ஏக்கப் பெருமூச்சுவிட்டேன்.

அந்த ஏக்கங்களுடனே குளிக்கப் போனேன். குளிக்கும்போதும், நிர்வாணமான எனது உடம்பை உறுத்திய, அந்தப் பெரிய மார்பகங்கள்..

நான், மௌனமாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.  “அப்பா.. மதிய சாப்பாடு என்ன வேணும்? கீழே போய், கடையிலே, ரெண்டாங் சிக்கனும், நாசிலெம்மாவும் வாங்கிட்டு வரட்டுமா?”. அப்பா “சரி” என்று, தலையாட்ட, நான், அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின், கீழே இருந்த, மலாய் உணவகத்துக்குள் நுழைந்தேன்.

அப்போதுதான், நான் செய்த, அந்தத் தவறு புரிந்தது. நான், என் மார்பகங்களை, அழுத்திப்பிடித்து, மறைக்கும், அந்த பைண்டர் போட, மறந்து வந்து விட்டேன்.

கடையில், சில ஆண்கள், எனது பெரிய மார்பகங்களையே, வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதை, நான் என் ஓரக்கண்ணால் கவனித்தேன். எனக்கு, உடனே, வானொலியில் ஒலிபரப்பான, அந்த மாங்கனிகள் பாட்டு, நினைவுக்கு வந்தது. “ம்ம்.. எனக்கு பாரமாகத் தெரியும் எனது மார்பகங்கள், இந்த ஆண்களுக்கு, மாங்கனிகள் ஆகத் தெரிகிறது”. எனக்கு சிரிப்பு வந்தது.

புன்னகையுடனே, லிப்ட் பிடித்து, வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பாவும், நானும் பேசாமல சாப்பிட்டோம்.

இனி, நான், லிட்டில் இந்தியாவில், முஸ்தபா பில்டிங்கிற்கு, பின்னால் இருக்கின்ற ரோட்டில் நடக்கும், எய்ட்ஸ் சமூக சேவைக்குப் போகவேண்டும். நான் பேண்ட், சர்ட் மாட்டிகொண்டு, தயாரானேன்.

மறக்கமால், என் மார்பகங்களை, அழுத்தி மறைக்கும் பைண்டர் அணிந்து கொண்டேன்.

தேவன் என்கிற தேவி

சிங்கப்பூர் கேலாங்கில் இருந்த, அந்த கேளிக்கை விடுதியின், ஒரு அறையில், அந்தப் பகல் வேளையில், நான் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தேன். இன்னொரு அறையில் இருந்த வியட்நாம்காரி போட்ட சத்தத்தில், எனக்கு விழிப்பு வந்து விட்டது.

அந்தக் கட்டிடத்தின் பெயர்தான் கேளிக்கைவிடுதி. ஆனால், நடப்பது என்னவோ செக்ஸ் தொழில்தான். இப்போதுகூட, அந்த வியட்நாம்காரி கூச்சல் போடுவது, அவளோடு செக்ஸ் முடித்த பின்னர், பணம் குறைத்துக் கொடுக்கும், ஒரு ஆண் வாடிக்கையாளரிடம்தான்.

நான், படுக்கையில் இருந்து, கண்ணாடி அருகே எழுந்து வந்தேன். பூப்பூவாய்ப் போட்ட, அந்த நைட்டியில், நானே, எனக்கு ஒரு அழகான பெண்ணாய்த் தெரிந்தேன்.

ஆனால், எனது சப்பிப் போன ஆண் மார்பகங்கள். நான், இப்போது எனது மார்பகங்களையே கவனித்துக்கொண்டு இருந்தேன்.

என்னைப் போலவே திருநங்கை ஆக வாழும், இன்னொரு திருநங்கை ராணி அக்கா, ஏற்கனவே எழுந்து, குளிக்கப்போய் இருந்தாள். வானொலியில், ஒலி 96.8-இல், பழைய பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது.

“காயா இது பழமா.. கொஞ்சம் தொட்டுப் பாக்கட்டுமா..

படு சுட்டி.. இளங்குட்டி.. தண்ணித் தொட்டியில் அமுத்தட்டுமா.

பறிச்சாலும், துணி போட்டு மறைச்சாலும் கண்ணே..

பளிச்சென்று தெரியாதோ இளமாங்காய் முன்னே”

அந்தப் பாட்டு, எனக்கு ஒரு சந்தோசத்தைக் கொடுத்தது. நான், வானொலியின் சத்தத்தைக் கூட்டினேன்.  

“என் மார்பகங்களையும் வர்ணித்துப் பாட, ஒரு ஆண் எப்போது வருவான்?. மார்பகங்கள் பொருத்திப், பெண்ணாய் மாற்றும், அந்த அறுவை சிகிச்சையை, நான் எப்போது செய்து கொள்வேன்? அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை, நான் எப்போது சேர்த்து முடிப்பேன்” என் மனதில், நிறையக் கேள்விகள். நான், இப்போது ஏக்கப்பெருமூச்சு விட்டேன்.

ராணி அக்கா, குளித்து வந்துவிட்டாள். நான், குளியல் அறைக்குள் போனேன். வானொலி பாடிய, அந்த மாங்கனிப் பாட்டை நான் முணுமுணுத்துக் கொண்டே, எனது மார்பகங்களைத் தேய்த்துக் குளித்தேன். நேற்று இரவு வந்த, வாடிக்கையாளர்களால் உண்டான, எனது உடல் வலிகள், எனக்குச் சுத்தமாக மறந்து போனது.

நான் குளித்து முடிப்பதற்குள், ராணி அக்கா, கீழே உள்ள சீனக்கடையில், சீ ஃபுட் ஹார்பன், வாங்கி வந்து இருந்தாள். நானும், அவளும் சேர்ந்து சாப்பிட்டோம். மனது ரொம்ப அமைதியாய் இருந்தது.  

இனி, நான், லிட்டில் இந்தியாவில், முஸ்தபா பில்டிங்கிற்கு, பின்னால் இருக்கின்ற ரோட்டில் நடக்கும், எய்ட்ஸ் சமூக சேவைக்குப் போகவேண்டும். நான் கவுன் மாட்டிகொண்டு, தயாரானேன்.

மறக்காமல், என் மார்பகங்களை, பெரிதாக்கிக் காட்டும், கப் பிரா அணிந்து கொண்டேன்.  

விஜயா என்கிற விஜயன்

நான், இன்று சீக்கிரமே முஸ்தபா ஷாப்பிங் சென்டருக்குப், பின்னால் நடக்கும், அந்த எய்ட்ஸ் சமூக சேவைக்கு வந்து சேர்ந்து விட்டேன். நான், என் கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். எய்ட்ஸ் சமூகசேவை, ஆரம்பிக்க, இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. காபி சாப்பிடவேண்டும் போலத் தோன்றியது. பக்கத்தில் இருந்த, ஆனந்த பவனுக்குள், போய் ஒரு காபி ஆர்டர் செய்து விட்டு, ஒரு ஆள் இல்லாத, மேசையில் உட்கார்ந்து கொண்டேன்.

உள்ளே உள்ள ஆட்களை நோட்டமிட்டேன். ‘எத்தனை விதமான மக்கள். எத்தனை விதமான நிறம். எத்தனை விதமான மொழி. எத்தனை விதமான நாட்டு மக்கள். இத்தனை வேற்றுமைகளையும், ஏற்றுக்கொள்ளும் மக்கள், எனக்குள் இருக்கும், இன வேற்றுமையை மட்டும், எள்ளி நகையாடுவது ஏன்?’ என் மனம், நான் கடந்து வந்த பாதைக்குள் பயணித்தது.

எட்டு வயதிலேயே, என் மனப்போராட்டம் ஆரம்பித்துவிட்டது. ஒரு ஆண் பிள்ளை போல, ஓடி, ஆடி, விளையாடிக்கொண்டிருந்த எனது மனது, நான் பெண் என்பதை, அந்த வயதிலேயே, ஒத்துக்கொள்ள மறுத்தது.

அப்பா, அம்மா, இருவருமே படிக்காதவர்கள். என் பிரச்சினையைப் புரிந்துகொள்ளும், திறனும், அவர்களுக்கு இல்லை. அம்மாவிடம் சொல்லலாம் என்று நினைத்தபோது, ஏழ்மையின் பிடியில் சிக்கித்தவித்து, அம்மா, சீக்கிரமே இறந்து போனாள்.

அப்பாவோ பயங்கரக் கோபக்காரர். அதனால், நான், அந்த வயதிலேயே, அவரிடம், அதிகம் பேசாது, விலகித்தான் இருந்தேன். எனவே, என் மனப்போராட்டத்திற்குப் பதில் சொல்ல, அந்த வயதில், எனக்கு யாருமே இல்லை.

சின்னதாய் இருந்த, அந்த மனப்போராட்டம், நான் வயதுக்கு வந்த போது, பயங்கரமாய், விஸ்வரூபம் எடுத்தது.  

எனக்கு முன்னர், வயதுக்கு வந்த, பள்ளிப் பெண்கள் எல்லாம், தங்கள் திடீர் மார்பக வளர்ச்சி குறித்து, என்னிடம் கதை கதையாய்ச் சொல்வார்கள். ‘எங்கே என் மார்பகமும் அப்படி வளருமோ?’, என்ற அச்சம், எனக்கு, அப்போதே வரத்தொடங்கியது. ‘பெண் உடம்பு, ஆண் மனது’ என்ற எனது போராட்டத்தில், மற்ற மாணவிகளிடம் இருந்து, நானே, என்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட, கொடுமையான காலம் அது.

“நான் பெண் அல்ல.. ஒரு ஆண்” என்ற, எனது மன உளைச்சல் அதிகமானபோது, உயர்நிலைப் பள்ளிக்குப் போக, எனக்குப் பிடிக்காமல் போனது. நான், கல்வி கற்கப் போவதை, கொஞ்சம் கொஞ்சமாய் நிறுத்தினேன்.

பள்ளி போவதை நிறுத்தியதால், அப்பா முதலில் மிரட்டினார். உடன், நான் அழுத அழுகையைப் பார்த்து, “சரி போ” என்று விட்டுவிட்டார்.   

நான் வயதுக்கு வந்ததைப் பார்த்து, அப்பாவுக்கு ரொம்ப சந்தோசம். சொல்லிக்கொள்ளும், அளவிற்கு சொந்தங்கள் எங்களுக்கு இல்லாததாலும், ஏழ்மையான சூழ்நிலையாலும், எனது பூப்புனித நீராட்டு விழா, மிகவும் எளிமையாகவே இருந்தது. பெண் என்பதால், என்னிடம் கொஞ்சம் விலகியே இருந்த எனது அப்பா, நான் வயதுக்கு வந்த பிறகு, எனது அறைக்கு வருவதையே குறைத்துக்கொண்டார்.

ஆண்கள் அணியும் உடை, ஆண்கள் நடக்கும் நடை, ஆண்கள் பார்க்கும் படம் என்று, எனக்குப் பிடித்தாற்போல நான் நடந்து கொள்ள ஆரம்பித்தேன். அப்பா நுழையாத எனது அறை, அப்படி நான் ஆண் போல நடந்துகொள்ள, மிகவும் தோதாக இருந்தது.

கொஞ்ச நாளில், வாதம் வந்து படுத்த படுக்கையானார் அப்பா. பாழாய்ப்போன சர்க்கரை நோய், ஏழை, பணக்காரன் என்று பார்த்தா வருகிறது. எனது அப்பா, மனமொடிந்து போனார். ஆனால் நான் மனம் தளரவில்லை.

வீட்டு வாடகை, சாப்பிட உணவு, அப்பாவிற்கு மருந்து, என்று ஆகும் செலவை சமாளிக்க, நான் வேலைக்குப் போக ஆரம்பித்தேன்.

வேலைக்குப் போய், எனக்கு என, நான் முதலில் வாங்கிக்கொண்ட பொருள், எனது மார்பகங்களை அழுத்திப் பிடிக்கும், அந்த பைண்டர்தான். பைண்டர் போட்டு, வெளியில் திமிறும் மார்பகங்களை உள்ளுக்குள் அடக்கி, ஆண்கள் ஜீன்ஸ், ஆண்கள் சர்ட் போட்டு, நான் கம்பீரமாய், வேலைக்குக் கிளம்புவேன்.

படுத்த படுக்கையாய் ஆகிப் போன அப்பா, இதையெல்லாம், யோசித்து, ஆராய்ந்து பார்க்கும், நிலையிலேயே இல்லை.

நான், படிக்காவிட்டாலும், ஆரம்பத்தில், ஓரளவிற்கு வருமானம் வரும் அளவிற்கு, எனக்கு நல்ல நல்ல வேலைகள், கிடைத்தது. ஆனால், பெண்ணுக்குள் இருந்து கொண்டு, ஆணாய் வாழும் என்னால், எந்த வேலையிலும், நிலைத்து நிற்கமுடியவில்லை. என்னையும், எனது ஆண் தன்மையையும், பார்த்து, நிறைய கேலிகள். கிண்டல்கள்தான் தொடர்ந்தது. நான், சொற்ப காலத்தில், நிறைய வேலைகள் மாறிவிட்டேன்.

கடைசியில், மனம்வெறுத்துப் போய்த்தான், இந்த மதுபாரில், வேலை செய்ய ஒத்துக்கொண்டேன். சாயந்திரம், வீட்டை விட்டுக் கிளம்பினால் போதும். வீடு திரும்பி வர, நள்ளிரவு கடந்து விடும். கிட்டத்தட்ட மூன்று மணிக்கு, வீடு திரும்பும் எனக்கு, பகல்த் தூக்கம் பழகிப்போனது நியாயம்தானே?.

இந்த மதுபார் வேலையில், வருமானம் குறைவுதான். ஆனால், என் ஆண்மை, அங்கீகரிக்கப்படுகிறது, என்ற மனநிறைவு, எனக்கு, வேலையில் சேர்ந்த, ஆரம்பத்தில் இருந்தே, ஏற்பட்டுப் போனது. இங்கேதான், எனது ஆண்மையில் மயங்கிய, சில பெண்களின் நட்பும் எனக்குக் கிடைத்தது. நான் அடிக்கடி, அது போன்ற பெண்களை, எனக்கு அறைக்குக் கூட்டி வர ஆரம்பித்தேன்.

ஆனால், வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு, அப்பா மருத்துவச் செலவு என்று திக்குமுக்காடும் சூழலில், என்னால், எனது ஆணாகும் அறுவைச்சிகிச்சைக்கு, கொஞ்சம்கூட பணம் சேர்க்கமுடியவில்லை, என்பது மட்டுமே, இன்றளவும் தொடரும், எனது பெரிய மனக்குறை.

இதோ, நான் காபி குடித்து முடித்துவிட்டேன்.  எய்ட்ஸ் சமூகசேவை செய்யும் நேரம், வந்துவிட்டது. நான் முஸ்தபா பில்டிங் பின்புறம் நோக்கி நடந்தேன்.

தேவன் என்கிற தேவி

எய்ட்ஸ் சமூக சேவைக்காய், முஸ்தபா சென்டர் போக, நான் 67 பஸ் பிடிக்கவேண்டும். போட்டிருக்கும் கவுன் தடுக்கி விடாமல், பஸ்நிறுத்தம் நோக்கி, நான் வேகமாக நடந்தேன். நான் பஸ்நிறுத்தம் போவதற்கும், 67 பஸ் வருவதற்கும், சரியாக இருந்தது. என்னுடனே, ஊரிலிருந்து வந்த, சில தமிழ் வாலிபர்களும், பஸ்ஸில் ஏறினார்கள். என்னை, அவர்கள் பார்த்த குறுகுறுப் பார்வையில், வித்தியாசம் தெரிந்தது.

அவர்கள் பார்வையில் தப்பு இல்லை. என்ன இருந்தாலும், நான் செக்ஸ் தொழில் செய்பவள்தானே. அவர்களின் இந்தப் பார்வைதானே எனக்கு வருமானம் கொடுக்கிறது?. ஆனாலும் எனக்கு ஒரு சின்ன ஆசை. இவர்களில், எவனாவது ஒருவன், என்னை, நிரந்தரமாக வைத்துக்கொள்ள முன்வருவானா? ஏக்கத்துடன், என மனம் தவித்தது. பஸ் முன்னோக்கிப் போனாலும், என் மனம் பின்னோக்கிப் போனது.

எனது, இருபத்தி ஒரு வயதில் நான் வீட்டை விட்டு ஓடிவந்தவள். ஆண் உடம்புக்குள் இருக்கும் அந்தப் பெண் மனதை, கடைசிவரை, எனது பெற்றோர்கள் புரிந்துகொள்ளவில்லை. பத்து வயதில் ஆரம்பித்த அந்த அவமானங்கள், ஏச்சுக்கள். பேச்சுக்கள், அடிதடிகள், எனது இருபத்தி ஒரு வயது வரைக்கும் தொடர்ந்தது. பெற்றவர்கள் மீது இருந்த எனது மதிப்பு, எல்லாவற்றையும், வெளியில் சொல்லாது, பொறுத்துக் கொள்ளச் சொன்னது.

ஆனால், ஒரு நாள், என்னைப் பெற்றவளே, “செத்துப் போ சனியனே” என்று, ஏசியபோது, என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டுக் கிளம்பி, நிரந்தரமாக வெளியே வந்து விட்டேன்.

நான் வெளியே வந்தபோது, திருநங்கை அக்கா ராணிதான், ஆதரவு கொடுத்தாள். மறைமுகமாக செக்ஸ் தொழில் நடக்கும், இந்தக் கேளிக்கை விடுதிக்குக் கூட்டி வந்து, அவள் அறையிலேயே, என்னைத் தங்கச் சொன்னாள்.

“தேவி.. செக்ஸ் தொழில் செய் என்று, உன்னை ஒருபோதும் நான் வற்புறுத்த மாட்டேன். ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொள். மற்ற வேலைகளில், வருமானம் அதிகமாகக் கிடைத்தாலும், ‘ஒன்பது.. ஒன்பது’ என்று, அவமானப்படுத்தியே, நம்மை, வேலையை விட்டுத் துரத்தி விடுவார்கள். ஆனால், இங்கே அப்படி இல்லை. அவமானம் அவ்வப்போது வரலாம். என்றாலும், பணத்துக்குப் பணம், சுகத்துக்கு சுகம் என்று எல்லாமே இங்கே உண்டு. நீ ஆற அமர, யோசித்து முடிவெடு” ராணி, சொல்லிவிட்டுக் கீழே போய் விட்டாள். நான் குழம்பினேன்.

ஒரு பெண்மனது கொண்ட ஆணாய், நான் பள்ளியில் படிக்கையில், என்னைக் கிண்டல் செய்து, பள்ளிப்படிப்பை விட்டே, ஓட வைத்த, எத்தனையோ மாணவ ஆண் நண்பர்களை, நான், ஏற்கனவே பார்த்து விட்டேன், வேலைக்குச் சென்ற இடங்களில், காறிக் காறித் துப்பிய, எத்தனையோ ஆண்களை, நான், ஏற்கனவே பார்த்து விட்டேன். ஆனால், இங்கேயோ, திருநங்கையான, ராணி அக்காவின் உடம்புக்கு அலையும் ஆண்களை, நான் இப்போதுதான் பார்க்கிறேன்.

ராணி அக்காவைத் தேடி வருகிற ஆண்களை, நான் நோட்டமிட ஆரம்பித்தேன். எல்லோரும், கட்டு மஸ்தான ஆண்கள். வித விதமாய் நிறங்களில், விதமான மொழிகளில். விதவிதமான ஆசைகளில். அங்கே வந்த, ஆண்களைப் பார்க்க, பார்க்க, எனது பெண் மனது பரிதவிக்க ஆரம்பித்தது. 

பத்து நாட்கள், ராணி அக்கா, என்னை எதுவும் கேட்கவில்லை. பதினோராவது நாள், நாங்கள் இருவரும், சேர்ந்து சாப்பிடும்போதுதான், மறுபடியும் கேட்டாள். “என்ன தேவி.. என்ன முடிவெடுத்து இருக்கிறாய்?” என்றாள். “சரிக்கா.. நானும் செய்யுறேன்”.. நான் தலை ஆட்டினேன். ராணி அக்கா, இப்போது என்னையே உற்றுப் பார்த்தாள்.

“தேவி… நீ இன்னும் மஞ்சள் அட்டை வாங்காமல், செக்ஸ் தொழிலுக்கு வருகிறாய். சிங்கப்பூர் சட்டப்படி, இது குற்றம் என்பது உனக்குத் தெரியுமா?” என்ற அவளது கேள்வி, எனக்கு, பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது.

“மஞ்சள் அட்டைன்னா என்னக்கா?” நான் அப்பாவியாய் வினவினேன்.

“பெண் அறுவை சிகிச்சை செய்துகொள்ளாத நம்மால், மஞ்சள் அட்டை என்ற செக்ஸ் தொழில் லைசென்ஸ் பெற்று, தொழில் செய்ய முடியாது. அதனால், ரோட்டில், நடைமேடையில் நின்றுதான், வாடிக்கையாளர்களைக் கவரமுடியும்.” சொல்லிவிட்டு கீழே தொழிலுக்குப் போனாள் ராணி அக்கா.

67 பஸ் டிரைவர், திடீரென பிரேக் போட, பஸ் குலுங்கியது. பஸ் குலுக்கிய குலுக்கலில், எனது நினைவு திரும்பியது.

பஸ், இப்போது வீராசாமி ரோட்டிற்கு எதிரில் நின்றது. நான், பஸ்ஸை விட்டு இறங்கினேன்.

“என்னா.. லிட்டில் இந்தியாவில்தான், இன்னைக்கு உன்னோட தொழிலா?”, என்னுடனே, பஸ்ஸில் இருந்து இறங்கிய, தமிழ் வாலிபர்களில் ஒருவன் கிண்டலாய்க் கேட்டான்,. எனக்குக் கோபம் வரவில்லை.

“ஏன் வறீங்களா?” என்று நான் வினவினேன்.

“சும்மாக் கேட்டேன்.” என்று அவன் வழிந்தான்.

“சும்மாவெல்லாம் கேள்வி கேட்க வேணாம்.. காசு கொடுத்துட்டுக் கேளுங்க.. எல்லாத்துலேயும் ஓசியா” நான், விடாமல், அவன் மூக்குடைத்தேன்.

“என்ன பிரா.. பெரிசா இருக்கு, உள்ளே மாங்கனிகள் இருக்கா.. இல்லே.. காத்து இருக்கா?”. இந்தக் கேள்வியை மட்டும், என்னால், தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான், அவமானத்தால், கூனிக்குறுகினேன்.

அவன், என்னைப் பார்த்து, இப்போது, நக்கலாய்ச் சிரித்தான். கூட, நின்று கொண்டு இருந்த அவன் நண்பர்கள், “டே.. வாயை மூடிக்கிட்டு வாடா” என்று அவனை இழுத்துக்கொண்டு நடந்தார்கள்.

அவமானப்படுத்திப் பேசிய அவனை, நான் இப்போது சிங்கப்பூர் போலீசில் பிடித்துக்கொடுக்க வேண்டும். ஆனால், அதுதான் முடியாதே.. ஏனென்றால், என்னிடம்தான் மஞ்சள் அட்டை இல்லையே?”

நானும், அந்த வாலிபர்களைப் பின்தொடர்ந்து, சமூகசேவை நடக்கும். முஸ்தபா செண்டர், பின்புறம் நோக்கி நடந்தேன். கால்கள் வேகவேகமாய் நடந்தது. மனம் மட்டும் வலித்தது.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]வெகுண்ட உள்ளங்கள் – 9
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *