கடல்புத்திரன்
பத்து
மூன்று நாள் கழித்து திலகன் மன்னிட்ட… வந்தான். செல்லன் வீட்டு வளவிலே இருந்த கனகனைக் காண வந்தான். எல்லாப் பகுதியிலும் வடிவேலின் இறப்புச் செய்தி பரவியிருந்தது. “என்னடாப்பா , அவனைக் கொன்றே விட்டார்களாம் என்றான்.
“நீ , என்ன புதிதாய் அறிந்தாய் ?” என்று கனகன் கேட்டான்.
ஒவ்வொரு பெரிய மரணங்களின் போது பல வித கதைகள் உலவுவது வழக்கம். “பெரிய” என்றது ஒரளவு அநியாயத் தன்மை கொண்டதைக் குறிக்கும்.
“கரையில்.பறி கொடுத்தது.பற்றிய விசாரணை தான் அவனை சாவில் தள்ளி விட்டது போல் படுகிறதடா.” என்றான்.
வடிவேலுக்கும் யாழ் பிரதேசப் பொறுப்பாளர்க்கும் மத்தியில் முன்னமே கசப்புகள் இருந்தன. இந்த சந்தர்ப்பத்தில் விசாரணை, அது, இது என அவமானப் படுத்தி அவனை வெகுவாக வெருளச் செய்து விட்டார்கள். அதிருப்தியுற்ற அவன் விலகல் கடிதத்தைக் கையளித்திருக்கிறான். அவன் அந்த இயக்கத்திற்கு விசுவாசமாக உழைத்தவன். ஒருமுறை இவர்களுக்கு போட்டியாக முளைக்க முயன்ற சிறு குழுவோடு முழுக்க “டீல்” பண்ணியவன் இவன் என்பர். தபால் கந்தோர், வங்கிக் கொள்ளை, சிவில் நிர்வாகப் குழப்பல் …இவற்றில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த குழுக்களில் குமரனின் குழுவும் ஒன்று.அவன் வடிவேலனின் இயக்கத்தை குரு பீடத்தில் வைத்து மரியாதை செலுத்தி வந்தவன்.
ஐக்கியமின்மையால் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் தன் குழுப் போக்கிலே இயங்கி வந்தான். வளர்ச்சியின் ஒரு கட்டமாக அரச படைகள் வருகிற பாதையில் கண்ணி வெடி வைத்து விட்டு அருகிலிருந்து பனங்காணியில் பல நாளாய் காத்துக் கிடந்தான். ஊர் அவன் முயற்சியை அறிந்திருந்தது. மோதிரக் கையால் குட்டு வாங்கணும் என்ற விசித்திர ஆசை அவனைப் பிடித்திருந்தது. நிலக் கண்ணி வெடிப்பில் சாதனை படைத்த அவ்வியக்கத்திற்கு அழைப்பு அனுப்பினான். ‘வந்து வெடி ஏற்பாடுகளை பார்வையிட்டுக் குறைகள் இருந்திருந்தால் தெரிவிக்க’ச் சொல்லி கேட்டான்.
அந்த நேரம் இந்த வடிவேலின் தலைமையி லே ஒரு குழுவை இயக்கம் அனுப்பியது. எல்லாவற்றையும் சரி பார்த்தது. “திறமாக வைத்திருக்கிறீர்கள்” என்ற கருத்து தெரிவித்தவன், எதிர்பாராத தருணத்தில் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து குமரனை, நேரே சுட்டு விட்டு அகன்றான். தமிழ் சினிமாப் பட உலகம் போல இங்கையும் நடக்கிறது.
அவனை காம்பிலே வந்து பதிலளிக்கச் சொல்லி பொறுப்பாளர் கட்டாயப் படுத்திய போது அவன் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவன், யாழ் பொருப்பாளர் சேர முதலே இயக்கத்தில் சேர்ந்தவன்,சீனியரிட்டி !. அவனை தோழர்கள் நெருங்கிய போது சயனைட்டைக் கடித்து செய்தியாகி விட்டான். அதன் எதிரொலியாக அப்பகுதியிலிருந்து பல நண்பர்கள் விலகல் கடிதங்களை கையளித்தார்கள். கோட்டையாக இருந்த அப்பகுதி , ஒரு வாரத்திலே மறுப்பைக் காட்டி நிற்கிறது.
எல்லா இயக்கங்களிலும் உள்ளுக்குள் இப்படி நடக்கும் குழப்பங்களை தடுத்து நிறுத்த மேலே பலமான ஒரு அமைப்பு அல்லது ஐக்கிய அமைப்பு கட்டப்படாமலே இருந்தது. எனவே கட்டுப் பாடற்ற போக்கில் நிகழும் குழப்பங்கள் தொடர்ந்தன. விடுதலைக்கான நம்பிக்கையை அது பெருமளவில் சிதைத்தது.
மணி, இருவருக்கும் தேத்தண்ணி கொண்டு வந்தாள். குசினியை வெளிய வந்த அவளின் அம்மா, “தம்பியைக் கண்டு கனகாலம்” என்று முகமன் விசாரித்தார்.
“இங்காலை அவ்வளவாக அலுவல் இருக்கவில்லையக்கா” என்று மரியாதையாகப் பதிலளித்தான். மணியை அவன் ஏக்கத்தோடு பார்ப்பதை கனகன் பார்த்தான்.
அவள் அழகு திலகனை மயக்கியது. கழுத்தில் முடிச்சுப் போட்டு வாழும் காலம் வருமா? என்ற எண்ணம் அவனை வாட்டியது. செல்லன் வர அவனோடும் மரியாதையாக கதைத்து விட்டு திலகன் போய் விட்டான். அக்காவோடு நின்ற இரண்டு நாளும் அவனைக் காணவும் வந்தான். பிறகு தீவுக்குப் போய் விட்டான்.
கனகனுக்கு வலையில் நாட்கள் போவது வேகமாகப் பட்டது.
அவன் வலையை கிளறிக் கொண்டிருந்த போது செல்வமணியும் தாயும் வாசிகசாலையில் சினிமாப் படம் ஒடினம் என கிளம்பினார்கள். கமலம் அண்ணி விட்டை போயிருப்பாள் என நினைத்தான்.
வீடு அமைதியாகவிருந்தது. உல்லாசமாக வாய் காதல் பாட்டொன்றை முணு முணுத்தது. செல்லன் சிறிது தள்ளாட்டத்தோடு வந்தான். நிறைய ‘கள் அடித்திருக்க வேண்டும்’“தம்பி இண்டைக்கு சிறிது உள்ள போய் (ஆழ்கடல்) போடணும். சுறுக்காய் முடி “ என அவனும் குந்தி வலையை இழுத்து செக் பண்ணினான். கடல் மனிதன் இல்லையா?எவ்வளவு அடித்தாலும் கம்பு போலவும் (நிமிர்ந்து) நிற்கிறான்.“அட பெரிய ஒட்டையாய் கிழிந்திருக்கிறதே” என்றவன் “நூல் முடிஞ்து ‘தம்பி, உள்ளுக்க போய் யன்னல் கட்டிலே வைச்சிருக்கிற நூலை ஒருக்கா எடுத்து வா” என்று கூறினான்.
ஒருவேளை, கமலம் இருப்பாளோ? என்ற சந்தேகம் எழ, கால்கள் தயங்க நின்றான்.“யாருமில்லை போய் வா தம்பி” என்று அவன் வற்புறுத்த உள்ளே சென்றான். யன்னல் கட்டை தடவுற போது வெளிக் கதவை செல்லன் அறைந்து பூட்டியது கேட்டது. சடாரெனத் திரும்பியவன் “என்ன வேணும்” என்ற கமலத்தின் குரலைக் கேட்டான். அவள் சட்டை ஒன்றைத் தைத்துக் கொண்டிருந்தாள். ‘கர்மம் பிடிச்சவள், இருட்டிலே இருந்து என்னத்தைத் தைத்துக் கொண்டிருக்கிறாள்? அவளிலே கோபமும் வந்தது. வெளியில் அவளுடைய அப்பனின் கூப்பாடும் கேட்டது. “முருகேசு, சுப்பன், தியாகு, நடேசு, ஒடிவாருங்கள். உவனெல்லோ கதவை அடைச்சுப்போட்டு என்ரை வீட்டில் இருக்கிறான்” உடனே, சனம் கூடி விட்டது. கனகன் அவமானத்தோடு கதவைத் திறந்து வெளியே வந்து நின்றான். பின்னாடி கமலமும் வெளியே வந்தாள்.
இப்படி ஒரு சிலர் தம் மகளை கரை சேர்ப்பது அங்கே வழக்கமாக இருந்தது. “சீ என்னை இப்படி மாட்டி வைச்சு விட்டினமே மனசடிப்புடன் வாயடைத்து நின்றான். அவனுடைய நண்பர்கள் இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. மச்சான் சொன்ன போது ‘உண்டு இல்லையா’ என வசந்தி விடயத்திலே அணுகியிருக்க வேணும். பாழாய் போன நிதானம். இப்ப மண்டையை உடைக்க வைக்கும் போல இருந்தது.
கமலம் கண்கள் கலங்க விழித்தபடி நின்றாள். ‘அப்பன் இப்படி ஒரு பிளான் வைச்சிருக்கிறான்’ என்று அவள் எதிர்பார்க்கவில்லை. புனிதம் வளவுக்குள் நின்றபடி அவளை அனுதாபத்தோடு பார்த்தாள். ‘அக்கா’ என ஒடிப்போய் அணுக முடியாது என்பது புரிந்தது. அம்மாவும், தங்கச்சியும் படத்திற்கு போனதற்கு உள்ளுக்குள் திட்டித் தீர்த்தாள்.
வாசிகசாலைக் குழு, அந்தப் பிரச்சனையைஅடுத்த நாள் விசாரிப்பதாக அறிவித்தது. அன்றிரவு அவனும் செல்லனும் தொழிலுக்குப் போகவில்லை.அடுத்த நாள் விசாரணையின் போது அன்டன், நகுலன் எல்லோரும் கூட்டத்தில் இருந்தார்கள். நண்பனை அநியாயமாக செல்லண்ணை மாட்டி விட்டிருந்தது அவர்களுக்குப் புரிந்தது.
நெடுக அங்கேயே இருந்து வலை சிக்கெடுப்பது, செப்பனிடுவது என்று இருக்கிறவன். விரும்பக்கூடிய சாத்தியங்களே வெளியில் தெரிந்தன.“நீ என்ன சொல்கிறாய்?” பரமேஷ் அவனைக் கேட்டான்.
அவள் கழுத்தில் ஐயனார் கோவிலில் வைத்து தாலியைக் கட்ட வைச்சு விட்டார்கள். அவனுள் பூகம்பம் வெடித்தது. ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’ என அவளை வெறுப்புடன் பார்த்தான்.
பிரேமைக் காதலி.வசந்தியின் ஒவியம் அவனுள் அழிய முடியாமல் கிடந்து படபடத்தது. அவன் உள்ளுக்குள் அழுத அழுகை எழுத்தில் வடிக்க முடியாது.
செல்லன் கோயில் பக்கமிருந்த தனது இரண்டு பரப்பு வளவில் வாசிகசாலைப் பெடியள்கள் உதவியுடன் மண் வீடு ஒன்றைக் கட்டி ஒலையால் வேய்ந்து கொடுத்தான். கனகனின் நிலைமை புரிந்ததால் அன்டனும், நகுலனும் அவனைச் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். சோகத்தில் மிதக்கவே கனகன் வீட்டை விட்டு வெளியேறி கோவிலுக்குப் போனான். திரும்பும் போது நிறையக் கள்ளைக் குடித்து விட்டு போனான்.
கன நேரத்திற்கு பிறகே சுய நினைவு வர தானும் ஒரு மிருகம்’ என்பதை உணர்ந்தான். அவனுக்கு வாழ்க்கை வெறுத்துப் போயிற்று. அவளை ஏறெடுத்து பார்க்கவே வெட்கப்பட்டான்.
- கரையைக் கடந்து செல்லும் நதி – சிறுகதைகள் – ஸிந்துஜா
- சின்னக் காதல் கதை
- கண்ணீரின் கருணையில் வாழ்கிறேன்
- கைகளிலே உயிர் இழந்தால் பாசம் தோன்றுமா….
- எக்ஸ்க்யூஸ் மீ ! எங்க வீடு எங்க இருக்கு ?
- சூம்
- தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4
- ஆம் இல்லையாம்
- கவிதை என்பது யாதெனின்
- ஒரு விதை இருந்தது
- வாழ்வின் மிச்சம்
- பவளவண்ணனும் பச்சைவண்ணனும்
- அந்தநாள் நினைவில் இல்லை…..
- குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்!
- பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி
- மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் இரண்டு
- கோவை ஞானியும் நிகழும் கவிதையும்
- பெருந்தொற்றின் காலத்தில்
- முருகபூபதி எழுதிய இலங்கையில் பாரதி ஆய்வு நூல் – நூல் நயப்புரை
- பரமன் பாடிய பாசுரம்
- வெகுண்ட உள்ளங்கள் – 10